87.திருப்புகழ் - 81. வேப்பஞ்சந்தி, கொல்லிமலை
அருணகிரிநாதர் தரிசித்த 80வது தலம் வேப்பஞ்சந்தி எனப்படுகிறது. ஆனால் இது எந்த ஊர் என்று விளங்கவில்லை. வேப்பூர், நிம்பபுரம் என வேறு இரு இடங்கள் இருக்கின்றன. இத்தலத்திற்கான ஒரு பாடல் இருக்கிறது.
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.
நாட்டமும் ஆசையும் உன்பால் தங்க வைத்து, கொங்கை மலைகளில் படியாமல்,
தங்கள் சித்தத்தை உனது திருவடியில் நாட்டவல்ல தொண்டர்களுக்கு கிட்டும்படியாக உனது திருவடித் தாமரையைக் கொடுத்தருள்வாய்.
சோர்வு காணும் படியாக விண்ணகத் தேவர் படைமீது வஞ்சின மொழிபேசி கூட்டமாய்ப் போருக்கு எதிர்த்துவந்தவராகிய அசுரர்கள்கூட்டமெல்லாம் பிரிந்து சிதறிப்போகும்படி சண்டை செய்தவனே !
யமனுடைய ஒழுங்கான ( நேரான ) குணம் போல விளங்கும் பண்பை நிகர்த்த வேலை யுடையவனே !
அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பெருமான், பெரிய தொப்பையை உடைய பெருமான், யானை முகப் பெருமான், ஆகிய கணபதிக்கு இளையவனே !
வேப்பஞ்சந்தித் தலத்தில் அமர்ந்த கந்தப் பெருமாளே ! குமரப் பெருமாளே !
கமலப் பதமீவாய் !
கொல்லிமலை
view of Kollihills from Belukurichi.
Karthickbala. CC BY-SA 3.0
அடுத்து 81வது தலமாக கொல்லிமலைக்கு வருகிறார். இங்கு அறப்பளீஶ்வரர் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சங்ககாலத்திலிருந்து புகழ்பெற்ற இடம். தர்மதேவதையே இம்மலை வடிவில் வந்ததால் இதற்கு அறமலை என்ற பெயர் வழங்கியது. சதுரகிரி என்றும் சொல்வார்கள். அப்பரும் சம்பந்தரும் இந்த தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இங்கு நம் ஸ்வாமிகள் இரண்டு திருப்புகழ்ப்பாடல்கள் அருளியிருக்கிறார்.
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல மிதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை நகைமாதர்
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை யெனஏகி
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ தியல்போதான்
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி மணவாளா
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி மலைநாடா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.
கஷ்டங்கள் மிகுந்த சேறு போன்றதும், கொடுகொட்டி என்னும் பொம்மைபோல கூத்தாடவைப்பதுமான ஐம்புலன்களுக்கு இடமாகிய இந்த உடலை விரும்பி,
நான் கற்ற வித்தைகளைச்சொல்லி, நினைத்ததெல்லாம் சுலபமாக நிறைவேறும், மகிழலாம் எனக் கருதி, முல்லை மலர் போன்ற பற்களை உடைய மாதர்களின்
இஷ்டப்படி செயல்பட்டு, நல்ல பொருள்களையெல்லாம் ஒன்றாகக் கொட்டி அவர்களிடம் கொடுத்தபின், இன்னும் கொடுப்பதற்குப் பொருள் இல்லை என்று சொல்லி, வெளி வந்து,
ஏமாற்றும் பொருட்டு பொய்வழியை யோசித்தும், பொன் இல்லாமையை நினத்து இரக்கமுற்றும் இவ்வாறு மனம் வருந்துவது தகுமோ ?
முழு உண்மையைச் சொல்லும் [ ருத்ர ஜன்மன் என்னும்] செட்டியாக அவதரித்து , சண்டையிட்ட புலவர்கள் உறுதிப்பொருளைத் தெரிந்துகொள்ளும் வண்ணம், முழுதும் சமாதானம் விளையும்படியாக வந்தவனே !
முத்து நிற வல்லி, அழகிய சித்ர நிற வல்லி, முக்திதரவல்ல விண்ணுலக வல்லியாம் தேவசேனையின் மணவாளனே !
வழியில் அமைக்கப்பட்டிருந்த மோகினிப்பெண், மது மயக்கம் போல போதை தரும் பெண் ஆகிய கொல்லிமலைப்பாவை இருக்கும் கொல்லிமலை நாடனே !
பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி ஆகிய வற்றை அணிந்த முடியுடைய பெருமாளே ! பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்தவல்ல பெருமாளே !
உலக மாயையில் [ பெண், பொன் ] மயங்கி வருந்துவது தகுமோ ?
பெண், பொன் இந்த இரண்டிற்காகத்தான் மக்கள் இந்த உலகில் அதிகம் அவதிப் படுகிறார்கள். 'காமினி, காஞ்சனம் ' ஆகிய இவையே மாயை என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர். இங்கு அருணகிரியார் அதையே சொல்கிறார்.
தேவசேனை முக்தி மாது என்பது நாதரின் கொள்கை. இதை முதல் திருப்புகழிலேயே சொன்னார்.
" முத்தித் தரு பத்தித் திருநகை அத்தி "
" அமுதத் தெய்வானை திருமுத்தி மாது "
என ஸ்ரீமுஷ்ணம் திருப்புகழிலும் சொல்லியிருக்கிறார்.
தெய்வானையின் வாகனமாகிய மேகம் நமக்கு செல்வம் தரும் எனவும் கந்தரந்தாதியில் பாடியிருக்கிறார்.
" அவன் தெய்வ மின் ஊர் செல்வந்து இகழும் நமது இன்மை தீர்க்கும்"
[பாடல் 100]
இகபர சௌபாக்யம் தரும் வரதனல்லவா! அதற்கு இதமாக வள்ளி, தேவசேனை ஆகிய இரு தேவிமார்!
இதைத் தொடர்ந்து இன்னொரு அருமையான பாடல்:
தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுணம் மூவந்தம் எனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுலன் ஓரைந்து
தொய்யுபொருள் ஆறங்கம் என மேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
பெளவமுற வேநின்ற தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங்
கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே.
பழம்பொருள், முழுமுதற்பொருள் என்று தான் ஒன்றே விளங்குவதாய்,
சக்தி, சிவம் என்ற இருவேறு தன்மையதாய்,
ராஜஸம், தாமஸம், சாத்வீகம் எனச் சொல்லப்படும் முக்குண முடிவாய் [ முக்குண முடைய திரிமூர்த்திகளாய் ]
பரிசுத்தமான நான்கு வேதங்களாய்,
ஐம்புலன் களையும் சோர்வடையச்செய்யும் பொருள் கொண்ட [ சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம் , கல்பம் என்னும் ] ஆறு வகைப்பட்ட வேதப்பொருள் உணர்த்தும் கருவிகளாக விளங்குவதாய்,
பலப்பல ஒலிகளில் தங்குவதாய், உயிர், தளை என்பனவாய், பெரிதும் பொருந்தி இன்னிசையாய்,
பல உயிர்களுமாய், முடிவில்லாததாய் உள்ள ஆனந்த உருவக் கடலை அடையும்படிச் செய்யவல்ல பொருள் எதுவோ அந்தப் பொருளை அருளுவாயாக !
கஷ்டப்படும் பசுக்கள் தங்கள் அழகிய இடம் வந்து சேர, மலையும் உருகும் படியாக, நின்று மூங்கிலினாலான குழலை ஊதும் கையை உடையவனாகிய கண்ணபிரானாம் திருமாலாகிய விடையில் ஏறும் பெரியோனும், புன்சடையுடையோனும் ஆகிய எந்தை சிவபிரான் கைதொழுது நிற்க, மெய்ஞ்ஞானத்தைப் போதித்த ஒளி வேலனே !
தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளியிடம் சென்று, உயிரைக் கொள்ளை கொள்ளும் மன்மதனின் கைமலர் அம்புகளின் செயலாலே,
தழைகளைக் கொய்துசென்ற கட்டழகுக் கந்தனே !
கொல்லிமலைமேல் விளங்கும் பெருமாளே !
பேரின்ப நிலையை அருள்வாயே !
அறப்பளீஶ்வரர் கோவில்.
Karthickbala. CC BY-SA 3.0