Showing posts with label நக்கீரர். Show all posts
Showing posts with label நக்கீரர். Show all posts

Monday, 6 March 2017

74.திருப்புகழ் 68.சுவாமிமலை-1


74.திருப்புகழ் 68. சுவாமிமலை -1


குக்கே சுப்ரமண்யா கோயில்.
soorajna CC BY-SA 3.0 creativecommons via Wikimedia Commons.

ஆறு தலங்கள் : அறுபடைவீடு
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த  68வது தலம் சுவாமிமலை என்னும் திருவேரகம். இது முருகன் எழுந்தருளியுள்ள ஆறு பிரதான தலங்களில்  
நான்காவதாக வைத்து எண்ணப்படுகிறது. இத்தலங்களை "அறுபடைவீடு " என்று சொல்கிறோம். இத்தலங்களை  இந்தமாதிரி நமக்கு அறிமுகப்படுத்தியவர்  சங்கப்புலவர்  நக்கீரர். அவர் எழுதிய திருமுருகாற்றுப்படை , சங்க நூல்கள்  36 லும் முதன்மையாக இருக்கிறது. அதில்தான் இந்த 6 தலங்களைப்பற்றி  முதலில் நமக்குச் சொல்லியிருக்கிறார்.  ஆனால் அவர் படைவீடு என்று சொல்லவில்லை!

குன்றமர்ந்து  உறைதலும் உரியன் [திருப்பரங்குன்றம் ]
அலைவாய்ச் சேரலும் நிலைஇய பண்பே [திருச்சீரலைவாய் ]
ஆவினன் குடி அசைதலும் உரியன்
ஏரகத்து உறைதலும் உரியன்
குன்றுதோராடலும் நின்றதன் பண்பே
பழமுதிர்சோலை மலைகிழவோனே

என்று இத்தலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நக்கீரர்.

எது திருவேரகம் ?


இவற்றில் எது  திருவேரகம் என்பது பற்றி சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. இன்று கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஸ்வாமிமலையே திருவேரகம் எனக்கொள்கிறோம். முருகன் குறிஞ்சி நிலத்துக்கு - மலையும் மலை சார்ந்த இடமும் - அதிபதி. குன்றெல்லாம் குமரன் என்கிறோம். ஆனால் சுவாமிமலையில் குன்றெதுவும் இல்லை ! அங்கிருப்பது செயற்கைக் குன்று.
அதனால் இது உண்மையான , பழைய திருவேரகமில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மலை நாட்டில் [ இன்றைய கர்னாடகாவின் ஒரு பகுதி ] உள்ள  "சுப்ரஹ்மண்யா " என்னும் க்ஷேத்திரமே திருவேரகம் என்பது இவர்கள்  கருத்து. இங்கு  குமாரதாரா என்னும் ஆறு ஒடுகிறது. அருகில் குமாரபர்வதம் என்னும் மலையும் இருக்கிறது. இங்கு சுப்ரமண்யரை நாகர்வடிவில் வழிபடுகிறார்கள். கும்பகோணம் பகுதியில் உள்ள சிலகுடும்பங்களுக்கு  இந்த சுப்ரமண்யரே குலதெய்வமாகவும் விளங்குகிறார் !. அதனால் இந்தக் கருத்திலும் ஏதோ உண்மை இருக்கவேண்டும். 




குமாரதாரா ஆறு. ஒரு தோற்றம்.
Holiday1Q


ஆனால் அருணகிரிநாதர் ஸ்வாமிமலையே திருவேரகம் எனப்பாடுகிறார்.:

தனி யேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே !

ஏரகவெற்பெனும் அற்புதமிக்க
சுவாமிமலைப்பதி மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் பெருமாளே !

எனவே, அருணகிரிநாதர் காலத்திலேயே  ஸ்வாமிமலையே திருவேரகம் என வழங்கியது என்பது தெரிகிறது, இங்கும் குமாரதாரா என்ற ஒரு தீர்த்தம் இருக்கிறது! நமக்கு அருணகிரிநாதர் வாக்கே ப்ரமாணமாதலால்  இதற்குமேல் ஆராய்ச்சி அவசியமில்லை'



குமாரபர்வதம்
https://explorerinyou.wordpress.com

திருமுருகாற்றுப்படையில் திருவேரகம்.

தமிழ் இலக்கியத்தில் நக்கீரர்தான் முதன்முதலில் இந்த ஆறு தலங்களை ஒன்றாகவைத்து எண்ணும் முறையைக் கற்பித்தார். இதில் நான்காவதாக வரும் திருவேரகத்தைப் பற்றி அருமையாகப் பாடியிருக்கிறார். 

முருகன்  மலைப்பகுதிக்கு உரிய தெய்வமானாலும் அவனை மும்மூர்த்திகள், தேவர், முனிவர், மனிதர் என அனைவரும் வழிபடுகின்றனர். மனிதர்களும் ஒவ்வொரு சமூகத்தினரும் அவரவர் குலவழக்கப்படியே வழிபடுகின்றனர். குறவர்கள், மலையில் வாழும் பூசாரி, முதலியோர் கள்ளைக் குடித்தும், ஆட்டை அறுத்தும் வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும்  தினையும் மலரும் கொண்டு, ஆட்டை அறுத்து விழா எடுக்கிறார்கள். சிலர் வெறிவந்து ஆடுகிறார்கள். பறைகொட்டி குறவை ஆடுகிறார்கள்.முருகன் அவரவர்கள் வழிபடுவதையெல்லாம் உவந்து ஏற்று, அவர்களுக்கு வேண்டியவாறு அருள்புரிகிறான். இதையெல்லாம் நமக்குப் படம்பிடித்துக்காட்டும் நக்கீரர், திருவேரகத்தில் பிராமணர்கள் எப்படி வழிபட்டனர் என்பதைக் காட்டுகிறார்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி  இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அரன் நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி  நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக்கூப்பிய  கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்.


[தங்களுக்கென்று விதிக்கப்பட்ட ] ஆறு தொழில்கள் என்ற இலக்கணத்திலிருந்து  பிறழாதவர்கள்;
தாய், தந்தை என்ற இருவழியிலும் பல்வேறு பழைய கோத்திரத்தை உடையவர்கள்;
இளமைப்பருவத்துக்குரிய 48  நல்ல வருஷங்களை  நிற்கவேண்டிய நல்ல நெறியிலே  [பிரம்மசரியம் ] நின்று  கழித்தவர்கள்; 
தர்மத்தையே விளக்கும் கொள்கை உடையவர்கள் ;
மூன்று வகையாகச் சொல்லப்பட்ட மூன்று வேள்வித் தீயையே செல்வமாக உடைய இருபிறப்பாளராகிய அந்தணர்கள் ;
முருகனைத் துதிக்கும் சமயம் [ நல்ல முஹூர்த்தம்] அறிந்து  தோத்திரங்கள் சொல்லவும்;
ஒன்பது நூலை முறுக்கிய மூன்று புரிகளாகிய நுண்ணிய பூணூலை அணிந்து,
உலராத ஈர ஆடையை  (உடலில் ) கிடந்தவாறே உலரும்படியாக உடுத்து,
தலைமேலே கைகளைக்குவித்து,  முருகனைப் புகழ்ந்து,
ஆறெழுத்துக்கள்  தன்பால் கொண்டதான அரிய உபதேச மந்திரத்தை, நாக்கு நன்கு புரளுமாறு பலமுறை கூறி,
மணம்மிக்க நறுமலர்களை ஏந்தி வழிபடவும்,
அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத்திலே  எழுந்தருளி இருப்பதற்கும் உரியவன் முருகன். 
இவ்வாறு பதின்மூன்றே வரிகளில் பல  அரிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார். நக்கீரர்.
இந்தத் தலத்திற்கு வந்த அருணகிரிநாதர்  38 அரிய, அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்,

குறிஞ்சிப் பூ - 12 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் 
படம்: indrayavanam.blogspot.in Thanks




Saturday, 21 January 2017

34.திருப்புகழ் 32. கந்தன் குடி


34.திருப்புகழ் 32.கந்தன் குடி



picture: www.penmai.com.Thanks

கந்தன் குடி அருணகிரி நாதர் அடுத்து தரிசித்த 31வது தலம். பேரளம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து  3 மைல் தூரம். இங்கு ஸ்வாமி விக்ரஹம் புற்றிலிருந்து கிடைத்ததாக ஐதீகம். கந்தனே விரும்பிக் குடிகொண்ட இடம்.

இங்கு தெய்வானை அம்மையார் தவமிருந்தார். அப்போது அவருக்குக் காவலாக ஐராவதத்தையும்  பைரவரையும் இந்த்ரன் அனுப்பிவைத்தான் என்பது ஸ்தல புராணம். அதனால் இங்கு யானையே வாகனமாக அமைந்திருக்கிறது. பைரவருக்கும் தனிச்  சன்னிதி இருக்கிறது. வள்ளி- தெய்வானையுடன்  ஸ்வாமி இருந்தாலும் , தவக்கோலத்தில் இருக்கும்  தெய்வானைக்கும் தனி விக்ரஹம் இருக்கிறது. விஶ்வநாதர்-விஶாலாக்ஷி என்ற பெயரில் சிவன்-அம்பாள் சன்னிதிகளும் இருக்கின்றன.

இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரே பாடல் கிடைத்திருக்கிறது. 'கந்தன் குடி' என்ற சந்தத்துடன் பொருந்தும்படியே பாடியிருக்கிறார் !


தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
     தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு               மணியாரம்

சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
     சம்புந்தொழ நின்றுந்தினம்            விளையாடும்

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
     கண்டுய்ந்திட அன்றன்பொடு         வருவோனே

கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
     கந்தன்குடி யின்தங்கிய                   பெருமாளே.


எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
     யென்றுந்துயர் பொன்றும்படி         யொருநாளே

இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
     யென்றும்படி பந்தங்கெட                  மயிலேறி

வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
     மண்டும்படி நின்றுஞ்சுட                    ரொளிபோலும்

வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
     வண்டன்தமி யன்றன்பவம்                ஒழியாதோ



[எந்தன் சடலம் என்று பாடல் தொடங்கும். இங்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது.]



தந்தந்தன  திந்திந்திமி என்றும், சஞ் சஞ் என்றும் ஒலிக்கும் சிறிய மணிமாலைகள் அடைக்கலம் அளிக்கிறேன் என்று சொல்வது போல ஒலிக்கின்றன.
மேகநிற உடலை உடைய திருமாலும், சிவனாகிய பெரியோனும், படைப்புத் தலைவனாகிய பிரம்மா ஆகிய மூவரும் தொழ, விளங்கி  நின்று, அடியார் உள்ளத்தில் தினமும் விளையாடுகின்ற-
கந்தனே! குஹனே ! எந்தன் குருவே ! என்று தொழுத அன்பன் நக்கீரனுடைய பாடலைக்கேட்டு அவர்  பிழைத்து உய்யும்படி அன்று அன்புடன் வந்தவனே !
கற்கண்டுபோல் இனிக்கும் பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள சுனைகள் விளங்கும் கந்தன் குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !


என்னுடைய உடலின் அங்கங்கள் பல வகை இடர்களினால் படும் தொடர்புகள், என்றும் உள்ள துயரம் ஆகியவை ஒழியும்படியான ஒரு நாள் வாய்க்குமா !
இன்பத்தைத் தரும் செம்பொன்னாலாகிய கழல் என்னும் காலணிகள் பொருந்திய  உன் திருவடிகளைத் தந்து, பின்னர்  எப்போதும் போலப் பாசபந்தங்கள் அழிய நீ மயில்மீது ஏறி -
வீரத்துடன் வெளியே உள்ள அண்டங்கள், பூமி, திசைகள் எங்கும்  நிறையும்படி வந்து பெரும் ஜோதிபோல் தரிசனம் தந்து, அதனால்
வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற  நெஞ்சனும் ,குற்றமே என்றும் செய்கின்ற  தீயோனுமாகிய   என்னுடைய  பிறப்பு (ஆகிய நோய் ) ஒழியாதோ?


கந்தன் குடி கோயில் படம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தப் படம் "கல்கி " பத்திரிகையில் வந்தது. ஓவியர் 'தநுஸு ' வரைந்தது..
காப்பிரைட் சமாசாரம் தெரியவில்லை. நன்றி.

நக்கீரர்


இப்பாடலில் முக்கியமாக நக்கீரருடைய  வரலாற்றைச் சொல்கிறார்.  நக்கீரரின் கதை பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. நக்கீரர் சிவனையே பாடும் கொள்கையுடையவர். சிவகுமாரனைப் பாடமாட்டார். ஒரு சமயம் கற்கிமுகி என்ற குதிரை முகமுடைய பெண்பூதத்தினால் அது காத்துவந்த குகையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கெனவே 999 பேர் இவ்விதம் அடைக்கப்பட்டிருந்தனர்.ஆயிரமாவது நபருக்காகவே பூதம் காத்திருந்தது, நக்கீரர் ஆயிரமாவது ஆளாக வந்தவுடன் அனைவரும் பயந்து வருந்தினர். இனி பூதம் அவர்களை விழுங்கிவிடும். இந்த நிலையில் தாம் முருகனைப் பாடாமலிருந்தது தவறு என்று நக்கீரர் உணர்ந்தார். முருகனைத் துதித்து 'திருமுருகாற்றுப்படை'  பாடினார். முருகன் வந்து பூதத்தைக் கொன்று, குகையை அழித்து அனைவரையும் விடுதலை செய்தார்.

திருமுருகாற்றுப் படைதான் தமிழில்  சங்க இலக்கியத்தில் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது. இதில்தான் முதன் முதலாக ஆறு முக்கிய தலங்களைப் பற்றி வருகிறது. 'கந்தா, குஹனே, எந்தன் குருவே'' என்று  நக்கீரர்  தொழுததாகச் சொல்கிறார். திருமுருகாற்றுப்படையில்   நக்கீரர் தரும் முருக நாம மாலை ரசமானது.

திருமுருகாற்றுப்படையில் முருகன் நாமங்கள்

நெடும்பெருஞ் சிமையத்து நீலப்  பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே  மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள 
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வெல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ 
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும் பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுனர்க்கு ஆர்த்தும் இசைபேராள
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்த நின்வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின்  மதவலி
போர்மிகு  பொருந குரிசில்...........

இவ்வாறு முருகன் அவதாரம் தொடங்கி பலவற்றையும் சொன்னாலும் , இது தான் அறிந்த அளவினதே யாகும், அவன் பெருமையை முழுதும் யாரால் உணர்ந்து சொல்ல முடியும் என்கிறார்!

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு  அருமை.

அதனால் நாம் முருகன்  தரிசனத்திற்கு வந்து, கைகளைக்குவித்து, அஞ்சலி செய்து, தோத்திரம் பண்ணிக் காலில் விழுந்து கும்பிடவேண்டும்!

காண்தக
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி....

இது அத்தனையும் விளங்குமாறு.

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி

என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டார் நம் ஸ்வாமிகள் !

முருகன் அடியார்களுக்கு நக்கீரர் வரலாறு மிகவும் பிடித்தமானது. அருணகிரி நாதரும் பல இடங்களில் இதைச் சொல்கிறார்.

மலை முகம் சுமந்த புலவர்  செஞ்சொல் கொண்டு
வழிதிறந்த செங்கை வடிவேலா 

என்று  திருச்செந்தூர் திருப்புகழில் பாடுகிறார்.

எதிரில் புலவர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்
இவுளிமுகி யைப்பொருத  ராவுத்தன் ஆனவனும்

என்று வேடிச்சி காவலன் வகுப்பில் சொல்கிறார். 

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்கு மொரு
கவிப்புலவன் இசைக்குருகி  வரைக்குகையை
இடித்து வழி காணும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் 

என்று வேல்வகுப்பில் பாடுகிறார்,

இவ்வாறு பல இடங்களில்  நக்கீரரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

ஒரே ஒரு பாடலானாலும்  ரசமான பாடல்.
 



picture by senthilkumar.Thanks