1. எளிய வழிபாடு என்னும் அரிய கோட்பாடு !
திருப்புகழின் தாயகம் எனத்தக்க வள்ளிமலை!
பக்தியே கலியுக தர்மம்!
நமது அநாதி மதத்தில் சில அலாதியான கோட்பாடுகள் உள்ளன.உயிர்கள் எண்பத்து நான்கு நூறாயிரம் (84,00,000) வகையான பிறவிகளை (யோனி பேதம் )எடுத்து இறுதியில் தம் உண்மை நிலையை அல்லது இறை நிலையை அடைகின்றன. இது உயிர்த் தோற்றத்தின் பரிமாணம் ஆகும். இதில் கடைசியாக வருவது மனிதப் பிறவி. அதனால் தான் ஔவையார் "அரிது அரிது மானிடர் ஆதல் அரிது " என்றார்.
இவ்வாறு அரிதில் வந்த மனித வாழ்க்கையின் லக்ஷியமாக நான்கு உறுதிப் பொருள்களை ( புருஷார்த்தம்) நம் முன்னோர் வகுத்தனர். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்) என்று அவை வழங்கப்படும். இவற்றை அடைய இல்லறம், துறவறம் (ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி) என்ற இரண்டு பெரிய வழிகளை வகுத்தனர். மனிதப் பிறவியிலும் முதல் பிறவி முதல் இறுதிப் பிறவி வரை பல படிகள் உள்ளன. அவற்றில் மக்களின் இயல்பும் குணங்களும் மாறுபடும் (அதிகாரி பேதம்). அதற்குத் தகுந்தபடி, சாதனை முறைகளிலும் பல நிலைகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இறுதியில் இறை நிலையை அடைவதே நமது மதம் வகுத்த வழி. இது நமது மதத்தில் உள்ள எல்லா பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் நிலையாகும். இதையே வள்ளுவரும் தமது குறளில் கூறினார்.
உலகுக்கு தொடக்கம் என்று ஒன்று இல்லை; முடிவு என்பதும் இல்லை. ஆனால் பொருள்கள் (உலகும் உயிர்களும் ) தோன்றி, சில காலம் விளங்கி பின் ஒடுங்குகின்றன. தோன்றுவதை ஶ்ருஷ்டி என்கிறோம்; ஒடுங்குவதை ப்ரளயம் என்கிறோம். இவ்வாறு தோன்றி, நிலைத்து, ஒடுங்குவதை ஶ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், இது இறைவன் செயல் என்று கூறுவது மரபு.
உலகம் நிலைத்துள்ள காலத்தையும் நான்கு யுகங்களாகப் பிரிப்பது மரபு. க்ருத அல்லது ஸத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபரயுகம், கலியுகம் என யுகங்கள் மாறிமாறி வரும். ஒவ்வொரு யுகத்திலும் உலகின் நிலையும் மக்களின் குணாதிசயங்களும் மாறுபடும். அதற்கு ஏற்றவாறு அவதாரங்களும் ஆத்மஞானிகளும் தோன்றி மக்களுக்கேற்ற ஆன்மிக, சமய சாதனை முறைகளை வகுத்தும் விளக்கியும் தருவார்கள்.
க்ருத யுகத்தில் த்யானமே ப்ரதானமாக இருந்தது. ரிஷி-முனிவர்கள்- ஏன், அஸுரர்கள் கூட- பல்லாண்டுகள் தவம் செய்தார்கள் என்று படிக்கிறோம். த்ரேதாயுகத்தில் யாக யஜ்ஞங்களே முக்கியமாக இருந்தன. பின்னர் த்வாபரயுகத்தில் தீர்த்த யாத்திரை, க்ஷேத்திரங்களுக்குச் செல்வது, ஆலய வழிபாடு, அர்ச்சனை என்பவை பிரதானமாயின.
த்வாபர யுகத்தின் இறுதியில் க்ருஷ்ணர் அவதரித்தார். அவர் உபதேசித்த பகவத் கீதையில் அதுவரை பின்பற்றப்பட்டு வந்த முறைகளைச் சுருக்கமாக விளக்கினார். அதன்மேல், இனிமேல் மனிதன் ஆத்மலாபத்திற்காக என்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்கினார். எல்லோரும் இறைவனிடம் பக்தி செய்யவேண்டும்; வேறு எதிலும் நாட்டமில்லாத (அனன்ய ) பக்தியாக அது இருக்கவேண்டும்; பகவானே எல்லாம் என்று அவனையே சரணடைய வேண்டும்; அப்படி உள்ளவர்களை பகவானே எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பார், இதுவே தனது உயர்ந்த, இறுதி வாக்கு (குஹ்யம், குஹ்யதரம், குஹ்ய தமம், பரமம் வச )என்று சொன்னார். க்ருஷ்ணர் இப்பூவுலகை நீத்ததும் கலிகாலம் தொடங்கியது என்பது ஹிந்துக்களின் தொன்மை நம்பிக்கை. மரபுப்படி, இது கி.மு.3102 ம் வருஷம் நடந்தது என்பார்கள்.
[நமது புராண, இதிஹாஸத்தின்படி, த்வாரகை கடல்கோளால் அழிந்தது. குஜராத் கடற்கரையில் இப்போதுள்ள த்வாரகையின் அருகே கடலில் தொல்பொருள் ஆராய்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் பழைய த்வாரகை இருந்ததை உறுதிசெய்திருக்கிறார்கள். இவர்கள் விஞ்ஞானபூர்வமாக நிர்ணயிக்கும் காலமும் ஏறத்தாழ மரபுக் கருத்துக்களுடன் ஒத்துவருகிறது.]
கீதையின் இந்தக் கருத்தை வ்யாசர் கடைசியாக எழுதிய பாகவத புராணமும் விளக்குகிறது.கலிகாலத்தில் தலம், தீர்த்தம், கோயில் ஆகியவற்றின் தூய்மையும் புனிதமும் கெடும்; அரசர்கள் நெறிதவறி நடப்பார்கள்;மிலேச்சர்களின் வழியைப் பின்பற்றுவார்கள்; மக்கள் பணத்திற்காகவும் உடல் சுகத்திற்காகவுமே வாழ்வார்கள். யாக யஜ்ஞங்கள் செய்வதோ, பிற வைதீக கர்மாக்களைப் புரிவதோ சரிவராது. பக்தி ஒன்றே வழி என்று மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளீல் இந்தியாவில் தோன்றிய மஹாபுருஷர்கள், ஞானிகள் அனைவரும் பக்தியையே ப்ரதானமாகக் கொண்டார்கள்.
தமிழகத்தில் பக்திப் பெருக்கு
இந்த வகையில் தமிழ் விளங்கும் தேசம் முன்னோடியாகத் திகழ்கிறது! இங்கு பௌத்தர்களும், ஜைனர்களும் மந்திர-தந்திரங்களால் மன்னர்களை வசப்படுத்தி தங்கள் செல்வாக்கைப் பெருக்க முயன்ற நாட்களில் திருஞான சம்பந்தரும், அப்பரும் மாணிக்கவாசகரும் தோன்றி, மன்னர்களை நம்மதத்திற்கே மீட்டு, மக்களுக்கு வழிகாட்டினார்கள்.
அப்படி அவர்கள் காட்டிய வழி, எளிய வழிபாடாகும். நான்கு சைவ குரவர்களும். ஆழ்வார்களும் தலம் தோறும் சென்று அங்குள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, பதிகம் பாடிப் பரவினார்கள். பெரிய தலம் என்பதல்ல- ஊர் ஊராகச் சென்றார்கள்; அவர்கள் பாடியதாலேயே அந்த ஊர்கள் தலமாகிவிட்டன! இவ்வாறு நாயன்மார்கள் சென்று வழிபட்ட இடங்கள் 276 என்று சொல்கிறார்கள். ஆழ்வார்கள் 108 இடங்களை திவ்ய தேசம் என்று போற்றினார்கள்.
இவ்வாறு பக்தி இயக்கம் பெருகி வளர்ந்தாலும், நாளடைவில் சைவ-வைஷ்ணவப் பிணக்குகள் எழுந்தன. தத்துவ அடிப்படையிலும் பூசல்கள் தோன்றி வளர்ந்தன. சைவ சமய குரவர்கள் பாடிய தேவாரம்-திருவாசகத்திலும் சரி, ஆழ்வார்கள் பாடிய திவ்யப் ப்ரபந்தத்திலும் சரி, அவற்றைப் பின்பற்றியெழுந்த நூல்களிலும் சரி, தத்தம் கடவுளையே, கொள்கைகளையே உயர்வாகப் பேசுவதோடு மட்டுமில்லாமல், பிறரைத் தாக்கியும், மட்டம் தட்டிப் பேசுவதும் சகஜம்.
அருணகிரிநாதரின் பெருமை
இவர்களுக்குப் பின் வந்த மிகப்பெரிய ஞானியும் அடியாரும் அருணகிரி நாதர் ஆகும். இவர் கி.பி. 15ம் நூற்றாண்டின் மத்தியில், பிரபுடதேவராஜன் காலத்தவர் (1450) என்பதைத் தவிர வேறு எந்த விவரமும் கிடைக்கவில்லை.ஆனால், இவர் இயற்றிய திருப்புகழ், கந்தரநுபூதி, கந்தரலங்காரம்,கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள் ஆகிய நூல்கள் கிடைத்திருக்கின்றன.
வாடிய பயிருக்கு மழை போலவும், வரண்ட பாலை நடுவில் சோலை போலவும், வியர்த்து, விறுவிறுத்துக் கிடக்கும்போது வீசும் மெல்லிய பூங்காற்றுப் போலவும் இவர் நூல்கள் திகழ்கின்றன. எல்லாவிதமான தத்துவக் கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் தெய்வ அனுபவ நிலை; தாம் வழிபடு தெய்வத்தை விடாமல், அதே சமயம் பிற தெய்வங்களையும் போற்றும் உயர்ந்த மனோ பாவம்; பக்தியே முக்திக்கு வழி என்பது மட்டுமல்ல, பக்தியே முக்தி என்ற உறுதிப்பாடு- இவையே அருணகிரிநாதர் நமக்குப் புகட்டும் பாடமாகும். தத்துவங்களுக் கிடையே (குறிப்பாக, வேதாந்தம்-சித்தாந்தம்) சமரசம்; தெய்வங்களுக்கிடையே (குறிப்பாக,முருகன், சிவ-விஷ்ணு) சமரசம்; மொழிகளுக்கிடையே ( ஸம்ஸ்க்ருதம்- தமிழ் ) சமரசம் என்னும் உயர்ந்த பண்புகளை இவர் நூல்களில் காண்கிறோம்.
திருப்புகழ் நூல் பதிப்பு
ஏனோ தெரியவில்லை- இவர் நூல்கள் வழக்கற்றே இருந்தன. ஓலைச் சுவடிகளிலேயே முடங்கிக்கிடந்தன. இவற்றைப் பற்றி யறிந்து,ஓலைசுவடிகளைத் தேடி யலைந்து, அவற்றை சரிபார்த்து அச்சேற்றி புத்தகமாகக் கொண்டுவந்தவர் வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை என்னும் பக்தரும், மஹாபுருஷருமாகும்.
படம்: தி இந்து . நன்றி
tamil thehindu.com
அவர் குமாரர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் இதை இன்னும் சீரிய முறையில் பதிப்பித்ததுடன் , உரையும், பல ஆராய்ச்சி-விளக்கக் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார். பரம்பரையாகவந்து ரத்தத்தில் ஊறிய முருக பக்தி, சைவ சமய நூலறிவு, தமிழ் இலக்கியப் பயிற்சி,இறைவழிபாட்டின்மேலமைந்த உயரிய பண்பாடு ஆகியவை ஒருங்கே அமைந்த இப்பெரியார் இயற்றிய உரை, முருக பக்தர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷமாகும்.
(Photo from: www.thiruppugazh. org. Acknowledged with thanks.)
வள்ளிமலை ஸ்வாமிகள்
நூல் வெளிவந்த பிறகு, அது பரவுவதற்கு கருவியாக அமைந்தவர் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் என்றும் திருப்புகழ் சாமிகள் என்றும் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸச்சிதானந்த ஸ்வாமிகள் ஆகும். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல், மைசூர் அரண்மனையில் சமையல்காரராக இருந்த இந்த அர்த்தநாரி, தெய்வவசத்தால் என்ன பாட்டு என்றே அறியாமல் பழனி கோயிலில் ஒரு தாஸி அபிநயம் பிடித்துப் பாடியதைக் கேட்டு, அது திருப்புகழ் என்று அறிந்து, அதைத் தட்டுத் தடுமாறிப் படிக்கத் தொடங்கினார். பின்னர் திருவண்ணாமலையில் ரமண பகவானைத் தரிசித்து, சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று, அவர் சொல்படி வள்ளிமலை யடைந்து தவமியற்றி, அங்கு வள்ளிதேவியால் திருப்புகழுக்குரிய ராக தாளங்களை அறிவிக்கப் பெற்று,அவ்விதமே பாடத்தொடங்கியது சென்ற நூற்றாண்டில் நம் கண் எதிரிலேயே நிகழ்ந்த அற்புதமாகும்! திருப்புகழே மஹாமந்திரம் என்னும் உண்மையை நாடுமுழுதும் பாடிப் பரப்பினார். திருப்புகழை ஏட்டிலிருந்து பாட்டாக்கியவர் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள்! இதன் பிறகுதான் திருப்புகழின் அருமை பெருமைகள் தெரியவந்தன.
அருணகிரி நாதர் 16,000 திருப்புகழ்கள் பாடினார் என்பது பல பழைய பாடல்களால் நாம் அறியவரும் செய்தி, ஆனால் நமக்கு இதுவரை கிடைத்திருப்பது 1324 பாடல்களே. இவற்றிலிருந்து அருணகிரிநாதர் சைவ குரவர்கள் போல பலதலங்களுக்கும் விஜயம் செய்து அங்கங்கே ஆசுகவியாகப் பாடினார் என்பது தெரியவருகிறது. இவ்வாறு இவர் சென்ற தலங்கள் 200 என தணிகைமணி யவர்கள் எழுதியிருக்கிறார். நாமும் அவர்பின் சென்று அவ்வத் தலங்களில் அவர் அருளிய திருப்புகழ்ப் பாடல்களைத் தலத்துக்கு ஒன்றாகவாவது பார்ப்போம்!
திருப்புகழ் அமுது என்பார்கள் ஆன்றோர்கள். அருணகிரிநாதரின் தெய்வ அனுபவத்திலிருந்து, தெய்வ ஆணையால் வெளிவந்த இந்த அருள் அலையில் சிலகாலம் திளைப்போம்!
ஒருங்கே கிடைத்தற்கரிய தகவல்கள், அற்புதம்.. அற்புதம்.. ஐயா...
ReplyDeleteஉங்களுடைய திருவடியிணைக்கு அடியேனின் வணக்கங்கள்...
திருப்புகழ் பெருமைகளை மிக எளிய வழியில் எல்லோர் மனதிலும் சென்றடைய நீங்கள் செய்யும் தொண்டு போற்றுதற்கு உரியது ..வணக்கம், வாழ்த்துக்கள் .
ReplyDelete