Showing posts with label பிறவிப்பயன். Show all posts
Showing posts with label பிறவிப்பயன். Show all posts

Wednesday, 1 March 2017

70.திருப்புகழ் 64. குரங்காடுதுரை


70.திருப்புகழ் 64.குரங்காடுதுறை



ஆடுதுறை ஆபத்ஸஹாயேஶ்வரர் கோயில்.
படம் : பா.ஜம்புலிங்கம். விக்கிபீடியா. நன்றி

அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 62 வது தலம் குரங்காடுதுறை. இந்தப்பெயரில் தென் /வட குரங்காடுதுறை என்ற இரு தலங்கள் இருக்கின்றன. வடகுரங்காடுதுறை சம்பந்தர் பாடலும், தென் குரங்காடுதுறை சம்பந்தர் -அப்பர் இருவர் பாடலும் பெற்றது.  வட குரங்காடுதுறை ஐயம்பேட்டைக்கு அருகில் இருக்கிறது, தென் குரங்காடுதுறை இன்று ஆடுதுறை என வழங்கப்படுகிறது. அருணகிரி நாதர் குரங்காடுதுறை எனப் பொதுவாகப்பாடி யிருக்கிறார். இதை ஆடுதுறைக்கே பொருந்தியதாகக் கொள்கிறார்கள்.  இது  சுக்ரீவன் வாலிக்குப் பயந்துவந்து பெருமானைப் பூஜித்த இடம். ஸ்வாமி ஆபத்ஸஹாயேஶ்வரர்; அம்பாள் பவளக்கொடியம்மை. இங்கு ஸ்தல விருக்ஷம் பவளமல்லி !

 வடகுரங்காடுதுறை : சம்பந்தர் பாடல் (3ம் திருமுறை )


முத்துமா மணியொடு முழைவள ராரமு முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகடம்மேல்
சித்தமா மடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே .


தென் குரங்காடுதுறை
சம்பந்தர் (2ம்திருமுறை )

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.

அப்பர் (5ம் திருமுறை )

நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்அழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடம்
கூடு மின்குரங் காடு துறையையே





ஸ்தல விருக்ஷம் : பவழமல்லி

இங்கு நாதர் 3 பாடல்கள் பாடியிருக்கிறார்.


திருவுருவ வர்ணனை

அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத்                      திரடோளும்

அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத்
தணிந்தாழி வனைக்கடகச்                     சுடர்வேலுஞ்

சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப்                          புனைபாதந்

திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற்                     புகல்வேனோ


இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச்                             சிறைமீளும்

இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற்                                     கினியோனே

குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கயிலைத்                      தொடும்வீரா

கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப்                                          பெருமாளே.




அலங்காரமான கிரீடம், ஒளிமிக்க ஆறுமுகங்களிலும்  அழகுடன் அசைந்தாடும் குழைகள், கவசம், திரண்ட தோள்களின்மேல் -


மிகுந்த பூமாலைகள்,   வரிசையாய்ப் புரண்டு ஆடும் ரத்ன மணி மாலைகள்,, திருக்கரங்களில் அணியப்பட்ட மோதிரம்,  புனைந்துள்ள வீர  கங்கணம்,  ஓளிவீசும் வேல், -



சிலம்பு, வேத ஒலி காட்டும் அழகிய சதங்கை  - இவை  மிகுந்த ஒலியெழுப்ப, நறுமணம் வீசும் செந்நிற மலர்கள் புனைந்துள்ள திருவடிகள் -



உரிய சந்த தாளத்துடன்  நீ  தினமும் நடனம் செய்யும் அழகு, ஆக இவற்றையெல்லாம் நான் நன்றாகச் சொல்லித் துதிக்க மாட்டேனா !



லங்காதிபதியாகிய ராவணனுடைய அசோக வனத்தில்  அழகுள்ள குரங்கான ஹனுமாரை அனுப்பி, லங்கைக்கு நெருப்பூட்டி புகையவைத்து, மென்மையான பூந்தாதுக்களைக்கொண்ட  செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியாம் சீதையின் சிறையை மீட்ட -



இளமையானவரும், கரிய மேக  நிறம் கொண்டவரும், கொடிய அம்பையும், வளைந்த வில்லையும்  கையில் கொண்டவரும், [தந்தையின் சொற்படி ] இருண்ட  பெரிய காட்டில் நடந்து  வனவாசம் செய்தவருமான  திருமாலுக்கு இனியவனே ! 



குலபலமும், கொடுமையும் கொண்டிருந்த  அசுரர்களின் பெரிய சேனையை அழிக்க, போர்முனையில் , கொடிய கூர்மையான ஒளிமிக்க வேலாயுதத்தைப் பிரயோகித்த வீரனே !



செழிப்புமிக்க சோலைகளிலும், பூஞ்சோலைகளிலும் கரும்பு ஆலைகள்  வேலை செய்யும் ஒலிகேட்கும் குரங்காடுதுறைத் தலத்தில் அமர்ந்த பெருமாளே !



எவ்வளவு அழகாக ராமாயணத்தைச் சொல்லியிருக்கிறார் ! குரங்காடுதுறையல்லவா ! வீரக்குரங்கான ஹனுமாரையும் சொல்லியிருக்கிறார் !

இது முருகனின் த்யானஶ்லோகம் போல அவரது உருவை வர்ணிக்கிறது! அருமையான பாடல். 


பிறவியின் பயன் பெற

விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட
விதங்கொள் முதற்பாய           லுறைமாயன்

விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
விளங்கு முகிற்கான                        மருகோனே

தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
தழங்கு மியற்பாடி                                    யளிசூழத்


தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
தலங்க ளிசைப்பான                                   பெருமாளே.


உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
யுலந்து மிகக்கோலு                                  மகலாதே

உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு
முரங்கொள பொற்பாத                          மருள்வாயே






விஷமானது கன்னத்தில் ஏற, காளிங்கனது படத்தின்மேல் ஆடி நடிப்பவனும், அத்தகைமைகொண்ட ஆதிசேஷனாகிய சயனத்தில் பள்ளிகொள்பவனுமாகிய  மாயன்.



வில்லை அழகிய கையால் முறித்து, வனத்திற்குச் சென்று, தான்  செல்லும் இடங்களையெல்லாம் சிறப்புறச்செய்து விளங்கின மேக நிற அண்ணல் ஸ்ரீ ராமர் ஆகிய திருமாலுக்குப் பிரியமான மருகனே!


நீர் நிலைகளைக்கொண்ட மலைச்சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பெடையும் சூழ , ஒலிசெய்யும் வண்டுகள்  சூழ,

விளங்கும் வயல் பகுதிகளக்கொண்ட,  குரங்குகள் குதித்து விளையாடும் தலங்களில் மனம் உவந்து வீற்றிருக்கும் பெருமாளே !


உடம்பானது கெட்டு, மிகவும் கூன் அடைந்து, நடையும் மிகச் சரிந்து, தோலும் வற்றி, கையைவிட்டுக் கோலும் நீங்காமல்



தூங்கி விழித்துக்கொண்டது போன்ற இந்தப் பிறப்பிலாவது ஞானம் அடையும்படியாக உனது திருவடியைத் தந்தருள்வாயாக !


மீண்டும் ராமரைப்பற்றி எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறார் !





ஓடியிடங்கள் வளைத்தேறு-

சென்ற இடங்களையெல்லாம் சிறப்புச்செய்து.
இது எத்தனை அருமையான சொல்லாட்சி.
ராமர் சிவ தனுஸை முறித்த பிறகும், வன வாசத்தின் போதும், சென்ற இடங்களையெல்லாம் சிறப்படையச் செய்தார். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவருக்கும் நன்மையே செய்தார் !




உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனும் :


உறங்குவது போலும் சாக்காடு உறங்கி  
விழிப்பது போலும் பிறப்பு . 
 [குறள் 339 ]

இறப்பை நீண்ட தூக்கத்திற்கு ஒப்பிடுவர்.. மீண்டும் பிறப்பென்பது  விழித்துக்கொள்வதைப்   போன்றது !. ஆனால் எத்தகைய பிறப்பு வரும் என்று சொல்லமுடியாது ! அரிது அரிது மானிடராதல் அரிது என்றார் ஔவையார். அதனால் அரிதின் வந்த இந்தப்பிறவியிலாவது ஞானம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறார் அருணகிரிநாதர். உருக்கமான பாடல்.

குரங்கு குதித்தாடு தலங்கள்  என்று பொதுவாகச் சொன்னதால் இருகுரங்காடு துறைகளையுமே சொன்னதாகக் கொள்ளலாம்.