Showing posts with label ஞானமலை. Show all posts
Showing posts with label ஞானமலை. Show all posts

Wednesday, 9 December 2015

5.திருப்புகழ் -3. அண்ணாமலை



5. திருப்புகழ் -3. அண்ணாமலை!


ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல்
ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும் -சம்பந்தர்

பாரத தேசத்தில் உள்ள ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு விசேஷம் இருக்கிறது. இதை விளக்கவே பழைய வாலாறுகள் (புராணம்) எழுந்தன.

நம் பெரியவர்கள் தலங்களைப் பலவாறு வகைப்படுத்தி யிருக்கிறார்கள். த்வாதச லிங்கங்கள், பஞ்ச பூதத் தலங்கள், அட்டவீரட்டத் தலங்கள், ஸப்தவிடங்கத் தலங்கள், பாடல் பெற்ற தலங்கள், திவ்யதேசம் என்றெல்லாம் சொல்கிறார்கள். தென் நாட்டின்  சிவஸ்தலங்களில் பஞ்ச பூதத்தலங்கள் புகழ்பெற்றவை. அவற்றிலும், ஆகாச க்ஷேத்ரமென்னும் சிதம்பரமும் அக்னித் தலமென்னும் திருவண்ணாமலையும் அதிகப் புகழ்வாய்ந்தவை.

அண்ணாமலையின் மகிமை

திருவண்ணாமலையைப் பற்றிய  கீழ்வரும் நான்கு விஷயங்களை மனதில்  நன்கு பதியவைத்துக் கொள்ள வேணும்.


அண்ணாமலை அக்னித் தலமென்பதன் பொருள் என்ன ? ஆதி அந்தமில்லாத பரம்பொருள் உயிர்களுக்கு அருள்செய்ய ஜோதி வடிவாய் நின்றது.மண்ணையும் விண்ணையும் முட்டி அதற்கப்பாலும் சென்ற அதன் அடியையும் முடியையும் நம்  புத்தியினாலும் அகந்தையினாலும் தெரிந்துகொள்ள முடியாது. அந்தப் பரம்பொருளைப் பணிந்து, அதன் அருளினாலேயே அதை உணர்ந்துகொள்ள முடியும்.  திருமாலும் ப்ரம்மாவும் அடிமுடி காணாத வரலாறு என்பது இதுதான்.

புத்தி அகங்காரம் புலம்பெய்த வோங்கும்
மத்தி யிதயந்தான் மறைவனும் மாலும்
நத்த அறியாது நலங்குலைய அன்னார்
மத்தியொளிர் அண்ணா மலையினது மெய்யே.    -ஸ்ரீ முருகனார்.

இந்த மலை ஞானத்தின் உருவாகும். ஞானத்திரள் என்றார் சம்பந்தர். ஞானம் என்பது என்ன? நாம் இந்த ஊனுடல் அல்ல; நமது உண்மைச் சொருபம் ஆத்மா- என்ற இந்த மெய்யறிவே ஞானமாகும். தேகாத்ம புத்தி போகவேண்டும். ஞானத்திரளினாலே ஊனத்திரள் போகும். இது அனுபவ ஞானம்- புத்திசார்ந்த கொள்கையல்ல. இந்த ஞானம் நமக்குள் சுடர்வதே அண்ணாமலை தீபத்தின்  தத்துவமாகும்.

இத்தனுவே நானாம் எனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கால்
அத்துவித மாமெய் அகச்சுடர்காண் கைபூ
மத்தியெனும் அண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.
            
                  -பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள்.

[ஒரு அற்புத ஒற்றுமையைக்  கவனிக்கவேண்டும். இறைவனை இதயத்தில் உணர்வதே சிதம்பரம். அதுவே அண்ணாமலை தீபம். ]

நாம் இறைவனுக்கு பல உருவங்களைக் கற்பித்து வழிபடுகிறோம். அவர் பல இடங்களில் இருப்பதாகச் சொல்கிறோம். அப்படி அவர் இருக்கும் இடங்களில் சிறந்தது கைலாயம் என்கிறோம். ஆனால் உருவம் ஒன்றுமில்லாப் பரம்பொருள் தானே உகந்து எடுத்த வடிவம் ஜோதிவுரு வாகும். இது அடிமுடி யில்லா தூணாக நின்றது. நாம் நெருங்குவதற்கு உகந்ததாக மலையாயிற்று. ஆகவே, அண்ணாமலை  இறைவன் இருக்கும் இடமல்ல- அதுவே இறைவன். ஆகவே, உலகில் உள்ள தலங்களிலேயே முக்கியமானதும் முதன்மையானதும் அருணாசலமே யாகும். அது கைலாயத்தைக் காட்டிலும் புனிதமானதாகும்.

அதுவே தலம் அருணாசலம் தலம்யாவிலும் அதிகம்
அது பூமியின் இதயம் அறி அதுவே சிவனிதயப்
பதியாமொரு மருமத்தலம் பதியாமவன் அதிலே
வதிவான் ஒளிமலையா நிதம் அருணாசல மெனவே.

                                      -பகவான் ஸ்ரீ ரமணர்.

அருவமான பரம்பொருள்  மலையுருவில் நிற்கிறார். இது அருவுருவம். இதுவே "லிங்கம்" எனப்படுவது. வெள்ளைகாரக் குரங்குத் தோன்றல்களும் அவர்களைப் பின்பற்றும் நமது உள்ளூர் கபோதிகளும் இதற்கு ஏதேதோ கற்பனையைப் புனைந்து இடர்படுகிறார்கள்.  லிங்கம் என்றால் அடையாளம் என்று பொருள். இங்கு மலை பரமனுக்கு அடையாளமாகி  நிற்கிறது. அண்ணாமலையே உலகில் முதல் (ஆதி) லிங்கமாகும்.

ஆதியருணாசலப்பேர் அற்புத லிங்கத்துருக்கொள்
ஆதி நாள் மார்கழியிலாதிரை யச்- சோதியெழும்
ஈசனை மான்முன்னமரர் ஏத்தி வழிபட்ட நாள்
மாசி சிவராத்திரியா மற்று.
         
                                    -பகவான் ஸ்ரீ ரமணர். 


அருணாசலத்தைப் பற்றிய புராணக் குறிப்புகள் இருந்தாலும் அதைப்பற்றி நமக்கு விளக்கியவர் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளே யாவார். அதன் மகத்துவத்தை உணர்ந்த அவர் 54 ஆண்டுகள் ஒரு நிமிஷம்கூட அதைவிட்டுப் பிரியாமல் அங்கேயே வாசம் செய்தார்.

அருணாசலத்தில் அருணகிரிநாதர்

இத்தகைய மகிமை வாய்ந்த மஹாபுனிதத் தலத்திலேயே பிறந்து, வளர்ந்து வாழ்ந்தவர் அருணகிரிநாதர். இத்தலத்தைப் பற்றி 78 பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றில் அவர் அருணையில் 11 சன்னிதானங்களில் முருகனைத் துதித்துப்  பாடியதைச் சொல்லியிருக்கிறார். இத்தலத்துக்கே உரிய சில விசேஷங்களைப் பாடிஇருக்கிறார்.
  • கௌதம முனிவர் பூஜித்த தலம்
  • உமாதேவியார் தவமிருந்து பரமனின் இடபாகம் பெற்றது (இதைச் சம்பந்தர் "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் " என்று பாடுவார். )
  • இறைவன் ஜோதியாகி நின்றதும், திருமால், ப்ரம்மாவுக்கு எட்டாமல் இருந்ததும்
  • முருகன்  குருமூர்த்தியாகிவந்து, திருமுடி சூட்டி.மௌனோபதேசம் தந்து ஆட்கொண்டது
  • அண்ணாமலையார் திருநீறு அளித்து தமது துயர் தீர்த்தது
  • வள்ளி பிராட்டியார் ஸ்பரிஸ தீக்ஷை யளித்து தனது மலத்தை நீக்கியது
ஆகிய செய்திகளைக் கூறுகின்றார். முருகனே சம்பந்தராக வந்தார் என்பதை இரண்டு பாடல்களில் சொல்கிறார்.

அருணாசலம் அருணகிரிநாதரின்  வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இங்கு முருகன் பலவிதத்தில் அவருக்கு அருள்செய்தான்.

அருணை நகர்மிசை கருணையொடருளிய
பரம ஒருவசனமு மிருசரணமும் மறவேனே
என்றும்,

கருணை யடியரொ டருணையில் ஒருவிசை
சுருதி புடைதர வருமிரு பரிபுர
கமல மலரடி கனவிலு  நனவிலும் மறவேனே

என்றும் பாடுகிறார்.அச்செய்திகளை வேறு பல தலத்துப் பாடல்களிலும் தெரிவிக்கிறார்.

முருகனைச் சபையில் வரவழைத்தது

அருணையில் நடந்த முக்கிய நிகழ்சிகளில் ஒன்று, பிரபுட தேவராஜன் சபையில் சம்பந்தாண்டானுடன் வாதிடும்போது முருகன் தரிசனம் பெற்றது. இதை அருணைத் திருப்புகழ் எதிலும் சொல்லவில்லை. ஆனால் வேறு இடங்களில் இதைப் பாடியிருக்கிறார்.

கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே
சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே

என சுவாமிமலை திருப்புகழில் (எந்தத் திகையினும்) கூறுகிறார். மேலும் முருகன் எப்படி வரவேணும் என்பதை இன்னொரு பொதுப் பாடலில் விளக்குகிறார்.

அதல சேடனாராட  அகிலமேரு மீதாட
     அபின காளிதானாட      அவளொடன்று
அதிரவீசி வாதாடும் விடையிலேறுவாராட
     அருகு பூத வேதாளம்           அவையாட
மதுரவாணி தானாட மலரில் வேதனாராட
     மருவு வானுளோராட           மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனாராட
     மயிலுமாடி நீயாடி               வரவேணும்.
.....................
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜன்
     உளமு மாட வாழ் தேவர் பெருமாளே!  




ஞான வேள்வி

திருவண்ணாமலை ஞானத்தலம். இதை மறவாத அடிகளார்,


ஜோதி முருகா நித்தா பழய ஞானச்
     சோணகிரி வீதிக்           கந்தவேளே
பாதமலர் மீதில் போத மலர் தூவிப்
     பாடுமவர் தோழத்         தம்பிரானே

எனப் பாடுகிறார். (ஆலவிழி பாடல்). இதே கடைசி அடிகளை பிறிதொறு பாடலிலும்  தருகிறார்.

சாதகவிகாரச் சாதல் அவை போகத்
     தாழ்விலுயிராகத்      சிந்தையாலுன்
தாரை வடிவேலைச்  சேவல்தனை யேனற்
    சாரல் மறமானைச்     சிந்தியேனோ
..........
பாதமலர் மீதில் போத மலர் தூவிப்
     பாடுமவர் தோழத்      தம்பிரானே.


இங்கே ஓர் அரிய கருத்தைச் சொல்கிறார்.  வாழ்க்கை பிறப்பு, வளர்ச்சி, ( பாலன், குமரன் என )தேய்வு, மரணம் ஆகிய மாறுதலுக் குட்பட்டது=  சாதக விகாரச் சாதல் ) இவை போகவேண்டுமானால், நாம் (இந்த மாறுதல்களுக்குட்பட்ட உடலல்ல ) என்றும் குறைவில்லாத உயிர் (தாழ்வில் உயிர் = ஆன்மா ) என்று உணரவேண்டும். அதற்காக வேலையும், சேவலையும் வள்ளிப் பிராட்டியையும் சிந்தைசெய்ய வேண்டும்.

இதற்கு ஞானமலரை பரமனின் பாததாமரைகளில் இடவேண்டும். போதமலர்  என்பது ஞான மலர். ஞானமலர்களாவன எட்டு நற்பண்புகள் : கொல்லாமை, இந்த்ரியங்களை அடக்குதல், பொறை, அருள், நல்லறிவு, வாய்மை, தவம், அன்பு என்பவை. வழிபாட்டில் தியானம் முதலிய செய்பவர்கள் எத்தகைய ஒழுக்கம் பூண்டு இருக்கவேண்டும் என்பதை இதனால் தெரிவிக்கிறார் நம் ஸ்வாமிகள். 

அருணகிரி சிவஸ்வரூபம் என்பது பிரசித்தம். ஆனால் அருணகிரியாருக்கு எல்லாம் முருகனே! தில்லையில் போன்று இங்கும் அருணை ஆண்டவனை முருகனாகவே பார்க்கிறார்.

இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பர கருணைப் பெருவாழ்வே  பசிவதத் துவஞானா
அரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் பெருமாளே

பரந்த உள்ளம்; அரிய வாக்கு

அருணகிரிநாத ஸ்வாமிகள் எத்தகைய குறுகிய  சமய, தத்துவ வட்டத்திற் குள்ளேயே சுற்றியவரல்லர். அதனால் எல்லாசமயங்களும் போற்றும் விஷயங்களையும் பரந்த உள்ளத்துடன் பாடியிருக்கிறார். கீழ் வரும் பாடலைப் பார்ப்போம்:


செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா

செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்

சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ


செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
          சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.



இங்கு நமசிவாய என்னும் மந்திரம் பலவாறு மாறிமாறி வருகிறது. இவ்வாறு மாறி வருவதற்கு பல விசேஷ அர்த்தங்களை சைவர்கள் சொல்வார்கள். 
நினைத்தாலே முக்தியளிக்கும் தலம்  அண்ணாமலை- அதாவது ஸதாகாலமும் அருணாசலம் என்ற அந்த ஒரே நினைவே மனதில் இருக்க வேண்டும். அதற்கு அனுகூலமாக இங்கு அருணாத்ரி  என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்! இதுவும் விசேஷமானதே!









விசேஷ வேண்டுதல்

இங்கு அருணகிரிநாதர் விசேஷமாகச் சிலவற்றை வேண்டுகிறார்.


1. அடியார் உறவும் மௌனமும்

உலகோரைத் தருவை நிகரிடு புலமையும் அலம் அலம்
உருவும் இளமையும் அலம் அலம்
விபரித சமய கலைகளும் அலம் அலம்
அலமரும் வினைவாழ்வும் சலில லிபியென ஜனனமும் அலம் அலம்
இனியுன் அடியரொடு ஒருவழி பட இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும்     அருள்வாயே

உலக மக்களை "நீங்கள் கற்பகத் தரு போன்றவர்கள் " என்று பாடும் கவித் திறமையும் போதும்,போதும்.
 நல்ல உருவமும் இளமையும் போதும்,போதும்
தம்முள் மாறுபட்டு  நிற்கும் சமய சாஸ்திரங்களும் போதும், போதும்
வேதனைப் படுத்தும் வினைமயமான வாழ்வும், நீர்மேல் எழுத்துக்கு நிகரான பிறப்பும் போதும், போதும்.
இனியாகிலும் உன் அடியாரோடு நானும் ஒருவழிப்பட்டு,ஈடேற உனது இரு பாதங்களையும் மௌன உபதேசத்தையும்  தந்து  அருள்புரிவாயாக.

2.மெய்ப்பொருள் தெளியவேண்டும்.

கலக விபரித வெகுபல சமயிகள் பலர்கூடி
கலகலென நெறிகெட முறைமுறை
கதறி வதறிய குதறிய  கலை.......விரகொழியில்



அறிவினில் எளிது பெறலென  மறை பறை யறைவதொர்
உதய மரணமில் பொருளினை யருளுவதொரு நாளே.


உலகிலுள்ள பல சமய வாதிகளும்  கூடி, தத்தம் மதமே சரியானது என்று கூச்சலிட்டு, கலகம் செய்து முறை தவறிக் கெட்டு ஆரவாரம் செய்கின்றனர். இப்படிப்பட்ட வஞ்சனைகள் ஒழியவேண்டும். (பிற பற்றுக்களும் இருவினையும் அகலவேண்டும்.) 

அப்போது, அறிவில் எளிதாகப் பெறமுடியும் என  வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான ஒப்பற்ற , தோற்றம் முடிவு இல்லாத அந்த பேரின்பப் பொருளை,அடியேனுக்கு நீ அருள் செய்யும் அந்த நல்ல நாள் ஒன்று  வருமா?

நாம் சமயச் சழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல், பகவான் ஒருவரையே நாடவேண்டும். இது அருணகிரிநாதரின் முக்கிய உபதேசங்களில் ஒன்றாகும்.


3.மௌன தெய்வ உணர்வில் தோயவேண்டும்.

எனதுயிர் அநுதின னெறிதரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவ தொருநாளே

உலக வாழ்க்கை ஆசை வசப்பட்டது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் ஆசை. பொதுவாக,மூன்று பெரிய ஆசைகள்- மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. அருணகிரி நாதர் பெண்ணாசையைப் பற்றி அதிகம் சொல்வார். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் காமினி- காஞ்சனம் என்று பெண்-பொன் இரண்டையும் சேர்த்தே சொல்வார்.

ஆசைகளை யெல்லாம் விட்டு  தினமும் நன் நெறியில் ஒழுகவேண்டும். சிவசுகம் என்னும் தெய்வீக அனுபவத்தில் மூழ்கவேண்டும். இந்தப் பேற்றை முருகன்  அருளவேண்டும்.

இந்த மௌன நிலையை பல இடங்களில் கூருகிறார். 

செயலொழித்து அநுபூதி மீமிசை
திகழும் அற்புத மௌன நிர்குண
சிவமயத்திரு ஞான வேழமே

என்று திருஞான வேழ வகுப்பில் பாடுகிறார்.

4. அறிவை அறிவது பொருள்.

இறைவன் அறிவு மயமானவன், அறிவு வடிவானவன். வாலறிவன் என்பார் திருவள்ளுவர். அதனால்தான் இறைவனைப் பற்றிக் கூறும் நூல் "வேதம்" எனப்படுகிறது. வேதம் என்பது அறிவு.  இந்த அறிவை அறிவதுதான் மெய்ஞானம். இதைப் பொருள்களை அறியும் அறிவால் அறியமுடியாது. உள்ள பொருளை உள்ளவாறு உணர்வதுதான் அறிவு. இது இறைவன் அருளால் மட்டுமே வரும். அதனால் அருணகிரியார் சொல்கிறார்:

ஒளிதிகழ் அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே

இதையே வேறு இடங்களிலும் கூறுகிறார்.

அறிவை அறிபவர்  அறியும் இன்பந்தனை......
அறிவாலறிந்துன் இருதாள் இறைஞ்சும்.....
அறிவை அறிவாலறிந்து நிறைவாகி
இவையெல்லாம் அற்புத வாக்குகள்.


5. உயிர் பிரியுமுன் காத்தருள வேண்டும்

சமய-ஆன்மீக வாழ்வின் ஒரு பெரிய ரகசியத்தை இங்கு ஸ்வாமிகள் வெளியிடுகிறார்.  நமது பிறப்பு வினையினால்  வருவது. இறப்பும் அவ்வாறுதான். உயிர் போனபிறகு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது! அதனால் உயிர் போகுமுன் இறைவன் அருளைப் பெறவேண்டும்.

தாழ்விலுயிர் வீழ்பட்டு ஊழ்வினை விடாமல்
சாவதன்முன் ஏவல் கொண்டிடாயோ

உலகில் பலவித துன்பங்கள். வினைவசத்தால் உயிர் விடும்போது காலபாசத்தல் வரும் துன்பம் கொடியது. அதில் விழுந்து வருந்தாமல், அதற்கு முன்பாகவே முருகன் தம்மை ஆட்கொள்ள வேண்டும் என்கிறார். இது நம் எல்லோருக்காகவும் பாடிய பாட்டு. உடல் உள்ளபோதே இறையருள் பெறவேண்டும். இதுவே விதேக முக்தி என்பது.

இவ்விதமாக முருகப் பெருமானே வந்து நமக்கு அருள்புரிய வேணும் என வேண்டுகிறார்.

விகட முட நடை பயில்மயில் மிசைவரு
பவனி தனையநு தினநினை யெனஅருள் பகர்வாயே
அருணை நகர் தனில் அழகுடன் மருவிய பெருமாளே.

வினோதமான நடையுடைய மயிலின்மீது பவனிவரும் காட்சியை  நாள்தொறும் நினை என  அருணை மேவிய குமரன் நமக்கு அருள்மொழி கூறி அருள் புரியவேணும்.

இவ்வாறு பல அற்புதக் கருத்துக் கொண்ட பாடல்களை திருவண்ணாமலையில் அருளினார் அருணகிரிநாத ஸ்வாமிகள்.


இறைவன் தேரில் வருவது அவனது கருணையின் அடையாளம்.