Saturday, 3 June 2017

91.திருப்புகழ் -85. சேலம்


91. திருப்புகழ் - 85. சேலம்



அருணகிரிநாதர்  இப்பொழுது கொங்கு நாட்டிலுள்ள தலங்களைத் தரிசித்து வருகிறார். சோழ நாட்டில் தலங்கள் காவிரிக்கு இரு கரையிலும் அருகருகே இருந்தன. கொங்கு நாடோ மலைப்ரதேசம். கொல்லிமலை, தீர்த்தமலை, கொங்கணகிரி என்று சற்று  தூரமாகவே இருக்கின்றன. அதுவும் நாதர் காலத்தில் காட்டுப் பிரதேசமாகவும் இருந்திருக்கவேண்டும். இன்றும் அத்தகைய பகுதிகளைக் காணலாம். இத்தகைய இடங்களைப் பற்றித்  திருமுருகாற்றுப்படையில் வருகின்றது. ஆனால் முன்னேற்றம்  என்ற பெயரில்  மலைகள் மட்டமாகின்றன; காடுகள் மறைந்துவருகின்றன. எல்லா ஊர்களும் பொலிவிழந்து வருகின்றன.

கொங்குநாட்டு மலைகளில் ஒன்று- வெள்ளியங்கிரி. கோயமுத்தூர்.
Photo: tamil.nativeplanet.com. thanks.

நம் ஸ்வாமிகள் அடுத்து வந்த 85வது தலம் சேலம். இன்றைய தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்று. இது மலையால் சூழப்பட்ட பிரதேசம். "சைலம்" என்பதன் திரிபே சேலமாக ஆயிற்று என்பார்கள். இங்கு சுகவனேஶ்வரர் ஆலயம் மிகப் பழமையானது. ப்ரம்மாவின் சாபத்தால்  முனிவர் ஒருவர் கிளி [சுகம் ] வேடமடைந்து இங்கு தவம்செய்ததால் இது சுக வனம். இங்குள்ள ஸ்வாமிக்கும் "சுகவனேஶ்வரர் " என்ற பெயர் வந்தது. இதையே சொந்த ஊராகக்  கொண்டிருப்பவர்கள்   தங்கள் குழந்தைக்கு  சுகவனம், சுகவனேஶ்வரன் என்று பெயர்வைப்பது முந்தைய வழக்கமாக இருந்தது. இத்தலத்தை சில பிரச்சினைகளுக்குப் பரிகாரமாக  ஜோதிடர்கள்  சொல்வார்கள். ஆனால் "முற்றத்து முல்லைக்கு மணமில்லை " என்றபடி, அருகிலிருப்பவர்கள் பிற தலங்களை நாடுவார்கள் !
சேலத்தில் பல மாரியம்மன் கோவில்களும் பிரசித்தமானவை.

அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒன்று இத்தலத்துக்கு உரியதாக இருக்கிறது.


பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற்                  றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத்                தரலாலே

மருவியல் மாதுக்  கிருகயல்  சோரத்
தனிமிக வாடித்                               தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு   காவுற்                         றணைவாயே;

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகுமரா முத்                            தமிழோனே

கிளரொளி நாதர்க்  கொருமக நாகித்
திருவளர் சேலத்                             தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித்                               திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி  நோதப்                          பெருமாளே.

அருள் முருகா உற்றணைவாயே !

இது அகத்துறையில்  [ மதுர, நாயக-நாயகி பாவத்தில் ] அமைந்த பாடல். இது பக்தியின் பெருநிலையாகும். மிகப் பெரியவர்களுக்கே இன்னிலை கூடும்.



அன்பினால் உற்ற இரக்கம் சற்றும் இல்லாமல்,  நிலவு நெருப்பை வீசுவதாலும்,  பொதிய மலையிலிருந்து வீசும் தென்றல் காற்று  வந்து மேலே படுவதாலும், 


குளிர்ந்த சோலையில் குயில் கூவுவதாலும், புல்லாங்குழல் ஒப்பற்ற இன்னிசையைத் தருவதாலும்,


தனிமையில் வாடும் இந்தப்பெண் தனது  மீன்போன்ற இரு கண்களும் சோர்வுறும்படி தளர்ந்து  வாட்டமுறாமல்,


மனம் ஒருமைப்பட்டு நிம்மதியாக வாழும்  பொருட்டு , உனது அழகிய ரத்தின மாலையணிந்த மார்பிடத்தே , அருள்வடிவாகிய முருகா நீவந்து  அணைந்தருளுவாயாக.


க்ரௌஞ்ச மலைமீது வேலாயுதத்தைச் செலுத்தி, அது பெரும் தொளைபட்டு அழியும்படிச்  செய்த  குமரனே ! முத்தமிழ்ப் பெருமாளே !


பேரொளிச் சொரூபனாம்  தேவனாகிய  சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி,  லக்ஷ்மீகரம் பெருகி ஓங்கும் சேலம் என்னும் பதியில் வீற்றிருப்பவனே !


போருக்கு எழுந்த எழுகிரியும் சூரனும்  அவன் சுற்றத்தினரும் இறந்துபட, 
ஒப்பற்ற அந்தச் சூரனாம் மயில்மீது ஏறி  உலகை வலம் வந்தவனே !


புள்ளியை உடைய முகத்தைக் கொண்ட யானையின்  திருமுகத்தைக் கொண்ட கணபதிப் பெருமாளுக்கு இளைய பெருமாளே ! அற்புதப் பெருமாளே !


அணைத்தருள்வாயாக.

சிறிய பாடல்தான் ஆனால் அற்புதமான பாடல்.
திருமணத்தடை உள்ளவர்களுக்கும், புத்திரப்பேற்றுக்கும் உரிய பரிகாரத்தலமாக  சேலத்தைச்  சொல்கிறார்கள். அதற்கேற்றமாதிரி அருணகிரி நாதர் "அணைவாயே " என்று அகத்துறையில் பாடியிருக்கிறார். காரிய சித்திக்காக விக்ன விநாயக மூர்த்தியையும் நினைவுகூறுகிறார் ! 

"அத்துயரதுகொடு சுப்பிரமணிபடும் அப்புனமதனிடை யிபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணம் " அருளிய பெருமானல்லவா!


படங்கள்: சேலம் தேவா, நன்றி.


No comments:

Post a Comment