77.திருப்புகழ் 71. திருவையாறு -1
திருவையாறு ஐயாறப்பர் கோயில் கோபுரம்.
ByVivek4thamarai.Own work. CC BY-SA 3.0 Creativecommons via Wikimedia Commons.
நாம் அருணகிரிநாதருடன் செய்யும் இத்தல தரிசனம் ஏட்டளவில்தான். ஆனாலும் ஒன்றை ஒன்று மிஞ்சும் படியான தலங்கள் ! இன்று இந்த தலங்களில் எதுவும் பழஞ்சிறப்புடன் இல்லை. இருப்பதையும் திருப்பணி என்ற பெயரில் கெடுத்து வருகிறார்கள். இருந்தாலும் அவற்றை நினைப்பதே ஒரு புண்ணியம்தான். அதனால்தான் பெரியவர்கள் 'க்ஷேத்ரக்கோவை ' என்று ஸ்தலங்களின் பெயரைவைத்தே பாடியிருக்கிறார்கள்.
சோழவள நாடு சோறுடைத்து !
தஞ்சைச் சீமை- சோழ நாடு- நம்மை மலைக்கவைக்கிறது. "சோழவள நாடு சோறுடைத்து " என்பார்கள். சோறு என்பது வெறும் உணவைக்குறிக்க வில்லை.[ இன்று இப்பகுதியில் நீர்வளம் குன்றி நெல் சாகுபடிக்கே திண்டாடுகிறார்கள். ] இங்கு சோறு என்பது மோக்ஷம் -வீடு பேறு ! காவிரியின் இரு கரையிலும் பிற இடங்களிலும் அவ்வளவு ஸ்தலங்கள். கோயில்கள் ! அவ்வளவு பெரியவர்கள் வந்து பாடிப் பரவியிருக்கிறார்கள் ! அதையெல்லாம் படித்தாலே நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் வருகிறது! அதுவே புண்ணியம்தான் ! அதுவே ஒரு சாதனை (ஆன்மீக முயற்சி ) தான் !
திருவையாறு அருணகிரிநாதர் தரிசித்த 71 வது ஸ்தலம். திரு+ ஐ +ஆறு : இங்கு காவிரியும் அதன் நான்கு கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆகியவையும் பிரிகின்றன. இது மிகப்பெரிய கோயில். பிரமிக்க வைக்கும். காவிரிக்கரையில் காசிக்குச் சமமாக வைத்து எண்ணப்படும் 6 தலங்களில் ஒன்று [ மற்றவை : திருவெண்காடு, சாயாவனம், மாயவரம், திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம்.] ஸ்வாமி பஞ்சநதீஶ்வரர், ஐயாரப்பர், ப்ரணதார்திஹரன். அம்பாள் தர்மஸம்வர்த்தினி, த்ரிபுரசுந்தரி.
இங்கு சம்பந்தர் 5 பதிகங்களும், அப்பர் 12 பதிகங்களும், சுந்தரர் ஒருபதிகமும் பாடியிருக்கிறார்கள். அப்பர் இங்கிருந்தே கயிலைக் காட்சி பெற்றார்.
நம் ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்ததும் இந்த தலம்தான்.
வில்வம்- ஸ்தல விருக்ஷம்
சம்பந்தர்
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே. ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம் சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான் வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய் ஆதி யாகிநின் றானுமை யாறுடை யையனே. இரண்டு பாடல்களையும் சேர்ந்து படிக்க ஒரு அருமையான கருத்து வருகிறது. நமது ஐம்பொறிகளும் புலன்களும் கெட்டு அறிவும் அழியும் அந்த நாளில், ஐம்பூதங்களாகவும் நின்ற ஐயாரீசன் நம்மைக்காப்பான் என்கிறார் சம்பந்தர்! அப்பர் மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம் முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர் அந்தி வண்ணமு மாவரை யாறரே. ஓசை யொலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ சுந்தரர் எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச் சங்கை யொன்று மின்றியே தலைநாள் கடைநா ளொக்கவே கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவும் தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! .ஸ்ரீ த்யாகராஜர் ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் பஞ்ச நதீஶ்வரர் மீது 4 க்ருதிகளும் தர்மஸம்வர்த்தனி மீது 8 க்ருதிகளும் பாடியிருக்கிறார். மாதிரிக்கு ஒன்று. ஸாரங்க ராகம். ஏஹி த்ரிஜகதீஶ ஶம்போ மாம் பாஹி பஞ்ச நதீஶ வாஹினீச ரிபு நுத ஶிவ ஸாம்ப தேஹி த்வதீய கராப்ஜாவலம்பம் கங்காதர தீர நிஜர ரிபு புங்கவ ஸம்ஹார மங்கள கர புர பங்க வித்ருஸ ஸுகுரங்காப்த ஹருதயாப்ஜ ப்ருங்க ஶுபாங்க ......ஏஹி த்ரிஜகதீஶ (இன்னும் இரு சரணங்கள் உண்டு) மூவுலகிற்கும் ஈசனே வருக ! சம்போ ! பஞ்சநதீஶ்வரனே!என்னைக் காத்தருள். சமுத்திரத்தை ஆசமனம் செய்த அகஸ்திய மஹரிஷியால் வணங்கப்பெறும் சிவபெருமானே ! உனது தாமரைக் கையினால் எனக்கு ஆதரவு அளிப்பீராக ! நீ கங்கையணிந்தவன் . தீரன். தேவ சத்ருக்களின் தலைவர்களை வதைத்தவன். நன்மை புரிபவன்.முப்புரம் எரித்தவன். மானைக் கையிலேந்தியவன். பக்தரின் இதயத்தாமரையை வட்டமிடும் வண்டு. சுப சரீரமுடையவன். கல்யாணி ராகம் சிவே பாஹிமாம் அம்பிகே ஶ்ரிதஃபல தாயகி கவேர ஜோத்தர தீர வாஸினி காத்யாயனி தர்மஸம்வர்த்தனி ஸ்வபாவ மௌ நீ ப்ரபாவமு மஹானுபாவுராலைன பாரதிகி பொகட அபாராமையுண்ட் பாவஜரா - தி பாமனே நெந்த பாக்யதாயகி......சிவே பாஹிமாம். (மேலும் இரு சரணங்கள் உண்டு.) பார்வதி தேவியே ! அம்பிகே !தஞ்ச மடைந்தவர்களுக்கு (கோரிய ) பலன்களை அளிப்பவளே !என்னைக் காத்தருள். காவேரி நதியின் வடகரையில் கோவில் கொண்டவளே ! காத்யாயனி ! தர்மசம்வர்த்தனி ! இயற்கையாய் அமைந்துள்ள உன் மஹிமையைப் புகழ்வது, கலைமகளான ஸரஸ்வதிக்கே பாரமாக இருக்கையில், நான் எம்மாத்திரம் !மன்மதனை எரித்த சிவபெருமானின் நாயகியே ! (என்னைக் காத்தருள்.) இவ்வாறு பல அருளாளர்களாலும் பாடப்பெற்ற தலம். இங்கு அருணகிரியார் பாடிய பாடலை அடுத்துப் பார்க்கலாம். . |
No comments:
Post a Comment