11. திருப்புகழ் -9. திருத்துறையூர் (திருத்தளூர் )
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த (7வது) தலம் திருத்துறையூர். இது இன்று திருத்தளூர் என்று ஆகிவிட்டது.
ஸ்வாமி பெயர் சிஷ்டகுருநாதர். பசுபதீஶ்வரர்
அம்பாள் சிவலோகநாயகி, பூங்கோதை நாயகி
நாரதர், வசிஷ்டர், அகஸ்தியர், சூர்யன், பீமன் ஆகியோர் வழிபட்ட புராதன ஸ்தலம்.
இங்கு சுந்தரர் ஸ்வாமியிடம் தவநெறியை வேண்டிப்பெற்றார். பிள்ளையாரை சாக்ஷியாக வைத்து அவருக்கு உபதேசம் செய்ததாக வரலாறு. இதைக்காட்டும் சிற்பமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
நின்ற நிலையில் சுந்தரர் உபதேசம் பெறும் காட்சி.
இத்தலத்தில் சுந்தரர் ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.மாதிரிக்கு ஒரு பாடல்
மத்தம் மத யானையின் வெண்மருப்பு உந்தி
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வடபால்
பத்தர் பயின்று ஏத்திப் பரவும் துறையூர்
அத்தா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.
என்று பாடுகிறார். தடுத்தாட் கொள்ளப்பட்ட பிறகு அவர் பாடிய முதல் பதிகம் இது. தவநெறி வேண்டி நிற்பதால் இவர் மன நிலை விளங்குகிறது.
அருணகிரிநாதர் இங்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில் யாழ்வைத்திசை கூரக்குழ லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிறை யாசப்படு வார்பொட்டணி சசி நேர்வாள்;
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை கோவைக்கனி வாய்பற்கதி ரொளிசேருங்
கோலக்குயிலார் பட்டுடை நூலொத்திடை யார்சித்திர கோபச்செய லார்பித்தர்க ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழலாள் பத்தர்கள் பூஜைக்கியல் வாள்பத்தினி சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர் போகர்க்குப தேசித் தருள் குரு நாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட சோற்விற்கதிர் வேல்விட்டருள் விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு ஜோதித்துறை யூர் நத்திய பெருமாளே.
இப்பாடலில் முதல் நான்கு அடிகளில் பொதுமகளிரின் செயல்கள் கூறப்படுகின்றன.
நிறைந்த தனபாரத்தையும், சடையையும், வேத சொரூபமாகிய கூந்தலையும் உடையவளும், பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்பவளும், பத்தினியும், சிவகாமியும்;
பூமி,கடல், மும்மூர்த்திகள் ஆகிய எல்லாவற்றிற்கும் முன்னவளும், பத்ரகாளியும் ஆகிய பார்வதியை அணைந்த சிவனுக்கு உபதேசித்து அருளிய குருமூர்த்தியே!
சூரனும், க்ரௌஞ்ச கிரியும்,கடலும் தவிடுபொடியாக, முட்டிப்பொருத அஸுரர்கள் மெலிந்து அழிய, அயற்சியில்லாத வீரம்மிக்க ஒளிவேலைச் செலுத்தி அருளின வெற்றி வேலவனே !
மயில்போன்ற இயலுடைய அழகிய முத்துப்போன்ற வள்ளிதேவியுடன், ஒளிவீசும் துறையூர் தலத்தை விரும்பிய பெருமாளே !
பித்துப் பிடித்தவர்களாம் பொதுமகளிரின் உறவு தகுமோ?
[ அருணகிரிநாதரின் பல பாடல்களில் பொதுமகளிரின் தொடர்பைக் கண்டிக்கும் பகுதிகள் வரும். தமிழ் நாட்டில் சங்ககாலம் தொட்டே பொதுமகளிர் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளனர். "தலைமகனுக்கு " பொதுமகளிருடன் தொடர்பு ஸர்வசாதாரணம் என்பதை சங்க இலக்கியத்தில் பார்க்கலாம். பிற்காலத்தில் வந்த நீதி நூல்கள் இதைக் கண்டிக்கின்றன. திருவள்ளுவர் குறளில் 'பிறனில் விழையாமை' என்று ஒரு அதிகாரம் அறத்துப்பாலிலும், 'வரைவின் மகளிர் ' என்று ஒரு அதிகாரம் பொருட்பாலிலும் அமைத்திருக்கிறார். நன்னூலிலும் இவற்றைப்பற்றி இருபது பாடல்கள் உள்ளன. இப்பகுதிகளில் அருணகிரியார் சமூகத்தில் பரவியிருந்த ஒரு தீய பழக்கத்தைக் கண்டிக்கிறார் என்று கொள்ளவேண்டும். பல பாடல்களில் இத்தகைய பகுதிகள் வருவதால், இந்த விளக்கம் இங்கு அவசியமாகிறது.]
இனி, அடுத்த பாடல்.
வெகுமாய விதத்துரு வாகிய
திறமே பழகப்படு சாதக
வீத மேழ் கடலிற் பெரிதாமதில் சுழலாகி
வினையான கருக்குழி யாமெனும்
மடையாள முளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கவொ ணாதெனும் முதியோர் சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை
கயிறாலு மிறுக்கிம காகட
சலதாரை வெளிக்கிடை யேசெல வுருவாகிச்
சதிகாரர் விடக்க திலேதிரள்
புழுவாக நெளித்தெரி யேபெறு
மெழுகாக வுருக்கு முபாதிகள் தவிர்வேனோ
உககால நெருப்பதிலே புகை
யெழவேகு முறைப்படு பாவனை
யுறவே குகை யிற்புட மாய்விட வெளியாகி
உலவாநர குக்கிரை யாமவர்
பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
உள மாழ்கி மிகக்குழை வாகவு முறவாடித்
தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையே பணியத் தருவாய் பரி மயில்வேலா !
துதிமாதவர் சித்தர்ம கோரர்
அரீ மால்பிர மற்கருள் கூர்தரு
துறையூர் நக ரிற்குடி யாய்வரு பெருமாளே.
இங்கே, தொடர்ந்து வரும் பிறவி என்னும் நோயிலிருந்து விடுபெற வேண்டும் என்று வேண்டுகிறார்.
எண்ணில்லாத மாயவகைகளால் நாம் எடுத்துப் பழகும் பிறப்புகள் ஏழு கடலைவிடப் பெரிதாகும். (எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப் பிறவி அவதாரம் என்று சிதம்பரம் திருப்புகழில் பாடினார்,) அத்தகைய பிறப்புச் சுழலில் சிக்கிக்கொண்டு,
வினைக்குத் தகுந்த கருவில் பிறக்க நேரிடும் என்ற ஒரு அடையாளம் மனதில் பதிந்து இருந்தாலும், விதியை யாராலும் விலக்க முடியாது என்கிற பெரியோர் வாசகம்-
பொருத்தமானதே ஆகும். அந்த விதி என்னைப் பிடித்து இறுக்கிக் கட்டி, உடம்பாகிய சாக்கடை வழியே வெளிவர ஓர் உருவம் கொடுத்து,
மோசக்காரர்களாகிய ஐம்புலன்களின் சேஷ்டைகளும் (உடலாகிய) மாமிசத்திலே திரண்டு, புழுப்போல நெளிவுண்டு, நெருப்பிலிட்ட மெழுகுபோல உடலை உருக்குகின்ற வேதனையை நான் ஒழிக்கமாட்டேனா?
யுகமுடிவு காலத்தில் புகையுடன் எழும் நெருப்பைப்போன்று கோபம் காட்டி, உலைபோன்று உள்ளக் கொதிப்புடன் வெளியில் வரும், அழியாத நரகத்துக்கு இரையாகுபவர்களாகிய பல பேர்களின் (இரப்பவர்களிடம் இரக்கம் காட்டாதவர்கள் ) வீட்டுவாசலில் போய் நின்று, அவர்களிடம் குழைந்து, வேதனைப்பட்டு இருக்கும் நிலை இனியாவது ஒழிவதாக.
மயிலாகிய குதிரையையும்,வேலையும் உடையவனே !நான் சிறக்கும்படி, உனது திருவருள் பெருகும் சிறந்த பாத மலர்கள் இனியாவது எனக்குத் துணை செய்யுமாறு தருவாயாக.
துதிக்கின்ற் மஹாதபஸ்விகளுக்கும், சித்தர்களுக்கும், மஹேஶ்வரன், இந்த்ரன், ப்ரம்மா, திருமால் இவர்களுக்கும் திருவருள் புரியும் பெருமாளே !
துறையூர் நகரில் குடியாய் வந்து வீற்றருளும் பெருமாளே !
பிறவிதான் பெரிய துன்பம் என்பது ஆன்றோர் அறிவுரை. " வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை " என்றார் திருவள்ளுவர். அதையே இங்கு வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

ஸ்ரீ சிஷ்டகுருநாதர் ஸன்னிதி.
All pictures here taken from: orbekv.blogspot.in. (பலராமன் பக்கங்கள் ) நன்றி.
No comments:
Post a Comment