Friday, 6 October 2017

97.திருப்புகழ் -91.திரிசிராப்பள்ளி


97.திருப்புகழ் - 91.திரிசிராப்பள்ளி


குளமும் மலைக்கோட்டையும்- 1860 வாக்கில். விக்கிமீடியா காமன்ஸ்.

து  அருணகிரிநாதர் தரிசித்த 91வது தலம். தமிழ்நாட்டில் வரலாற்றுச்  சிறப்பும், சமயச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும் ஒருங்கே அமைந்த இடம். சரித்திரம் என்ற பெயரில் நவீன கிறுக்குகள், வெள்ளைத் தோலர்கள் இதன் பெயரைப்பற்றியே குட்டை குழப்புவார்கள். இந்தியாவில் ஒவ்வொரு இடத்திற்கும், தலத்திற்கும்  புராண வரலாறும், அவற்றிடையே தொடர்பும் உண்டு. திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த தலமாதலால் இதற்கு 'திரிசிரபுரம்' என்று பெயர். மக்கள் திருச்சி என்றே அழைக்கிறார்கள். 
இங்கு மலைக்கோட்டையும் அதில் இருக்கும் தாயுமான ஸ்வாமி கோயிலும், அடியிலும், உச்சியிலும் உள்ள பிள்ளையார் கோவிலும் மிகவும் பிரசித்தம். பழைய நாட்களில் இந்த ஊரையே 'கோட்டை, மலைக்கோட்டை' என்றே  அழைப்பார்கள். இங்கு தெப்பக்குளமும்  பெயர்பெற்றது. 50/ 60 வருஷங்களுக்கு முன்பெல்லாம்  திருச்சி கல்லூரிகளில் படித்தவர்களை  " தெப்பக்குளம் பட்டதாரி " [  Teppakkulam graduate ]  என்றே  சென்னையில் கேலிசெய்வார்கள் ! 


உச்சிப் பிள்ளையார்!

இத்தலத்தில்  சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.

சம்பந்தர்


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.
  
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே.

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்த னலமிகுபாட லிவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.


அப்பர்

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே 
.
அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே

தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே.

தாயுமானவர் கோவிலுக்குச் செல்லும் படிகள்.

இங்கு அருணகிரிநாதர்  16 அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார். பல அரிய விஷயங்களைக்கொண்டவை. அவற்றில் 9 பாடல்களில் அருகிலுள்ள வயலூரை நினைத்துப் பாடியிருக்கிறார் . 

எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
     அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
      இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின்  முடிவேறாய்

இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
     மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
     மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல     வயலூரா


செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
     வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
     தின்று கூத்துந டிக்கத் தோகையில்          வரும்வீரா

செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
     மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
    தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள்      பெருமாளே.

பார்வதி
    பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ    அருள்வாயே

இங்கு நமது ஆண்டவனின் தன்மையை   நன்கு விளக்குகிறார்.

எங்கும் நிறைந்தவனாய், குறையில்லாதவனாய்,  அறிவே அங்கமானவனாய், பரிசுத்த அடியார்கள் பெறும் இன்பப்பொருளாய், புகழப்படும் முப்பத்தாறு தத்துவங்களின் முடிவுக்கும் வேறானவனாய் விளங்குபவன் என விளக்குகிறார். கடவுள் நம்முடைய குறுகிய தத்துவங்களுக்குள் அகப்படாதவர்! " ஆறாறையும் நீத்ததன் மேல் நிலை " என்று ஒரு இடத்தில் சொல்வார்.

மனதுக்கு உபதேசம் 

அந்தோமன மேநம தாக்கையை
     நம்பாதெயி தாகித சூத்திர
     மம்போருக னாடிய பூட்டிது        இனிமேல்நாம்

அஞ்சாதமை யாகிரி யாக்கையை
     பஞ்சாடிய வேலவ னார்க்கிய
     லங்காகுவம் வாஇனி தாக்கையை      ஒழியாமல்

வந்தோமிது வேகதி யாட்சியு
     மிந்தாமயில் வாகனர் சீட்டிது
     வந்தாளுவம் நாமென வீக்கிய         சிவநீறும்

வந்தேவெகு வாநமை யாட்கொளு
     வந்தார்மத மேதினி மேற்கொள
     மைந்தாகும ராவெனு மார்ப்புய       மறவாதே

திந்தோதிமி தீதத மாத்துடி
     தந்தாதன னாதன தாத்தன
     செம்பூரிகை பேரிகை யார்த்தெழ       மறையோதச்

செங்காடென வேவரு மூர்க்கரை
     சங்காரசி காமணி வேற்கொடு
     செண்டாடிம காமயில் மேற்கொளு          முருகோனே

இந்தோடிதழ் நாகம காக்கடல்
     கங்காளமி னார்சடை சூட்டிய
     என்தாதைச தாசிவ கோத்திர              னருள்பாலா


எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
     நன்பூமண மேவிசி ராப்பளி
    யென்பார்மன மேதினி நோக்கிய         பெருமாளே.

மனதுக்கு உபதேசமாக அமைந்த மிக அரிய பாடல் இது. 
'மனமே, உடலை நம்பாதே. இது இன்ப-துன்பத்திக்கு இடமாகிய ஒரு இயந்திரம். பிரம்மன்  ஏதோ ஆய்ந்து பூட்டிய பூட்டு இது. [ எப்போது அவிழுமோ தெரியாது.]
ஆனால் நாம் பயப்படாமல் என்ன செய்யவேண்டுமென்றால் , இந்த உடலை வீணே கழிக்காமல்,  க்ரவுஞ்ச மலையைத் தூளாக்கிய வேலவருக்கு அடிமை செய்து,  அவர்  தந்த சீட்டையும், விபூதிப் பொட்டலத்தையும் நல்ல அறிகுறியாக ஏற்று, சதாகாலமும் "மைந்தா குமரா " என ஓதவேண்டும்'  என்கிறார். 
சிராப்பள்ளி என்னும் தலத்தின் பெயரை ஜபிக்கும் பக்தர்களின்  மனதில் இருக்கவிரும்பும் பெருமாள் என்கிறார்!
அன்பு பெற

தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
     சதுமறை சந்தத் ...... தொடுபாடத்

தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
     தகுர்தியெ னுங்கொட் ...... டுடனாடித்

தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
     சிறுவஅ லங்கற் ...... றிருமார்பா

செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
     திரிசிர குன்றப் ...... பெருமாளே.

 நின்பொற்
     கழல்தொழு மன்பைத் ...... தருவாயே


திருவடியைப்பெற


சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
     தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத

சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
     தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும்

பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
     பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ்


பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
     பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய்

அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
     யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா

அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
     அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே

சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
     திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா

சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
     தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.


முருகன்  அர்ச்சனைகளை ஏற்றுக்கொள்பவன்; மந்திரங்களால்  அழைக்க எழுந்தருள்பவன்; புஜங்களில்  ருத்ராக்ஷமாலை அணிந்தவன் ; ஆசாரத்தில் சிறந்து, தர்ப்பைப்புல் ஏந்தும் அந்தணர்களின்  தம்பிரான் - என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

மோகம் அற

தவள ரூபச ரச்சுதி யிந்திரை
     ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
          சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை

சகல காரணி சத்திப ரம்பரி
     யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
          சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
     கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
          த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே

சிகர கோபுர சித்திர மண்டப
     மகர தோரண ரத்நஅ லங்க்ருத
          திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய ...... பெருமாளே.

மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ

இங்கு மூன்று அடிகளில் அம்பாளின்  பெருமைகளை அருமையாகப் பேசுகிறார்..


தவளரூப  ( வெள்ளை நிற ) சரஸ்வதி, , லக்ஷ்மி, ரதி, இந்த்ராணி, க்ருத்திகை மாதர், ரம்பையர்கள் - ஆகிய கூட்டத்தாரால் வணங்கப்படுகின்ற துர்காதேவி, பயங்கரி, புவனேஶ்வரி,


சகல காரியங்களுக்கும் காரணமாக இருப்பவள், சக்தி, முழுமுதலான தேவி,  ஹிமயராஜன் மகளான பார்வதி, ருத்ரி, அழுக்கற்றவள்,  சமயங்களுக்குத் தலைவி, உருவ மில்லாதவள், சிவனது அங்கீகாரம் ரூபமான க்ரியாசக்தி, எமது தாய்,


சிவனது தேவி, மனதை ஞான நிலக்கு எழுப்பும் மனோமணி சக்தி, அறிவு ரூப ஆனந்த அழகி, கௌரி, வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள், அம்பிகை, திரிபுரை, ( மூன்று நாடிகளிலும் இருப்பவள்),  சியாமள நிறத்தை உடையவள் - ஆகிய பார்வதி  அன்புடன் பெற்றருளிய முருகன்
எத்தனை அருமையான வாக்கு! 

யம வாதனை நீங்க


புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
     கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
          புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி

புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
     கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
          புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே


தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
     தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
          தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண்

சலனப் படஎற் றியிறைச் சியறுத்
     தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
          தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய்

பவனத் தையொடுக் குமனக் கவலைப்
     ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
          படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர்

பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
     பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
          பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா


சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
     கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
          த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி

செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
     புதனொப் பிலியுற் பவபத் மதடத்
          த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே




புவியில் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவுற்றுப் பிறந்து, விதிவழிப்படி இன்பதுன்பங்களை அனுபவித்து , உயிர் நீங்கியபின் சூக்ஷ்ம சரீரத்தில்  புகுந்து  யமலோகத்தில் கொடிய தண்டனைகளை  உயிர் அனுபவிக்கிறது..[ இத் தண்டனைகளை இங்கு விவரமாகத் தருகிறார்.]
இத் துயரத்தை முருகன்தான்  நீக்கி  அருளவேண்டும் என்று  வேண்டுகிறார். 
மரண சமயத்தில் உயிர் படும் அவஸ்தை, யமலோகத்தில் அனுபவிக்கும் துயரங்கள் ஆகியவற்றைப் பல இடங்களில்  சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் படித்தால் மனம் நடுங்கும். இதற்கெல்லாம் ஒரே பரிகாரம்  பக்திவழியே என்பது அருணகிரி நாதர்  கோட்பாடு.
 " ஆனபயபக்தி வழிபாடு பெறு முக்தி " என திருவேளக்காரன் வகுப்பில் பாடுகிறார். இதற்கு மேற்பட்ட சமயமோ, தத்துவமோ இல்லை.

ஞானம் பெற

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்


யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ


ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா


நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.


இது மிக அருமையான பாடல். பதம் பிரித்துக்கொண்டால் பொருளும் எளிதில் விளங்கும் ! உபனிஷதங்களின் கருத்தைச் சொல்லும் அருமையான  பாடல். கடவுளை  [ப்ரஹ்மத்தை ] இதுதான் என வாய்விட்டுச் சொல்லமுடியாது; மனதினாலோ வாக்கினாலோ அறியமுடியாது ; அதிகப் படிப்பினால் அறியமுடியாது ! இந்த மெய்ஞ்ஞானத்தை  பகவானே அருளவேண்டும்.
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி.
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறி என அவரே தரவேண்டும்!

இப்படிப் பல அற்புதக் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள்  திரிசிரபுரத்தில் பாடியிருக்கிறார்.
**********************************************************

இதுவரை நாம் அருணகிரிநாதருடன்  91 தலங்களைத் தரிசித்தோம். இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடரின்  ஒரு பகுதி [ அருணகிரியின் அருள் அலை ] நிறைவுறுகிறது. மீதி தலங்களையும்  அவற்றின் பாடல்களையும் விரைவில் பார்க்க உச்சிப்பிள்ளையார்  மெச்சி யருள்வாராக !
கருணாகர கணபதியே  கரமருளிக் காப்பாயே !



Thursday, 5 October 2017

96.திருப்புகழ் - 90.திருப்பராய்த்துறை


96.திருப்புகழ்- 90.திருப்பராய்த்துறை


wikimapia


ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 90வது தலம் திருப்பராய்த்துறை. இது  தாருகாவனம் எனப்படும். அரிய சிவலீலைகளில் ஒன்று நடந்த இடம்.  இங்கு ஒரு காலத்தில் இருந்த ரிஷிகள்  வேதத்தின் கர்மகாண்டத்திலேயே சித்தமுடையவர்களாகி, 'கர்மமே எல்லாம், சாமி தேவையில்லை' எனச் செருக்குற்று நின்றனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான் பிக்ஷாடனராகிவந்தார். அவருக்கெதிராக இந்த ரிஷிகள் செய்த மந்திர தந்திரங்கள் பலிக்கவில்லை. கன்மம் பயனில்லாததைக்கண்ட ரிஷிகள் செருக்கு நீங்கி பரமனைப் பணிந்தனர். சிவன்  கருணையினால்  அவர்களுக்கு  உபதேசம் செய்தார்..








இதை  நம்காலத்தில் ஸ்ரீ ரமணரின் அடியாராகிய முருகனார்  நன்கு பாடியுள்ளார்.











தாரு வனத்தில் தவஞ்செய் திருந்தவர்
பூருவ கர்மத்தால்  உந்தீபற
போக்கறை போயினர் உந்தீபற

கன்மத்தை அன்றிக் கடவுள் இலையெனும்

வன்மத்த ராயினர்  உந்தீபற
வஞ்சச் செருக்கினால் உந்தீபற

**************

கன்ம பலன் தரும் கர்த்தர் பழித்துச்செய்
கன்ம பலம் கண்டார் உந்தீபற
கர்வமகன்றனர்  உந்தீபற

காத்தருளென்று கரையக் கருணைக்கண்

சேர்த்தருள் செய்தனன் உந்தீபற
சிவனுபதேசமிது  உந்தீபற.

இந்த இடத்தில் ஸ்ரீ ரமணபகவானே  உபதேசமாகப் பாடியுள்ளார்.

கன்மம் பயன்தரல் கர்த்தனது ஆணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் சடமதால் உந்தீபற.

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்

வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீபற 
வீடு தரலிலை உந்தீபற 

[   பகவான் உபதேசம் முழுதும் "உபதேச உந்தியார் " என்ற செய்யுள் வடிவில் இருக்கிறது. மேலும்  அறிய ஸ்ரீ முருகனார்  எழுதிய  " ஸ்ரீ  ரமண சந்நிதி  முறை " நூலைப் பார்க்கவும். ]

இத்தகைய மகத்தான சிவலீலை நடந்த இடம் திருப்பராய்த்துறை. இது காவிரியின் தென் கரையில் இருக்கிறது. ஸ்வாமி  தாருகவன நாதர். இக்கோவிலின் கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; ஸ்வாமி  பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஶ்வரன் " என்றும் குறிக்கப்படுகிறது.

இங்கு சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.


சம்பந்தர்

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே.


செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன
செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.

அப்பர்

கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.


அரக்க னாற்ற லழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.



பராய்த்துறை வந்த நம் ஸ்வாமிகள் பாடிய ஒரு திருப்புகழ்ப் பாடல் இருக்கிறது.

தேசம டங்கலு மேத்து மைப்புய
  லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர
 தேகமி லங்கிய தீர்க்க புத்திர            முதல்வோனே

தீரனெ னும்படி சாற்று விக்ரம
சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்
தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு          கதிர்வேலா



மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு
வேதன கந்தையை மாற்றி முக்கண         ரறிவாக



மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய
     ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
          மூவரி லங்குப ராய்த்து றைப்பதி      பெருமாளே.


   .....உழ லாக்கை யிற்றிட
யோகமி குந்திட நீக்கி யிப்படி
நீயக லந்தனில் வீற்றி ருப்பது                 மொருநாளே




தேசம் முழுதும் மெச்சும்  கரிய மேக   நிறத்தினனான  பெருந்தகையாகிய  திருமால் வாழ்த்தவும், அழியாத திருமேனி படைத்த பூரணனாகிய  சிவபெருமானின் மகனே, முதல்வனே !


வீரன் என்னும் பேர்பெற்றிருந்த விக்ரமனே,  சூரன் நடுங்க, வரத்தினால் அவன் பெற்றிருந்த அவனது மலைபோன்ற உடல் தேய்ந்து  ஒழியும்படி, போரை நடத்தி புகழடைந்த ஒளிவீசும் வேலனே ! 


வண்டுகள் மொய்க்கும் நூறு இதழ்களைக்கொண்ட தாமரையி வீற்றிருப்பவனும், உலகங்களைப் படைத்துள்ளவனுமான   வேதம் ஓதும் பிரம்மனுடைய  ஆணவத்தை நீக்கி,

முக்கண்ணராகிய  சிவபெருமான் தெரிந்துகொள்ளும்படி பேறறிவு பொருந்திய  உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே !


அற்புத மும்மூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறைப்  பதியில் வீற்றிருக்கும்  பெருமாளே.


மிகவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில்,கலங்காத சிவ யோக நிலை எழ, என்னைக் கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மனதில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் வருமா?

முருகனைப் பாடும் நாதரின் சமரசம் வியக்கவைக்கிறது! 

தேசம் அடங்கலும் ஏத்தும்  மைப்புய
  லாயநெ டுந்தகை  என  திருமாலைப் புகழ்கிறார். 

அற்புத மூவர்  என மும்மூர்த்திகளைப் புகழ்கிறார்! 

அருமையான பாடல். பாடிப் பணிவோம்.







  


Wednesday, 4 October 2017

95.திருப்புகழ்-89. பாண்டிக்கொடுமுடி


95.திருப்புகழ் -89. பாண்டிக்கொடுமுடி


Photo thanks:Tamil Heritage Foundation.

ருணகிரிநாதர்  தரிசித்த 89வது தலம் திருப்பாண்டிக் கொடுமுடி. இன்று கொடுமுடி எனப்படுகிறது. கொடு முடி = பெரிய மலைச் சிகரம்! இங்கு ஸ்வாமி கொடுமுடி நாதர். கொங்கு நாட்டில் காவிரிக்கரையில் அமைந்த அருமையான தலம், பல புராணச்சிறப்புக்களைக் கொண்டது. மூவராலும் பாடப்பெற்ற தலம். [ இது முக்கியமான தலம்- இதுவரை, ஏறத்தாழ பாதி தூரம் -தெற்கு நோக்கிப் பாய்ந்து வந்த காவிரி இங்கு கிழக்கு நோக்கித் திரும்புகிறது! இன்று காவிரி வரண்டு கிடக்கிறது. உண்மையில் எந்தத் தலமோ, கோவிலோ, நதியோ , குளமோ பழைய உயர்ந்த நிலையில் இல்லை. ]

சம்பந்தர் :

தனைக்கணி மாமலர் கொண்டு தாள் தொழுவாரவர் தங்கள்
வினைப்பகையாயின தீர்க்கும்  விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழுவார் துயர் தீர்ப்பார்  நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்  பாண்டிக்கொடுமுடியாரே.

போகமும் இன்பமும் ஆகிப் போற்றி என்பார் அவர் தங்கள்
ஆகம் உறைவிடமாக  அமர்ந்தவர் கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி நன்னுதல் மங்கைதன்  மேனிப்
பாகம் உகந்தவர் தாமும்  பாண்டிக்கொடுமுடியாரே.

கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப்  பாண்டிக்கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்தும்  சொல்லவல்லார் துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தையராகி  நன்னெறி எய்துவர் தாமே.

அப்பர் :


சிட்டனைச்  சிவனைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்டனைத் திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.
  
தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்டலுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
  
நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன்
திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே.


சுந்தரர்:

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
    பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
    வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே

.
இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
    திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
    தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
    தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே

கோணி யபிறை சூடி யைக்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
    பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
    தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
    சொல்லு வார்க்கில்லை துன்பமே

எத்தகைய அருட்பாடல்கள் ! அற்புத வாக்கு !
.
Photo: Tamil Heritage Foundation. Thanks


 இங்கு வந்த நம் அருணகிரிநாதர் இரு பாடல்கள் பாடியிருக்கிறார்.

இருவினைப் பிறவிக்       கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப்      புகுதாதே

திருவருட் கருணைப்       ப்ரபையாலே
திரமெனக் கதியைப்        பெறுவேனோ

அரியயற் கறிதற்            கரியானே

அடியவர்க் கெளியற்       புதநேயா

குருவெனச் சிவனுக்       கருள்போதா

கொடுமுடிக் குமரப்          பெருமாளே.

மிக எளிய  பாடல்!
இருவினை = பாவ,புண்ணியம். இரண்டுமே பிறவிப் பெருங்கடலுக்கு   வித்தாகும்.
  "அறம் பாவமென்னும் அருங்கயிறு " என்பார் மணிவாசகர். இதையெல்லாம் விட்டு, இறைவன் அருள் ஒன்றையே ஸ்திரமானதென நாடவேண்டும் 
இதையே பகவான் கீதையில்  [ 18.66 ]சொல்கிறார்.. தர்மாதர்மங்களைப்பற்றிய சிந்தையை விட்டு என் ஒருவனையே பற்றிக்கொள் என்கிறார்.

மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
வாஞ்சைப் படியருள்             வயலூரா

வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
மான்சிற் றடிதொழு             மதிகாமி

பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
பாண்டிக் கொடுமுடி           யுடையாரும்

பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
பாண்சொற் பரவிய             பெருமாளே.



 மாந்தர், வேந்தர், அமரர்- ஒவ்வொரு வர்கத்தினருக்கும் ஒவ்வொரு விதமான  ஆசை!  பகவான்  நாம் விரும்புவதை அளிப்பவர். 'அடியவர்  இச்சையில்  எவை எவை உற்றன, அவை தருவித்தருள் பெருமாளே ' என்று வேறு இடத்தில் பாடுகிறார். அதனால் நாம் எதைக் கேட்கிறோம் என்பதில் ஜாக்ரதையாக இருக்கவேண்டும் !  இங்கு பெண்ணாசை விலகவேண்டும் என வேண்டுகிறார்.

மூவர் தேவாரத்தின் கருத்தும்  அருணகிரிநாதர் பாடலில் இருப்பதை ஊன்றிப்படித்தால் உணரலாம் !



Nermai-Endrum.com