Friday, 5 February 2016

19. திருப்புகழ்- 17. எருக்கத்தம்புலியூர்.



19.திருப்புகழ் -17.எருக்கத்தம்புலியூர்.




அருணகிரிநாத ஸ்வாமிகள்  கூடலையாற்றூரிலிருந்து சென்று தரிசித்த தலம் எருக்கத்தம்புலியூர்.இது இவர் தரிசித்த 16வது தலம்.

புலியூர் என்ற பெயரில் ஐந்து ஸ்தலங்கள் உள்ளன: பெரும்பற்றப் புலியூர் (சிதம்பரம்), ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருப்பெரும்புலியூர், எருக்கத்தம்புலியூர். இந்த ஐந்து இடங்களிலும் வ்யாக்ரபாதர்  (புலிக்கால் முனிவர் )நடராஜ தரிசனம் பெற்றதால் இவை அவர்பெயரிலேயே புலியூர் என வழங்குகின்றன. இங்கு ஸ்தலமரம் எருக்கு ஆனதால் இது எருக்கத்தம்புலியூர் என்று ஆனது.நாயன்மார்களில் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த ஊர் இதுவே. அதனால் இதற்கு யாழ்ப்பாண்நாயன் பட்டினம் என்ற பெயரும் இருந்தது போலும்! அருணகிரிநாதர்  இந்தப்பெயரில்தான் பாடியிருக்கிறார்.
ராஜேந்திரசோழன் இங்கு வழிபட்டு அருள்பெற்றதால் பல தொண்டுகள் செய்ததாகவும் அதனால் அவன்பெயரில் இது ராஜேந்திரப்பட்டினம் என வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரே பிராகாரமுள்ள சிறிய கோவில். ஸ்வாமி பெயர் நீலகண்டேஶ்வரர், குமாரஸ்வாமி. அம்பாள்  வீராமுலையம்மன், அபீதகுசாம்பாள், நீலமலர்க்கண்ணி. ஞானசம்பந்த ஸ்வாமிகள் பாடியதலம். இத்தலத்து ஸ்வாமியைத்தொழ வினை போகும், அல்லல் தீரும் எனப் பாடுகிறார்.


படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடு முடனாய் இடுகங்கை
சடையான் எருக்கத்தம் புலியூர் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக்  கருதா வினைதானே.

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும்  பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூர் உறைகின்ற
அண்ணாவென வல்லார்க்கு அடையா வினைதானே.

ஆவாவென அரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவாவென அருளார் செல்வம் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம்  புலியூர் மிகுகோயில்
தேவே என அல்லல் தீர்தல் திடமாமே.

ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித்  திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவைவல்லார்
பாரார் அவரேத்தப் பதிவான் உறைவாரே.




பிராகாரம்.
Temple photos from: thirunalaippovar.blogspot.in Thanks.

இங்கு வந்த நம் ஸ்வாமிகள் ஞானம் வேண்டும் என்று பாடுகிறார்.

பூத்தார் சூடும் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலும் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன்                      விடுதூதும்

போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு  ப்ரமையது
பூட்டா மாயங் கற்றமை விழியின                          ரமுதூரல்

வாய்த்தார் பேதஞ்  செப்புபொய்  விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாட்டாய் வீசுங் கர்ப்புர  ம்ருகமத                          மகிலாரம்

மாப்பூ ணாரங் கச்சணி  முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட                      அருளாயோ.

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந்   தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி                             புவநேசை

ஆக்கா யாவும் பற்றியெற திரிபுற
 நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம துறைபவள்                           பெறுசேயே

ஏத்தா நாளுந்  தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ்  சொற்றமி ழருள்தரு                      முருகோனே

ஏற்போர்  தாம்வந்  திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய                        பெருமாளே

உனதுமெய் வாக்கால்   ஞானம் பெற்றினி வழிபட அருளாயோ.


முதல் நான்கு அடிகளில் பெண்களின் மயலில் இருந்த நிலையைச் சொல்லி, அதிலிருந்து விடுபடுதலை வேண்டுகிறார்.

எனது தாய், திருமாலின் தங்கை, கன்னிகை, உமை, நடனம்புரியும் ஆனந்தசிவாம்பிகை, திரிபுரை, தானாளும் பேய்களும் பூதங்களும்  சுற்றியுள்ள பயிரவி,  புவனேஶ்வரி -

எல்லாவற்றையும் ஆக்கியும், காத்தும், அழித்தும் முத்தொழிலையும் செய்பவள்,  திருவிளையாடலாக ஈசனது இடதுபாகத்தில் வீற்றிருப்பவள்- ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே!

தினந்தோறும் பூஜை செய்தும், தர்ப்பணம், ஜபம் இவை செய்தும், துறந்தவர்கள் தங்கள் ஞான நிலையிலும்  பலரும் பற்றிய குருமூர்த்தியே !
யாப்பிலக்கணத்தை ஆராய்ந்து எடுத்த சொற்களைக் கொண்ட தமிழ்ப்பாடல்களை அருளிய முருகனே!

ஏற்பவர்களுக்கு இஷ்டமுடனும், மகிழ்ச்சியுடனும் அள்ளி வீசுகின்ற கொடையாளிகள் உள்ளதும், பொன்னொளி வீசும்  நீண்ட மதில் சூழ்ந்துள்ளதுமான யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே !

ஞானம்பெற்று இனி வழிபட அருள்வாயே !

இங்கு அம்பாளைப் பற்றிவரும்  12 நாமங்கள் பலகாலும் படித்து இன்புறத்தக்கன.இவ்வாறு பல பாடல்களில் அரிய சொல்லாட்சி அமைந்துள்ளது அற்புதமே! சக்தி உபாசகர்கள் கூட இம்மாதிரி நாமங்களைச் சொன்னதில்லை!

அடுத்து, ஞானசம்பந்தராக வந்து அற்புதத் தமிழ்க்கவி பாடியது முருகனே என்கிறார். முத்தமிழ் விரகன், நாற்கவிராஜன், தமிழாகரன் என்றெல்லாம் சம்பந்தருக்குப் பட்டங்கள். அவர்பாடியது அமிர்தகவித்தொடை, அதுமாதிரி தானும் பாடவேண்டும் என்று ஒரிடத்தில் வேண்டுகிறார்.

இங்கு ஒரு அரிய செய்தி.  பூஜை, ஜபம் செய்து வழிபடுவார்கள். தர்ப்பணம் உண்டா? ஸந்த்யாவந்தனத்தில் தேவதர்ப்பணம் உண்டு; ஆனால் அதில் முருகனுக்கெனத் தர்ப்பணம் இல்லை.இங்கு சம்பந்தரைப் பற்றிச் சொல்கிறார். சம்பந்தர் கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர், (கவுணியன்). இந்த கோத்திரத்தில் வந்து, போதாயன சூத்திரத்தைப்  பின்பற்றுபவர்கள், அவர்கள் செய்யும் ப்ரம்ம யஞ்ஞத்தில் , தேவ தர்ப்பணம் செய்கிறார்கள். அப்போது, முருகனுக்கும் தர்ப்பணம் செய்கிறார்கள்! (இதைத்தவிற பிறவும் இருக்கலாம்.) அருணகிரி நாதர் இதைச் சொல்வதுபோல் தெரிகிறது.

கடவுளை வழிபடவும் அவன் அருள் தேவை! "அவனருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மாணிக்கவாசகர். அதையே இங்கு வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

அருணகிரிநாதரின் ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு விசேஷம் இருக்கவே செய்கிறது!



Bandipur tusker.
By Yathin S.Krishnappa (Own Work) [CC BY-SA 3.0 creativecommons via wikimedia commons.]





Thursday, 4 February 2016

18. திருப்புகழ் - 16. கூடலையாற்றூர்



18. திருப்புகழ்- 16. கூடலையாற்றூர்


படம்: thirunalaippovar.blogspot.in Thanks.

இது  அருணகிரிநாதர் தரிசித்த 15 வது தலம்.  வடவெள்ளாறும் மணிமுத்தா நதியும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. பழைய கோவில் வெள்ளத்தால் விழுந்துவிட, அதே கற்களைக்கொண்டு  பிறகு  கட்டப்பட்ட கோவில். அதே பழைய விக்ரஹங்கள் தான்.கொடிமரமும் பலிபீடமும் இல்லை.

பழைய தலத்திற்கு சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் பதிகம் இருக்கிறது.

வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ்  வழிப்போந்த  அதிசயம் அறியேனே.        7.85.1

இந்த "அதிசயத்திற்குப் "  பின் ஒரு சரித்திரம் இருக்கிறது. சுந்தரர் திருப்புறம்பயத்திலிருந்து  விருத்தாசலம்  போகும்வழியில் இந்தத் தலத்திற்கு அருகில் வந்துகூட  அங்கு செல்லாமல்  மேலே நடந்தார்.  அப்போது எதிரில் வந்த ஒரு பிராமணரிடம் முதுகுன்றம் போகும் வழி கேட்டார். அவரோ, "கூடலையாற்றூருக்கு இதுதான் வழி " என்றுசொல்லி இங்கு வர வழிகாட்டிவிட்டு, ஊரை நெருங்கியதும் மறைந்தார். இவ்வாறு வந்து வழிகாட்டியது சிவபெருமானே என உணர்ந்த சுந்தரர், அந்த 'அதிசயத்தை" நினைத்துப் பாடிய பாடல்கள் இப்பதிகம்.

சம்பந்த ஸ்வாமிகளைப் பின்பற்றி, 'பல ஶ்ருதி ' பாடும் வழக்கமுடைய சுந்தரர், இப்பாதிகத்தின் கடைசிப் பாட்டில்  இப்பதிகத்தைப் பாடுவதன் பயனையும் சொல்கிறார்:

கூடலை யாற்றூரில்  கொடியிடை அவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்தமிழால் நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை பற்றறுமே.

இங்கு ஸ்வாமியின் பெயர் நெறிகாட்டு நாயகர். அம்பாள் பெயர்  புரிகுழல் நாயகி. ஸ்வாமி இங்கு ப்ரம்மாவுக்கு நடனக்காட்சியளித்ததால், அவருக்கு நர்த்தனவல்லபேஶ்வரர்  என்ற திருப்பெயரும் உண்டு. பராசக்தி, ஞானசக்தி என  இரு அம்மன்கள்  இருப்பதாகச் சொல்கிறார்கள். ஊர் சற்று உட்புறமாக இருப்பதால், இன்றும் கூட பல இடத்தில் வழி கேட்டுதான் போகவேண்டிய நிலை!
பிராகாரம்.

இங்கு வந்த நம் அருணகிரி ஸ்வாமிகள் ஒரு திருப்புகழ் பாடினார்.  காலன் அணுகாதிருக்கும் அருளை வேண்டுகிறார்.

வாட்டியெனைச்  சூழ்ந்தவினை  யாசையமு வாசையனல்
மூட்டியலைக் காய்ந்த மழுவாமெனவி காசமொடு
மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு      விஞ்சையாலே

வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
காற்றுவரத் தாங்குவன  மார்பிலணி யாரமொடு
வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி  சோடுமகிழ்           வன்புகூரத்

தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
பூட்டிவிடப் போந்துபிணி யொடுவலி வாதமென
சேர்த்துவிடப் பேர்ந்துவினை  மூடியடி  யேனுமுன         தன்பிலாமல்


தேட்டமுறத் தேர்ந்து மமிர்தாமெனவெ  யேகிநம
னோட்டிவிடக்  காய்ந்து வரி வேதனடை யாளமருள்
சீட்டுவரக் காண்டுநலி  காலனணு காநினரு                  ளன்புதாராய்.


என்னை வாட்டிச் சூழ்ந்துள்ள வினையும்,  மூவாசைகளும், தீயைமூட்டி உலையில் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புபோல மலர்ச்சியோடு என்னை நன்றாக மாட்டிவைத்து, வாழ்க்கையில் பிடிவாதமாக ஆட்டிவைக்கின்ற மாயையாகிய இதனால்-

கிடைத்துள்ள மலர், சாந்து, புனுகுசட்டம், பன்னீர் ஆகியவற்றுடன்  நல்ல காற்றுவீச அனுபவித்து, நல்ல ஆபரணங்கள், முத்துமாலை கிடைத்ததென  மார்பில் அணிந்து அழகுபெற , பவிசோடு, மகிழ்ச்சியும் அன்பும் மிக்குப் பெருக, -

மைதீட்டிய, ஒளிமிக்க கண்களுடன் கூடிய மாதருடன் விளையாடி, காமவலையில் மனம் பூட்டப்பட்டுப்போய்,  நோய்களுடன் வலிகளும், வாத  நோயும் எனப்பல ஒன்றுசேர்ந்துவிட, நிலைமாறி, வினைகள்மூடி, அடியேனும் உன்மீது அன்பில்லாமல்-

சேகரித்தபொருள் நிரம்ப  இருப்பதால், மனம் ஒருவாறு தெளிவுபெற்று, சாவு என்றுஒன்று உண்டு என்ற எண்ணமே இல்லாமல், வாழ்நாளைக் கடத்த, நமனார் தனது தூதர்களை  ஒட்டி அனுப்ப, மெலிந்து, எழுத்துள்ளதும், ப்ரம்மாவினது அடையாளம் உள்ளது மாகிய  ஓலைச்சீட்டுவரப்  பார்க்கும்படி வருத்துகின்ற காலன் என்னை அணுகாதபடிக்கு உன்னுடைய அருளையும் அன்பையும் எனக்குத் தந்து உதவுக.

இங்கு ஸ்வாமிகள் சம்சாரத்தில் உழலும் சராசரி மனிதர்களீன் நிலையை விவரிக்கிறார். பணமும் பொருளும் உடலில் தெம்பும் இருக்கும்வரையில் இவர்கள் வாழ்வின் அடிப்படையைப் பற்றி நினைப்பதில்லை. பிறகு வியாதிகளும் மூப்பும் வந்துசேர கவலையில் மூழ்குகிறார்கள். தலை நரைப்பது, பல் ஆடிவிழுவது போன்றவை நமன் மனிதருக்கு அனுப்பும் எச்சரிக்கை- நோட்டீஸ் என்பார் ஸ்ரீ க்ருபனந்த வாரியார். இந்த விஷயங்களை அருணகிரிநாதர் பலபாடல்களில் சொல்கிறார். கந்தரலங்காரத்தில் ஒரு பாடல்:

கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்!
   போர்கொண்ட காலன் உமைக் கொண்டுபோம் அன்று பூண்பனவும்
      தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
         ஆர்கொண்டுபோவர் ஐயோ கெடுவீர் நும்அறிவுஇன்மையே.


இதே கருத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்லியிருக்கிரார்.


दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायुः
तदपि न मुञ्चत्याशावायुः

தினயாமின்யௌ  ஸாயம் ப்ராத:
ஶிஶிர வஸந்தௌ  புனராயாத:
கால: க்ரீடதி  கச்சத் ஆயுஹு
ததனபி ந முஞ்சத் யாஶா வாயு:


பகலும் இரவும், மாலையும் காலையும் , குளீர் காலமும் வஸந்த காலமும் மீண்டும் மீண்டும் வருகின்றன.  காலம் விளையாடுகிறது! ஆயுள் சென்றுகொண்டே இருக்கின்றது (குறைந்துகொண்டே வருகின்றது.) ஆனாலும் ஆசாபாசம் விடுவதில்லை!



अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम् ।
वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஶன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சத் யாஶா பிண்டம்.


உடல் தளர்ந்துபோய் விட்டது, தலை நரைத்து விட்டது. பல் விழுந்துவிட்டது.கிழவன்  கோலை ஊன்றி  நடக்கிறான். ஆனாலும் ஆசைக்கூட்டத்தை விடவில்லை!
இனி, முருகனின் சிறப்பைச் சொல்கிறார்.

வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
நாட்டவரைச் சேந்த கதிர் வேல்கொடம  ராடிசிறை
மீட்டமரர்க்  காண்டவனை  வாழ்கநிலை யாகவைகும்     விஞ்சையோனே

வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடி வைகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட     முங்கொளாயி

கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை  கோடிமதி
தோற்றமெனப் போந்த அழ கானசிவ காமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன  தார அருள்                கந்தவேளே

கூட்டு நதித் தேங்கிய வெளாறுதர ளாறு திகழ்
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர                 தம்பிரானே.


வேடர்கள்மீது  கோபம்கொண்டு, வள்ளியுடன் உறவு கொண்டாடி,.
அஞ்ஞான (இருள்) நாட்டினராகிய அரக்கரர்களைச் சிவந்த ஒளிவீசும் வேல்கொண்டு போர்செய்து , தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, அத்தேவர்களின்  தலைவனான இந்த்ரன் நிலயாகவாழும்படி வைத்த  வித்தகனே ! 

[ அரக்கர்கள் ஞானமில்லாதவர்கள். வேதாந்தத்தில் ஞானமின்மையே இருள் எனப் படுகிறது. இருளை ஒளிதான் நீக்கும்.; அதுபோல அஞ்ஞானத்தை ஞானம்தான் நீக்கும், முருகனின் வேல் ஞானத்தின் சின்னம்- ஞானசக்தி. அதனால் அது ஒளிவேல்- மின்னும் கதிர்வேல், ஞான  ஶக்திதர ஸ்கந்த:]

[வேதத்தில் இதுவே  ஒளிக்கும் இருளுக்குமிடையேயான போராக வருணிக்கப்படுகிறது.  இதைச்  சரியாகப் புரிந்து கொள்ள இயலாத  மூளைகெட்ட  வெள்ளைக்கார முண்டங்கள்  இதை வெள்ளைத்தோலர்களுக்கும் கறுப்பர்களுக்கும் நடத்த போர்  என எழுதிவிட்டனர். விவரம் வேண்டுவோர் ஸ்ரீ அரவிந்தர் கட்டுரைகளை வாசித்தறியவும்.]

மண்சுமக்கும் கூலியாள் வுருவில் மதுரை சென்று, வகையாற்றின் மணலைச் சுமந்து லீலை புரிந்தவரும், மழு ஏந்தியவரும்,  என்னுடைய தந்தையும்,  திரிபுரத்தின் மேன்மையை எரித்த சிவலோகனும், ரிஷபவாகனத்தில்  ஏறினவரும் ஆகிய சிவபிரானது இடது பாகத்தைக் கொண்ட எனது தாய்-

மலையன்ன கொங்கைகளைத் தாங்கும் நூல்போன்ற இடையையும், கோடி சந்திரர்களின்  அழகையும் கொண்ட சிவகாமி. வலிமைமிக்க யமனை உதைத்து அழித்த  அழகியாம் பார்வதிதேவி மனங்குளிரப் பெற்றுகந்த கந்தவேளே!

[கூற்றுவனை உதைத்தது இடது பாதம். பரமனது இடதுபாகம் அம்பிகைக்குரியதால், இங்கு அம்பிகையே உதைத்ததாகக் கூறுகிறார்!  இதை வேறு பாடல்களிலும் சொல்லியிருக்கிறார். முருகன் அம்பிகைக் குகந்தவன் என்கிறார், பெற்றும் உகந்தது கந்தனையே என்பார்  ஞானசம்பந்த ஸ்வாமிகள். (உற்றுமை சேர்வது பாடல்.)

வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடி விளக்கங்கொண்ட இடத்தில், கூடலையாற்றூர் என்னும் தலத்தில் விளங்கும்  சேந்தனே! மயில் வாகனனே!
எமன் என்னை நெருங்காதபடி, வள்ளிதெய்வானையுடன்  என்னிடத்திலேயே குடிகொண்ட குமரனே ! தம்பிரானே !

தரளம்= முத்து. தரளாறு= மணிமுத்தாறு.

அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்.







17. திருப்புகழ் -15. திருமுதுகுன்றம்- விருத்தாசலம்.



17. திருப்புகழ் -15. திருமுதுகுன்றம்:
விருத்தாசலம்.


அருணகிரிநாதர் தரிசித்த அடுத்த தலம்- 14 வது - முதுகுன்றம். இன்று  இதற்கு  விருத்தாசலம் என்ற பெயர் வழங்கிவருகிறது. பழமலை என்பதும் அழகிய பழைய பெயர். விருத்தகிரி  எனவும் படும்.

இது ஒரு காரணப்பெயர். உலகத்தில் மலைகள் தோன்றுவதற்கு முன்பே பரமன் இங்கு மலையாக எழுந்தருளினான். அதனால் இது பழமலை.  ஸ்வாமி பெயர் பழமலை நாதர்= விருத்தகிரீஶ்வரர். அம்பாள் பெயர்  விருத்தாம்பிகை, பெரியநாயகி.

இதற்கு விருத்தகாசி யெனவும் ஒரு பெயருண்டு. இங்கு மடியும் உயிர்களுக்கு அம்பாள் தன் முந்தானையால் வீச, சிவபெருமான் பஞ்சாக்ஷரம் அவர் காதில் ஓதி அவர்களுக்கு முக்தியை அருளுகிறான். அதனால் இது காசித்தலத்தைக் காட்டிலும் உயர்ந்தது என கந்தபுராணத்தில் வருகிறது. காசியின் விழுமிதான முதுகுன்ற வரை  என்பது கந்தபுராண வசனம். [வழி நடைப் படலம்]

இங்கு மணிமுத்தா நதி ஓடுகிறது (ஓடியது!) பல தீர்த்தங்களும் உண்டு.

இந்தத்தலம் சம்பந்தருக்குப் பிடித்த தலம் போலும்! ஏழு  பதிகங்கள் பாடியிருக்கிறார். அப்பர் ஒரு பதிகமும், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்  மூன்று பதிகங்களும் பாடியுள்ளனர். அவர் இங்கு இறைவனிடம் பொன்பெற்று  மணிமுத்தாற்றில் இட்டு, அதைத் திருவாரூர் திருக்குளத்தில் மீட்டுக்கொண்டார்! அப்போது அங்கிருந்தபடியே, முதுகுன்றைப் பாடினார்!

சம்பந்தர் பாடல்கள்.

மத்தாவரை நிறுவிக்கடல்  கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணனது இடமாம்
கொத்தார் மலர் குளிர்ச்சந்தகில்  ஒளிர்குங்குமம் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன் றடைவோமே.        1.12.1

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறையோர்
 நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமலரோன்  செங்கண்மால்  ஈசன்யென்னும்
மூவராய முதல் ஒருவன் மேயது முது குன்றே.           1.53.1

நின்று மலர்தூவி  இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க் கென்றும் இன்பமே.

ஈசன்முது குன்றை நேசம் ஆகிநீர்
வாசமலர் தூவப் பாச வினைபோமே.                           1.93. 1,4.

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்குணங்களும்
விரும்பு நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோல்
அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட்கு ஒருதலைவன்  கருதுமூர்
உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கு
முதுகுன்றமே.                                                                 1.131.1

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்றங்கு அடியார் தங்கட்கு அருள்செய்வாய்
ஓவா உவரிகொள்ள  வுயர்ந்தாய் என்றேத்தி
மூவாமுனிவர்  வணங்கும் கோயில் முதுகுன்றே.       2.64.1

வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.                  3.34.1

முத்தி தரும்உயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த்தீரே
பத்து முடியடர்த் தீர்உமைப்  பாடுவார்
சித்தநல் லவ்வடியாரே.                                        3.99.8

(இந்தப் பாடலில் முதுகுன்றம் முத்தி தரும் என்று  கூறியுள்ளதைக்
கவனிக்க வேண்டும்.)

அப்பர் பாடல்

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை
     ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று
பத்தனாய்ப் பணிந்தடியேன்  தன்னைப் பன்னாள்
     பாமாலை பாடப் பயில்வித்தானை
முத்தினை என்மணியை மாணிக்கத்தை
     முளைத்தெழுந்த செம்பவளக் கொம்பொப்பானை
சித்தனை என்திரு முதுகுன் றுடையான் தன்னை
     தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.


சுந்தரர் பாடல்

பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்  பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாரடிகேள் அடியேனிட் டளங்கெடவே .    7.25.1

நஞ்சி யிடையின்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின் னைச்செய்வ தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோ பணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.      7.43.1

மெய்யை முற்றப்பொடிப் பூசியொர் நம்பி
     வேதம் நான்கும் விரித்தோதி யொர் நம்பி
கையிலோர் வெண்மழு வேந்தியொர் நம்பி
     கண்ணு மூன்றுடை யாரொரு நம்பி
செய்ய நம்பிசிறு செஞ்சடை நம்பி
    திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி
   எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.




[நமது   பழையகோவில்கள் உள்ள ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு வகையில் சிறப்புமிக்கதேயாகும். நம் பெரியவர்கள் கண்டவிடத்தில் கோவில் கட்டவில்லை. ஆனால் இன்று பலருக்கும் தலப்பெருமையும் தெரியவில்லை; அதைப்போற்றிப் பாதுகாக்கும் முறையும் தெரியவில்லை.பெரிய கோவிலெல்லாம்  காட்சிப்பொருளாகிவிட்டது; அதைச்சுற்றிலும் வியாபாரஸ்தலமாகிவிட்டது. மதச்சார்பில்லை என்று பிதற்றும் அரசாங்கமே உண்டியல்வைத்தும், கட்டணம் வசூலித்தும்  ஹிந்துக்களிடம் மட்டும் பணம் சுரண்டுகிறது. இது துலுக்கர்கள் போட்ட ஜிசியாவரியைவிட எப்படி வித்தியாசமாகும்?]

இத்தலத்திற்கு வந்த அருணகிரிநாதர் இரண்டு  திருப்புகழ்ப் பாடல்கள் பாடியிருக்கிறார்.


குடத்தாமரை யாமென வேயிரு
     தனத்தார்மதி வாணுத லாரிருள்
          குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக்

குலக்கார்மயி லாமென வேகயல்
     விழித்தார்கர மேல்கொடு மாமுலை
          குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை



படித்தார்மயி லாமென வேநடை
     நெளித்தார்பல காமுகர் வார்கலை
          பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர்

படிக்கார்மின லாமென வேநகை
     புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
          பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ

அடைத்தார்கட லோர்வலி ராவண
     குலத்தோடரி யோர்சர னார்சின
          மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே

அறுத்தாரய னார்தலை யேபுர
     மெரித்தாரதி லேபுல னாருயி
          ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா


விடத்தாரசு ரார்பதி வேரற
     அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
          விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர

விழித்தாமரை போலழ காகுற
     மகட்கானவ ணாஎன தாயுறை
          விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.




இதில் முதல் நான்கு வரிகளில் விலைமாதரின் உறவைக் கண்டிக்கிறார்.
பின் நான்கு வரிகள்:

கடலை அணைகட்டி யடைத்து, வலிமைமிக்க ராவணனை  அவன் குலத்தோடு அரிந்து தள்ளி அழித்த ஒர் (ஒப்பற்ற) அம்பையுடையவர்; அசுரர்களின் கோபத்தை  அழித்து ஒழித்தவர்; மேகத்துக்கு நிகரான நிறம்கொண்ட ராகவமூர்த்தியின் மருகனே!

பிரமனது தலையைக் கொய்தவர்; திரிபுரத்தை எரித்தவர்; அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள மூன்று அசுரர்களின் உயிரைக் காத்தருளியவர்; ஆகிய சிவபெருமானது உடலில் பாதியாகவுள்ள  உமாதேவியார் அருளிய  பாலனே!


[ திரிபுரத்தை எரித்தபோது  சிவபக்தர்களாகிய மூன்று அசுரர்கள்  உயிர் பிழைத்தனர். அவர்களில் இருவர்  கோவில் காப்பவராகவும், ஒருவன்  முழவு வாத்யம் ஒலிப்பவனாகவும் ஆயினர்.]


விஷகுணம் கொண்ட அசுரர்களுடைய ஊர்கள்  வேறுடன் அழியும்படி சம்ஹாரம்  செய்தாய். ஒளிமிக்க வேலைக்கொண்டு பராக்ரமம் புரிந்தாய். தேவர்கள் மீண்டும் தம் இடம் புகவும், அவர்களுடைய சிறையும் வறுமையும் நீங்கவும் (அருளிய)-

தாமரை  போன்ற கண்களையுடைய அழகனே! வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே! என்னுடைய தாய் (பார்வதி- விருத்தாம்பிகை) அமர்ந்துள்ள  விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே!


திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
     செயமுன மருளிய ...... குளவோனே

திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
     தெறிபட மறுகிட ...... விடுவோனே

ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
     னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ

உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா

கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
     கணினெதிர் தருவென ...... முனமானாய்

கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே


முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
     முரணுறு மசுரனை ...... முனிவோனே

முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.



முக்திவாசகமாகிய ப்ரணவப்பொருளின் விளக்கத்தைப் பெற சிவபிரான் உன்னை வணங்க, முன்பு அவருக்கு அதனை உபதேசித்த சரவணபவனே!

ஒளிமிக்க மதுரையில் சமணர்களின்  உயிர் கழுவில் கலக்கமுற்றுச் சிதற வைத்தவனே !

நீக்குதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் அன்பில்லாதவர்களைப் போலத் துன்பத்தை அனுபவிக்கின்ற எனக்கு அருள்வாயோ!

உலகத்தில் யாவரும் புகழும்படித் திருவண்ணாமலையில் ஒரு நொடிப்பொழுதில் வந்து  தோன்றிய மயில்வீரனே!

கரிய ரேகைகள் பொருந்திய அம்புபோன்ற கண்களையுடைய வள்ளிக்குமுன் வேங்கை மரமாக முன்பு ஆனவனே!

கரியமேகத்தைப் போன்ற நிறமுடைய திருமாலின்  அழகிய மருகனே! கருணையுடன் உபதேசமொழி தந்த முதல்வனே !

நறுமணமலர்கொண்ட கற்பக விருக்ஷத்தின் நிழல்கீழ் இருக்கும் தேவர்களின் சிறை நீங்கும்படி, மாறுபட்டு நின்ற  சூரனைக் கோபித்தவனே !

(விருத்தாசலம் என்னும் இத்தலத்தில்) இறப்பவர்கள் பிறப்பு அறுகின்ற  தூய  நல்ல நிலை பெறும், தமிழில் முதுகிரி யெனப்பெயர் விளங்கும்  இத்தலத்தில் வெற்றியுடன் எழுந்தருளியுள்ள பெருமாளே !

இங்கு பல அருமையான விஷயங்களைச் சொல்கிறார் நம் ஸ்வாமிகள்!

  • சிவபெருமானுக்கு ப்ரணவப்பொருளை உபதேசித்தது
  • ஞானசம்பந்தராக வந்து சமணர்களை அடக்கியது. முருகன்தான் சம்பந்தராக அவதரித்தார் என்பது நம் ஸ்வாமிகளின்  கொள்கை. இதைப் பல பாடல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இங்கு சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேணும். சம்பந்தர் தானே முன்னின்று அவ்வாறு செய்யவில்லை.  வாதில் தோற்ற சமணர்கள் , தங்கள் சபதப்படி, தாங்களாகவே இத்தண்டனையை  ஏற்று அனுபவித்தனர். 
  • முருகன் (இறைவன்) அருளில் நம்பிக்கையில்லாதவர்கள் துன்பம் அனுபவிப்பர்.
  • திருவண்ணாமலையில் முருகன் மயில்மீது தோன்றி அருணகிரியாருக்குக் காட்சியளித்தான். இதை யாவரும் வியந்து போற்றினர்.
  • விருத்தாசலத்தில் இறப்பவர்களுக்கு  "வடிவறும்" = மீண்டும் வடிவு (உடல்) எடுக்கும் நிலை தோன்றாது! அத்தகைய தூய, உயர்ந்த நிலையாகிய முக்திப்பேறு - "சுசிகரம்" - அவர்களுக்குக் கிடைக்கும்.
எத்தகைய மகிமை வாய்ந்த தலம்! எத்தகைய உயர்ந்த பாடல்கள்! மீண்டும் மீண்டும் போற்றிப் பயில்வோம் !



கோவிலின் பழைய தோற்றம். from: Wikimapia.  Acknowldeged with thanks.

2 pictures are from  mclmarimuthu.blogspot.in. Acknowledged with thanks.
Tiruppugazh text downloaded from kaumaram.com. Acknowledged with profound thanks. This is an excellent site for learning Tiruppugazh and other songs of Arunagirinatha with meaning. We can also listen to the recital of many of them.
I generally follow  Tanigaimani Va.Su.Che. Pillai for the meaning.





Tuesday, 2 February 2016

16. திருப்புகழ்- 14. திருநெல்வாயில்- சிவபுரி


16. திருப்புகழ் - 14. திருநெல்வாயில்- சிவபுரி



அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த தலம் (13வது) திருநெல்வாயிலாகும். இது  இன்று சிவபுரி என  வழங்கப்படுகிறது. சிதம்பரத்திற்கு அருகே 3 கி.மீ  தூரத்தில் உள்ளது. அழகான, சிறிய கோவில், குளத்துடன் திகழ்கிறது.

இது திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் வரலாற்றோடு தொடர்புடையது. ஸ்வாமிகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அவர் அடியார்களுடன்    
திருநல்லூர்ப் பெருமணம் [ஆச்சாள்புரம்] போகும்போது, இத்தலத்தின்  அருகே வருகையில் பகலில் பசியால் வாடினர். இங்குள்ள இறைவன்  ஒரு கோவில் சிப்பந்தி வடிவில் வந்து அனைவருக்கும்  உணவளித்தார், அதனால் இங்கு ஸ்வாமியின் பெயர் உச்சிநாதர்- மத்யானேஶ்வரர் என்பதாகும். ஸ்வாமி சுயம்பு. அம்பாளின் பெயர் கனகம்பாள். சம்பந்தர் சிதம்பரம் வந்தபோது இங்கும் வந்து தினமும் தரிசித்தார். ஒரு பதிகமும் பாடியிருக்கிறார். (இரண்டாம் திருமுறை)

புடையினார் புள்ளி கால்பொருந்திய
மடையினார் மணி  நீர் நெல்வாயிலார்
நடையினார் விறர்  கோவணந்நயந்து
உடையினார் எமது உச்சியாரே.

நெண்பயங்கு நெல் வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்பயன் கொளப் பாடவல்லவர்
விண்பயன் கொளும் வேட்கையாளரே.



இங்கு வந்த நம் அருணகிரிநாத ஸ்வாமிகள் ஓர் அருமையான திருப்புகழ் பாடுகிறார்.

அந்தக் காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வறுமையில் வாடினர். இதுபற்றியே திருவள்ளுவரும் , "இருவேறுலகத் தியற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு" என்று பாடினார் போலும்! அவர்கள் தமிழை விற்றுப் பிழைக்கவில்லை. என்றாலும்  சில ப்ரபுக்களை/வள்ளல்களை நம்பியே வாழவேண்டி யிருந்தது. வயிற்றுக்காக பலரையும் பாடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அருணகிநாதர் சொல்கிறார்.


அறிவிலாதவர் ஈனர் பேச்சிரண்டு
பகரு நாவினர் லோபர்  தீக்குணங்கள்
அதிக பாதகர் மாதர்மேல் கலன்கள்                   புனை ஆதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள்                     தெரியாத

நெறியிலாதவர்  சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர்  மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பால் சிறந்த                தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடி நோக்கிழந்து
வறுமை யாகிய தீயின்மேல் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி                   அருள்வாயே.



அறிவிலிகள், ஈனர்கள், சொல்லிய பேச்சை மாற்றுபவர்கள், உலோபிகள்,
தீய குணங்களுடன் பாவச்செயல் செய்பவர்கள், பொது மாதர்களுக்கு ஆபரணங்களைப் புனைந்து பார்க்கும்  மூடர்கள்-

அசடர்கள்,பூமியில் வீணே காலம் போக்கித் திரிபவர்கள், பெண்கள் மீது காமத்தினால் அழிந்துபோகும் மனதுடையவர்கள், நீதி நூல்களின் பயனை அறியாதவர்கள்-

 நல்ல வழியில் போகாதவர்கள், சூதாட்டத்தினால்  பொருள் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், ஆசையினால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள்- இத்தகையோரிடம் சென்று, நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி-


நினைவு தேய்ந்துபோக, வாட்டமடைந்து, கண்பார்வையும் மங்கி, வறுமையென்னும் தீயில் விழுந்து  புழுவைப்போல  நெளிகின்ற என்மீது இரங்கி அருள்புரிவாயாக.


நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள் வேட்டிணங்கி
நகைகொடேழிசை பாடிமேற் பொலிந்து             களிகூர

நடுவி லாதகு  ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர் மணாளர் தோட்பிரிந்து
நசைபொறாதழு தாகமாய்த் தழுங்கி                 யிடர்கூர

மறியு மாழ்கட லூடுபோய்க்  கரந்து
கவடு கோயின்  மேலுமாய்ப் பரந்து
வளவரு மாவிரு கூறதாய்த் தடிந்த                   வடிவேலா

மருவு காளமு கீல்கள் கூட்டெழுந்து
மதியுலாவிய மாட்மேற் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில்வீற் றிருந்த        பெருமாளே.


இந்தப் பகுதியில் முருகனின் அவதார மகிமையைச் சொல்கிறார். அவர் அசுரர்களை மாய்த்து  தேவர்களுக்கு வாழ்வளித்தார். இதைச் சொல்கிறார்.

நறுமணமுள்ள நீண்ட கூந்தலுடைய தேவலோகத்து மகளிர் தத்தம் காதலர்களுடன் , களிப்பு மிகவும், சிரித்தும், ஏழிசையுடன் பாடியும், மகிழ்ச்சி பொங்கக் குதூகலிக்கவும்- 

நியாயம் இல்லாமல், குரோதம் மிகுந்து, அழிதொழிலைச் செய்த அசுர மகளீர் , தத்தம் கணவர்களின் தோளைப் பிரிந்து, ஆசையை அடக்கமுடியாமல் அழுது, தங்கள் உடலை வருத்தி  துன்பம் பெருகவும்-

அலைகள் பொங்கும் ஆழ்கடலின் உள்ளே சென்று மறைந்து, கோடிக்கணக்காக விரியும் கிளைகளுடன்  நின்ற சூரனாம் மாமரம் இரண்டு கூறாகும்படி வெட்டிப்பிளந்த கூறிய வேலாயுதத்தை உடையவனே!

பொருந்திய கரிய மேகங்கள் கூட்டமாய் எழுந்து, நிலவுலாவும் மாடங்களின் மீது படிகின்ற, வயல்கள் மிகுந்த திருநெல்வாயிலில் அமர்ந்த பெருமாளே!

வறுமையினால் ஈனர்களைப் பாடும் சிறுமையைத் தவிர்த்து அருள்வாயாக.

வறுமை எவ்வளவு கொடியது என்பதைக் காட்டுகிறார், அதனால்தானே அறிவுமிக்க புலவர்களும் புல்லர்களைப் பாடிப் பிழைக்கவேண்டி யுள்ளது!
இக்காலத்திலும்  அறிவிற் சிறந்தவர்களும் அரசியல்வாதிகளை அண்டியே பிழைக்கவேண்டியுள்ளது! 

வறுமையின் கொடுமையை  கந்தரனுபூதியில் சொல்கிறார்.

வடிவும் தனமும் மனமும் குணமும் 
குடியும் குலமும் குடிபோ கியவா 
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே 
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.


அறிவற்றவர்களிடம் சென்று  பாடும் நிலை வேண்டாம் என்றும்    வேண்டுகிறார்.
கரவாகிய கல்வி யுளார் கடை சென்று
 இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? 
 குரவா, குமரா, குலிசாயுத, குஞ் 
 சரவா, சிவயோக தயாபரனே.


அருணகிரிநாதர் சிலவிஷயங்களைத் தன்மேலேயே ஏற்றிச் சொன்னாலும் அந்த நிலை அத்தகைய அருளாளர்களுக்குப் பொருந்தாது. பிறர்மீதுள்ள கருணையினாலேயே அவ்வாறு பாடுகிறார்  என்பதே சரியாகும்.





சிவபுரிக் கோவிலின் இன்னொரு தோற்றம்.

Pictures from: www.thenkoodu.in. Thanks.