Showing posts with label ஆர்.கே. லக்ஷ்மண். Show all posts
Showing posts with label ஆர்.கே. லக்ஷ்மண். Show all posts

Sunday, 4 June 2017

92.திருப்புகழ் - 86. ராஜபுரம் [ராசீபுரம்]


92.திருப்புகழ் - 86. ராஜபுரம் [ராசீபுரம்]




அருணகிரிநாதர்  சேலத்திலிருந்து  ராஜபுரம் என்னும் தலத்திற்கு வருகிறார். 86வது தலம். இது  இன்று ராசீபுரமாகிவிட்டது! இங்குள்ள கோவில் பற்றிய தகவல்  எதுவும் கிடைக்கவில்லை. இங்கு ஸ்வாமி ஆறு முகங்களுடன் இரு தேவிமார் சமேதராக இருக்கிறார் என தணிகைமணியவர்கள் எழுதியிருக்கிறார். ஒரு படமும் கிடைக்கவில்லை.


ராசீபுரம் சமீபகாலங்களில்  ஆர்.கே. நாராயண், ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால்
உலகில் பலரும் கேள்விப்பட்ட ஊராகியது. மைசூரிலும் (சென்னையிலும்) மும்பையிலும் வசித்தாலும், புகழ் சொந்த மண்ணுக்கே சேரும்!






இங்கு ஒரு திருப்புகழ் பாடல் இருக்கிறது.


சங்கு வார்முடி பொற்கழல் 
பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகரி பெற்றவன்            வெகுகோடிச்

சந்த பாஷைகள் கற்றவன்
மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள                   கவிராஜப்

பங்கி பாலச ரஸ்வதி
சங்க நூல்கள் விதித்தப்ர
பந்த போத முரைத்திடு                 புலவோன்யான்

பண்டை மூவெழுவர்க்கெதிர்
கண்ட நீயுமெ    னச்சில
பஞ்ச பாதகரைப் புகழ்                     செயலாமோ ;

வெங்கை யானை வனத்திடை
துங்க   மாமுத     லைக்குவெ
ருண்டு மூலமெ   னக்கரு                  டனிலேறி

விண்ப ராவஅ டுக்கிய
மண்ப ராவஅ  தற்குவி
தம்ப  ராவஅ டுப்பவன்                        மருகோனே

கொங்க ணாதித ரப்பெறு
கொங்கி நூடுசு கித்திடு 
கொங்கின் வீரக  ணப்ரிய                குமராபொற்

கொங்கு லாவுகு றக்கொடி
கொங்கை யேதழு  விச்செறி
கொங்கு ராஜபு ரத்துறை                   பெருமாளே

பஞ்ச  பாதகரைப் புகழ் செயலாமோ !


தன்னுடைய விருதை எடுத்து ஓதும்  சங்கம் என்ன,நீண்ட கிரீடம் என்ன, பொன்னாலான  வீரக் கழல் என்ன,மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன,விருதுக்கொடி என்ன, பல்லக்கு என்ன,குதிரை என்ன, யானை என்ன என்று இவையெல்லாம் கொண்டவன்,


பல கோடிக்கணக்கான அழகிய பாஷைகளைக் கற்றவன்,மந்திர வாதத்தில் வல்லவன், [ஆசு, மதுரம், சித்ரம், வித்தாரம் என்னும்] நான்கு  வகைக் கவிகளிலும் வல்லவன், சண்டமாருதம் போலப் பேச வல்லவன்,  மற்றும்


'கவிராஜ பங்கி ' , 'பால சரஸ்வதி' என்னும் பட்டங்களை உடையவன். சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த  அறிவுரைகளை எடுத்து ஓதவல்ல புலவன் நான் -


பழைய  [ முதல், இடை, கடை எனும் ]  மூவேழு  (3x7=21 ) வள்ளல்களுக்கு ஒப்பானவன் நீ  என்றெல்லாம் சொல்லி, ஐம்பெரும் பாதகங்களைச் செய்தவரையும் புகழ்கின்ற செயல் பொருந்துமா? [இத்தகைய செயல் ஒழியவேண்டும்,]


விரும்பத்தக்க துதிக்கையை உடைய யானையாகிய கஜேந்திரன், ஜலத்திலே  உயர்ந்த, பெரிய முதலைவாய்ப்பட்டு பயந்து, "மூலமே" எனக்கூச்சலிட்ட போது


கருடன் மீது ஏறி,  விண்ணுலகம் போற்றவும்,  அடுக்கடுக்காயுள்ள பதினான்கு உலகம் போற்றவும், அந்தந்த உலகத்துக்கு நன்மை பெருகும்படி  உதவுபவனான திருமாலின் மருகனே !


கொங்கண ரிஷியாகிய முதல்வரால் தரப்பட்ட கொங்கு நாட்டில், சுகமாயிருக்கின்ற பூந்தாதுக்கள்  உள்ள மாலை அணிந்த வீரனே ! பதினெண் கணங்களும் பிரியப்படுபவனே ! குமரனே !


அழகிய நறுமணம் வீசும் வள்ளியின் மார்பை அணைந்த பெருமாளே !கொங்கு மண்டலத்தில் உள்ள ராஜபுரத்தில் அமர்ந்த பெருமாளே !
பஞ்ச பாதகரைப் புகழலாமா?


அந்தக் காலத்தில் பெரிய புலவர்கள் எத்தனை செருக்குடனும் மிடுக்குடனும் உலவி வந்தனர் என்பது தெரிகிறது.  கல்வி கேள்விகளில் எவ்வளவு சிறந்திருந்தும், வயிறு வளர்க்க ஈனர்களையே புகழ்ந்து காலம் ஓட்டினர். இத்தகைய பிழைப்பு தனக்கு வேண்டாம் என்கிறார் அருணகிரியார்.

கொங்கண சித்தர் என்று ஒருவர் இருந்ததாகவும் , அவர் தாமிரத்தை தங்கமாக ரசவாதம் செய்து வழங்கி வந்தார் எனவும் ஒரு கதை வழங்கிவருகிறது. அவருக்கும் கொங்கு நாட்டிற்கும் சம்பந்தம் இருந்தது போலும்!


from: You Tube.




ராசீபுரத்தில் புலவர்களைப் பற்றிப் பாடியதிலும் ஒரு அதிசயப் பொருத்தம் இருக்கிறது. நம்காலத்தில்  ராசீபுரத்தைச் சேர்ந்த  ஆர்.கே. நாராயண், ஆர்.கே.லக்ஷ்மண் இருவரும் புலவராக இல்லாவிட்டாலும் இலக்கியத்துறையில் உலகமே புகழும் அளவிற்கு சாதனை புரிந்தனர்.  "திறமையான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும் " என்ற பாரதியாரின் கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக  இருந்தவர்கள். ஆனால் பண்டைய புலவர்கள் போன்று செருக்குற்றுத் திரியவில்லை!