Tuesday, 8 December 2015

4. திருப்புகழ் -2. தில்லை மூதூர்




4. திருப்புகழ் - 2. தில்லை மூதூர்


அருணகிரிநாத ஸ்வாமிகள்  தாம் அருள்பெற்ற திருவண்ணாமலையிலிருந்து கிளம்பி பல தலங்களுக்கும் சென்று  ஸ்வாமிதரிசனம் செய்தார். அவ்வாறு அவர் சென்ற தலங்கள் 200 என அவர் வரலாற்றையும் நூல்களையும் பலவருஷங்கள் ஆராய்ந்து வந்த தணிகைமணி அவர்கள் கூறியிருக்கிறார். அவர் தரிசித்த முறையில் தில்லைச் சிதம்பரம் 11வது தலமாகிறது. ஆனால் திருப்புகழ் வெளிவருவதற்கு தில்லையே காரணமானது என்பதால் நாம் முதலில் தில்லையைப் பார்க்கிறோம்.


தணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்கள்.அருணகிரி நாதரின் அனைத்து நூல்களுக்கும் உரை எழுதிய பெரியவர்.


சிதம்பரம் ஸ்தலத்தின் மகிமையை  பல பெரியோர்கள் வியந்து போற்றியிருக்கிறார்கள். "சதகோடி இருடியர்கள் புகழ் " என்பார் அருணகிரி நாதர்.இது பூமண்டலத்திற்கே ஹ்ருதயஸ்தானமானது. உயிர்களின் ஹ்ருதயமாகிய பெருவெளியில் பரமாத்மா திகழ்கிறார். இதுவே சித்+ அம்பரம் ஆகிய சிதம்பரம். 
ஸதா ஜனானாம் ஹ்ருதயே ஸன்னிவிஷ்ட:
என்பது ஶ்வேதாஶ்வதர  உபநிஷத வாக்யம்.
ஈஶ்வர: சர்வ பூதானாம் ஹ்ருத்தேஶே அர்ஜுன திஷ்டதி
அர்ஜுனா! ஈஶ்வரன் எல்லா உயிர்களின் ஹருதயத்தில் உறைகிறார்  என்று கீதையில் பகவான் குறிப்பிடுவது இதைத்தான்.

இதை ஞான வெளியாகவும் பார்க்கலாம்; ஞான ஒளியாகவும் பார்க்கலாம்! ஓவர இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி  என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்கிறார். "ஓங்காரத் துள்ளொளி" என்பார் அருணகிரியார். இவ்வாறு இறைவன் உறைவதால்தான் உயிர்கள் வாழ்கின்றன.

உயிர்கள் தோன்றாத நிலையில் சிவத்துள் ஒடுங்கியிருக்கின்றன. அப்பொழுது சிவம் அசலமாக இருக்கிறது. தோற்றத்துடன் சலனமும் தொடங்குகிறது; அப்போது இறைவன் உயிர்களின் ஹ்ருதயத்திலே உறைகிறான். அதனால் உலகில் எல்லாவித இயக்கங்களும் நிகழ்கின்றன. கண்ணுக்குத் தெரியாத அணுமுதல் அண்டகோளம் வரை எல்லாம் சதாசர்வகாலமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. 

இதையே நாம் நடராஜரின் ஆடல் என்று சொல்கிறோம்! ஒரு விதத்தில் பார்த்தால் சிவம் அசலம்- அங்கு எல்லாம் ஒடுங்குகின்றன.அது சலனமாகும்போது, அண்டத்தில் அனைத்தும் அசைகின்றன! இதை சக்தியின் வெளிப்பாடு என்று சொல்வார்கள். திருவண்ணாமலையில் சிவம் அசலமாக பரமகிரியாக ஓங்கி நிற்கிறது! அங்கு சக்தி சிவனில் பாதியாக தானும் அசலமாக இருக்கிறது! இங்கு தில்லையில், சிவம் சலம்-சக்தி அசலம்!  ஒருசமயம் சிதம்பரத்து தீக்ஷிதர் ஒருவர்  ரமண பகவானிடம் 'என்ன இருந்தாலும் சிதம்பரம் ஆகாசத்தலமல்லவா, அதை தரிசிக்க வேண்டாமா ' என்று கேட்டார். அதற்கு ரமணர் விளக்கினார்:

அசலனே ஆயினும் அச்சபை தன்னில்
அசலையாம் அம்மை எதிராடும்- அசல
வுருவில் அச்சக்தி ஒடுங்கிட ஓங்கும்
அருணா சலமென் றறி.

இவ்வாறு சலமும் அசலமும் பரமனின் இருபெரு நிலைகள். இரண்டையும் ஞானிகள் போற்றுகின்றனர். உலகத்திலுள்ள சகலமும்  இந்த இரண்டிற்குள் அடங்கிவிடுகிறது!

இந்த ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஸதாசர்வ காலமும் இயங்கிக்கொண்டே இருக்கும் நிலையை  சிவனின் நடனம் என உருவகப்படுத்தினர் நம் பெரியோர். நிலையின்றி அலைப்புறும் அணுமுதல் பரந்து விரிந்துகொண்டே போகும் விண்வெளிவரை ஆராய்ந்துவரும் விஞ்ஞானிகள்  இதைக்கண்டு அசந்துபோய் விட்டனர். ஸ்விட்ஸர்லாந்தில் ஜெனீவாவில் இயங்கிவரும் ஐரோப்பிய அணுவிஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தில் நடராஜர் விக்ரஹத்தையே  கொண்டு வைத்து விட்டனர்.


"Shiva's statue at CERN engaging in the Nataraja dance" By Kenneth Lu [CC BY-2.0 http://creativecommons via Wikimedia commons.
 (CERN= European Organization for Nuclear Research )

அருணையிலிருந்து தில்லை வந்தது எவ்வளவு பொருத்தம்!
தில்லையில் 65பாடல்கள் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். இங்கும் அவருக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. நடராஜரை முருகனாகவே கண்டார். இங்கு முருகப்பெருமான் அவருக்கு நடன தரிசனம் காட்டினார். பலவிஷயங்களை வியந்து போற்றிப் பாடினார்.


கனகசபை மேவும் எனதுகுரு நாத
     கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்


கனகநிற வேதன் அபயமிட மோது
     கரகமல சோதிப் ...... பெருமாள்காண்

வினவும் அடியாரை மருவிவிளை யாடு
     விரகுரச மோகப் ...... பெருமாள்காண்

விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
     விமலசர சோதிப் ...... பெருமாள்காண்

சனகிமண வாளன் மருகனென வேத
     சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்

சரணசிவ காமி யிரணகுல காரி

     தருமுருக நாமப் ...... பெருமாள்காண்

இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொ
     டியல்பரவு காதற் ...... பெருமாள்காண்

இணையிலிப தோகை மதியின்மக ளோடு

     மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.





இது வேண்டுகோள் எதுவும் இல்லாது முழுதும் துதியாக அமைந்த பாடல்! சிவனையும் முருகனையும் ஒன்றாகப் பார்த்த காட்சி!

இங்கு வள்ளி, தெய்வானை இருவரையும் கூறுகிறார்.  அமிர்தகுறமாது  என்பதால் வள்ளி பிராட்டியார்  மரணபயத்தை நீக்குவார் என்பது குறிப்பு. இணயிலி பதோகை மதியின் மகள் = தெய்வானை இணையற்றவர்; ஏனெனில் அவர் முக்திமாது! இங்கு முதல் வரியிலேயே  கனகசபையில் இருப்பது குமரகுருநாதரே என்கிறார்! சானகி மணவாளன் என ராமரைச் சொல்கிறார்!


கைத்தருண சோதி யத்திமுக வேத
     கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்

கற்புசிவ காமி நித்யகலி யாணி
     கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்

வித்துருப ராம ருக்குமரு கான
     வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண்

வெற்புளக டாக முட்குதிர வீசு
     வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்

சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
     திக்கினினி லாதப் ...... பெருமாள்காண்

தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
     சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்


சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
     தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்

துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
     சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.



இதுவும் இதேபோன்ற இன்னொரு பாடல்! இங்கு  வினாயகருக்குச் சகோத்ரன் = சகோதரன் எனக் குறிக்கிறார். இங்கு முருகன் ஆடிய எழிலைச் சொல்கிறார்!


பரமகுரு நாத கருணையுப தேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்

பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
     பகருமதி காரப் ...... பெருமாள்காண்

திருவளரு நீதி தினமனொக ராதி
     செகபதியை யாளப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானு மருவையவை பூத
     தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்

ஒருபொருள தாகி அருவிடையை யூரு
     முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்

உகமுடிவு கால மிறுதிகளி லாத
     உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்

கருவுதனி லூறு மருவினைகள் மாய
     கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண்

கனகசபை மேவி அனவரத மாடு
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.




இது இதேவிதமான துதியாகவே அமைந்த மற்றொருபாடல். இங்கும் கனகசபையில் ஜகஜோதியாக ஆடுவது பரமகுருநாதராகிய முருகன்; அவன் கருணையினால் உபதேசம் புரிவான், ஞானம் வழங்குவான்.மீண்டும் பிறவிஎடுக்காத பெருநிலை தருவான் என்கிறார். இங்கு சிவனுக்கும் முருகனுக்கும் உள்ள ஒருமையை விளக்குகிறார்.

பிறவி இல்லாத நிலை என்பது மிகவும் அரிது. உயிர்கள் கணக்கிலாத பிறவியெடுத்து  துன்பப்படுகின்றன. இதை ஒரு பாட்டில் அருமையாகச் சொல்கிறார்.


எழுகடல் மணலை அளவிடி னதிக
     மெனதிடர் பிறவி ...... அவதாரம்

இனியுன தபய மெனதுயி ருடலு
     மினியுடல் விடுக ...... முடியாது

கழுகொடு நரியு மெரிபுவி மறலி
     கமலனு மிகவு ...... மயர்வானார்

கடனுன தபய மடிமையு னடிமை
     கடுகியு னடிகள் ...... தருவாயே

விழுதிக ழழகி மரகத வடிவி
     விமலிமு னருளு ...... முருகோனே


விரிதல மெரிய குலகிரி நெரிய
     விசைபெறு மயிலில் ...... வருவோனே

எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
     யிரைகொளும் அயிலை ...... யுடையோனே

இமையவர் முநிவர் பரவிய புலியு

  ரினில்நட மருவு ...... பெருமாளே.

அப்பப்பா! எத்தனை   பிறவிகள்! பிரம்மாவும் யமனும் (படைத்தும் உயிர் பறித்தும் )அயர்ந்துவிட்டார்களாம்! பரமன் தாள்கள் தரவில்லையெனில் நமக்கு கதியில்லை!  நம் கடன் அவனிடம் அடைக்கலம் புகுவது ஒன்றுதான்! (கடன் உனதபயம் அடிமையுன் அடிமை.)என்ன உருக்கமான பாடல்!
நாம் இறைவனிடம் என்ன பெறவேண்டும்?  இதையும் சொல்கிறார்!

இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே

இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
     இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
          இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே



நாம் பெறவேண்டிய நிலை இரண்டுதான்! மனம் இறந்து நிர்விகல்ப சமாதி நிலை அடையவேண்டும்; (எல்லாம் அற என்னை இழந்த நலம் ) அல்லது, (உலகில்) சகல நிலையில் இருந்து உய்யும்படிக்கு ஞானம்  ( நல்ல புத்தியைப் ) பெறவேண்டும். இரண்டும் முருகன் அருளால்தான் வரும்! ( இக பர சௌபாக்யம் அருள்வாயே ) இதை இந்த உடல் இருக்கும்போதே அடையவேண்டும்!

 நாம் சமயப்  பூசல்களிலும் தத்துவ வாதங்களிலும் ஈடுபடாமல், தெய்வ அருளையே நாடவேண்டுமென்பது அருணகிரிநாதரின் முக்கிய உபதேசங்களில் ஒன்று. இதை இங்கு சிதம்பரத் திருப்புகழ் ஒன்றிலும் கூறுகிறார்.

அறுவகை  சமயம் முறைமுறை  சருவி 
                அலைபடு தலை மூச்சினையாகும்
அருவரு ஒழிய வடிவுள பொருளை 
               அலம்வர அடியேற் கருள்வாயே.
  
(தறுகணன் மறலி)
(ஆறுவகைப்பட்ட சமயங்கள் ஒன்றோடொன்று மாறுபட்டு மோதித் தலைவேதனையாகப்  போராடும் அருவருப்பான செயல்கள் ஒழிய, அழியாத உறுதிப் பொருளை அமைதி உண்டாகுமாறு அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.)

இதே பாடலில் ஒரு அருமையான கருத்தைச் சொல்கிறார். நாம் முருகன் கழலிணையைப் பற்றிவிட்டால், அவருக்கு நம்மீது  கனவிலும் கோபம்  வராது!

கழலிணை பணியும் அவருடன் முனிவு
          கனவிலும் அறியாப்    பெருமாளே

இவ்விதம் ஒவ்வொரு பாடலிலும் அரியபெரிய பொருள்களைச் சொல்லுகிறார் அருணகிரிநாதர். 
சிற்றம்பலக் கூத்தனுக்கும், செவ்வேட் பரமனுக்கும் வித்தியாசமில்லை என்று கூறும்  ஒரு பாடலுடன் நாம் சிதம்பர தரிசனையை நிறைவு செய்வோம்.

மகபதி புகழ் புலியுர் வாழு நாயகர்
     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
     மலைமகள் உமைதரு வாழ்வே  மனோகர     மன்றுளாடும்

சிவ சிவ ஹரஹர தேவா நமோ நம
     தெரிசன பரகதி யானாய் நமோ  நம
      திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம  செஞ்சொல்சேரும்

திரிதரு கலவி மணாளா நமோ நம
      திரிபுர மெரிசெய்த கோவே நமோ நம
      ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர்          தம்பிரானே.





அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் !- அப்பர் ஸ்வாமிகள்.

சிற்றம்பலம் மேய  முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே ---- சம்பந்தர்.

தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாமன்றே.- சுந்தரர்.

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன்  -   மாணிக்க வாசகர்.

                     திருச்சிற்றம்பலம்

குறிப்பு: சில பாடல்கள் கௌமாரம்.காமிலிருந்து எடுக்கப்பட்டவை. நன்றி.

No comments:

Post a Comment