94. திருப்புகழ் -88. திருநணா-பவானி
அருணகிரிநாதர் திருச்செங்கோட்டிலிருந்து வானி- பவானி என்னும்
திருநணாவுக்கு வருகிறார். இது இவர் தரிசித்த 88வது தலம். காவிரியும் பவானி நதியும் [வானி நதி ] கூடும் இடம். திருக்கூடல் துறை எனப்படுகிறது. இங்கு சங்கமேஶ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தம்.
By Rsrikanth05 CC BY-SA 3.0 Wikimedia Commons
இங்கு அருணகிரிநாதர் பாடியதாக ஒரு பாடல் இருக்கிறது. ஞானவாழ்வைத் தரவேண்டும் என வேண்டுகிறார்.
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே.
சகல கலைகளும் அடங்கியதான ஞானக்கடலில் மூழ்கித் திளைத்தாலும், [மண், பெண், பொன் என்ற ] மூவாசைகளாகிய கடல்களைக் கடந்து, உரத்த சப்தத்துடன் கூடிய சமய வாதங்களில் சிக்கித் திணறாமல், இறைவனைப்பற்றிய உண்மையான ஞான வாழ்வைத்தருவாயே !
வள்ளிமலையில் இருந்த ஆச்சரியக் குறமாதின் மனதில் இருக்கும் இளைய குமரேசனே! வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்தியவனே ! சேவற்கொடியானே!
லக்ஷ்மியும் சரஸ்வதியும் ஒருங்கேயுள்ள திருக்கூடல் பதியில் உறையும் பெருமாளே!
எவ்வளவு படித்த பண்டிதர்களும் மூவாசைக்கு அடிமையாகின்றனர், வீணான சமய வாதப்பிரதிவாதங்களில் சிக்கித் தவிக்கின்றனர், தனக்கு அவ்வாறு நேரக்கூடாது என வேண்டுகிறார். உண்மையான அறிவு இறைவனைத் தொழுவதே ! இதுவே ஞானம்! வாலறிவன் நற்றாள் தொழுவதே கற்றதன் பயனல்லவா?
பவானி சங்கமேஶ்வரர் கோவில்.
நன்றி: www.templeadvisor.com
இந்தப்பாடலில் " திருவாணி கூடல் " என்று இருக்கிறது. இது மதுரைக்கும் பொருந்தும். பவானி என்றால் "வானிகூடல்" என்று இருக்கவேண்டும் என்பது சிலரின் கருத்து,
இது மிகவும் எளிய, இனிய பாடல்.
No comments:
Post a Comment