Showing posts with label சம்பந்தரின் கடைசி பதிகம். Show all posts
Showing posts with label சம்பந்தரின் கடைசி பதிகம். Show all posts

Monday, 8 February 2016

22. திருப்புகழ்- 20. ஆச்சாபுரம்- திருநல்லூர்ப்பெருமணம்.



22.திருப்புகழ் -20. ஆச்சாபுரம்-
திருநல்லூர்ப்பெருமணம்



அருணகிரிநாதர்  தரிசித்த அடுத்த தலம் -19வது- ஆச்சாபுரம் என்னும் நல்லூர். ஆச்சாள்புரம் என்பது இன்றைய பெயர். ஊரின் பெயர் நல்லூர். கோவிலின் பெயர் பெருமணம். எனவே, திருநல்லூர்ப் பெருமணம்.
சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் அருகில் உள்ளது.

இங்கு ஸ்வாமிபெயர் சிவலோகத்தியாகேசர், சிவலோக நாதர். கல்வெட்டில் திருப்பெருமணமுடைய மகாதேவர் என்று இருக்கிறது. அம்பாள் பெயர் சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி, வெண்ணீற்று உமை நங்கை.

இது நினைத்தாலே புல்லரிக்கும் அற்புதத் தலம். ஞானசம்பந்தருக்கு 16 வயது ஆனதும் அவருக்கு திருமணம் முடிக்க இவ்வூரிலுள்ள  நம்பியாண்டார் நம்பிகளின் மகளான "ஸ்தோத்ரபூர்ணாம்பிகை" யை நிச்சயித்து, திருமணமும் நடந்தது. சடங்குகள்  விதிப்படி நடந்து முடிந்தவுடன்  சம்பந்த ஸ்வாமிகள்  , வினைக்கு இடமாகும் மணவாழ்வு வந்ததே என நினைத்துக் கோவிலினுள் சென்று பதிகம் பாடி வழிபட்டார். அப்போது " வந்த அனைவருடன் இங்கு சிவஜோதியில் கலந்துவிடுக " என பெருமான் சிவஜோதியாக விளங்க, சம்பந்தர்  வந்திருந்த அனைவருடன் அந்த ஜோதியில் ஐக்கியமானார்! அதனால் இது முக்தித்தலமாகக் கருதப்படுகிறது. சம்பந்தர்  தனது யாத்திரையில் கடைசியாக வந்த தலம் இதுவேயாகும். இங்கு மணக்கோலத்தில் தோத்திர பூர்ணாம்பிகையுடன் கூடிய சம்பந்தரின்  அழகிய மூலவிக்ரஹம் இருக்கிறது.



இத்தலத்தில் சம்பந்தர் பாடிய பதிகம் :

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பருமணம் பாட்டு மெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேய நம்பானே.


தருமணல் ஓதம்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவை நல்லார்கள்
வருமணம் கூட்டி மணம் செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்  ணோர்பாகம் கொண்டானே.

அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

மேகத்த கண்டனெண் தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த 
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.

நறும்பொழிற் காழியுள்  ஞானசம்பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும்பழி பாவம் அவலம் இலாரே.


  ஜோதியில் கலக்கும்போது பாடிய பதிகம் "காதலாகிக் கசிந்து" என்னும் நமசிவாயத் திருப்பதிகம். இதுவே திருஞானசம்பந்தர் பாடிய கடைசிப் பதிகமாகும்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை  நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்த னையவர்  தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தையால் தமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தையால் மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.



இதை ராமலிங்க ஸ்வாமிகள் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.



"விழிப்பாலன்கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக் கச்சோதிதரு
நல்லூர்ப் பெருமணம் வாழ் நன்னிலையே"

from: adiyarkadiyen.blogspot.in. Thanks.


இங்கு வந்த அருணகிரிநாதர்  ஒரு திருப்புகழ் பாடினார்.
"நல்லூர்ப் பெருமணத்தான் யோகத்தையே புரிந்தானே" எனச் சம்பந்தர் பாடியதைக் கருத்தில் கொண்டார் போலும்! இந்தத் திருப்புகழ் ஒரே யோக சூக்ஷ்மங்கள் அடங்கிய பாடலாக இருக்கிறது!

மூல முண்டகனு பூதி மந்திரப
     ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
          தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல்

மூது ரம்பலவர் பீட மந்தமுமி
     லாத பந்தவொளி யாயி ரங்கிரண
          மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம்

ஓல மென்றுபல தாள சந்தமிடு
     சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
          ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம்

ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
     தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
          மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ


சூலி யந்தரிக பாலி சங்கரிபு
     ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
          வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே

சூர சங்கரகு மார இந்திரச
     காய அன்பருப கார சுந்தரகு
          காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா

சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
     மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
          நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே

தேவ ரம்பையமு தீண மங்கைதரு
     மான ணைந்தபுய தீர சங்கரதி
          யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.


[ Taken from: kaumaram.com. Profound thanks.]

முதல் நான்கு அடிகளில் சிவயோக சாதனைகள் பற்றிக் கூறியிருக்கிறார்.. சூக்ஷ்மமான இந்த விஷயத்தை அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேணும். ( ஸ்ரீ க்ருபானந்த வாரியாரின் விளக்க உரைகளைப் பார்க்கலாம். kaumaram.com மில் எளிய விளக்கம் இருக்கிறது. தகுந்த குரு இல்லாமல் இத்தகைய பயிற்சிகளில் நாமாகவே ஈடுபடுவது தகாது)

சூரியன், சந்திரன், அக்னி என்ற சொற்கள்  யோக நெறியில் சங்கேதக்  குறிகளாகும். கோடி சந்திரவொளி சந்தியாதோ  எனப் பாடுகிறார். கொங்கணகிரிப் பாடலிலும்  "சந்திரவெளிக்கு வழி யருள்வாயே " என்று வேண்டுகிறார், அதேபோல் ஸ்ரீசைலம் பாடலிலும் "முழுமதி தழலென  வொளிதிகழ் வெளி " எனப் பாடுகிறார். ஆனால் அருணையடிகள்  இத்தகைய யோக, தந்திர நெறிகளைப் பின்பற்றியவர் அல்ல. "ஆன பயபக்தி வழிபாடு பெறு முத்தி யது " என்பது தான் அவர் கொள்கை. எதனையும் முருகனிடமே வேண்டிப் பெறுவதுதான் அவர் வழி. யோகிகள் இவ்வாறெல்லாம் முயன்று அடைந்ததை முருகனுடைய அருள் ஒன்றினாலயே பெறவேண்டும் என்பது குறிப்பு. இதையே  "காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்  வீட்டிற் புகுதல் மிக எளிதே"  எனக் கந்தரலங்காரத்தில் யோகிகளுக்கு  அறிவுரை கூறுகிறார்.

பின் நான்கு  வரிகளில் முருகன் பெருமையைச் சொல்கிறார்.

சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாசவடிவை உடையவள், கபாலம் ஏந்தியவள், சங்கரி, புரத்தை எரித்தவள், திரிபுர ஸம்ஹார காலத்தில் அம்பாயிருந்த வைஷ்ணவி, என்றும் இளையவள், எண்குணத்தவனான சிவபிரானின் பங்கில் உறைபவள் ஆகிய சிவகாம சுந்தரி உகந்த சேயே!

சூரனைச் ஸம்ஹரித்த குமரவேளே ! இந்த்ரனுக்கு உதவிசெய்பவனே! அன்பர்களுக்கு உபகாரம் செய்பவனே ! அழகனே ! குஹனே! என்றெல்லாம் வேதங்கள்  உரைக்கத் திருநடனம்  புரியும் வேலனே !

பரிசுத்தமான  திருவெண்ணீற்றை   தரியாதவர்களும்,  பொல்லாதவர்களுமான சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுவில் ஏறுங்கள் எனத் திருவிளையாடல் புரிந்து, திருநீற்றை அடியவர்களுக்கு  அளித்த  தாமரைக் கையனே! சந்திரன் போன்ற முகவிலாசம் உடையவனே! கந்தவேளே!

தேவமகளிர் போன்றவளும். பாற்கடலில் உதித்த லக்ஷ்மி அளித்த மானாகிய வள்ளி ( அல்லது, அமுதவல்லி யென்ற பெயருடன் கற்பகத் தருவின் நிழலில் இருந்த தேவஸேனை) அணைந்த  புயத்தை உடையவனே! தீரனே!  சங்கரத் தியாகர்- சிவலோகத் தியாகர்  என்ற திருநாமம் உடைய சிவபெருமான்  வந்து உரைகின்ற திருநல்லூர் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே

 அரிய யோகநிலை பெறும் பேறு கிட்டுமா?

இங்கு, ஞானசம்பந்தரின்  செயலை முருகன் செய்ததாகக்  கூறுகிறார். சம்பந்தராக வந்தது முருகனே என்பது  அருணகிரிநாதரின் கொள்கை. இதைப் பல பாடல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கந்தரந்தாதியிலிருந்து ஒரு பாடல்:

திருக்கையம் போதிக ளோகஞ்ச  மோநஞ்ச மோதிருமால்
திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனத் தென்னனங்கத்
திருக்கையம் போருகக்கைந்  நீற்றின் மாற்றித் தென்னூல்சிவபத்
திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற்  சிறுமிதற்கே.



முன்பு சம்பந்த மூர்த்தியாக அவதரித்து, சமணமதம் சார்ந்திருந்த பாண்டியனது கூனை திருநீற்றால் மாற்றியும், எந்த சமயம் பெரிது என்னும் சந்தேகம் இல்லாமல், சைவ சமயமே பெரிதென்று நம்பும்படி, ருக்வேத சாரமாகிய தேவாரத்தை மொழிந்தருளிய  [ருக்கு ஐயம் போக உரைத்தோன் - கடைசி வரி ]குமாரக் கடவுளின்  மலையில் வாழும் கன்னியினது கண், சமுத்திரமோ, தாமரையோ, விஷமோ, அம்போ,வேலோ? (அகத்துறையில் அமைந்த பாடல்)
[இது  அந்தாதியில் 96 வது பாடல். 29ம் பாடலில் சம்பந்தரைத்தவிற வேறு தெய்வங்களே இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார். அதைப் பிறகு பார்ப்போம்.]

முருகன்  சம்பந்தராக வந்தான் என்பதைச் சில சைவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அருணகிரிநாதருக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஸ்ரீ ராமலிங்க  ஸ்வாமிகளும் அருட்பாவில் இதைச் சொல்லியிருக்கிறார்:

சைவம்  தழைக்கத் தழைத்தாண்டி
ஞானசம்பந்தன்  பேர்கொண்டு 
அழைத்தாண்டி.

இத்தலத்தில் சம்பந்தரின் மணவிழா ஒவ்வொரு வருஷமும்  வைகாசி மூலத்தன்று பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. மாதிரிக்கு ஒரு பத்திரிகை:


FROM: www.marvelmurugan.com. thanks.

From: wikimapia.Copyright position not known. Used here purely for non-commercial, educational purpose.