Monday, 6 March 2017

74.திருப்புகழ் 68.சுவாமிமலை-1


74.திருப்புகழ் 68. சுவாமிமலை -1


குக்கே சுப்ரமண்யா கோயில்.
soorajna CC BY-SA 3.0 creativecommons via Wikimedia Commons.

ஆறு தலங்கள் : அறுபடைவீடு
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த  68வது தலம் சுவாமிமலை என்னும் திருவேரகம். இது முருகன் எழுந்தருளியுள்ள ஆறு பிரதான தலங்களில்  
நான்காவதாக வைத்து எண்ணப்படுகிறது. இத்தலங்களை "அறுபடைவீடு " என்று சொல்கிறோம். இத்தலங்களை  இந்தமாதிரி நமக்கு அறிமுகப்படுத்தியவர்  சங்கப்புலவர்  நக்கீரர். அவர் எழுதிய திருமுருகாற்றுப்படை , சங்க நூல்கள்  36 லும் முதன்மையாக இருக்கிறது. அதில்தான் இந்த 6 தலங்களைப்பற்றி  முதலில் நமக்குச் சொல்லியிருக்கிறார்.  ஆனால் அவர் படைவீடு என்று சொல்லவில்லை!

குன்றமர்ந்து  உறைதலும் உரியன் [திருப்பரங்குன்றம் ]
அலைவாய்ச் சேரலும் நிலைஇய பண்பே [திருச்சீரலைவாய் ]
ஆவினன் குடி அசைதலும் உரியன்
ஏரகத்து உறைதலும் உரியன்
குன்றுதோராடலும் நின்றதன் பண்பே
பழமுதிர்சோலை மலைகிழவோனே

என்று இத்தலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நக்கீரர்.

எது திருவேரகம் ?


இவற்றில் எது  திருவேரகம் என்பது பற்றி சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. இன்று கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஸ்வாமிமலையே திருவேரகம் எனக்கொள்கிறோம். முருகன் குறிஞ்சி நிலத்துக்கு - மலையும் மலை சார்ந்த இடமும் - அதிபதி. குன்றெல்லாம் குமரன் என்கிறோம். ஆனால் சுவாமிமலையில் குன்றெதுவும் இல்லை ! அங்கிருப்பது செயற்கைக் குன்று.
அதனால் இது உண்மையான , பழைய திருவேரகமில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மலை நாட்டில் [ இன்றைய கர்னாடகாவின் ஒரு பகுதி ] உள்ள  "சுப்ரஹ்மண்யா " என்னும் க்ஷேத்திரமே திருவேரகம் என்பது இவர்கள்  கருத்து. இங்கு  குமாரதாரா என்னும் ஆறு ஒடுகிறது. அருகில் குமாரபர்வதம் என்னும் மலையும் இருக்கிறது. இங்கு சுப்ரமண்யரை நாகர்வடிவில் வழிபடுகிறார்கள். கும்பகோணம் பகுதியில் உள்ள சிலகுடும்பங்களுக்கு  இந்த சுப்ரமண்யரே குலதெய்வமாகவும் விளங்குகிறார் !. அதனால் இந்தக் கருத்திலும் ஏதோ உண்மை இருக்கவேண்டும். 




குமாரதாரா ஆறு. ஒரு தோற்றம்.
Holiday1Q


ஆனால் அருணகிரிநாதர் ஸ்வாமிமலையே திருவேரகம் எனப்பாடுகிறார்.:

தனி யேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே !

ஏரகவெற்பெனும் அற்புதமிக்க
சுவாமிமலைப்பதி மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் பெருமாளே !

எனவே, அருணகிரிநாதர் காலத்திலேயே  ஸ்வாமிமலையே திருவேரகம் என வழங்கியது என்பது தெரிகிறது, இங்கும் குமாரதாரா என்ற ஒரு தீர்த்தம் இருக்கிறது! நமக்கு அருணகிரிநாதர் வாக்கே ப்ரமாணமாதலால்  இதற்குமேல் ஆராய்ச்சி அவசியமில்லை'



குமாரபர்வதம்
https://explorerinyou.wordpress.com

திருமுருகாற்றுப்படையில் திருவேரகம்.

தமிழ் இலக்கியத்தில் நக்கீரர்தான் முதன்முதலில் இந்த ஆறு தலங்களை ஒன்றாகவைத்து எண்ணும் முறையைக் கற்பித்தார். இதில் நான்காவதாக வரும் திருவேரகத்தைப் பற்றி அருமையாகப் பாடியிருக்கிறார். 

முருகன்  மலைப்பகுதிக்கு உரிய தெய்வமானாலும் அவனை மும்மூர்த்திகள், தேவர், முனிவர், மனிதர் என அனைவரும் வழிபடுகின்றனர். மனிதர்களும் ஒவ்வொரு சமூகத்தினரும் அவரவர் குலவழக்கப்படியே வழிபடுகின்றனர். குறவர்கள், மலையில் வாழும் பூசாரி, முதலியோர் கள்ளைக் குடித்தும், ஆட்டை அறுத்தும் வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும்  தினையும் மலரும் கொண்டு, ஆட்டை அறுத்து விழா எடுக்கிறார்கள். சிலர் வெறிவந்து ஆடுகிறார்கள். பறைகொட்டி குறவை ஆடுகிறார்கள்.முருகன் அவரவர்கள் வழிபடுவதையெல்லாம் உவந்து ஏற்று, அவர்களுக்கு வேண்டியவாறு அருள்புரிகிறான். இதையெல்லாம் நமக்குப் படம்பிடித்துக்காட்டும் நக்கீரர், திருவேரகத்தில் பிராமணர்கள் எப்படி வழிபட்டனர் என்பதைக் காட்டுகிறார்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி  இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அரன் நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி  நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக்கூப்பிய  கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்.


[தங்களுக்கென்று விதிக்கப்பட்ட ] ஆறு தொழில்கள் என்ற இலக்கணத்திலிருந்து  பிறழாதவர்கள்;
தாய், தந்தை என்ற இருவழியிலும் பல்வேறு பழைய கோத்திரத்தை உடையவர்கள்;
இளமைப்பருவத்துக்குரிய 48  நல்ல வருஷங்களை  நிற்கவேண்டிய நல்ல நெறியிலே  [பிரம்மசரியம் ] நின்று  கழித்தவர்கள்; 
தர்மத்தையே விளக்கும் கொள்கை உடையவர்கள் ;
மூன்று வகையாகச் சொல்லப்பட்ட மூன்று வேள்வித் தீயையே செல்வமாக உடைய இருபிறப்பாளராகிய அந்தணர்கள் ;
முருகனைத் துதிக்கும் சமயம் [ நல்ல முஹூர்த்தம்] அறிந்து  தோத்திரங்கள் சொல்லவும்;
ஒன்பது நூலை முறுக்கிய மூன்று புரிகளாகிய நுண்ணிய பூணூலை அணிந்து,
உலராத ஈர ஆடையை  (உடலில் ) கிடந்தவாறே உலரும்படியாக உடுத்து,
தலைமேலே கைகளைக்குவித்து,  முருகனைப் புகழ்ந்து,
ஆறெழுத்துக்கள்  தன்பால் கொண்டதான அரிய உபதேச மந்திரத்தை, நாக்கு நன்கு புரளுமாறு பலமுறை கூறி,
மணம்மிக்க நறுமலர்களை ஏந்தி வழிபடவும்,
அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத்திலே  எழுந்தருளி இருப்பதற்கும் உரியவன் முருகன். 
இவ்வாறு பதின்மூன்றே வரிகளில் பல  அரிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார். நக்கீரர்.
இந்தத் தலத்திற்கு வந்த அருணகிரிநாதர்  38 அரிய, அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்,

குறிஞ்சிப் பூ - 12 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் 
படம்: indrayavanam.blogspot.in Thanks




Friday, 3 March 2017

73.திருப்புகழ் 67. சத்திமுத்தம், பழையாறை,


73.திருப்புகழ் 67. சத்திமுத்தம்,
பழையாறை, வலஞ்சுழி
சத்திமுத்தம்: ஓரளவுக்காவது பழைய எழிலுடன் விளங்கும் காட்சி.
படம்: Wikimapia

அருணகிரி நாதர் அடுத்து  சத்திமுத்தம் (65), பழையாறை (66), வலஞ்சுழி (67) ஆகிய தலங்களை தரிசித்தார். இவை கும்பகோணத்தைச் சுற்றியிருப்பவை. மூன்றும்  தேவாரப்பாடல் பெற்ற தலங்கள். மூன்று இடத்திலும் பெண்மயல் இன்றி அருள் பெறவேண்டும் என்று பாடுகிறார்.


சத்திமுத்தம்

அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்
அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு                  மழகோனே

அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு
மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு                       மதிசூரா

விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்
உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக
விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு                 மொருமாயோன்


விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய
விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு                   பெருமாளே.


கொடிச்சியர்கள்
கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ            தொழியேனோ






ஸ்வாமி : சிவக்கொழுந்தீசர். அம்பாள் : பெரியநாயகி.
Wikimapia.


சாம்பல் பூசும் முக்கண் பெருமானுக்குப் பொருள்சொல்லி, அரிய வேதப்பொருளை உபதேசித்து, பெருத்த மயிலை முன் நடத்தி ஒருகணப்பொழுதில்  உலகைச் சுற்றிவந்த அழகனே !


வஞ்சகப்பேச்சைப் பேசி, பொருட்செல்வம்  அதிகம் உடையவராய், உலகிலே எளியோரைப் பயமுறுத்தி மயக்கி பூமியில் பிழைக்க எண்ணுகின்ற மூடர்களின் மனதைக் கலக்கியும்,வெட்டிப்பிளந்தும் நெருக்கும் அதி சூரனே !


விஷம்கொண்ட பாம்பணையில் துயில்கொள்ளும்  க்ருபாமூர்த்தி, கஜேந்த்ரன்  கூவியழைத்ததை நன்கு காதில்வாங்கி, மிக்க வேகத்துடனே கருடன்மீது விளங்கிப் பிரியத்துடன் வந்த ஒப்பற்ற திருமால்  அன்பு கொள்ளும் மருகனே !


மாமரமாகக் கடலில் நின்ற சூரனை நெறு நெறுவென வெட்டின  உக்ர வேலாயுதம் என்னும் ஒப்பற்ற படையை உடையவனே !ரிஷபவாகனம் கொண்ட சிவபிரான்  வீற்றிருக்கும் திருச்சத்திமுத்தம்  தலத்தில் விளங்கும் பெருமாளே !


பெண்களின் கண்ணாகிய வலையில் அகப்பட்டுத் துன்பப்படுவதை  ஒழிக்கமாட்டேனா !

பழையாறை




பா.ஜம்புலிங்கம். நன்றி



ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராக மகோன்னதமாக இருந்த இந்த நகரை இன்னொரு தமிழ் அரசனாகிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் நாசமாக்கினான். இங்கிருந்த சோமேசர் கோயில் மட்டும் தப்பியது. பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு இங்குவரும் எவருக்கும் கண் கலங்காமல் இருக்காது.
ஸ்வாமி சோமேசர். அம்பாள் சோமகமலாம்பிகை.

வேடிக்கைக் காரவு தாரகு
ணாபத்மத் தாரணி காரண
வீரச்சுத் தாமகு டாசமர்                        அடுதீரா

வேலைக்கட் டாணிம காரத
சூரர்க்குச் சூரனை வேல்விடு
வேழத்திற் சீரரு ளூறிய                       இளையோனே

ஆடத்தக் காருமை பாதியர்
வேதப்பொற் கோவண வாடையர்
ஆலித்துத் தானரு ளூறிய                            முருகோனே

ஆடப்பொற் கோபுர மேவிய
 ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை
 யாறைப்பொற் கோயிலின் மேவிய            பெருமாளே.


கூளச்சித் தாளனை மூளனை               வினையேனைக்

கோபித்துத் தாயென நீயொரு
போதத்தைப் பேசவ தாலருள்
கோடித்துத் தானடி யேனடி                          பெறவேணும்




வினோதமான திருவிளையாடல்கள் செய்பவனே ! தாராளகுணம் உடையவனே !
தாமரை மாலை அணிபவனே ! மூலபுருஷனே ! வீரம்மிக்க பரிசுத்த மூர்த்தியே ! கிரீடம் அணிந்தவனே ! போரில் கொல்லும் தீரனே !


வேலையில் சமர்த்தனும், மஹாரத சூரர்களுக்கெல்லாம் சூரனுமாகிய சூரன்மீது வேலைச் செலுத்திய இளையோனே ! ஐராவதம் என்னும் யானையின்மீது சீரான திருவருள் ஊறின இளையோனே !


கூத்தாட வல்லவர், உமாதேவிக்குத் தமது உடலில் பாதிபாகம் கொடுத்தவர், வேதத்தையே அழகிய கோவண ஆடையாக உடையவர், களித்து, மகிழ்ந்து திருவருள் சுரந்து தந்த குழந்தையே !

பொன்மயமான அழகிய  கோபுரத்தைக் கொண்டதும், பளிங்குக்கு ஒப்பான மதில் சூழ்ந்ததுமான பழையாறைத் தலத்தில் அழகிய திருக்கோயிலில்  அமர்ந்த பெருமாளே !


கூளம் போன்ற பயனற்ற அறிவுடைய என்னை, அத்துடன்  முயற்சிகள் செய்யமுற்படும் என்னை,


தாய்போல நீ கண்டித்து, ஒப்பற்றதான ஞானத்தை உபதேசிக்க, அதனால் ஞானம் பெற்றவனாய் உன் திருவருளைப் புகழ்ந்து பிரார்த்தித்து அடியேன் உன் திருவருளைப் பெறவேணும்.


விமானம் . 
 sibipranav.blogspot.in Thanks.


வலஞ்சுழி

புராணப் புகழ்பெற்ற தலம். காவேரி இங்கு வலமாகச் சுழித்துச் செல்கிறது. ஸ்வாமி கபர்தீஶ்வரர், கற்பகநாதேஶ்வரர், செஞ்சடைநாதர், வலஞ்சுழிநாதர்.  அம்பாள் ப்ருஹன்நாயகி, பெரியநாயகி. இங்கு வெள்ளை விநாயகர் (ஶ்வேத கணபதி ) மிகவும் பிரசித்தம்.



தினமலர். நன்றி.

நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
     தசமு கன்படை கோடா கோடிய
     நிருத ரும்பட வோரே வேவியெ           யடுபோர்செய்

நெடிய னங்கனு மானோ டேயெழு
     பதுவெ ளங்கவி சேனா சேவித
     நிருப னம்பரர் கோமான் ராகவன்           மருகோனே


சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
     பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
     சிவச டங்கமொ டீசா னாதிகள்                      சிவமோனர்

தெளியு மந்த்ரக லாபா யோகிகள்
     அயல்வி ளங்குசு வாமீ காமரு
      திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள்           பெருமாளே.


பசாசே போல்பவ          ருறவாமோ



ஒப்பில்லாத வஞ்சகச் செயலில் ஈடுபட்ட மாரீசன் முதலிய அரக்கர்கள், ராவணன் அவனுடைய கோடானுகோடி சேனை  அரக்கர்கள்  இவர்கள் யாவரும் அழியும்படி ஒரு அம்பைச் செலுத்தி, அடுத்துவந்த போரைச் செய்த


 நெடியோனாகிய மாயோன், ஹனுமாருடன் எழுபது வெள்ளம் குரங்குப்படையால் வணங்கப்பெற்ற அரசன், தேவர்களுக்குத் தலைவன், ராகவனாய் அவதரித்தவன் ஆகிய திருமாலின் மருகனே !


மேலான தேவர்கள், பகீரதன் முதலிய அடியார்கள், ஞான ஒளிபொருந்திய தெய்வ அனுக்ரஹம் பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ முனிவர்கள்,


தெளிந்த மந்திர சாஸ்திரத்தில் மனதைச் செலுத்தின யோகிகள் - ஆகிய இவர்கள் யாவரும் பக்கத்தில் நிற்க விளங்கும் ஸ்வாமியே ! அழகிய திருவலஞ்சுழியின் செல்வனே ! தேவர்கள் பெருமாளே !


பிசாசு போன்ற (பொது ) மகளிரின் சம்பந்தம்  தகுமோ ? தகாது என்றபடி.


திருவலஞ்சுழி க்ஷேத்ரபாலர் கோயிலில்  ஒரு காட்சி. அமரர் சில்பி வரைந்தது.
திருப்பணி என்ற பெயரில் மூடர்கள்  இதுபோன்ற அரிய சிற்பங்களையும்  கல்வெட்டுக்களையும் சிதைத்துவருகின்றனர்.  மேலும் விவரங்களுக்கு  www.varalaaru.com பார்க்கவும். [ accessed 4 March 2017 ].



Thursday, 2 March 2017

72.திருப்புகழ் 66.கொட்டையூர்


72.திருப்புகழ் 66.கொட்டையூர்


படம்: தினமலர்.காம். நன்றி

அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 64 வது தலம் கொட்டையூர். இது கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ளது. புராண சரித்திர வரலாறுகள் உள்ள இடம். ஸ்வாமி  கோடீஶ்வரர், கைலாசநாதர். அம்பாள்  
ஸ்ரீ கந்துக க்ரீடாம்பாள் என்னும் பந்தாடு நாயகி. இத்தலத்தின் பெருமையை சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்  "ஜய மங்கள ஸ்தோத்திர " த்தில் எழுதியிருக்கிறார். இது அப்பர் பாடிய தலம்.








விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
[ 6ம் திருமுறை ]






இங்கு  அருணகிரியார் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

அடியார்களொடு சேர

சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
துக்கமுறச் சொர்க்கமுறக்        கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
சுற்றுவனத் திற்சிறைவைத்         திடுதீரன்

கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
 குற்றமறச் சுற்றமறப்                 பலதோளின்

கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப்            பெருமாளே.

கெட்டவினைத்  தொழிலாலே

துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத்              திரிவேனைத்

துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத்         தருள்வாயே


சுட்ட தங்கக்கட்டி போன்ற தேகம் உடையவளும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமேயான அழகிய கொடிபோன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து,
ஆகாயத்தை அளாவும் வீணைக்கொடியுடைய தேரில் அவளை  எடுத்துச் சென்று, தெற்கு  திசையை நெருங்கி, வளைந்தமைந்த அசோகவனத்தில் சிறையில் வைத்த ராவணன் என்னும் தைரியசாலியின் 















கொட்டம் அழிய, புற்றுப் பாம்பின் கோபம் போன்ற கோபம் அற்று ஒழிய, குரலும் அடங்க, சுற்றத்தார்கள் அனைவரும் மாண்டுபோக, 
அவனுக்கிருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிக்கூட்டத்தை அறுத்துத் தள்ளின வீரம் மிக்க வெற்றியாளராம் ஸ்ரீ ராமன்  (திருமால் ) பணிந்து பூஜித்த கொட்டையூரின் பெருமாளே !
















கெட்டவினையைப் பெருக்குவதான தொழிலாலே

துஷ்டன் என்றும், கஷ்டத்திற்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நல்ல நெறியிலிருந்து வழுவிய பிரஷ்டன் என்றும்,பாவ எண்ணங்களுடன் எங்கும் திரிபவன் என்றும் அலைகின்ற என்னுடைய
துக்கங்களை ஒழித்து, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், பரிசுத்தமான நல்ல பதவியை அடைந்துள்ள பக்தர் கூட்டத்தில் என்னைச் சேர்த்தும் அருள்புரிவாயாக.



பாதிப் பாடலில் ராமாயண நிகழ்சிகளைச் சொல்கிறார். ராவணனுடைய வீணைக்கொடியைச் சொல்கிறார். ராவணனுக்கு பாம்புபோல் கோபம் வரும் என்கிறார். இதையே கம்பரும் சொல்கிறார்:
தீவிடத்து அரவந்தானே உருகெழு சீற்றம் பொங்கிப்
பணம்விரித் துயர்ந்த தொத்தான்.
அப்படிப்பட்டவனுடைய கொட்டத்தை அடக்கியவர் ராமர். அவரது மருகன் கொட்டையூரில் இருப்பது எவ்வளவு பொருத்தமானது !
ஒருவிதத்தில் தன்னுடைய கொட்டத்தையும் அதனால் ஏற்படும் துன்பத்தையும் போக்கவேண்டும்  என்று வேண்டுகிறார் !

1881v,blogspot.in thanks.




Wednesday, 1 March 2017

71.திருப்புகழ் 65,சிவபுரம்


71.திருப்புகழ் 65. சிவபுரம்


Wikimapia 

அருணகிரி நாதர் அடுத்து வந்த 63 வது தலம் சிவபுரம். கும்பகோணத்திற்கு அருகிலேயே உள்ளது. பழமையான தலம். இங்கு திருமால் வெண்பன்றி உருவில் சிவபிரானை வழிபட்டதாக ஐதிகம். ஸ்வாமி சிவபுரிநாதர், சிவபுரீஶ்வரர்,சிவகுருநாதர்,ப்ரம்மபுரீஶ்வரர். அம்பாள் சிங்காரவல்லி, பெரிய நாயகி, ஆர்யாம்பாள். சம்பந்தர், அப்பர் பாடல்கள் பெற்ற தலம்.

களவுபோகும் கோவில் சிலைகள்

 இந்தவூர் கோயிலிலிருந்த மிக அழகிய நடராஜர் சிலையைத் திருடி அமரிக்காவுக்கு எடுத்துச்சென்றனர். அரசினரின் தீவிர முயற்சியால் இது திரும்பக் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிவபுரத்திற்கு வரவில்லை.

இந்த விஷயத்தில் இந்திய அரசினருக்கு உண்மையான அக்கறை இல்லை. மேலை நாட்டுக்காரர்கள் - முக்கியமாக அமெரிக்க பணக்கார அயோக்யர்கள் - சிலைகளைத் திருடிக்கொண்டு போகிறார்கள். இச்சிலைகள் ஒரு வருஷத்திற்கு மேலாக  அங்கே இருந்து, அவற்றைப்பற்றி எந்த விசாரணையும் இல்லாவிட்டால் அவை அங்கேயே இருக்கலாம் என்பதாக ஒரு ஒப்பந்தம் நம் மூளைகெட்ட அரசினர் செய்து கொண்டனர் ! சிவபுரம் நடராஜர் திரும்பிவந்து விட்டாலும் .மேலும் பல விக்ரஹங்கள்  மேலை நாய்களிடம் சிக்கியிருக்கின்றன.


தி இந்து, தமிழ்: ஜூலை 9. 2016. நன்றி. தமிழ் இந்துவில் வந்த இந்தக் கட்டுரைத் தொடரைப் படிக்கவேண்டும்.

சம்பந்தர்  பாடல்கள்- முதல் திருமுறை
(3 பதிகங்கள் )


புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே.


இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.



கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.


அப்பர் பதிகம் - 6ம் திருமுறை



வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
    ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே


இங்கு அப்பர் ஸ்வாமிகள் சொல்வதைக் கவனிக்கவேண்டும். "வடமொழியும் 
தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் " என்கிறார். ஸம்ஸ்க்ருதமும் தமிழும் சிவனிடமிருந்தே தோன்றியவை என்பது நமது தொன்மையான மரபு. இதை இன்றைய திராவிடப் பதர்கள் மறைத்து, மறுத்துத் திரிகின்றனர்.

விஷ்ணு வெண்பன்றி யுருவில் சிவனைப் பூஜித்ததையும் ஒரு பாடலில் சொல்கிறார் :
" பிறையெயிற்று  வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன் காண்."
இதைக் கல்லிலே செதுக்கியிருக்கிறார்கள்.




www. shivatemples.com. Thanks.


இங்கு அருணகிரிநாதர் பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. அருமையான பாடல்.


ஞான  நெறி பெற

செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி                          அருள்பாலா

சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு                         முருகோனே

கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர்                        முனையாலே


கதற வென்றுடல் கீணவ னாருயி
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு                                   மருகோனே


தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புக                    ழழகோனே

திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக                              பெருமாளே.


மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழு                    வகையாலே

வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநி                            னருள்சேராய்







சண்பக மலர்
www.chenaitamilulaa.net. Thanks.



பார்வதி தேவி அருளிய குழந்தையே !


சிறையில் அடைபட்டிருந்த தேவர்களும் மேலான  முனிவர்களும் சுகம்பெற, அசுரர்களுடைய கூட்டமெல்லாம் வேறுடன் அழிய, சிவபெருமான் உனக்கு மகிழ்ந்தளித்த  கூர்மையான வேலைச் செலுத்திய முருகனே !


ஹிரண்யன் தனது கையால் அறைந்த தூணிலிருந்து , நரசிங்கமாய்த் தோன்றி, மலை, பூமி, திசைகள், கடல் இவை யாவும் கலக்கம் அடையும்படி அந்த ஹிரண்யனுடன் போர்செய்து,


நகத்தின் நுனியாலே அவன் கதறியழும்படி அவன் உடலைக் கீறிப்பிளந்து, ஜயங்கொண்டு, அவனது அரிய உயிரை ரத்தம் சிந்தாமல் அமுதாக உண்ட, தாமரை  போன்ற உந்தியுடையவனாகிய திருமாலின் அழகிய மருகனே !


சூர்யன், மன்மதன், அருள் நிறைந்த முனிவர்கள், தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்துத் தலைவர்கள், பிரமன், சிறந்த அந்தணர்கள் - ஆகியோர் போற்றிப் புகழும் அழகனே !


அஷ்ட லக்ஷ்மிகளும் நிறைந்த வீடுகளுடன், அழகிய பொன்னால் ஆன கோயில் சிறந்து விளங்கும் சிவபுரம் தலத்தில் வாழ்கின்ற குருமூர்த்தியே ! பெருமாளே !


மனமெனும் ஒரு பொருளுடனே ஆகாயம், எரியும் காற்று, நெருப்பு, நீர்  இவற்றுடன்   மண்  ( ஆகிய  பஞ்சபூதங்கள் )கூடியதான ஒரு தேகம் என்னும் உருவத்தைக் கொண்டு  அதிலே  [ 13 x7 = ] 91 தத்துவக் கூட்டங்களின் கூறுபாடுகளாலே -


ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை என்னும் இவற்றில் அலைச்சல் படுகின்ற என் புத்தியை  நான் ஜெயித்து அடக்கி , மிக உயர்ந்ததான ஞானம் என்னும் நல்ல நெறியை  அடையும்படியாக  நாய்போன்ற எனக்கு உன்னுடைய திருவருளைத் தருவாயாக !

எத்தனை அருமையான பாடல் !

முதலில் பார்வதியை ஒன்பது  நாமங்களால் அழைக்கிறார் !
ஜனனி =  அகில புவனத்தையும் படைப்பவள்
சங்கரி  =   மங்களம் செய்பவள்
ஆரணி  = வேத முதல்வி
நாரணி  = நாராயண சக்தி
விமலி  = மலமற்றவள்
எண்குண பூரணி  = எட்டுக் குணங்களும் நிறைந்தவள்
காரணி = அனைத்திற்கும் காரணமானவள்
சிவை =
பராபரை =

அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது இம்மாதிரி அழகிய நாமங்களை  அடுக்குவதை நாம் பல பாடல்களில் பார்க்கலாம்.

அடுத்து நரசிம்ம அவதாரத்தை அருமையாக வர்ணிக்கிறார்.

சூர சம்ஹாரம் செய்ய வேல் சிவன் தந்ததாகச் சொல்கிறார். இது சக்தி தந்த வேல் என்றும் சொல்லப்படும்.

தத்துவங்களின் எண்ணிக்கையை  39, 96 என்று  பலவாறு சொல்வார்கள். இங்கே 91 என்கிறார். 96 தத்துவத்தில் சிவதத்துவமாகிய 5 போக மீதி இது என்பார்கள். இந்தத் தத்துவங்களெல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தும். அதனால் அவற்றிற்கும் அப்பால் போகவேண்டும். அதுவே மேலான நிலை." ஆறாறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன் பெறுமாறுளதோ ? " என்பார் அனுபூதியில். 
"வீணே நாள்போய் விடாமல்  ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே " என்று வேறு ஒரு பாடலில் சொல்வார். நாம் இந்தத் தத்துவக் கணக்கெனும் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது.
மிக அழகான பாடல். 




சண்பக மலர். சண்பக மரம் இங்கு தல விருக்ஷம். Wikipedia.