88.திருப்புகழ் -82. தீர்த்தகிரி
அருணகிரிநாதர் தரிசித்த 82வது தலம் தீர்த்தகிரி என்னும் தீர்த்தமலை. இது இன்றைய தர்மபுரி மாவட்டத்தில் ஹரூர் அருகே இருக்கிறது. புராதனமான தலம். மலைமேலும் அடிவாரத்திலும் கோவில்கள் இருக்கின்றன. ஸ்வாமி தீர்த்தகிரீஶ்வரர், சுயம்பு மூர்த்தி. அம்பாள் வடிவாம்பிகை. சோழர்களும் விஜயநகர அரசும் பணிசெய்திருக்கிறார்கள். இந்த ஊர் தேரும் பிரசித்திபெற்றது. இந்தப் பகுதியில் சித்தர்கள் பல உருவில் இருப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. இக்கோவிலில் பல தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது ராமதீர்த்தம்.. ராமர் ராவண வதத்திற்குப் பிறகு ப்ரஹ்மஹத்தி தோஷம் போவதற்காக இங்கு வந்து வழிபட்டதாக நம்பிக்கை. பெரிய பாபம் செய்தவர்கள் இங்கு ராமதீர்த்தத்தில் நீராடவிடாதபடி குரங்குகள் நீரைத் தடுக்கும் என்பதைப் பலர் கண்டிருக்கிறார்கள்.
இங்கு அருணகிரிநாதர் ஒரு அரிய திருப்புகழ் பாடியிருக்கிறார்.
பாட்டிலுருகிலை கேட்டுமுருகிலை
கூற்று வழிவரு பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம்-
பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிதலை
பாழ்த்த பிறவியி லேற்ற மனது நல் வழிபோக
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிது கேளாய்-
வாக்கு முனதுள நோக்கு மருளுவ
னேத்த புகழடி யார்க்கு மெளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ;
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல் திரு நீறாய்
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக
ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ னருள்பாலா
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய குருநாதா
தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை
ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்த மலை நகர் காத்த சசிமகள் பெருமாளே
தன் மனதுக்குப் புத்தி கூறுவதாக அமைந்த பாடல்.
மனமே ! நீ பாட்டின் பொருள் அறிந்து உருகுவதில்லை
பாட்டையும் பாட்டின் பொருளையும் சொல்லக்கேட்டும் உருகுவதில்லை.
யமன் வரும் வழியைக்கண்டும் ( இறைவனிடம் பக்தியாய்) உருகுவதில்லை. கஷ்டங்களை தினந்தோறும் அனுபவித்தும் உண்மைப் பொருளை நாடி அறிகின்றாயில்லை.
நாள்தோறும் பாம்பை அணிந்துள்ள சிவபிரான் அருளும் வீட்டின்பத்தை நீ விரும்புவதில்லை. நாவின் நுனிகொண்டு பிரானைப் போற்ற அறியவில்லை. பாழ்படும் இந்தப் பிறப்புக்களிலேயே ஈடுபடுகின்ற மனமே! நீ நல்லவழியே போகமாட்டேன் என்கிறாய்.
உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விடுகின்றாயில்லை. ஏட்டில் எழுதியுள்ள தலைவிதி எந்த வழியாக ஓடுகின்றது என்பதையும் நீ அறியவில்லை. [இப்படி நீ இருப்பதைப் ] பார்த்து [சும்மா இருக்க முடியாமல் நான் ] இனி ஒரு வார்த்தை சொல்லுகிறேன், இதைக் கேட்பாயாக.
அவனது திருப்புகழை ஓதி அவனை ஏத்தினால், உனக்கு நல்ல வாக்கையும், உனது மனதில் நல்ல எண்ணத்தையும் அருள்புரிவான். அதனால் அடியாருக்கு எளியவனை, தன்னை வாழ்த்துவோருடைய இருவினையையும் விலக்கும் முருகனை நீ சிந்திப்பாயாக.
உலகையே ஆட்டிவைப்பவரான கூத்தப்பிரான், வடக்கிலுள்ள மேருமலையை வில்லாக வளைத்து அதில் வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டி, திரிபுரத்திலும் தீயை மூட்டி, யமனுடைய நோக்கம் அழியும் படி காலை நீட்டி (உதைத்து), மன்மதனுடைய உடலை சாம்பலாக ஆக்கி,
தக்ஷனுடைய யாகத்தைக் குலைத்து, தக்ஷனுக்கு ஆட்டின் முகத்தைப் பொருத்தி, மறைமகளாம் சரஸ்வதிக்கும் காயம் உண்டாகும்படிச் செய்த உமைகணவன் அருளின பாலனே !
"வாழ்க அந்தணர் " என்னும் திருப்பாசுரம் எழுதின சீட்டை (ஏட்டை) வைகை ஆற்றில் வெள்ளத்தை எதிர்த்து வர ஓட்டியும், நெருப்பில் இட்ட ஏடு [ எரியாமல் ] பச்சை நிறத்துடன் இருக்கும் படி காட்டியும், சமணரிடம் கோபித்து அவர்களைக் கழுவேற வைத்து அருளின குருநாதனே !
பரிசுத்தனே! என் மனம் விருப்புடன் உன்னை ஏத்தும்படி நீ அருள் செய்து, என்னைக் கண்பார்த்து அருளுவாயாக !.
தீர்த்தமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே !
இந்த்ராணியின் மகள் தேவசேனையின் பெருமாளே !
என்னை அருளுடன் பார்ப்பாயாக !
எத்தனை அருமையான பாடல்!
அருணகிரிநாதர் தன் மனதுக்குச் சொன்னதாக அமைந்த இந்தப்பாடல் நம் எல்லோருக்காகவும் சொன்னதுதான்.
இதில் சிவனுடைய திருவிளையாடல்கள் சிலவற்றைச் சொன்னதுடன் , முருகனே சம்பந்தராக வந்தார் என்பதையும் தெளிவாகச் சொல்கிறார்.
இதில் வரும் கடைசி அடி " தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை ......பெருமாளே " என்பதை தினமும் நாம் நீராடும்போது சொல்லவேண்டும் என்பது ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள் சொன்ன அறிவுரையாகும்.
photos taken from various blogs. Thanks to all of them.
No comments:
Post a Comment