Friday, 18 December 2015

14. திருப்புகழ் -12. திருமாணிகுழி



14. திருப்புகழ் -12 திருமாணிகுழி



அருணகிரிநாதர்  தரிசித்த பத்தாவது தலம் திருமாணிகுழி . இதற்கு வாமனபுரி,  பீம சங்கர க்ஷேத்ரம், உதவிமாணிகுழி என்றெல்லாம் பழைய பெயர்கள் உண்டு. சோழர்காலச் சிற்பங்கள் அமைந்த மிக அருமையான  கோயில், பல புராணச் சிறப்புக்கள் உள்ள பழைய தலம். கார்த்திகை மாதம் ரோஹிணி நக்ஷத்திரத்தில் இங்கு தீபத்திருவிழா நடக்கிறது. 

ஸ்வாமி பெயர்  வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர்
அம்பாள் திருநாமம் அம்புஜாக்ஷி, மாணிக்கவல்லி, உதவிநாயகி

ஸ்வாமி சன்னதிக்குப் போகும்முன்பு. வாமனாவதாரக் காட்சிகள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.



இத்தலத்தில் ஸ்ரீ சம்பந்தப் பெருமான் பதிகம் பாடியிருக்கிறார். மாதிரிக்கு ஒரு பாடல்:

நித்தம் நியமத் தொழிலன் ஆகி நெடுமால்
குறளன்ஆகி  மிகவும்
சித்தமது ஒருக்கி வழிபாடு செய நின்ற
சிவலோகன்  இடமாம்
கொத்தலர் மலர்பொழிலின் நீடுகுல மஞ்ஞை
நடம் ஆடலது கண்டு
ஒத்த வரி வண்டுகள்  உலாவி இசை பாடு
உதவிமாணி குழியே.


வாமனாவதாரம் எடுத்த திருமால் இங்குவந்து தவம் செய்த புராணச் செய்தியை இங்கு சொல்கிறார் சம்பந்தர்.

அருணகிரி நாதர்  இத்தலத்தில் பாடிய திருப்புகழ் :

மதிக்கு  நேரெனும் வாண்மூகம் வான்மக
     நதிக்கு மேல்வரு சேலெனு நேர்விழி
     மணத்த வார்குழல்  மாமாத ராரிரு                கொங்கைமூழ்கி

மதித்த பூதர மாமாம னோலயர்
     செருக்கி  மேல்விழ நாடோறு  மேமிக
     வடித்த தேன்மொழி வாயூர லேநுகர்              பண்ட நாயேன்

பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொடே கலை
     பணைத்த தோள்களொ டீராறு  தோடுகள்        தங்குகாதும்

பணிக்க லாபமும் வேலோடு சேவலும் 
    வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
     பதைத்த வாகையும் நாடாது பாழில்                மயங்கலாமோ;

கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி 
      கலக்கி யூர்பதி தீமூளவே  விடும்                    வஞ்சவேலா !

களித்த பேய்கண  மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ  லேமேவி  மூளைகள்
     கடித்த பூதமொ  டேபாடி யாடுதல்                    கண்டவீரா !

குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு  கூடாடி வாழைகொள்
     குலைக்கு மேல்விழ வேரேறு  போகமும்               வஞ்சிதோயும்

குளத்தி லூறிய தோனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
      குழிக்குள் மேவிய வானோர்களே தொழு             தம்பிரானே !



இதில் முதல் இரண்டு அடிகளில் பெண்களின் மயக்கில் விழுவதைப் பற்றிச் சொல்கிறார்.

கொதித்து மேலெழுந்து வருகின்ற  பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள  சேனைகளைப் பொடியாக்கியும்;  குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் இவற்றைக் கலக்கியும் ; ஊர்களயும் நகரங்களையும் தீமூண்டு  எரியும்படிச் செலுத்தின வஞ்சகங்  கொண்ட  வேலனே!

மகிழ்ச்சிகொண்ட பேய்க்கூட்டங்களும், பெரிய காளியும்,  பெருங்கழுகுகளும் திரண்டு கிடக்கும் பிணங்களின்  மேல் விழுந்து, அப்பிணங்களின் மூளைகளக் கடித்துத் தின்கின்ற  பூதங்களுடன்  பாடி ஆடுவதைக்  காணும் வீரனே !

பாக்குமரக் குலைகளிடையே குரங்குகள் குதித்து விளையாடுவதால் அக்குலைகள்  அறுபட்டு வாழைக் குலைகளின்மேல் விழுகின்றன.  இத்தகைய அழகும் செழுமையும் நிறைந்த, பூக்கொடிகளைக் கொண்டுள்ள-

குளத்தில் ஊறியுள்ள தேன்களின் சாரத்தையும், மிகுந்த மகரந்தத்தையும் உண்டு உலாவுகின்ற  மீன்கள்   ஓடும்  திருமாணிகுழி  என்னும் தலத்தில் வீற்றருளும் தேவர்களும் தொழும் தம்பிரானே !

சிலம்பணிந்த சீரானபாதமாகிய சிறந்த மலரும், சீராவெனும் ஆயுதமாகிய உடைவாளும், ஒளிவீசும்  பருத்த தோள்களுடன் , தோடுகள் விளங்கும்  பன்னிரண்டு காதுகள்,, - 

பாம்பை அடக்கும் மயில்,  சேவல், வேல், கூர்மையான சூலாயுதம் , வெற்றிதரும்  ஒளிவீசும் நீண்ட வில்- ஆகிய இவற்றை நான் விரும்பித் தியானிக்காமல், பாழான எண்ணங்களிலும் செய்கைகளிலும்  மயக்கம் கொள்வது  தகுமா?  ( தகாது  என்றவாறு ).



இக்கோயிலில் உள்ள  நாயன்மார்கள் விக்ரஹங்கள்.

படங்கள்: rajiyinkanavugal.blogspot.com.  நன்றி.



No comments:

Post a Comment