Friday, 2 June 2017

89.திருப்புகழ் - 83.கனககிரி.


89.திருப்புகழ் - 83. கநகமலை


[ கனகமலை படம் கிடைக்கவில்லை. அதனால் பழநி மலைப் படம் இங்கு ]


கனகமலை  அருணகிரிநாதர் தரிசித்த 83வது தலம். கனககிரி-கனகமலை என்று குறைந்தது மூன்று இடங்களாவது இருக்கின்றன . கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள  கிணத்துக்கடவு, ஈரோடுக்கு அருகில் உள்ள எழுமாத்தூர், போளூருக்கு அருகில் உள்ள தேவிபுரம் என மூன்று இடங்கள். எங்கும் மலை பெரிதாக இல்லை- சிறு குன்றுதான். இதில் அருணகிரிநாதர்  பாடிய இடம் கிணத்துக்கடவு என தணிகைமணி அவர்கள் எழுதியிருக்கிறார். இங்கு அருணகிரியாரின் திருப்புகழ் ஒன்று இருக்கிறது.


அரிவையர்கள் தொடருமின்பத்
துலகுநெறி மிக மருண்டிட்
டசடனென மனது நொந்திட்                           டயராமல்

அநுதினமு முவகை மிஞ்சிச்
சுக நெறியை விழைவு கொண்டிட் 
டவ நெறியின் விழையு மொன்றைத்          தவிர்வேனோ;

பரிதிமதி நிறைய நின்ற
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற்                       றகமேவும்

படர்கள் முழுவது மகன்றுட்
பரிவினொடு துதி புகன்றெற்
பதயுகள மிசை வணங்கற்                           கருள்வாயே.

செருவிலகும் அசுரர் மங்கக்
குலகிரிகள்  நடுநடுங்கச்
சிலிசிலென வலைகுலுங்கத்                      திடமான

செயமுதவு மலர் பொருங்கைத்
தலமிலகு மயில் கொளுஞ்சத்
தியை விடுதல் புரியு முன்பிற்                     குழகோனே

கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத்                             திருமார்பா

கரிமுகவர் தமையனென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கநககிரி யிலகு கந்தப்                                பெருமாளே

பதயுகள மிசை வணங்கற்கு அருள்வாயே







மாதர்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து உலக நெறியில் அதிக மோகம் கொண்டு, அசடன் எனப் பிறர் கூற, மனம் வேதனைப்பட்டுச் சோர்வு அடையாமல் -
தினந்தோறும் களிப்பு மிக்கு, சுகவழியிலே விருப்பம்கொண்டு நடந்து, பாவ வழியிலேயே  செல்லும் அந்த ஒரு புத்தியை  விலக்கமாட்டேனா !
சூர்யன், சந்திரன் இரண்டும் பூரண ஒளியுடன் நின்றதை ஒப்ப, விளங்குகின்ற உனது பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு,
துயர் முழுதும் நீங்கப்பெற்று,  உள்ளத்தில் அன்புடன் உன்னைத் துதித்து, ஒளிபொருந்திய உனது இரு திருவடிகளை வணங்குவதற்கு அருள்புரிவாயக!
போரில் விளங்கின அசுரர்களின் பெருமை குறைய,சிறந்த மலைகளெல்லாம் நடுநடுங்க, சிலிசிலுவென்று கடல் கலங்க,
பலமுள்ளதும், வெற்றியை உதவுவதுமான மலர்போன்ற திருக்கரத்தில் விளங்கும் கூர்மைகொண்ட சக்திவேலைப் பிரயோகிக்கும் பெருமை வாய்ந்த இளையோனே !
கருணைபொழியும் அருளே முந்துவதால் அன்புடன் பார்வதி கொஞ்சி நிற்க, கலகலவென்று தண்டை ஒலிக்க, வரும் கடம்பணியும் திருமார்பனே !
யானைமுகக் கடவுளைத் தமையனாக வாய்க்கப்பெற்ற இளைய குமாரனே ! அழகுடன் கனககிரியில் வீற்று விளங்கும்  கந்தப் பெருமாளே !
உன் இரு பாதத்தை வணங்க அருள்வாயே !

எளிய, இனிய பாடல். 



பழனியில் உள்ள இடும்பன் மலை.
Photo: Dinamalar. Thanks.




1 comment: