Showing posts with label அப்பர் பாடல். Show all posts
Showing posts with label அப்பர் பாடல். Show all posts

Saturday, 20 May 2017

81.திருப்புகழ் -75.திருநெய்த்தானம்


81.திருப்புகழ்- 75. திருநெய்த்தானம்


pixabay

அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 74 வது தலம்  திருநெய்த்தானம். ஸப்த ஸ்தானத்தலங்களில் ஒன்றான இது இப்போது தில்லைஸ்தானம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஸ்வாமி பெயர்  நெய்யாடியப்பர் ; அம்பாள்  பாலாம்பிகை , வாலாம்பிகை. இங்கு ஸ்வாமிக்கு சுத்த பசும் நெய்யினால் மட்டுமே அபிஷேகம் . ஸரஸ்வதி,   காமதேனு, கௌதம முனிவர் ஆகியோர் பூஜித்த ஸ்தலம். இங்கு சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.

சம்பந்தர்

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.


பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.


முதல் திருமுறை


அப்பர்

காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.


பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.


4ம் திருமுறை


எத்தனை எளிய பாடல்களை அருளியிருக்கிறார்கள் !


picture from bharthipayilagam.blogspot.in

இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரு பாடல் கிடைத்திருக்கிறது.

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
 திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
   குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள்                  களமீதே

குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
 குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
 குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு              குமரேசா



செகசெச் சேசெச் செகவென முரசொலி
 திகழச் சூழத் திருநட மிடுபவர்
 செறிகட் காளப் பணியணி யிறையவர்          தருசேயே

சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
 கலசத் தாமத் தனகிரி தழுவிய
 திருநெய்த் தானத் துறைபவ சுரபதி                 பெருமாளே.


உனதடி  மறவேனே



குகுகுக் கூகுக்....குகு என்றும், திமிதித் தீதித் திமிதி  என்றும் பலவித ஓசை யெழுப்பும்  பறைகளுடன்  ஒன்றுகூடி, மிகுந்த கோபத்துடன்  போர்செய்த அசுரர்களின்  போர்க்களத்தில்,


பெருங்கூச்சலுடன்  கழுகுகளும் பேய்களும் கூடவும்,  அஷ்ட பைரவர்கள் ஒன்றுகூடி வர,  பேய்கள் குணலை ஆட்டம் ஆடிக் கொக்கரித்து  தமது பசியை ஆற்றிக்கொள்ளுமாறு தனது வேலாயுதத்தைப் பிரயோகித்த  குமரேசனே !


செக செச் சேசெச் செக என்று முரசு  சப்திக்க  திரு நடனம் செய்பவர்,  செவி உணர்ச்சி கூடிய கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை  அணியாகக் கொண்ட  இறைவர்  சிவபிரான் அருளிய குழந்தையே !


சிகரங்களை உடையதும், பருத்து கனமுள்ளதுமான வள்ளிமலையில்  இருந்த, மாலையணிந்த  குறமகளாம்  வள்ளியைத் தழுவிய  பெருமாளே ! திரு  நெய்த்தானத்தில் அமர்ந்தவனே ! தேவர்களின் தலைவனான இந்த்ரனுக்குப் பெருமாளே ! 
உன் திருவடியை மறக்கமாட்டேன் !

[பாடலின் முதல் நான்கு அடிகள் விடப்பட்டன]



elephant- Bandipur.  ByYathinSKrishnappa (Own Work ) CC BY-SA 3.0 Creativecommons via Wikimedia Commons.

Thursday, 2 March 2017

72.திருப்புகழ் 66.கொட்டையூர்


72.திருப்புகழ் 66.கொட்டையூர்


படம்: தினமலர்.காம். நன்றி

அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 64 வது தலம் கொட்டையூர். இது கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ளது. புராண சரித்திர வரலாறுகள் உள்ள இடம். ஸ்வாமி  கோடீஶ்வரர், கைலாசநாதர். அம்பாள்  
ஸ்ரீ கந்துக க்ரீடாம்பாள் என்னும் பந்தாடு நாயகி. இத்தலத்தின் பெருமையை சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்  "ஜய மங்கள ஸ்தோத்திர " த்தில் எழுதியிருக்கிறார். இது அப்பர் பாடிய தலம்.








விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
[ 6ம் திருமுறை ]






இங்கு  அருணகிரியார் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

அடியார்களொடு சேர

சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
துக்கமுறச் சொர்க்கமுறக்        கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
சுற்றுவனத் திற்சிறைவைத்         திடுதீரன்

கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
 குற்றமறச் சுற்றமறப்                 பலதோளின்

கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப்            பெருமாளே.

கெட்டவினைத்  தொழிலாலே

துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத்              திரிவேனைத்

துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத்         தருள்வாயே


சுட்ட தங்கக்கட்டி போன்ற தேகம் உடையவளும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமேயான அழகிய கொடிபோன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து,
ஆகாயத்தை அளாவும் வீணைக்கொடியுடைய தேரில் அவளை  எடுத்துச் சென்று, தெற்கு  திசையை நெருங்கி, வளைந்தமைந்த அசோகவனத்தில் சிறையில் வைத்த ராவணன் என்னும் தைரியசாலியின் 















கொட்டம் அழிய, புற்றுப் பாம்பின் கோபம் போன்ற கோபம் அற்று ஒழிய, குரலும் அடங்க, சுற்றத்தார்கள் அனைவரும் மாண்டுபோக, 
அவனுக்கிருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிக்கூட்டத்தை அறுத்துத் தள்ளின வீரம் மிக்க வெற்றியாளராம் ஸ்ரீ ராமன்  (திருமால் ) பணிந்து பூஜித்த கொட்டையூரின் பெருமாளே !
















கெட்டவினையைப் பெருக்குவதான தொழிலாலே

துஷ்டன் என்றும், கஷ்டத்திற்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நல்ல நெறியிலிருந்து வழுவிய பிரஷ்டன் என்றும்,பாவ எண்ணங்களுடன் எங்கும் திரிபவன் என்றும் அலைகின்ற என்னுடைய
துக்கங்களை ஒழித்து, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், பரிசுத்தமான நல்ல பதவியை அடைந்துள்ள பக்தர் கூட்டத்தில் என்னைச் சேர்த்தும் அருள்புரிவாயாக.



பாதிப் பாடலில் ராமாயண நிகழ்சிகளைச் சொல்கிறார். ராவணனுடைய வீணைக்கொடியைச் சொல்கிறார். ராவணனுக்கு பாம்புபோல் கோபம் வரும் என்கிறார். இதையே கம்பரும் சொல்கிறார்:
தீவிடத்து அரவந்தானே உருகெழு சீற்றம் பொங்கிப்
பணம்விரித் துயர்ந்த தொத்தான்.
அப்படிப்பட்டவனுடைய கொட்டத்தை அடக்கியவர் ராமர். அவரது மருகன் கொட்டையூரில் இருப்பது எவ்வளவு பொருத்தமானது !
ஒருவிதத்தில் தன்னுடைய கொட்டத்தையும் அதனால் ஏற்படும் துன்பத்தையும் போக்கவேண்டும்  என்று வேண்டுகிறார் !

1881v,blogspot.in thanks.