Showing posts with label ஞான நிலை. Show all posts
Showing posts with label ஞான நிலை. Show all posts

Tuesday, 7 March 2017

75.திருப்புகழ் 69. சுவாமிமலை -2


75.திருப்புகழ் 69. சுவாமிமலை -2






ஸ்வாமிமலை : முருகன் சிவபிரானுக்கு ப்ரணவ உபதேசம் செய்ததை நினைவுபடுத்தும் திருத்தலம். அதனால் இங்கு பெருமான்  ஸ்வாமிநாதன் ஆனார். தகப்பன் சாமி, புத்ர குருக்கள் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. இந்த தலத்திற்கும் குருமலை, சுந்தராசலம், தாத்ரீகிரி முதலிய பெயர்கள் இருக்கின்றன. [ தாத்ரி- நெல்லி. இங்கு நெல்லியே தல மரம்.]


பிறவி நீத்திடும் தாரகத் துருவமாம்
தலைமை எய்திய ஏரகத் தறுமுகன் 

என்ற கந்தபுராண வாக்கால் இதன் பெருமை விளங்கும். யோக வழியில் இது அனாஹத க்ஷேத்ரம் என்பார்கள்.

முருகனைச் சபையில் அழைக்க

இங்கு அருணகிரியார் அற்புத வாக்கால் அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார். சில பாடல்கள் அவருடைய வாழ்க்கை நிகழ்சிகளைக் கூறுவதாக இருக்கின்றன. ப்ரபுட தேவ ராஜன் சபையில் சம்பந்தாண்டானோடு வாதுபுரிந்த சமயத்தில் முருகனை வரவழைக்கப் பாடிய பாடல்:

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
     துங்கத் திசைமலை யுவரியு மறுகச            லரிபேரி

துன்றச் சிலைமணி கலகல கலினென
     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
     துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு          மயில்வேலா


கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
     கந்தப் பரிமள தனகிரி யுமையரு                    ளிளையோனே

கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
     கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய          பெருமாளே.


எந்தத் திகையினு மலையினு முவரியி
     னெந்தப் படியினு முகடினு முளபல
      எந்தச் சடலமு முயிரியை பிறவியி                       னுழலாதே

இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
     என்சித் தமுமன முருகிநல் சுருதியின்                 முறையோடே

சந்தித் தரஹர சிவசிவ சரணென
     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
     தங்கப் புளகித மெழஇரு விழிபுனல்                    குதிபாயச்

சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
     னந்தத் திருநட மிடுசர ணழகுற
     சந்தச் சபைதனி லெனதுள முருகவும்                
 வருவாயே


 சல்லரி, பேரி என்னும் வாத்யங்கள்  உயர்ந்த திசைகளும்,  மலைகளும்,  கடல்களும், கலங்கும்படி நெருங்கி  தொந்தத் திகுகுட டிமிடிமி டுடுடுடு   டமடம என்றிப்படி யெல்லாம் ஒலியெழுப்ப,


முழங்கும் மணி கலின் கலின் எனச் சப்திக்க, தேவர்கள் பூமலர் சிந்த, பிரமன் வேதத்தைச் சொல்லிப் புகழ, அசுரர்கள் துன்பமடைந்து எமன் உலகை அடைய செலுத்திய கூரிய வேலாயுதனே !


மணம் பொருந்திய சடைமுடியையும், நெருப்பு போன்ற திருவுருவத்தையும், வெற்றியையும் கொண்ட சிவபிரானுக்கு உயிர்போன்ற மலைமகள், பச்சை நிறத்தி,சந்தனமாதிய நறுமணம் பூசியவள், ஆகிய உமாதேவி அருளிய இறைவனே !
தாமரைப்பீடத்தில் அமர்ந்துள்ள திருமகள், குலமகள், அழகிய பொற்கொடிபோன்ற இடையை உடைய லக்ஷ்மி  மணந்துள்ள திருமாலின் மருகனே ! நல்ல மணம்வீசும் குருமலை என்னும் சுவாமிமலையில் அமர்ந்துள்ள பெருமாளே !


எல்லாத் திசைகளிலும், மலைகளிலும், கடலிலும், பூமியிலும் விட்டின் உச்சி, மலை உச்சி என்று இப்படி பல இடங்களிலும் வசிக்கின்ற பலவகையான எந்த உடலிலும் வாழும்  பிறப்புக்களிலும் நான் உழன்று திரியாமல் -


இந்த உடலில் இருக்கும்போதே என் உயிர் நிலை பெறுவதற்காக, உனது தாமரையன்ன தாள்களில்  மணமுள்ள மலர் சாத்தி, என் சித்தமும் மனமும் உருகி, சிறந்த வேதங்களில் சொல்லிய படியே,


உன்னைச் சந்தித்தும், "ஹர ஹர, சிவ சிவ சரணம் " என்று நான்  கும்பிட்டும் வழிபட, நீ உன் இணையடிகளை என் தலைமிசை பொருந்த, என் உடல் புளகிதம் அடைய, இரு கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் அருவி நீர்போலக் குதித்துப் பாய -


மின்னல்கொடி போன்ற இடையை உடைய தேவஸேனையின் அழகு முன்னே விளங்க, திரு நடமிடும் உனது திருவடி அழகுடன் பொலிய, இந்த அழகிய சபையில் எனது உள்ளம் உருகவும் வந்தருள்வாயாக !

இதில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார். நாம் அனாதிகாலமாக இந்தச் சம்சாரத்தில்  பிறந்து- இறந்து உழன்று வருகிறோம். நாம் பிறக்காத இடமில்லை, நாடில்லை, இனமில்லை, குலமில்லை, ஜாதியில்லை. நாம்  எடுக்காத உடலில்லை, பேசாத மொழியில்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மொழி, இனம், நாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி யாரேனும் விவேகிகள் பூசலிடுவார்களா ?

பாத தரிசனம் பெற்றது

இத்தலத்தில் அருணகிரியார் முருகனின் பாததரிசனம் பெற்றார் என்பதை ஒருபாட்டில் சொல்கிறார் :

முதுமாமறைக்குள் ஒரு மாபொருட்குள்
மொழியே உரைத்த  குரு நாதா !
தகையாதெனக்குன்  அடிகாண வைத்த 
தனியேரகத்தின் முருகோனே !     [சகமாயை ]

இப்படி ஒவ்வொரு பாட்டிலும் உயர்ந்த பொருட்களைப் பாடியிருக்கிறார். 


ஏரகத்திறைவன்- அமரர் சில்பியின் கைவண்ணம்.

வேண்டுதல்கள்


சிவசமய அறுமுகவ திருவேரகத்திலுறை பெருமாளே
அசடனை உன் அடியே வழுத்த அருள் தருவாயே !

நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ்  பெருமாளே
அமலை அடியவர் கொடிய வினைகொடும்
அபயமிடுகால்   அறியாயோ !

திருமால் தனக்கு மருகா அரக்கர்
சிரமே துணித்த பெருமாளே !
பிழையே பொறுத்துன் இருதாளில் உற்ற
பெருவாழ்வு பற்ற   அருள்வாயே !

சுபானமுறு ஞானத் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் பெருமாளே !
அடியேனும் சுவாமியடிதேடும் 
அநாதிமொழி ஞானம் தருவாயே !
இதாமெனிருபோதும்  சதாவின் மொழியால் இன்று
யானும் உனை ஒதும்படி பாராய் !

திறமாதவர்க்கனிந்து உன் இருபாதபத்மம் உய்ந்த
திருவேரகர்த்தமர்ந்த பெருமாளே !
அடியேனுதைத்த புன்சொல் அதுமீது  நித்த முந்தன்
அருளே தழைத்துகந்து வரவேணும் .

திரளாமணிக்குலங்கள்  அருணோதயத்தை வென்ற 
திருவேரகத்தமர்ந்த   பெருமாளே !
பொற்சதங்கை தருகீத வெட்சி துன்று முதிராத
நற்பதங்கள் தருவாயே !

வளைகுலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமி
மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே !
பரிவுகொடனந்த  கோடி முனிவர்கள் புகழ்ந்து பாட
பருமயிலுடன் குலாவி  வரவேணும்.

அடைவொடுலகங்கள் யாவும்  உதவி  நிலைகண்ட பாவை
அருள்புதல்வர் அண்டராஜர்    பெருமாளே!
இசையொடு புகழ்ந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசல்
இரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ 

சேவேறுமீசர் சுற்ற மாஞான  மோனபுத்தி
சீராகவேயுரைத்த குரு நாதா !
நீவேறெனாதிருக்க நான்வேறெனாதிருக்க 
நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர
நீடார் ஷடாதரத்தின்  மீதே பராபரத்தை
நீ காண் என ஆவனைச்சொல்  அருள்வாயே !

சூதமிகவளர்  சோலைமருவு சுவாமிமலை தனில் உறைவோனே
சூரனுடலற வாரிசுவறிட வேலைவிடவல பெருமாளே !
காலன் எனையணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே !

மிக  நிலாவெறித்த அமுதவேணி நிற்க
விழை சுவாமிவெற்பி லுறைவோனே !
விரைய ஞான வித்தை யருள் செய் தாதை கற்க
வினவ ஒதுவித்த பெருமாளே !
இடைவிடா டெடுத்த பிறவி வேரறுத்து
உன் இனிய தாள் அளிப்ப தொரு நாளே !

சுராதிபதி மாலயனுமாலொடு  சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே !
சிவாயமெனு நாமம் ஒருகாலும் நினையாத
திமிராகரனை வாவென்  றருள்வாயே 
திரோத மலமாறும் அடியார்கள் அருமாதவர்
தியானமுறு பாதம் தருவாயே !

குளிகை யுயர்ந்த கோபுர மளிகை பொனிஞ்சி சூழ்தரு
ஸ்வாமிமலை நின்றுலாவிய   பெருமாளே !
உன் வாரிஜ பதங்கள் நாயடியேன் முடிபுனைத்து போதக
வாசகம் வழங்கியாள்வதும் ஒரு நாளே !

இங்கே ஒரு பாடலில்  "சலாம் " என்ற முகம்மதியர் சொல் வருகிறது. இதனால் அருணகிரியார் காலத்தில் முகம்மதியர் ஆதிக்கம்  இருந்தது என்பது தெரிகிறது.



தந்தைக்கு முன்னம் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி- குருமலை ஞான தேசிகன் !

தத்துவம், மொழி கடந்த நிலை பெற

காவேரி வடகரைச் சாமிமலையுறை தம்பிரானே !

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
     மாமாய விருளுமற் றேகி பவமென
     வாகாச பரமசிற் சோதி பரையைய        டைந்துளாமே

ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
     யோகீச ரெவருமெட் டாத பரதுரி
      யாதீத மகளமெப் போது முதயம          நந்தமோகம்


வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
      மாலீச ரெனுமவற் கேது விபுலம         சங்கையால்நீள்

மாளாத தனிசமுற் றாய தரியநி
     ராதார முலைவில்சற் சோதி நிருபமு
     

     மாறாத சுகவெளத் தாணு வுடனினி          தென்றுசேர்வேன்.



விடுதற்கரிய மண்ணாசை என்னும் விலங்கும், மஹாமாய அஞ்ஞான இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட நிலை என்று சொல்லும்படி, ஆகாச பரம அறிவுச் சோதியான பராசக்தியை அடைந்து, நினைப்பை விட்டு


முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய், முற்பட்டதாய்,  என்றும் யோகீசர் எவரும் எட்டாததான மேலான துரிய நிலைக்கு மேற்பட்ட நிலையினதாய், உருவமில்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய்,


வான் முதலான   சகல விரிவுள்ள வாழ்வுப்பொருளாய், லோகத்தின் ஆதியாயும் முடிவாயும் நிற்பதாய், உண்மை அறிவாய், தாமரை  மலரில் வீற்றிருக்கும் பிரமன், திருமால், ஈசன் என்பவர்க்கு மூலகாரணமாய்  நிற்கும் பெருமை கொண்டதாய், அச்சம் இல்லாது நீடித்து,


இறத்தல் இல்லாது தானே மெய்யாம் தன்மை உற்றதாய், அரியதாய், சார்பொன்றும் இல்லாததாய், அழிவிலாததாய், நிலையான  ஜோதியாய், ரூபம் அற்றதாய், மாறுதல் இல்லாததான சுக வெள்ள நிலைப்பொருளாம் சிவத்துடன் நான் இனி என்று சேர்வேன் !

குருமலையின் மருவு குரு நாத உம்பர்தம் பெருமாளே !
கருணைபொழி கமலமுக மாறுமிந்துளந்
     தொடைமகுட முடியும் ஒளிர் நூபுரஞ்சரண்
     கலகலென மயிலின்மிசை ஏறிவந்துகந்து எனை ஆள்வாய். 


ஏம வெயிற் பல வெற்பினில்   
நற்பதினாலுலகத்தினில் உற்றுறு பக்தர்கள்
ஏது  நினைத்ததும் மெத்த  அளித்தருள்  இளையோனே !

   

முருகனே நமக்குக் கற்பகத் தருவாய் இருக்கிறார்! " வேண்டும் அடியார் புலவர் வேண்ட  அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே !" என்று வேறு ஒரு பாடலில் சொன்னார். 
இப்படி அருமையான வாக்குகள் நிறைந்த பாடல்கள். 
பல பகுதிகள் மனப்பாடம் செய்து தினமும் பாராயணம் செய்யத் தக்கவை.