Showing posts with label மூன்றாம் குலோத்துங்கன். Show all posts
Showing posts with label மூன்றாம் குலோத்துங்கன். Show all posts

Friday, 24 February 2017

64.திருப்புகழ் 58. திரிபுவனம்.


64.திருப்புகழ் 58.திரிபுவனம்



கோயில் வாசலின்  தோற்றம்.oldtamilculture.blogspot.in

திரிபுவனம் மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய அருமையான கோயில். இன்று பரிதாபமாகக் கட்சியளிக்கிறது.  சரித்திர நோக்கும், கலா ரசனையும், தெய்வ நம்பிக்கையும் அற்ற சமூகத்தால்  இது கவனிப்பாரில்லாமல் இருக்கிறது.

இங்கு ஸ்வாமி கம்பகரேஶ்வரர்= நடுக்கந்தீர்த்த பெருமான். அம்பாள் தர்மஸம்வர்த்தினி = அறம்வளர்த்த நாயகி.
இத்தலத்தில் சரபமூர்த்தி சிறப்பாக வழிபடப்படுகிறது.  பரிகாரமே இல்லாத துன்பங்களுக்கும் நோய்களுக்கும் நிவாரணம்பெற சரபமூர்த்தியின் வழிபாடு  குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது,.சரபரை சிம்மக்ன மூர்த்தி என்றும் சொல்வார்கள். சிவபிரானின் 64 மூர்த்தங்களுள் ஒன்று. நரசிம்ஹ அவதாரத்தில்  பின்னர் அவரது உக்ரம் தணியாதுபோகவே, சரபர் அதை அடக்கினார் என்பது புராணம்.


படம்: விக்கிபீடியா,

இது அருணகிரிநாதர் தரிசித்த 57வது தலம். இங்கு ஒரு பாடல் இருக்கிறது.

திருவடியைப் பெற

முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித          அம்புராசி

முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும        டங்கல்வீரா

அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை          கொண்டநாதா


அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள்           தம்பிரானே.


கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப                  தம்பெறேனோ




மிகவும் கூர்மையான குலிசாயுதப் படையுடைய  இந்த்ரனது மகள் தேவசேனையின் கஸ்தூரி அணிந்ததும், புளகம் கொண்டதும், முஹ்ட்துமாலை அணிந்ததும் அழகியதுமான கொங்கையை விரும்பியவனே !

கடல் ஓலமிட்டுக் கதறவும், பழைய அசுரர்களின் கூட்டம் பின்னிட்டு ஓடவும்.
முற்றிலும் பொடிபட, வெட்டிக்  குத்திய சிங்க வீரனே !

ஞானானுபவத்தைக் கொடுக்கவல்லதான ஒப்பற்ற உபதேசப் பொருளை [ப்ரணவத்தை ] தந்தையான சிவபெருமானுக்கு அந்த க்ஷணத்தில்  உபதேசித்து, அவரால் பூஜிக்கப்பெற்ற தலைவனே !

எல்லாப்பொருள்களும் அழியும் காலத்திலும் தான்  நிலைபெற்று  நிற்கும்  திரிபுவனம்  ஸ்தலத்தில் விளங்கும் சித்திகளில் வல்ல சித்தர்களுக்கெல்லாம் தலைவனே !

நல்ல கதியைப்  பெறுவதற்கு வேண்டிய விதிப்பயன் இல்லாதவன் நான். அறிவு இல்லாதவன்  நான். அத்தகைய நான், பட்டிகை அணிந்துள்ளதும், சிறிய வெட்சி, தாமரை மலர்கள் அணிந்துள்ளதுமான உன் இரு திருவடிகளை அடைவேனோ !

பெரியோர்கள் பகவானின் பாதகமலங்களைத்தவிர வேறொன்றையும் நாடமாட்டர்கள். ஈசன் எந்தை இணையடி நிழலே என்பார் அப்பர். "பிழையே பொறுத்துன் இருதாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே " என்று  வேறொரு இடத்தில் பாடுவார் நம் நாதர்.

[ பாடல் தனுநுதல் எனத்தொடங்கும். இங்கு முக்கியாமான பகுதிகளே - அருணகிரி நாதரின்  வேண்டுகோள்  பகுதியும், முருகன் பெருமை கூறும்  பகுதியுமே - கொடுக்கப்பட்டிருக்கின்றன. அனேகமாக எல்லா பாடல்களிலும் நாம் இந்த முறையையே பின்பற்றுகிறோம். ]



 கோயில் படங்கள் : sibipranav.blogspot.in. Thanks.