78.திருப்புகழ் 72.திருவையாறு -2
வீடு பேற்றை வேண்டிப் பாடுகிறார்.
வீடு பெற
கரிய மேனிய னானிரை யாள்பவன்
அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
கனகன் மார்பது பீறிய வாளரி கனமாயக்
கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
கணையி னால்நில மீதுற நூறிய
கருணை மால்கவி கோபக்ரு பாகரன் மருகோனே
திரிபு ராதிகள் தூளெழ வானவர்
திகழ வேமுனி யாவருள் கூர்பவர்
தெரிவை பாதியர் சாதியி லாதவர் தருசேயே
சிகர பூதர நீறுசெய் வேலவ
திமிர மோகர வீரதி வாகர
திருவை யாறுறை தேவக்ரு பாகர பெருமாளே.
இடர்படு மாயப்
பரவை மீதழி யாவகை ஞானிகள்
பரவு நீள்புக ழேயது வாமிகு
பரம வீடது சேர்வது மாவது மொருநாளே
கரிய நிறத்தினன், பசுக்கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், பாம்பணையின்மேல் துயிலும் கரிய முகில், ஆகிய திருமால், பொன்னிறத்தவனாம் ஹிரணியனுடைய மார்பைக்கிழித்த நரசிங்கம், பலமான மாயங்களில் வல்ல -
கபடனாம் ராவணனுடைய பெரிய முடிகள் பத்தும் ஒரே பாணத்தால் தரையில் விழுந்து தூளாக்கிய கருணை நிறைந்த திருமால், வாலி என்னும் குரங்கைக் கோபித்து அழித்து,க்ருபைக்கு இடமானவனான திருமாலின் மருகனே !
திரிபுர அஸுரர்கள் பொடியாகுமாறு, தேவர்கள் விளங்கும் பொருட்டு, திரிபுராதியர்மேல் கோபித்து, தேவர்களுக்கு மிக அருள் செய்தவர், தேவிக்குத் தன் உடலில் பாதி கொடுத்தவர், ஜாதி என்பதே இல்லாதவர் -ஆன சிவபிரான் தந்த குழந்தையே !
சிகரங்களை உடைய க்ரவுஞ்ச மலையைத் தூளாக்கி அழித்த வேலனே !அஞ்ஞான இருளைப் போக்கவல்ல வீர சூர்யனே ! திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் தேவனே ! க்ருபாகர மூர்த்தியே ! பெருமாளே !
துன்பத்திற்கு இடமான மாயக் கடலிலே அழியாதபடி, ஞானிகள் போற்றுகின்ற பெரும்புகழ் பெற்ற சிறந்த மோக்ஷ வீட்டைச் சேர்வதும். அதற்குத் தகுந்தவனாவதுமான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா !
ப்ராகாரத்தில்...
ஸப்தஸ்தானம்
ஐயாறப்பர் | திருவையாறு | |
ஆபத்சகாயேஸ்வரர் | திருப்பழனம் | |
சோற்றுத்துறை நாதர் | திருச்சோற்றுத்துறை | |
வேதபுரீஶ்வரர் | திருவேதிகுடி | |
பிரமசிரக்கண்டீசுவரர் | திருக்கண்டியூர் | |
புஷ்பவனேஸ்வரர் | திருப்பூந்துருத்தி | |
நெய்யாடியப்பர் | தில்லைஸ்தானம் |
இந்த 7 கோயில்களும் சேர்ந்து ஸப்தஸ்தானம் எனப்படும். ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாத க்ருஷ்ணபக்ஷ விசாக நக்ஷத்திரத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருவையாற்றிலிருந்து பல்லக்கில் கிளம்பி ஒவ்வொரு தலமாக பிற ஆறு தலங்களுக்கும் சென்று , ஏழு மூர்த்திகளும் மறு நாள் திருவையாறு அடைவர். அங்கு விழாமுடிந்தவுடன் பிற தல மூர்த்திகள் தம்மிடங்களுக்குத் திரும்புவர். இங்கு அருணகிரிநாதர் ஸப்தஸ்தானம் பற்றியும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
ஸப்தஸ்தானத்தில் பல்லக்கு, மக்கள் வெள்ளம் !
திருப்புகழ் எப்போதும் ஓத
அரிய கானக மேவு குறத்திதன்
இதணி லேசில நாளு மனத்துடன்
அடவி தோறுமெ வாழி யல்பத்தினி மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
உழவர் சாகர மோடி யொளித்திட
அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட நினைவோனே
திருவின் மாமர மார்ப ழனப்பதி
அயிலு சோறவை யாளு துறைப்பதி
திசையி னான்மறை தேடி யமுற்குடி விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
திருவை யாறுட னேழு திருப்பதி பெருமாளே.
சலச மேவிய பாத நினைத்துமுன்
அருணை நாடதி லோது திருப்புகழ்
தணிய வோகையி லோத எனக்கருள் புரிவாயே
நெருங்குதற்கு அரிய வள்ளிமலைக்காட்டில் இருந்த குறத்தி தந்து தினைப்புனத்துப் பரண்மீது சில நாளும், சந்தனக்காடு, செண்பகக் காடு முதலிய காடுகள் தோறும் மனம்வைத்து ஆசையுடன் உலவின பத்தினித் தெய்வமான வள்ளியின் மணவாளனே !
அசுரர்களின் இருப்பிடங்கள் எல்லாம் பொடிப்பொடியாக, அசுரர் பயந்து கடலினுள் ஒளிந்துகொள்ள, தேவர்களின் நாட்டில் பொன்மழை மிகவும் சொரிய, நினைந்து உதவியவனே !
லக்ஷ்மீகரம் பொருந்திய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம், உண்பதற்கு உரிய திருச்சோற்றுத்துறை, நாங்கு வேதங்கள் திசைகள்தோறும் தேடியடைந்த திருவேதிகுடி,
பிரமனுடைய உச்சித்தலை கிள்ளப்பட்டு பெரிய பூமியில் விழுந்த நகரமாம் திருக்கண்டியூர், தாமரையின் நாயகனாம் சூர்யன் பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு ஆகிய ஏழு தலங்களிலும் வாழும் பெருமாளே !
தாமரைக்கு ஒப்பான உமது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலைப் பிரதேசத்தில் நான் ஒதிய சந்தப்பாவாம் திருப்புகழை உள்ளம் குளிர, மகிழ்ச்சியுடன் எப்போதும் ஒதும்படியான பாக்யத்தை எனக்கு நீ அருளுவாயாக !
அருணை நாடதில் ஓது திருப்புகழ் என்றதால், இவர் அருணைப் பதியிலே நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது தெரிகிறது.
jaghamani.blogspot.com Thanks.