Wednesday, 1 March 2017

71.திருப்புகழ் 65,சிவபுரம்


71.திருப்புகழ் 65. சிவபுரம்


Wikimapia 

அருணகிரி நாதர் அடுத்து வந்த 63 வது தலம் சிவபுரம். கும்பகோணத்திற்கு அருகிலேயே உள்ளது. பழமையான தலம். இங்கு திருமால் வெண்பன்றி உருவில் சிவபிரானை வழிபட்டதாக ஐதிகம். ஸ்வாமி சிவபுரிநாதர், சிவபுரீஶ்வரர்,சிவகுருநாதர்,ப்ரம்மபுரீஶ்வரர். அம்பாள் சிங்காரவல்லி, பெரிய நாயகி, ஆர்யாம்பாள். சம்பந்தர், அப்பர் பாடல்கள் பெற்ற தலம்.

களவுபோகும் கோவில் சிலைகள்

 இந்தவூர் கோயிலிலிருந்த மிக அழகிய நடராஜர் சிலையைத் திருடி அமரிக்காவுக்கு எடுத்துச்சென்றனர். அரசினரின் தீவிர முயற்சியால் இது திரும்பக் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிவபுரத்திற்கு வரவில்லை.

இந்த விஷயத்தில் இந்திய அரசினருக்கு உண்மையான அக்கறை இல்லை. மேலை நாட்டுக்காரர்கள் - முக்கியமாக அமெரிக்க பணக்கார அயோக்யர்கள் - சிலைகளைத் திருடிக்கொண்டு போகிறார்கள். இச்சிலைகள் ஒரு வருஷத்திற்கு மேலாக  அங்கே இருந்து, அவற்றைப்பற்றி எந்த விசாரணையும் இல்லாவிட்டால் அவை அங்கேயே இருக்கலாம் என்பதாக ஒரு ஒப்பந்தம் நம் மூளைகெட்ட அரசினர் செய்து கொண்டனர் ! சிவபுரம் நடராஜர் திரும்பிவந்து விட்டாலும் .மேலும் பல விக்ரஹங்கள்  மேலை நாய்களிடம் சிக்கியிருக்கின்றன.


தி இந்து, தமிழ்: ஜூலை 9. 2016. நன்றி. தமிழ் இந்துவில் வந்த இந்தக் கட்டுரைத் தொடரைப் படிக்கவேண்டும்.

சம்பந்தர்  பாடல்கள்- முதல் திருமுறை
(3 பதிகங்கள் )


புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே.


இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.



கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.


அப்பர் பதிகம் - 6ம் திருமுறை



வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
    ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே


இங்கு அப்பர் ஸ்வாமிகள் சொல்வதைக் கவனிக்கவேண்டும். "வடமொழியும் 
தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் " என்கிறார். ஸம்ஸ்க்ருதமும் தமிழும் சிவனிடமிருந்தே தோன்றியவை என்பது நமது தொன்மையான மரபு. இதை இன்றைய திராவிடப் பதர்கள் மறைத்து, மறுத்துத் திரிகின்றனர்.

விஷ்ணு வெண்பன்றி யுருவில் சிவனைப் பூஜித்ததையும் ஒரு பாடலில் சொல்கிறார் :
" பிறையெயிற்று  வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன் காண்."
இதைக் கல்லிலே செதுக்கியிருக்கிறார்கள்.




www. shivatemples.com. Thanks.


இங்கு அருணகிரிநாதர் பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. அருமையான பாடல்.


ஞான  நெறி பெற

செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி                          அருள்பாலா

சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு                         முருகோனே

கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர்                        முனையாலே


கதற வென்றுடல் கீணவ னாருயி
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு                                   மருகோனே


தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புக                    ழழகோனே

திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக                              பெருமாளே.


மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழு                    வகையாலே

வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநி                            னருள்சேராய்







சண்பக மலர்
www.chenaitamilulaa.net. Thanks.



பார்வதி தேவி அருளிய குழந்தையே !


சிறையில் அடைபட்டிருந்த தேவர்களும் மேலான  முனிவர்களும் சுகம்பெற, அசுரர்களுடைய கூட்டமெல்லாம் வேறுடன் அழிய, சிவபெருமான் உனக்கு மகிழ்ந்தளித்த  கூர்மையான வேலைச் செலுத்திய முருகனே !


ஹிரண்யன் தனது கையால் அறைந்த தூணிலிருந்து , நரசிங்கமாய்த் தோன்றி, மலை, பூமி, திசைகள், கடல் இவை யாவும் கலக்கம் அடையும்படி அந்த ஹிரண்யனுடன் போர்செய்து,


நகத்தின் நுனியாலே அவன் கதறியழும்படி அவன் உடலைக் கீறிப்பிளந்து, ஜயங்கொண்டு, அவனது அரிய உயிரை ரத்தம் சிந்தாமல் அமுதாக உண்ட, தாமரை  போன்ற உந்தியுடையவனாகிய திருமாலின் அழகிய மருகனே !


சூர்யன், மன்மதன், அருள் நிறைந்த முனிவர்கள், தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்துத் தலைவர்கள், பிரமன், சிறந்த அந்தணர்கள் - ஆகியோர் போற்றிப் புகழும் அழகனே !


அஷ்ட லக்ஷ்மிகளும் நிறைந்த வீடுகளுடன், அழகிய பொன்னால் ஆன கோயில் சிறந்து விளங்கும் சிவபுரம் தலத்தில் வாழ்கின்ற குருமூர்த்தியே ! பெருமாளே !


மனமெனும் ஒரு பொருளுடனே ஆகாயம், எரியும் காற்று, நெருப்பு, நீர்  இவற்றுடன்   மண்  ( ஆகிய  பஞ்சபூதங்கள் )கூடியதான ஒரு தேகம் என்னும் உருவத்தைக் கொண்டு  அதிலே  [ 13 x7 = ] 91 தத்துவக் கூட்டங்களின் கூறுபாடுகளாலே -


ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை என்னும் இவற்றில் அலைச்சல் படுகின்ற என் புத்தியை  நான் ஜெயித்து அடக்கி , மிக உயர்ந்ததான ஞானம் என்னும் நல்ல நெறியை  அடையும்படியாக  நாய்போன்ற எனக்கு உன்னுடைய திருவருளைத் தருவாயாக !

எத்தனை அருமையான பாடல் !

முதலில் பார்வதியை ஒன்பது  நாமங்களால் அழைக்கிறார் !
ஜனனி =  அகில புவனத்தையும் படைப்பவள்
சங்கரி  =   மங்களம் செய்பவள்
ஆரணி  = வேத முதல்வி
நாரணி  = நாராயண சக்தி
விமலி  = மலமற்றவள்
எண்குண பூரணி  = எட்டுக் குணங்களும் நிறைந்தவள்
காரணி = அனைத்திற்கும் காரணமானவள்
சிவை =
பராபரை =

அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது இம்மாதிரி அழகிய நாமங்களை  அடுக்குவதை நாம் பல பாடல்களில் பார்க்கலாம்.

அடுத்து நரசிம்ம அவதாரத்தை அருமையாக வர்ணிக்கிறார்.

சூர சம்ஹாரம் செய்ய வேல் சிவன் தந்ததாகச் சொல்கிறார். இது சக்தி தந்த வேல் என்றும் சொல்லப்படும்.

தத்துவங்களின் எண்ணிக்கையை  39, 96 என்று  பலவாறு சொல்வார்கள். இங்கே 91 என்கிறார். 96 தத்துவத்தில் சிவதத்துவமாகிய 5 போக மீதி இது என்பார்கள். இந்தத் தத்துவங்களெல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தும். அதனால் அவற்றிற்கும் அப்பால் போகவேண்டும். அதுவே மேலான நிலை." ஆறாறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன் பெறுமாறுளதோ ? " என்பார் அனுபூதியில். 
"வீணே நாள்போய் விடாமல்  ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே " என்று வேறு ஒரு பாடலில் சொல்வார். நாம் இந்தத் தத்துவக் கணக்கெனும் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது.
மிக அழகான பாடல். 




சண்பக மலர். சண்பக மரம் இங்கு தல விருக்ஷம். Wikipedia.

No comments:

Post a Comment