2. அருணாசலத்தில் அருணகிரிநாதர்
முத்தி நினைக்க அருள் அருணாசலம்.- மலையும் கோவிலும்.
அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் இருந்தவர். இவர் இந்த ஊரை ஆண்ட பிரபுட தேவராஜன் காலத்தில் இருந்தவர் (கி,பி.1450 ) என்பது தவிற வேறு எதுவும் நமக்குச் சரியாகத் தெரியாது. இவர் இளமையில் உலகியல் வாழ்க்கையில் திளைத்து செல்வத்தையும் உடல் நலத்தையும் இழந்து வாடி, வருந்தி கோயில் கோபுரத்தின் மேலிருந்து கீழே குதித்து உயிர் விடத்துணிந்தார் என்றும் அப்போது முருகன் இவரைக் காப்பாற்றி யருளினார் எனவும் கதைகள் வழங்குகின்றன. இவர் "சார்வ பௌம டிண்டிம கவி " என்றும் "அஷ்டபாஷா பரமேஶ்வரர் " எனவும் வழங்கப்பட்டவர் எனவும், இவர் முள்ளண்ட்ரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவருக்கு அண்ணாமலை நாதர் எனவும் பெயர் இருந்ததெனவும் வேறு வரலாறும் உண்டு!
இது எப்படி இருந்தாலும், முருகன் இவருக்கு அருளியதும், இவரை "அருணகிரி நாதா " என்று அழைத்ததும், இவரைத் திருப்புகழ் பாடு என்று பணித்தார் என்பதும் , அப்படிப் பாட முதல் அடி எடுத்துக் கொடுத்தார் என்பதும் இவர் வாக்கினாலேயே அறிந்து கொள்ளலாம்.
நியாயமாக, திருவண்ணாமலையிலிருந்தே நாம் நம் கட்டுரையைத் தொடங்கவேண்டும். ஆனால் நான் தில்லைச் சிற்றம்பலத்திலிருந்து தொடங்க எண்ணியுள்ளேன்! அதற்குக் காரணம் உண்டு!
சைவத் திருமுறைகள் தில்லைக் கோவிலிலிருந்துதான் கண்டெடுக்கப்பட்டன என்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால், திருப்புகழ் வெளிவருவதற்கும் தில்லையப்பனே காரணமாக இருந்தார் என்பது பலருக்குத் தெரியாது!
தில்லைக் கோவிலைப் பற்றிய ஒரு வழக்கு 1871ம் ஆண்டில் கடலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லைக் கோயிலில் பூஜைமுறை யுடைய தீக்ஷிதர்கள், தில்லைக் கோயிலில் வேதம் பயின்ற அந்தணர்கள் வேதவிதி வழுவாது பூஜை செய்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு பழைய பாடலை மேற்கோளாக எடுத்துக் காட்டினர். அந்த அடிகள் கீழ் வருவன:
வேத நூன்முறை வழுவாமே தினம்
வேள்வியாலெழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
(தாது மாமலர் திருப்புகழ்)
அப்போது கோர்ட்டில் எழுத்தராக வேலை செய்தது, வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர். இவர் பரம்பரைச் சைவமரபில் வந்தவர். திருத்தணிகேசனைக் குலதெய்வமாகவும் வழிபடு கடவுளாகவும் கொண்டு தீவிர முருக பக்தராக இருந்தவர். தமிழ்ப் பயிற்சி.உள்ளவர். இவர் இந்தப்பாடலின் கருத்திலும் சொல்லழகிலும் ஈடுபட்டு, இது எந்தப் பாடல் என வினவ, இது திருப்புகழ்ப் பாடலென்றும் ஏட்டிலேயே உள்ளதென்றும் அறிந்தார். அதுமுதல் 24 ஆண்டுகள் ஆராது, அயராது உழைத்து ஊரூராகச் சென்று அலைந்து ஏடுதேடி, அவற்றை ஒப்பு நோக்கி, பிழை நீக்கித் திருத்தஞ்செய்து முதல் பகுதியை 1895ம் ஆண்டில் வெளியிட்டார். இவ்வாறுதான் திருப்புகழ் வெளிவந்தது! ஆக, அதற்கும் காரணமாக அமைந்தது, கனகசபை மேவி அனவரதமாடும் கடவுள் ஜெகஜோதிப் பெருமாளாகும்! ஆதலால் நாம் தில்லையிலிருந்தே தொடங்குவோம்.
திருப்புகழ் ஏடுகளைத் தேடி முதன் முதலில் பதிப்பித்த மஹாபுருஷர்
ஸ்ரீ வ,த.சுப்ரமண்யபிள்ளை. இது 1897ல் எடுத்த படம்
விநாயகன் விரைகழல் சரணே
எந்தச் செயலுக்கும் முதலில் ஐந்து கரத்தானையல்லவா துதிக்கவேண்டும்? அருணகிரிநாதரும் அப்படித்தான் தொடங்குகிறார். முதலில் விநாயகர் துதியாகத் திருப்புகழில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. "கைத்தல நிறைகனி " என்ற பாடலை அனேகமாக அனைவரும் கேட்டிருக்கலாம். பிறபாடல்களில் பல அரிய விஷயங்களைச் சொல்கிறார் அருணகிரிநாதர்.
முருகனே அருணகிரி நாதரைப் பாடத் தூண்டியவர். எப்படிப் பாடுவது என்றதற்கு, "முத்தைத்தரு" என்று அடியும் எடுத்துக் கொடுத்தார்! எதைப் பாடுவது? இதைச் சொன்னவர் விநாயகரே என்று நன்றி மறவாமல் பாடுகிறார் நாதர்!
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பக்ஷியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரக்ஷைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ......மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பக்ஷணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
இதில் எதையெதைப் பாடவேண்டும் எனப் பட்டியல் போட்டுத் தருகிறார் ஐந்து கரத் தானைமுகத் தண்ணல்.
"1.அங்கவடி, அழகான மணி, பொன் நிறத்த சேணம், இவற்றைப் பூண்டு மிடுக்குடன் நடக்கும் மயிலாகிய குதிரையையும்;
2. கடம்பமலர் மாலையணிந்து, க்ரௌஞ்ச மலை அழியும்படி அதனை ஊடுருவிச் செல்லும்படி விட்ட வேலையும்;
3.திக்குகள் மதிக்கும்படி எழுந்துள்ள சேவலையும்;
4.பக்தர்களைக் காக்கும் சிறிய அடிகளையும்;
5.திரண்டுள்ள பன்னிரண்டு தோள்களையும்;
6.வயலூரையும்
வைத்து உயர்ந்த திருப்புகழ்ப் பாடல்களை விருப்பமுடன் பாடு "
எனக் கூறி எனக்கு அருள் செய்ததை மறவேன்.
கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், மாவு, பலவகையான ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு வகைகள், கடலை இவற்றை பக்ஷணமாகக் கொள்ளும் ஒப்பற்ற "விக்ன சமர்த்தர்" என்னும் அருட்கடலே! அருள் மலையே! வளைந்த சடையும் வில்லையும் கொண்ட பரமராம் அப்பர் பெற்ற திறலோனே! யானைக் கொம்புடைய பெருமாளே!
திருப்புகழ் செப்பென எனக்கு அருளியதை மறக்க மாட்டேன்!

நன்றி: www.agamaacademy.org.
முருகனது திருவடியையும், சக்தி வேலையும், மயியையும் கொடியையும் நினக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? இதையும் விநாயகரே கொடுப்பார் என்கிறார்!
- நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
- இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
முருகா! உனது சேவடி, வேல், மயில், கொடியாகிய சேவல் ஆகியவற்றைக் கருதும் புத்தியைக் கொடுக்கவேண்டும் என வேண்டி,
நிரம்பச் செய்யப்பட்ட அமுது, முப்பழம், அப்பம், பால், தேன், வளைந்த முறுக்கு, கரும்பு. லட்டு, நிறம், ஒளி உள்ள அரிசி, பருப்பு, அவல், எள், பொரி, இனிய வாழைப்பழ வகைகள், இளநீர் ஆகியவற்றை-
மகிழ்ச்சியுடன் தொடும் திருக்கரத்தையும், மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும் உடைய, புகழ் வளரும் ஒற்றைக் கொம்புடைய யானை முகத்து விநாயகரை வலம்வந்து-
பொருந்திய மலர்களினால் வழிபட்டு, சிறப்பான தோத்திரங்களைச் சொல்லித் துதித்தும், கைகளால் காதைப்பிடித்துக்கொண்டும், தோப்பணமிட்டும், குட்டிக்கொண்டும், அவரது தாமரை போன்ற சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை மறவேன்!
இதற்குப்பின் வரும் நான்கு அடிகளில் முருகன் அசுரர்களுடன் செய்த போர்க்களத்து நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறார்.
இங்கே, விநாயகர் வழிபாட்டில் சிறப்பம்சங்களான கைகளால் காதைப் பிடிப்பது, குட்டிக்கொள்வது, தோப்புக்கரணமிடுவது ஆகியவற்றை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!
நாமும் விநாயகனைத் தொழுது யாத்திரையைத் தொடங்குவோம்.
அருமையான தகவல் ஐயா
ReplyDelete