Wednesday, 16 December 2015

12, திருப்புகழ். 10 திருவதிகை வீரட்டானம்.



12. திருப்புகழ் - 10. திருவதிகை வீரட்டானம்.


அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த (8வது) தலம் திருவதிகை வீரட்டானம். இது அட்டவீரட்டம் எனப் புகழ்பெற்ற எட்டு ஸ்தலங்களில் ஒன்று. இங்கு சிவபிரான் முப்புரங்களை எரித்தார்.

இங்கு ஸ்வாமி பெயர் வீரட்டேஶ்வரர். அம்பாள் பெயர்  த்ரிபுரசுந்தரி.இது தேவாரம் பாடிய நாயன்மார்கள்  மூவராலும் பாடப்பெற்ற தலம்.
இங்குதான் அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கி, இறைவனிடம் அப்பருக்காகப் பிரார்த்தித்தது. இறைவன் அப்பருக்கு சூலை நோய் தந்து அது தாங்க இயலாத அவர், இங்கு வந்து திருநீறு பெற்றுக் குணமடைந்து, தேவாரம் பாடத்தொடங்கியது. அவர் பாடிய முதல் பாடல்:

கூற்றாயினவாறு விலக்ககிலீர்
   கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
   பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
   குடரொடு  துடக்கி முடக்கியிட
ஆற்றேனடியேன் அதிகைக் கெடில 
   வீரட்டானத்துறை அம்மானே.

இப்பதிக்கு வந்த சம்பந்தர் சிவனின் நடனக் காட்சியைத் தரிசித்தார். அவர் பாடிய ஒரு பாடல்:


எண்ணார் எழில்எண்தான் இறைவன் அனல் ஏந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறை பாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே."

இங்கு வந்த சுந்தரர், இத்தலத்தை மிதிக்க அஞ்சி, அருகிலிருந்த சித்தவட மடத்தில் தங்கி திருவடி தீக்ஷை பெற்றார்.  அவர் பாடிய ஒரு பாடல்:

தம்மானை யறியாத சாதியார் உளரே, 
சடைமேற்கொள்பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக்கரி காட்டிலாட, லுடையானை
விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்தன் அடிக்கொண்டு என்முடிமேல் வைத்திடுமென்னும்,
ஆசையால் வாழ்கின்ற அறிவிலாநாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து- உறைவானை
இறைபோதும் இகழ்வன் போலியானே.




from: muelangovan.blogspot.com Thanks.


இங்கு வந்த அருணகிரிநாதர் இரண்டு பாடல்கள் பாடுகிறார்.

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
     பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
     படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
     துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
     சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே


கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
     கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
     கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
     செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
     திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.


இதில் முதல் நான்கு அடிகளில் பொதுமாதரின்  இயல்புகளைக் கூறி அத்தகைய மயக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வேண்டுகிறார்.


கரிய நிறத்தையுடைய அஸுரனான ராவணனது முடிசூடிய தலை பத்தும் அற்றுவிழ வேகமாக அம்பைவிட்ட அச்சுதன் மருகோனே! குமரேசனே!



கயிலைமலையின் நாதராகிய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்த குமரியாகிய பார்வதி அன்புடன் கொடுத்த  பிரசாதத்தின் (பாலின்) மகிமையால் பாடல்கள் அதிகம் பாடும் திறனைப்பெற்ற புலவனான ஞானஸம்பந்தராக வந்தவனே!



திரண்ட பாக்கு மரத்தின் உச்சியை இடறியும், வாழைகளின் குலையைச் சிதற அடித்தும், வயல்களில் நிறைந்த நெற்கதிர்கள் அலைச்சல் படவும், அலைகள் வீசி,



திமிதிமியெனப் பறைகள் முழங்க வெள்ளம் பெருகும் கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகையில் உள்ள பெருமாளே !



என் கவலையை நீக்கி யருள்வாய் !



முருகன்  எதிரில் மயில் வாகனம்.
படங்களுக்கு நன்றி.

விடமும் வேலன மலரன விழிகளு
     மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
          விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி

மிகவு மாண்மையு மெழினல முடையவர்
     வினையு மாவியு முடனிரு வலையிடை
          வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா

இடரு றாதுனை நினைபவர் துணைகொள
     இனிமை போலெழு பிறவியெ னுவரியி
          னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே

இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
     ககன பூபதி யிடர்கெட அருளிய
          இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே


படரு மார்பினி லிருபது புயமதொ
     டரிய மாமணி முடியொளி ரொருபது
          படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்

பரவை யூடெரி பகழியை விடுபவர்
     பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
          பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே

அடர வேவரு மசுரர்கள் குருதியை
     அரக ராவென அலகைகள் பலியுண
          அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா

அமர ராதிய ரிடர்பட அடர்தரு
     கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
          அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.


(பாடல்கள் கௌமாரம்.காமிலிருந்து  எடுக்கப் பட்டவை. நன்றி ).


இந்தப் பாடலிலும் முதல் இரண்டுஅடிகள் வேசையரின்  கவர்ச்சியைக் கூறி, அதிலிருந்து விடுபட வேண்டும், பிறவி யெடுக்காதிருக்கவேண்டும் என வேண்டுகிறார்.



பரந்த மார்பின் புறமுள்ள இருபது புயங்களும், அருமையான ரத்ன கிரீடங்கள்  விளங்கும்  பத்துத் தலைகளும்  பூமியில் விழும்படி ஒர் அம்பைச் செலுத்தியவரும்,  சந்தர்ப்பம் அறிந்து,



கடலின் மீது  எரியும் அம்பை விடுபவரும், தம்மைப் போற்றுபவர்களின்  வினை கெடும்படி அருள்செய்து, பாற்கடலில் பாம்பணையில் துயில்பவரின் மருகோனே !



நெருக்கமாக வந்த அஸுரர்களின்  ரத்தத்தை , மகிழ்ச்சியுடன் அரஹரா என்ற ஒலியுடன் பேய்கள் உண்ண, அலைவீசும் கடலும் சப்தமிட, போர்செய்த மயில்வீரனே!



தேவர்கள் முதலானோர் துன்பப்படும்படி, மேல் விழுந்து நெருங்கியெதிர்த்த பொல்லாத அஸுரர்கள் வாழ்ந்திருந்த முப்புரங்களை எரித்த இடமாகிய அதிகை மாநகரில் அமர்ந்த பெருமாளே !



துன்பப்படாமல், உன்னை நினைக்கின்றவர்களின்  துணையைப் பெறுதற்கு, இன்பம் போலத் தோன்றுகின்ற  ஏழு பிறவி என்கின்ற கடலில் விழுந்து அழியாமல், இனியாகிலும்  இருவினை என்கிற  இழிந்த நிலையை அடையாமல்- 



புகழுடனே நாள்தொறும் தேவர்கள், முனிவர்கள் , விண்ணுலக அரசன் இந்த்ரன் ஆகியவர்களின் துன்பம் தொலைத்து அருளிய  இறைவனே ! உன்னுடைய  பன்னிரு புயங்களை இசையுடன் போற்றி  உரைக்க  அருள் செய்வீராக !.

பரம முருகனடியாரான  அருணகிரிநாதர்  இரு பாடல்களிலும் திருமாலைப்  பற்றி  எவ்வளவு புகழ்ந்து பாடியிருக்கிறார்! இது அவருடைய தனித்தன்மை!





No comments:

Post a Comment