Sunday, 21 May 2017

82.திருப்புகழ் - 76. திருப்பழுவூர்


82. திருப்புகழ்- 76. திருப்பழுவூர்.


wikimapia
புகழ் பெற்ற பெரிய தலங்களில் உள்ள  கோவில்கள்  வியாபார மையங்களாகிவிட்ட  இன்றைய நிலையில், சிறிதளவாவது இயற்கை எழிலுடன் கூடிய  இத்தகைய சிறிய , பழைய கோவில்களியே  நாம் தெய்வ சாந்நித்தியத்தை உணர்கிறோம். ஆனால் இவையும் "டூரிஸ்டு" வலையில் வந்துவிடும்  போலும்!

அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 75 வது தலம் பழுவூர். இதன் இன்றைய பெயர் கீழப்பழுவூர்.  ஸ்வாமி பெயர்  ஆலந்துறையார், வடமூலேஶ்வரர், வடமூல நாதர். [ ஸ்தல விருக்ஷம் ஆலமரம்= பழு மரம். வட தரு.] அம்பாள்  அருந்தவ நாயகி என்னும் ஸ்ரீ யோக தபஸ்வினி. பரசுராமர் தன் தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு  பூஜித்தார் என்பது ஐதீகம். இங்கு சம்பந்தர் பதிகம் பாடியிருக்கிறார்.






முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தனெமை யாளுடைய வண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.      1


எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலிகொண்டுபயில் கின்ற பழுவூரே.     4


சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.       5


மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்க ளாகுதியி லிட்டவகின் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.  7


நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.        9


அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.    11



இங்கு சம்பந்தர் சில அரிய விஷயங்கள் சொல்கிறார்.  4, 11ம் பாடல்களில் மலையாள அந்தணர்கள் வழிபாடு செய்த இடம் என்கிறார்.  இதன் பின்னணி புரியவில்லை. 5, 7ம் பாடல்களில்  அந்தணர்கள்  வேதமொழியினாலும், ஆஹுதி கொடுத்தும் வழிபட்டது சொல்லப்படுகிறது. 9 வது பாடலில், இந்த அந்தணர்கள்   6 அங்கங்களுடன் நான்கு வேதத்தையும்  கற்று, ஒரே பரம்பொருளான சிவபெருமானை உணர்ந்து  வழிபட்டவர்கள்   "ஒன்றும் இருமூன்றும் ஒரு நாலுமுணர் வார்கள் மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே"   என்று  சொல்கிறார். இச்சிறிய தலத்திலும் இவ்வாறு வேத ஒலியும் வேள்விப்புகையும் நிறைந்திருந்ததால், அக்காலத்தில் தமிழகத்தில் ஓங்கிப் பரவியிருந்த வைதிக நெறியின் உயர்நிலை நன்கு விளங்கும்.




அருணகிரிநாதர்  இங்கு ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார்.

விகட சங்கட வார்த்தை பேசிகள்
 அவல மங்கைய ரூத்தை நாறிகள்
 விரிவ டங்கிட மாற்றும் வாறென          வருவார்தம்

விதம்வி தங்களை நோக்கி யாசையி
  லுபரி தங்களை மூட்டி யேதம
  இடும ருந்தொடு சோற்றை யேயிடு       விலைமாதர்


சகல மஞ்சன மாட்டி யேமுலை
  படவ ளைந்திசை மூட்டி யேவரு
  சரச இங்கித நேத்தி யாகிய               சுழலாலே

சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
  மலர வுந்தியை வாட்டி யேயிடை
  தளர வுங்கணை யாட்டும் வேசிய          ருறவாமோ


திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
  தமையர் தம்பியர் மூத்த தாதையர்
  திலக மைந்தரை யேற்ற சூரரை            வெகுவான


செனம டங்கலு மாற்றி யேயுடல்
  தகர அங்கவர் கூட்டை யேநரி
  திருகி யுண்டிட ஆர்த்த கூளிக               ளடர்பூமி

அகடு துஞ்சிட மூட்டு பாரத
  முடிய அன்பர்க ளேத்த வேயரி
  யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன்        மருகோனே


அமர ரந்தணர் போற்ற வேகிரி
  கடல திர்ந்திட நோக்கு மாமயில்
  அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய                பெருமாளே.



முதல்  நான்கு  அடிகளில் பொதுமகளிரின்  சாகசங்களைச் சொல்லி அவர்களை வசைபாடியிருக்கிறார். அவருடைய உறவு தகாது என்கிறார். அன்றைய தமிழ் நாட்டில் நிலவிய அவல நிலையை இது காட்டுகிறது. திருவள்ளுவரும் இந்த விஷயத்தில்  இரண்டு அதிகாரங்களில் [ பிறனில் விழையாமை, வரைவின் மகளிர்] கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அடுத்த நான்கு அடிகளில்  அருணகிரியார் அரிய விஷயத்தைச் சொல்கிறார்.


சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாக்கி,[ கர்ணன், துரியோதனன்] ஆகிய இரு தமையன் மார்களையும், ஏனைய [ துரியோதனனுடைய ] தம்பிமார்களையும், திருதராஷ்டிரன் முதலிய  தந்தை, பாட்டன் ஆகிய நிலையில் உள்ள பெரியவர்களையும்,  துரியோதனன் பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த வீரம்மிக்க பகைவர்களையும்--


அதிகமான ஜனங்களையும்  அழியும்படி செய்து, அவர்கள் உடல் பொடியாக, அவர்கள் உடல்களை கழுகும் பேய்களும்  மிகுந்த ஒலியுடன் திருகித் தின்னும்  போர்க்களத்தில் -


 நடுவு நிலை குறைந்ததால் மூண்ட  பாரதப்போர் முடிய,  அன்பர்கள் துதி செய்ய,  யமன், வாயு, இந்த்ரன்  ஈன்ற மக்களான தருமன். பீமன், அர்ஜுனன் ஆகியோர் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே !


தேவர்களும் அந்தணர்களும் துதிக்கவே,  மலையும் கடலும் அதிர்ச்சி கொள்ளும்படி  செய்யவல்ல  சிறந்த மயிலின்மேல், அழகு பொருந்தி, பழுவூர் தலத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளே!

பெரிய பாரதத்தின் அரிய செய்திகளை  மூன்றே வரிகளில் சுவைபடச் சொல்லும் திறன்  அருணகிரியாரின் வாக்கு வன்மைக்கே  உண்டு! இங்கு பகவான் க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குச் செய்த பெரிய உபகாரத்தைச் சொல்கிறார்.  தன் சக்ராயுதத்தால்  சூரிய ஒளியை மறைத்து, பகலை இரவாக்கி  அர்ஜுனன் ஜயத்ரதனை வெற்றிகொண்டு, தன் சபதத்தை நிறைவேற்றுமாறு செய்தார். இதை முதல் திருப்புகழிலும் [ முத்தைத்தரு ] பாடினார்:

பட்டப்பகல் வட்டத்திகிரியில்  இரவாகப்
பத்தர்க்கு ரதத்தைக் கடவிய பச்சைப்புயல் .

ராமாவதாரமும், க்ருஷ்ணாவதாரமும், நரசிம்ஹ அவதாரமும் நம் ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்த அவதாரங்கள் போலும்! அவற்றைப் பல பாடல்களில் நயத்துடன் பாடியிருக்கிறார்.

முருகன் அவதாரம்  சூராதி    அசுரர்களால் தேவர்கள் பட்ட துயர் நீங்க வந்தது. தேவர்கள்  தங்கள் நகரம் மீண்டு, வேள்விகளின் பயனை அடையத் தொடங்கினர். இந்த வேள்விகளைச் செய்பவர்கள், செய்விப்பவர்கள்  அந்தணர்கள். ஆகவே, முருகன் அவதாரம் அமரர்களுக்கும் அந்தணர்களுக்கும்  மிகவும் உகந்தது. எனவே அவர்கள் இருவரும்  இங்கு முருகனைப் போற்றுவதில் வியப்பில்லை. 

சம்பந்தர் இத்தலத்தில் அந்தணர்களைப் பற்றிச் சொன்னதும் , நம் நாதர்  அவர்கள் முருகனைப் போற்றுவதைச் சொன்னதும் எவ்வளவு  பொருத்தமானது!



Sri_Sagirathan.blogspot.in


Saturday, 20 May 2017

81.திருப்புகழ் -75.திருநெய்த்தானம்


81.திருப்புகழ்- 75. திருநெய்த்தானம்


pixabay

அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 74 வது தலம்  திருநெய்த்தானம். ஸப்த ஸ்தானத்தலங்களில் ஒன்றான இது இப்போது தில்லைஸ்தானம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஸ்வாமி பெயர்  நெய்யாடியப்பர் ; அம்பாள்  பாலாம்பிகை , வாலாம்பிகை. இங்கு ஸ்வாமிக்கு சுத்த பசும் நெய்யினால் மட்டுமே அபிஷேகம் . ஸரஸ்வதி,   காமதேனு, கௌதம முனிவர் ஆகியோர் பூஜித்த ஸ்தலம். இங்கு சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.

சம்பந்தர்

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.


பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.


முதல் திருமுறை


அப்பர்

காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.


பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.


4ம் திருமுறை


எத்தனை எளிய பாடல்களை அருளியிருக்கிறார்கள் !


picture from bharthipayilagam.blogspot.in

இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரு பாடல் கிடைத்திருக்கிறது.

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
 திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
   குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள்                  களமீதே

குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
 குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
 குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு              குமரேசா



செகசெச் சேசெச் செகவென முரசொலி
 திகழச் சூழத் திருநட மிடுபவர்
 செறிகட் காளப் பணியணி யிறையவர்          தருசேயே

சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
 கலசத் தாமத் தனகிரி தழுவிய
 திருநெய்த் தானத் துறைபவ சுரபதி                 பெருமாளே.


உனதடி  மறவேனே



குகுகுக் கூகுக்....குகு என்றும், திமிதித் தீதித் திமிதி  என்றும் பலவித ஓசை யெழுப்பும்  பறைகளுடன்  ஒன்றுகூடி, மிகுந்த கோபத்துடன்  போர்செய்த அசுரர்களின்  போர்க்களத்தில்,


பெருங்கூச்சலுடன்  கழுகுகளும் பேய்களும் கூடவும்,  அஷ்ட பைரவர்கள் ஒன்றுகூடி வர,  பேய்கள் குணலை ஆட்டம் ஆடிக் கொக்கரித்து  தமது பசியை ஆற்றிக்கொள்ளுமாறு தனது வேலாயுதத்தைப் பிரயோகித்த  குமரேசனே !


செக செச் சேசெச் செக என்று முரசு  சப்திக்க  திரு நடனம் செய்பவர்,  செவி உணர்ச்சி கூடிய கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை  அணியாகக் கொண்ட  இறைவர்  சிவபிரான் அருளிய குழந்தையே !


சிகரங்களை உடையதும், பருத்து கனமுள்ளதுமான வள்ளிமலையில்  இருந்த, மாலையணிந்த  குறமகளாம்  வள்ளியைத் தழுவிய  பெருமாளே ! திரு  நெய்த்தானத்தில் அமர்ந்தவனே ! தேவர்களின் தலைவனான இந்த்ரனுக்குப் பெருமாளே ! 
உன் திருவடியை மறக்கமாட்டேன் !

[பாடலின் முதல் நான்கு அடிகள் விடப்பட்டன]



elephant- Bandipur.  ByYathinSKrishnappa (Own Work ) CC BY-SA 3.0 Creativecommons via Wikimedia Commons.

Friday, 19 May 2017

80.திருப்புகழ் -74 திருப்பூந்துருத்தி


80. திருப்புகழ்-74. திருப்பூந்துருத்தி





அருணகிரிநாதர் வரும் அடுத்த, 73வது தலம் திருப்பூந்துருத்தி. இது திருவையாற்றுக்கு அருகில் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் நடுவில் இருப்பதால் 'துருத்தி' ' எனப் பெயர்பெற்றது. இது ஸப்த ஸ்தான ஸ்தலங்களில் ஒன்றாகும். ஸ்வாமி பெயர்  புஷ்பவன நாதர்; அம்பாள்  சௌந்தர்ய நாயகி என்னும் அழகாலமர்ந்த  நாயகி.  திருவாவுக்கரசு ஸ்வாமிகள்   இத்தலத்து ஸ்வாமிமீது 3 பதிகங்கள் பாடியிருக்கிறார்.  பொதுப்பதிகங்கள் 15 இங்கு தங்கியிருந்தபோது செய்ததாகச் சொல்வார்கள்.

மாலினை மாலுற நின்றான் மலைமக டன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேல்
போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திம்மகிழும்
ஆலனை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.


4ம் திருமுறை

கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


5ம் திருமுறை

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
    நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
    காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
    தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
    புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே 


6ம் திருமுறை

பொதுப்பதிகம் - திருஅங்கமாலை


தலையே நீவணங்காய் - தலை 
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் 
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல்  நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்  கண்காள் காண்மின்களோ. 

செவிகாள் கேண்மின்களோ - சிவன்  எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும் செவிகாள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது  காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை  மூக்கே நீமுரலாய். 

வாயே வாழ்த்துகண்டாய் - மத  யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை  வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய் - நிமிர்  புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை  நெஞ்சே நீநினையாய். 
கைகாள் கூப்பித்தொழீர் - கடி  மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்  கைகாள் கூப்பித்தொழீர். 
ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்  ஆக்கை யாற்பயனென்
கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்  கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்  கால்க ளாற்பயனென்.
உற்றா ராருளரோ - வுயிர் கொண்டு போம்பொழுது  குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ராருளரோ.
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்  சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு  இறுமாந் திருப்பன்கொலோ.

இத்தலத்திற்கு  சம்பந்தர் வந்தபோது, இது அப்பர்  உழவாரப்பணி செய்த இடம் என்பதால் உள்ளே வர அஞ்சி, வெளியிலிருந்தே தரிசனம் செய்தார், அப்போது நந்தி விலகி அவருக்கு தரிசனம் செய்ய  உதவியது என்பது வரலாறு.
இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

தாங்கு நிற்சரர் சேனா நீதரு
 னாங்கு ருத்ரகு மாரா கோஷண
  தாண்ட வற்கருள் கேகீ வாகன           துங்கவீரா

சாங்கி பற்சுகர் சீநா தீசுர
 ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
  சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ              லங்கன்மார்பா

பூங்கு ளத்திடை தாரா வோடன
 மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
  போன்ற விக்ரக சூரா ரீபகி                    ரண்டரூபா
போந்த பத்தர்பொ லாநோய் போயிட
  வேண்ட நுக்ரக போதா மேவிய
  பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள்           தம்பிரானே

ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை  தீர்ந்து னக்கெளி தாயே மாதவ  மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ              ழங்குவாயே

     
ஜைன விரதத்தைத் தாங்கி நின்ற ஜைன குருமார்களின் கூட்டமாகிய நிசாசரர்கள் மிகுந்த  கவலை கொள்ளக் காரணமாகி நின்ற சிவ குமாரனே,
வாத்ய கோஷங்களுடன் தாண்டவம் செய்யும் சிவபிரானுக்கு உபதேசம் செய்த மயில் வாஹனனே!  உயர்ந்த வீரனே !
ஆத்ம தத்துவத்தை விசாரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப்ப்ரம்ம ரிஷி, லக்ஷ்மியின் நாதராம் திருமால், சிவபிரான், தேவேந்த்ரன் ஆகியோர் மெச்சிய  வேலனே ! உபதேச குருவே ! சாந்த மூர்த்தியே !  வித்தகம் நிறைந்த மூர்த்தியே !ஸ்வாமியே ! கடப்ப மாலை அணிந்தவனே!
தாமரைப்பூ நிறைந்த குளத்தில், குள்ள வாத்துடன் அன்னப்பறவைகள்  மேய்கின்ற வயலூர்ப்  பெருமானே ! மலைபோன்ற உருவம் கொண்ட சூரனுக்குப் பகைவனே !வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தவனே !
உன்னடி சார்ந்த பக்தர்களின் பொல்லாத நோய்கள்   எல்லாம் விலகியோட, வேண்டிய அனுக்ரஹ பிரசாதத்தைத்தரும்  அறிஞனே !பொருந்திய  திருப்பூந்துருத்தி தலத்துச் செல்வனே ! தேவர்கள் தம்பிரானே !
மாயா சம்பந்தமாய் ஏற்படும் துன்பங்களும் ( அத்துடன் மாதர் மயக்கும்) ஒழிந்து, உன் திருவடித் தியானத்தில்  எளிதாக ஊன்றும் தவநிலை பொருந்துவதற்கு ஏற்ற மெய்ஞ்ஞான ஆசார  நியதியை பிரசாதித்து அருளுவாயாக.
[ பாடலில் முதல் மூன்று அடிகள்  விடப்பட்டன.]
இங்கு அருணகிரி நாதர் ஒரு முக்கிய விஷயம் சொல்கிறார்.  "மெய்ஞ்ஞானத்தை மட்டும் வேண்டவில்லை.  ஞானம் நிலைக்கவேண்டுமானால் அதற்கேற்ற ஆசாரமும் வேண்டும். அதனால் " ஞானாசாரம் வழங்குவாயே " என்று கேட்கிறார்.
கற்றதைப்பற்றி நிற்க வேண்டும். "  கற்றபின் நிற்க அதற்குத்தக " என்பார் வள்ளுவர். நமது மதத்தில் கொள்கை எதுவானாலும், ஆசாரத்திற்கே முதலிடம் தருவார்கள். " ஸர்வாகமானாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பதே" என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். இதையே நமது ஸ்வாமிகளும் சொல்கிறார்.

Thursday, 18 May 2017

79.திருப்புகழ் -73 பெரும்புலியூர்


79. திருப்புகழ் -73 பெரும்புலியூர்



www.thevaaram.org.

அருணகிரிநாதர் திருவையாற்றிலிருந்து கண்டியூர் வந்து ஸ்வாமி தரிசனம் செய்தார். கண்டியூர் வைப்புத்தலமாக ஒரு பாடலில் வருகிறது. பிறகு அங்கிருந்து பெரும்புலியூர் வருகிறார். இது ஸ்வாமிகள் தரிசித்துப் பாடிய 72வது தலம். சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.



சம்பந்தர் பதிகம்

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே
.

மறையுடை யாரொலி பாடன் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழக ரழகர்நஞ் செல்வர்

கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே
.

சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே



நூற்றுப்பத்தாய பேர் = ஸஹஸ்ர நாமம்.

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்
திரு நாமம் பாடி  நாம் தெள்ளேணம் கொட்டாமோ

என்பார்  மாணிக்கவாசக  ஸ்வாமிகள்.





wikimapia



இங்கு ஸ்வாமி பெயர் வ்யாக்ரபுரீஶ்வரர். அம்பாள் பெயர் சௌந்தர  நாயகி. வ்யாக்ரபாதர்  வழிபட்ட 5 தலங்கள்  "  பஞ்ச புலியூர் " என்று வழங்கப்படுகின்றன.  [வ்யாக்ரபாதர் என்பது தமிழில் புலிக்கால் முனிவர் என்று வரும் . அவர் வழிபட்டதால் இவை புலியூர் ஆகின்றன.] இவற்றில் சிதம்பரம்  "பெரும்பற்றப் புலியூர் " ஆகும் மற்றவை    பெரும்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர்  ஆகியவை.

இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
     சரங்களொளி வீசப்                               புயமீதே

தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
     சரங்கண்மறி காதிற்                              குழையாட

இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
     றிரம்பையழ கார்மைக்                               குழலாரோ

டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
     றிரங்கியிரு தாளைத்                                 தருவாயே


சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
     சிறந்தமயில் மேலுற்                                றிடுவோனே


சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
     சினந்தசுரர் வேரைக்                                  களைவோனே

பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
     ப்ரசண்டஅபி ராமிக்                                  கொருபாலா

பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
     பெரும்புலியுர் வாழ்பொற்                       பெருமாளே.



எளிய பாடல். முதல் நான்கு அடிகளில்  பெண்மயலைச் சாடுகிறார். அதிலிருந்து மீள   இருதாளைத் தருவாயே  என வேண்டுகிறார்.
பெரும்புலியூரில் இருந்தாலும் ஸ்வாமிகளுக்கு சிதம்பரம் நினைவு வருகிறது. முருகனை சிதம்பர குமாரா என்று அழைக்கிறார். ஆனால் சிதம்பரத்திலும் அவருக்கு முருகன் நினைவுதான். "கனகசபை மேவும் எனது குரு நாத கருணை முருகேசப் பெருமாள் காண் " என்று பாடுகிறார்.



greenindiafoundation.blogspot.in /2010