15. திருப்புகழ் -13.
திருவேட்களம்.
aathirainayagan.blogspot.com. Thanks.
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 11வது தலம் தில்லைச் சிதம்பரமாகும். திருவண்ணாமலைக்கு (78) அடுத்து அதிகப்பாடல்கள் (65) பெற்றுள்ள தலம் இதுதான். அதனால் ஸ்வாமிகள் இங்கு அதிக நாட்கள் தங்கியிருந்திருக்க வேண்டும் என்று துணியலாம். திருப்புகழ் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தது இந்தப் பதியே யாதலால், இதை நாம் முன்பே கண்டோம். இதைப்பற்றி தணிகைமணி வ.சு. செங்கல்வராயபிள்ளை யவர்கள் எழுதியதை நினவுகூறலாம்.
தில்லைவாழ் அந்தணரது சிறப்பும் (இவ்வழகிய பாடலில் உள்ள "வேத நூன்முறை வழுவாமே தினம் வேள்வி யாலெழில் புனைமூ வாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை புரி கோவே " என்னும் அடிகள் தான் எந்தையார் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழ் ஏடுகளைத்தேடி வெளியிடுவதற்குக் காரணமாக இருந்தது. 1871ம் ஆண்டுதான் என் தந்தையாருக்குத் திருப்புகழ் அச்சிடவேண்டும் என்ற எண்ணம் முதல்முதல் உதித்தது. சிதம்பரம் தீக்ஷிதர்கள் ஒரு விவாதத்தில் தங்கள் பெருமையைக் காட்ட மேற்காட்டிய திருப்புகழ் அடியைக்கொண்ட "தாதுமாமலர் முடியாலே" என்னும் பாடலைச் சான்றாக எடுத்துக் காட்டினதாகவும், அப்பாடலின் தேனொழுகும் இனிமை தன் மனத்தை மிக்குங் கவர்ந்து திருப்புகழில் தனக்கு ஆசை உண்டு பண்ணிற்று என்றும், இத்தகைய அற்புதப் பாடல்கள் பதினாறாயிரம் அருணகிரி நாதர் பாடியிருக்க ஓராயிரமேனும் கிடைத்து அச்சிட்டால் தான் எடுத்த ஜன்மம் பலன் பட்டதாகும், எனக் கருதினேன் என்றும் எந்தையார் என்னிடம் கூறினர்.
(அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்; வரலாற்றுப் பகுதி ).
இத்தகைய மகிமை வாய்ந்த தில்லையில் பாடிய திருப்புகழைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது என்றுதான் தோன்றும்! ஆனாலும் மகிமையை மனதில் இருத்தி, நாம் அருணகிரியாருடன் யாத்திரையைத் தொடர்வோம்!
திருவேட்களம் புராணப் பெருமை மிக்க தலமாகும். இங்குதான் அர்ஜுனன் தவமிருந்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெற்றான். அதனால் இங்கு ஸ்வாமியின் பெயர் பாசுபதேஶ்வரர்; பாசுபதநாதர். அம்பாள் திரு நாமம் சற்குணாம்பாள், நல்லநாயகி. தேவாரம் தலமுறையில் இது இரண்டாவது தலமாக அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் தில்லைக்கு வந்து தரிசித்த பிறகு, அப்புனிதத் தலத்தில் தங்குவதற்கு அஞ்சி, திருவேட்களத்தில் வந்து தங்கி, இங்கிருந்தே தில்லை சென்று வழிபட்டார்! சம்பந்தரும் அப்பரும் இத்தலத்தைப் பாடியுள்ளார்கள்.
சம்பந்தர் பாடல் ஒன்று:
பூதமும் பல்கணமும் புடை சூழப்
பூமியும் விண்ணும் உடன் பொருந்தச்
சீதமும் வெம்மையும் ஆகிச்
சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை
உள்ளம் கவர்ந்து இசையா லெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன் நகராரே.
அப்பர் பெருமான் பாடல் ஒன்று:
நன்று நாள்தொறும் நம்வினை போயறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடையானைத் தொழுமினே.
aalayamtheydi.blogspot.com. thanks.
இத்தலத்திற்கு வந்த அருணகிரிநாதர் ஒர் அற்புதமான திருப்புகழ் பாடுகிறார்.
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குல மீட்டிய தோளொடு முகமாறும்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புய நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும் அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே;
சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்புற வேயயில் விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி யருள்பாலா;
விதுரற்கும ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய பெருமாளே.
இந்த அருமையான பாடலில் முதல் பாதியில் அறுமுகப் பரமன் தனக்கு பாத தரிசனம் தந்ததையும், சக்ஷுதீக்ஷை அருளியதையும் மறவாது பாடுகிறார். பிற்பாதியில் சூரபத்மனுடன் நடத்திய போரைத்தவிற, அம்பாளைப் பற்றியும், மஹாபாரதத்தில் க்ருஷ்ணரைப் பற்றியும் சில ரஸமான நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்.
நான்கு இதழ்கள் கொண்டு, தரையின் நான்கு திசைகளையும் நோக்கியுள்ள (மூலாதார மான ) பூவொடு, முச்சுடர்களால் ஆன மண்டலங்கள் வரை (ஆறு ஆதார நிலைகள் எல்லாம் ) குளிர்ந்து தழைய சிவாநுபூதியெனும் அரிய பேறாகிய -
திருவடிக் கழலை அடியேனுக்குக் காட்டி, என்னுடைய அகங்கார-மமகாரங்கள் தொலைந்து ஒழியும்படிக்கு அருளிய உன்னுடைய சிறந்த மலைபோன்ற பன்னிரு தோள்களையும், ஆறு முகங்களையும்,
எங்களைப் பாதுகாக்கின்ற ஒளிவீசும் திருவடிகளையும், மயிலின்மீது பாதுகாக்கின்றவனாம் என வந்து, உன் கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனைப் -
பொன்னிலும் இனிமையான பார்வையுடன், அடியார்கள் முத்தமிழ் கொண்டு பாடி, மேலான கதியை அடையவும் , கடாக்ஷித்து அருளிய பார்வையை மறவேனே.
இங்கு அருணகிரிநாத ஸ்வாமிகள் பல அரிய விஷயங்களைச் சொல்கிறார்,
தெய்வ அனுபவம் அல்லது அநுபூதி தெய்வ அருள் ஒன்றினால் மட்டுமே வரும். எந்த மந்திரம், தந்திரம் கொண்டும் அதைப் பெற முடியாது. தெய்வ அருள் பெற்றவர்களுக்கு குண்டலினி யோக நிலை தானாகவே அமையும். அதற்குமுன் அடியவருடைய அகங்கார-மமகாரங்களாகிய ஆணவ மலம் முழுதுமாக அற்றுப் போகும். இந்த நிலை நம் ஸ்வாமிகளுக்கு முருகனின் பாத தரிசனத்தாலும், சக்ஷுதீக்ஷையாலும் வாய்த்தது.
இதை விடுத்து, மந்திரம், தந்திரம், குண்டலினி யோகம் என்று கிளம்புவது அனர்த்தமாகவே முடியும். இவற்றினால் சில சித்திகள் வரலாம்; ஆனால் சிவாநுபவம் சித்திக்காது. ஆணவம் முற்றும் அகலாத நிலையில் நாம் பெறும் எத்தகைய சித்தியும் நமக்கும் பிறருக்கும் துன்பமே விளைக்கும். அருணகிரியார் நாம் அசட்டு யோகியாகாமல் இருக்கவேண்டும் என்று தெளிவாகவே பிறிதோரிடத்தில் சொல்கிறார்.
இங்கு இன்னொரு அரிய விஷயத்தைச் சொல்கிறார். இறைவன் இயல்பாகவே உயிர்கள்பால் கருணை நோக்குடையவன். (கனகத்தினு நோக்கு இனிதாய் ) ஆனால், வழிபடும் அடியவர்கள் அவருடைய சிறப்பான கருணாகடாக்ஷத்தைப் பெறுகிறார்கள். இது அவர் பக்குவ ஆன்மாக்களுக்கு அளிக்கும் சக்ஷுதீக்ஷையாகும். இதையே "பரகதி பெற்றிட நோக்கிய பார்வை " என்று குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.
இதை நாம் பலமுறை வாசித்து மனதில் பதியவைத்துக் கொள்ள வேணும். அருணகிரிநாதர் காட்டிய பாதையில் மந்திர, தந்திர, யோகங்களுக்கு இடமில்லை. அது தூய பக்தி மார்கமாகும். "ஆன பயபக்தி வழிபாடு பெறு முத்தியது " என்பதுதான் அருணகிரியாரின் கொள்கை.
இனி, இப்பாடலின் பிற்பாதி:
பூமி அதிர, நான் கு திசைகளிலுமுள்ள மலைகள் நெரிந்து தூளாக, பறையொலியுடன் வந்த மூர்க்க அரக்கர்களின் பெரிய முடிகள் சிதறிவிழ, கடல் மிக்க ஒலியெழுப்ப, வேலை விட்டவனே!
சிவனது பத்னியும், எமனை உதைத்த பாதங்களைக்கொண்ட சக்திவாய்ந்தவளும், யாவர்க்கும் மூத்தவளும், இடர்களை நீக்குபவளும், ஜகத்தை இவ்வாறு ஶ்ருஷ்டித்தவளுமாகிய பார்வதி அருளிய பாலனே !
[ சிவபிரான் கூற்றை உதைத்தது இடது காலினால். இடது பாகம் அம்மைக் குரியது அதனால் பார்வதியே உதைத்ததாகக் கூறுகிறார். சக்திதான் யாவர்க்கும் மூத்தது என்பது மரபு. "கறைக் கண்டனுக்கு மூத்தவளே " என்பது அபிராமி அந்தாதி. ]
விதுரனுக்கும் பாம்புக் கொடியுடைய துரியோதனனுக்கும் உள்ள உறவை வேறு படுத்திய வனும், அர்ஜுனனின் பெரிய தேர்க்குதிரைகளைச் செலுத்தியவனுமாகிய மாதவனின் மருகனே!
[ இங்கு ஒர் அரிய செய்தியைச் சொல்கிறார் அருணகிரியார். விதுரன் துர்யோதனனுக்கு சிறியதந்தை யாகவேண்டும். அவரிடம் தெய்வீக சக்தியுடைய ஒரு வில் இருந்தது. அத்துடன் விதுரனும் கௌரவர் பக்கம் சேர்ந்தால் அர்ஜுனாதியருக்குக் கஷ்டம் மிகுந்துவிடும். பாண்டவர்களின் பொருட்டு துரியோதனனிடம் தூது வந்த க்ருஷ்ணர், துர்யோதனனின் அரண்மனையில் தங்காமல், விதுரனின் குடிலில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றார். அடுத்த நாள் ராஜசபையில் துர்யோதனன் விதுரனை இகழ்ந்து பேசினான். "என் விருந்தை ஏற்காதவனுக்கு நீ உணவளித்தாய். நீ தாசியின் மகன்தானே; என் சோற்றை உண்டும் பாண்டவர்களிடமே அன்பு கொண்டுள்ளாய்" என்று ஏசினான். விதுரருக்குக் கோபம் மூண்டது. "நீ பேசிய பேச்சுக்காக உன் நாவையே துணிப்பேன்- ஆனாலும் பொறுக்கிறேன். போரில் அறம்தான் வெல்லும்." என்று சொல்லி தன் ஒப்பற்ற வில்லையும் ஒடித்துத் தள்ளினார். போரில் பங்கு கொள்ளாமல் யாத்திரை சென்றார். இவ்வாறு க்ருஷ்ணர் விதுரர்- துர்யோதனர்களுக்கிடையே உறவை பேதப்படுத்தினார்.]
எட்டுத் திக்குகளிலும் சூரனுடன் போரிட்டு, சேவல் கொடியைக் கையிலேந்திப் புகழ் விளங்க உலவின பெருமாளே ! வெற்றியும் சத்தியமும் விளங்கும் பெருமாளே ! திருவேட்களத்தில் அமர்ந்த பெருமாளே ! உன் அருளை மறவேன் !இவ்வாறு திருவேட்களத்தில் பாடியருளினார் அருணகிரிநாதர்.
கட்டுப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போதவன் முன்னம் நீர்
சிட்ட னார்திரு வேட்களம் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே - அப்பர் ஸ்வாமிகள்.
[திருவேட்களம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 3கி.மீ. தொலைவில் உள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகம் வழியாகச் செல்லவேண்டும்.]