Showing posts with label முருகனும் அமரர்களும். Show all posts
Showing posts with label முருகனும் அமரர்களும். Show all posts

Sunday, 21 May 2017

82.திருப்புகழ் - 76. திருப்பழுவூர்


82. திருப்புகழ்- 76. திருப்பழுவூர்.


wikimapia
புகழ் பெற்ற பெரிய தலங்களில் உள்ள  கோவில்கள்  வியாபார மையங்களாகிவிட்ட  இன்றைய நிலையில், சிறிதளவாவது இயற்கை எழிலுடன் கூடிய  இத்தகைய சிறிய , பழைய கோவில்களியே  நாம் தெய்வ சாந்நித்தியத்தை உணர்கிறோம். ஆனால் இவையும் "டூரிஸ்டு" வலையில் வந்துவிடும்  போலும்!

அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 75 வது தலம் பழுவூர். இதன் இன்றைய பெயர் கீழப்பழுவூர்.  ஸ்வாமி பெயர்  ஆலந்துறையார், வடமூலேஶ்வரர், வடமூல நாதர். [ ஸ்தல விருக்ஷம் ஆலமரம்= பழு மரம். வட தரு.] அம்பாள்  அருந்தவ நாயகி என்னும் ஸ்ரீ யோக தபஸ்வினி. பரசுராமர் தன் தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு  பூஜித்தார் என்பது ஐதீகம். இங்கு சம்பந்தர் பதிகம் பாடியிருக்கிறார்.






முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தனெமை யாளுடைய வண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.      1


எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலிகொண்டுபயில் கின்ற பழுவூரே.     4


சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.       5


மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்க ளாகுதியி லிட்டவகின் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.  7


நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.        9


அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.    11



இங்கு சம்பந்தர் சில அரிய விஷயங்கள் சொல்கிறார்.  4, 11ம் பாடல்களில் மலையாள அந்தணர்கள் வழிபாடு செய்த இடம் என்கிறார்.  இதன் பின்னணி புரியவில்லை. 5, 7ம் பாடல்களில்  அந்தணர்கள்  வேதமொழியினாலும், ஆஹுதி கொடுத்தும் வழிபட்டது சொல்லப்படுகிறது. 9 வது பாடலில், இந்த அந்தணர்கள்   6 அங்கங்களுடன் நான்கு வேதத்தையும்  கற்று, ஒரே பரம்பொருளான சிவபெருமானை உணர்ந்து  வழிபட்டவர்கள்   "ஒன்றும் இருமூன்றும் ஒரு நாலுமுணர் வார்கள் மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே"   என்று  சொல்கிறார். இச்சிறிய தலத்திலும் இவ்வாறு வேத ஒலியும் வேள்விப்புகையும் நிறைந்திருந்ததால், அக்காலத்தில் தமிழகத்தில் ஓங்கிப் பரவியிருந்த வைதிக நெறியின் உயர்நிலை நன்கு விளங்கும்.




அருணகிரிநாதர்  இங்கு ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார்.

விகட சங்கட வார்த்தை பேசிகள்
 அவல மங்கைய ரூத்தை நாறிகள்
 விரிவ டங்கிட மாற்றும் வாறென          வருவார்தம்

விதம்வி தங்களை நோக்கி யாசையி
  லுபரி தங்களை மூட்டி யேதம
  இடும ருந்தொடு சோற்றை யேயிடு       விலைமாதர்


சகல மஞ்சன மாட்டி யேமுலை
  படவ ளைந்திசை மூட்டி யேவரு
  சரச இங்கித நேத்தி யாகிய               சுழலாலே

சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
  மலர வுந்தியை வாட்டி யேயிடை
  தளர வுங்கணை யாட்டும் வேசிய          ருறவாமோ


திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
  தமையர் தம்பியர் மூத்த தாதையர்
  திலக மைந்தரை யேற்ற சூரரை            வெகுவான


செனம டங்கலு மாற்றி யேயுடல்
  தகர அங்கவர் கூட்டை யேநரி
  திருகி யுண்டிட ஆர்த்த கூளிக               ளடர்பூமி

அகடு துஞ்சிட மூட்டு பாரத
  முடிய அன்பர்க ளேத்த வேயரி
  யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன்        மருகோனே


அமர ரந்தணர் போற்ற வேகிரி
  கடல திர்ந்திட நோக்கு மாமயில்
  அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய                பெருமாளே.



முதல்  நான்கு  அடிகளில் பொதுமகளிரின்  சாகசங்களைச் சொல்லி அவர்களை வசைபாடியிருக்கிறார். அவருடைய உறவு தகாது என்கிறார். அன்றைய தமிழ் நாட்டில் நிலவிய அவல நிலையை இது காட்டுகிறது. திருவள்ளுவரும் இந்த விஷயத்தில்  இரண்டு அதிகாரங்களில் [ பிறனில் விழையாமை, வரைவின் மகளிர்] கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அடுத்த நான்கு அடிகளில்  அருணகிரியார் அரிய விஷயத்தைச் சொல்கிறார்.


சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாக்கி,[ கர்ணன், துரியோதனன்] ஆகிய இரு தமையன் மார்களையும், ஏனைய [ துரியோதனனுடைய ] தம்பிமார்களையும், திருதராஷ்டிரன் முதலிய  தந்தை, பாட்டன் ஆகிய நிலையில் உள்ள பெரியவர்களையும்,  துரியோதனன் பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த வீரம்மிக்க பகைவர்களையும்--


அதிகமான ஜனங்களையும்  அழியும்படி செய்து, அவர்கள் உடல் பொடியாக, அவர்கள் உடல்களை கழுகும் பேய்களும்  மிகுந்த ஒலியுடன் திருகித் தின்னும்  போர்க்களத்தில் -


 நடுவு நிலை குறைந்ததால் மூண்ட  பாரதப்போர் முடிய,  அன்பர்கள் துதி செய்ய,  யமன், வாயு, இந்த்ரன்  ஈன்ற மக்களான தருமன். பீமன், அர்ஜுனன் ஆகியோர் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே !


தேவர்களும் அந்தணர்களும் துதிக்கவே,  மலையும் கடலும் அதிர்ச்சி கொள்ளும்படி  செய்யவல்ல  சிறந்த மயிலின்மேல், அழகு பொருந்தி, பழுவூர் தலத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளே!

பெரிய பாரதத்தின் அரிய செய்திகளை  மூன்றே வரிகளில் சுவைபடச் சொல்லும் திறன்  அருணகிரியாரின் வாக்கு வன்மைக்கே  உண்டு! இங்கு பகவான் க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குச் செய்த பெரிய உபகாரத்தைச் சொல்கிறார்.  தன் சக்ராயுதத்தால்  சூரிய ஒளியை மறைத்து, பகலை இரவாக்கி  அர்ஜுனன் ஜயத்ரதனை வெற்றிகொண்டு, தன் சபதத்தை நிறைவேற்றுமாறு செய்தார். இதை முதல் திருப்புகழிலும் [ முத்தைத்தரு ] பாடினார்:

பட்டப்பகல் வட்டத்திகிரியில்  இரவாகப்
பத்தர்க்கு ரதத்தைக் கடவிய பச்சைப்புயல் .

ராமாவதாரமும், க்ருஷ்ணாவதாரமும், நரசிம்ஹ அவதாரமும் நம் ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்த அவதாரங்கள் போலும்! அவற்றைப் பல பாடல்களில் நயத்துடன் பாடியிருக்கிறார்.

முருகன் அவதாரம்  சூராதி    அசுரர்களால் தேவர்கள் பட்ட துயர் நீங்க வந்தது. தேவர்கள்  தங்கள் நகரம் மீண்டு, வேள்விகளின் பயனை அடையத் தொடங்கினர். இந்த வேள்விகளைச் செய்பவர்கள், செய்விப்பவர்கள்  அந்தணர்கள். ஆகவே, முருகன் அவதாரம் அமரர்களுக்கும் அந்தணர்களுக்கும்  மிகவும் உகந்தது. எனவே அவர்கள் இருவரும்  இங்கு முருகனைப் போற்றுவதில் வியப்பில்லை. 

சம்பந்தர் இத்தலத்தில் அந்தணர்களைப் பற்றிச் சொன்னதும் , நம் நாதர்  அவர்கள் முருகனைப் போற்றுவதைச் சொன்னதும் எவ்வளவு  பொருத்தமானது!



Sri_Sagirathan.blogspot.in