90.திருப்புகழ் - 84.கொங்கணகிரி
இத்தலம் கோயமுத்தூர் மாவட்டம் சோமானூருக்கு அருகில் உள்ளது. இப்போது இதை வட்டமலை என்கிறார்கள். இது அருணகிரிநாதர் தரிசித்த 84வது தலம்.
இங்கு ஒரு மிக அருமையான திருப்புகழ் பாடியிருக்கிறார்.
ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
அந்திபகல் அற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தி உனை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்கு வழி அருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதம்என் உற்றமனம்
உன்றனை நினைத்தமைய அருள்வாயே
மண்டலிகா ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில் உயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பர் அருள்
கொண்டு உடல் உற்றபொருள் அருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தன் என வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே.
ஐந்துகரங்களை உடைய வினாயக மூர்த்தியை ஒத்த மனத்தையும், ஐம்புலன்களையும் நீக்கி [விலக்கி, அடக்கி], அதன் பலனாகக் கிடைக்கும் இரவு பகல் அற்ற நிலையை அருள்புரிவாயாக.
இந்தப்பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் உன்னை அன்புடன் போற்றித் துதிக்க விரும்பும் மன நிலையை அருள்புரிவாயாக.
நிலைத்துள்ளதான தவநிலை உணர்ச்சியைத்தந்து, அடிமையாகிய நான் முக்தி நிலையைப் பெறவேண்டி, சந்திரவெளியைக் காணும்படியான வழியைக்காட்டி அருள்புரிவாயாக.
பல்லக்கு, பெருமை, கௌரவம், இவற்றை எட்டுத்திக்கில் உள்ளவர்களும் மதிக்கும்படியாக , சிறப்பு ஓங்கும் வகையில் அருள்புரிவாயாக.
பெண்சுகமே இனிது என்று நினைக்கும் என் மனம் , உன்னை நினைத்து நிலையாய் அவ்வண்ணமே இருக்க அருள்புரிவாயாக.
நாட்டு அதிகாரிகள் இரவும் பகலும் வர, அவர்களுக்கு பதுகாப்பு தருவதாக வேண்டி, அவர்கள் என்னை வந்து நெருங்க, அவர்களுக்கு வேண்டிய சுபரக்ஷை தரவல்ல புத்தியை எனக்கு அருள்புரிவாயாக.
கொங்கு தேசத்தில் உயிர் மீளப்பெற்று, உடல் வளரப்பெற்று, தென்கரை நாட்டுத் திருப்புக்கொளியூர்- அவிநாசி அப்பராம் சிவபிரானது திருவருளைப்பெற்று, முதலையுண்ட பாலனுடைய உடலில் உயிர் பொருந்திவந்த ரகசிய நிகழ்ச்சிப்பொருள்களை எனக்கு அருள்புரிவாயாக.
யானைமுகப் பெருமான் கணபதிக்கு இளையவனாம் கந்தவேள் என ஜயப்புகழ் பெற்ற பெருமாளே !
கொங்கணகிரியில் அமர்ந்த பெருமாளே !
எத்தனை அருமையான விஷயங்களை எத்தனை அருமையாகச் சொல்கிறார்!
ஐங்கரனை ஒத்த மனம் அகலவேண்டும் என்கிறார் ! இது ஆச்சரியமாகத் தோன்றும். ஐந்துகரமுடைய பிள்ளையார், தான் இருந்த இடத்திலேயே [தந்தையை வலம் வந்ததால் ] அகில அண்டங்களையும் அந்த க்ஷணத்திலேயே சுற்றிவந்தவரானாரோ, அதுபோல நம் மனமும் இருந்த இடத்திலேயே அகில புவனத்திலும் சஞ்சரிக்க வல்லது. மனதிற்கு அத்தகைய வேகம் இருக்கிறது. அதனால் அந்த மனம் [ஐம்புலன்கள் ] அடங்கவேண்டும் ! மனதை அடக்காவிட்டால் சன்மார்கம் தெரியாது!
இந்தக் கருத்தை வேறு இடங்களிலும் சொல்கிறார்.
" திகிரி வருமொரு செலவினில் எழுபது
செலவு வரு மனம் "
[ குயவனது சக்கரம் ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் என் மனம் எழுபது சுற்று சுற்றுகிறது ] எனவும் ( பகிர நினைவொரு );
"ஒருகால் ,திரிகையில் ஆயிரக்கோடி சுற்றோடும் திருத்துளமே " எனவும் பாடியுள்ளார் [கந்தரந்தாதி -34 ].
செந்தமிழால் பாடித்துதிக்கவேண்டும் என்று வேண்டுகிறார். சம்ஸ்கிருதமும், தமிழும் சிவபிரான் அருளியவை. " தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழற் சேர " என்பார் சம்பந்தர். நான்மறை வல்ல ஞானசம்பந்தரானாலும், அவர்பாடிய தமிழ்ப்பாடல்களைப் பாடிப் பேறு பெறுங்கள் என்பார். .
" நான்மறை நாவன் நற்றமிழ்க்கு இன்துணை.....இசையொடுகூடிய பத்தும் வல்லார்போய் வெந்துயர் கெடுகிட " எனவும்,
"ஞான சம்பந்தன் தமிழ்மாலை பண்ணியல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே " எனவும் ,
"செந்தமிழ் பத்தும் வல்லார் திருவோடு புகழ்மல்கு தேசினரே ", எனவும்
இவ்வாறெல்லாம் பாடுவார்.
சம்பந்தரை குரு, தெய்வமாகக் கொண்ட அருணகிரியாரும் செந்தமிழால் போற்றுங்கள் என்கிறார்.
அக்காலத்தில் பெரும்புகழ் பெற்ற புலவர்கள் பல விருதுகளுடன் தடபுடலாக வெளியில் போவார்கள். இதை நாலாவது அடியில் சொல்கிறார்.
இரவு பகல் அற்ற நிலை, சந்திரவெளி என்பவை சிவயோக நெறியின் சங்கேத மொழிகள். இவற்றை யோக அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு அறியவேண்டும். வெறும் மொழியறிவோ, புத்தக அறிவோ ஆபத்தானது, [இவை பற்றி ஸ்ரீ க்ருபானந்த வாரியார் விளக்கியிருக்கிறார்.]
அருணகிரிநாதரின் வாழ்நாளிலேயே அவரிடம் ஆசிவேண்டி அரசரும், அரசாங்கத்திலிருந்த அதிகாரிகளும் வந்தவண்ணமிருந்தனர் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது. ஆனால் அடக்கமாக அதற்கான புத்தியை முருகனிடம் கேட்கிறார் !
ஏழாவது அடியில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் சரித்திரத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். அவிநாசியில் ஒரு பிராமணச் சிறுவனை ஒர் ஏரியில் முதலை விழுங்கிவிட, சில வருஷங்களுக்குப் பிறகு அங்கு வந்த சுந்தரர், விஷயம் அறிந்து, பதிகம் பாடி அந்த முதலை அந்தப்பிள்ளையை மீண்டும் தரச்சொன்னார் ! அந்த முதலையும் அப்பிள்ளையைக் கக்கியது.
"வெங்கரா உண்ட பிள்ளையை நல்குமே " என இந்த நிகழ்ச்சி சுந்தரரின் துதிப்பாடலில் வருகிறது. இந்த நிகழ்ச்சி எதனால் கைகூடியதோ அந்த ரகசியப்பொருளைத் தனக்கும் அருளவேண்டும் என்று கேட்கிறார்,
அருணகிரிநாதர்.
வேண்டுகோள் மயமான அருமையான பாடல். இங்கு வந்த சிலவற்றை வேண்ட நமக்கு அருகதை இல்லை. ஆனால் இந்த அருமையான பாடலைக் கற்று மகிழலாம்.
suespottedterracegarden,blogspot.in. Thanks.
Thanks to you for providing very informative explanation to this song
ReplyDeletewith good reference. God Bless You & Family ... Om Muruga Jai Jai Jai