6. திருப்புகழ் -4. திருக்கோவிலூர்

அருணகிரிநாதர் திருவருணையிலிருந்து கிளம்பி பல தலங்களுக்கும் விஜயம் செய்தார். அவர் தலங்களைத் தரிசித்த வரிசை நமக்குச் சரியாகத் தெரியாது. தணிகைமணி குறிப்பிட்ட வரிசையில் நாம் பார்க்கலாம்.
அப்படி முதலில் வருவது திருக்கோவலூர் என்ற தலம். இது திருக்கோயி (வி)லூர் எனப்படுகிறது. இது சிவபெருமான் அந்தகாசுரனை வதைத்த இடம். அதனால் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. சம்பந்தரும் அப்பரும் பாடிய தலம். வில்வம் தலமரம். இது வைஷ்ணவர்களுக்குரிய உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமஸ்வாமி ) கோவில் உள்ள திவ்யதேசமும் ஆகும். நான்கு ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருமையுடையது.
வில்வம்-தழையும் காயும்.
இங்கு வந்த நம் ஸ்வாமிகள் பெண்ணாசை விலகவேண்டுமென்று பாடுகிறார்.(பெரியவர்கள் ,தாங்கள் பலவித பாவம் செய்தவர்கள், கீழானவர்கள் என்றெல்லாம் பாடல்களில் சொல்வார்கள். இதைவைத்து, அவர்கள் அவ்வளவு கெட்டது செய்தார்கள் என்று நினைக்கக் கூடாது.)
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
பாவை யாரிள நீரன ...... முலையாலும்
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
பார காரன வார்குழ ...... லதனாலுஞ்
சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித
சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ்
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
சார மாயதி லேயுற ...... லொழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
யாதி காணரி தாகிய ...... பரமேச
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத
கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி
கோடி யாகம மாவொலி ...... மிகவீறும்
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.
ஆவ ஆர்வன நான்மறை என்கிறார். ஆவ = ஆக : நாம் ஆற்றவேண்டிய கடமைகளை நிரம்பக் கூறுவது வேதம். அதற்கு மூலமானவன் பரமேஶ்வரன். அவர் அருளியவன் முருகன். அவனை தேவர்கள் யாவரும் வணங்கு கின்றனர்..
அப்படிப்பட்ட முருகன் மறையோர் ஓதும் வேதவொலியும், பல விழாக்களின் ஒலியும்,ஆகமங்களின் பேரொலியும் மிகுந்து எழுகின்ற கோவலூரில் வீற்றருளுகின்றான். வேலாயுதத்தை ஏந்தி, வள்ளி, தேவசேனயுடன் அமர்ந்திருக்கிறான். அப்பெருமான் நம் ஆசையாகிய இடர்களைக் களையவேண்டும் என வேண்டுகிறார்.
அட்ட வீரட்டத் தலமானதினாலே, சம்பந்தரும் அப்பரும் பாடி
இருக்கிறார்கள்.
உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவது அறிதிரேல்
அள்ளல் சேற்றில் காலிட்டிங்கு அவலத்துள் அழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தால் குழகன் கோவ லூர்தனில்
வெள்ளத் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.
-சம்பந்தர்.
நல்ல உள்ளம் கொண்டவர்களே ! வந்து உயிருக்கு உறுதியாவது எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நரகக் குழியில் கால் விடாமல், நல்ல தோத்திரப் பாடல்களைப் பாடுங்கள். அன்பனாய் விளங்கும் கோவலூர் வீரட்டத்தைச் சென்று அடையுங்கள். சடையில் கங்கையைத் தாங்கிய பரமன் நம்மையும் தாங்குவான்.
வழித்தலைப் படவு மாட்டேன் வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன் பாசமற்றுப் பரம நான் பரவமாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன்
கொழித்துவந்து அலைக்கும் தெண்ணீர்க் கோவல் வீரட்டனாரே.
-அப்பர்.
வீரட்டானத்துப் பெருமானே! நான் தங்களின் நெறி பற்றி ஒழுகவில்லை. நாள்தொறும் மனத்தினைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வில்லை.தீயவழிகளைப் பழிக்கவில்லை. பெருமானை வணங்கவில்லை. பெருமானே ! இந்தப் பிறவியை இழிவு என்று கருதாமல் , என்னுள் நிறைந்து இருக்கும் தங்களைப் போற்றாதவனானேன். எனக்கும் அருள்வீராக.
இப்படி அருளாளர்கள் பாடிப் பரவிய தலம். நாமும் இதை மனதில் கருதுவோம்.
திருக்கோவிலூரின் மற்றொரு காட்சி.
No comments:
Post a Comment