Friday, 11 December 2015

7. திருப்புகழ் -5. திருவெண்ணெய்நல்லூர்.




7. திருப்புகழ் - 5. திருவெண்ணெய்நல்லூர்


அருணகிரிநாதர் அடுத்துச் சென்ற (3வது )தலம்  திருவெண்ணெய்நல்லூர். இது நமது வரலாற்றில் மிகவும் ப்ரசித்திபெற்ற இடமாகும். இங்குதான் சைவ நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். பரமனைப் "பித்தா " என்று ஏசி, அதை வைத்தே பாடும்படி பகவானால் அருள்செய்யப் பெற்றார்.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட் துறையுள்
அத்தா உனக்காளாயினி யல்லேன் யெனலாமே.

நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன் பெறலாக அருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட் துறையுள்
ஆயாஉனக் காளாயினி யல்லேன் எனலாமே.


சுந்தர் பெருமானுக்கெதிராக வழக்காடிய மண்டபம்.


இங்கு வந்த அருணகிரிநாதருக்கு  முருகன் மயில்மீதமர்ந்து புரியும் நடனக் காட்சி  தரிசனம் கிடைத்தது.  அதைப்பற்றி  அருமையாக ஒரு பாடல்  இசைக்கிறார்.

பலபல தத்துவ மதனையெ ரித்திருள்
     பரையர ணப்படர் வடவன லுக்கிரை
          படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப்

பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு
     பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு
          பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே

கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
     வொலிமலி யத்திரு நடனமி யற்றிய
          கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக்

கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ
     டனகச கத்துவம் வருதலு மிப்படி
          கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே

புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை
     நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர
          புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே


புனமலை யிற்குற மகளய லுற்றொரு
     கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய
          புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா

மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை
     கிழவிய றச்சுக குமரித கப்பனை
          மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே

மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
          மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.



இது மிகவும் கருத்துச்செறிந்த பாடல்.

பல தத்துவ மதனை எரித்து  இருள்  = பலவாறான தத்துவச் சேஷ்டைகளையும் அஞ்ஞான இருளையும் எரித்து,
பரை அரணம்  = சிவபிரானது அருட்சக்தி காவலாக
படர்  =  துக்கங்கள்
வட அனலுக்கு இரைபட = வடவமுகாக்னிக்கு இரையாக ஆகும்படி செய்து,
 நடனச் சுடர்   = நடன ஜோதியை
பெருவெளியில் = பரந்த பராகாச வெளியில்
கொள்   = கண்டுகொள்ளும் படியாக
இடம் மேவி  = பொருந்திய இடத்தில்

பவனம் ஒழித்து  இருவழியைஅடைத்து  =  வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை ஆகிய் இரு வசிகளை அடைத்து,
ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு  பவுரி கொளச்சிவ மய மென முற்றிய  பரமூடே =  ஒப்பற்ற  சூரியஜோதியின் பிரகாச நிலையில் அமைந்து, ஆகாச  வெளியில் நடனம் கொள்ளச், சிவமயமாய் முற்றும் பரந்த வெளியில்,,

கலகல என்று சுழலும் சிலம்பும் அழகிய திருவடியில் ஒலி நிரம்பத் திரு நடனம் இயற்றிய பொற்சபையில் உருகி நின்று, நிறைந்த  சுகானந்தக் கடலில் மூழ்குவதால்,

தேவி பார்வதி, மின்னல் ஒத்த சடையுடைய பரமசிவன் இவரோடு, (அல்லது, இவர்தம் திருவருளால் ) எப்போதும் குற்றமற்ற,உலகத் தத்துவமே நீயாகத்  தோன்றும் நிலைவந்து கூடவும், இவ்வாறு கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக்கூறப்படும் உடலை எனக்குத்  தந்தருளுக.

இழிந்தவர்களும், திருநீற்றை விலக்கித் தள்ளுபவர்களுமாகிய சமணர்களின்  உடல்களைக் கழுவில் ஏற்றிவிட்டவரும், சித்திரகவி பாடவல்ல புலமை கொண்டவன் எனச் சில வெற்றிச் சின்னங்களைப் பெற்ற (திருஞானசம்பந்தர் என வந்த ) இளையவனே !

தினைப்புனம் உள்ள வள்ளிமலையில் கிழவன் வேடம்பூண்டு வள்ளியின் அருகில் சென்று, யானை வந்து எதிர்பட, அவளை அணைந்த அழகிய  மார்பனே!

மேருமலையை வில்லாகப் பிடித்த சிவபெருமானின்  இடது பாகத்தில் இருக்கின்ற உரிமையைப்பெற்ற வளும், தருமமேபுரியும் சுககுமாரியும், பிதாவாகிய தக்கனை மழுவாயுதம்கொண்டு வெட்டுவித்த  நின்மலியாகிய உமாதேவியாரின் திருக்குழந்தையே !

மகிழ்ச்சிதரும் பெண்ணை யாற்றங்கரையில், சோலையும் மேகமும் சூழ்ந்த திருவெண்ணெய் என்ற நல்ல ஊரிலே, புகழ்விளங்க, அற்புதகரமான மயிலின்மேல் வீற்றிருந்து, திருநடனம்  புரியும் பெருமாளே !
புகழொளியான உடலை எனக்குத் தருக !

இங்கே அடிகளார், சிவயோக சாதனைபற்றிக் கூறுகிறார்,
 "உடலுமுடல் உயிருனிலை பெறுதல் பொருள் எனவுலகம்
ஒருவிவரும் அநுபவனசிவயோக சாதனை " என இதைப் பற்றி சீர்பாத வகுப்பில் சொல்கிறார்.
அதன் பயனாக, நாம் இறைவனின் நடனக்காட்சியைப் பரவெளியில் அதாவது சிதாகாசத்தில் பெறவேணும்! இதனால் உலகம் முழுதுமே இறைவனாகத் தோன்றும் ! அருணகிரியாருக்கு முருகன்  தன் நடனக் காட்சியை இத்தலத்தில் அருளினான்!  இந்த இரு நடனமும் ஒன்றுதான் என எற்கனவே தில்லையில் பாடிவிட்டார் !

இங்கு முருகனே சம்பந்தராக வந்தார் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார் .

இத்தலத்தைப் பற்றிய..இந்த ஒருபாடல் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது!




குறிப்பு : திருப்புகழ் பாடல் கௌமாரம்.காமிலிருந்து எடுத்தது, நன்றி.
pictures from: hindusanatanadharma-nalvar.blogspot.in. Thanks.



No comments:

Post a Comment