3. திருப்புகழ் - 1 முதல் பாடல்
திருப்புகழ் முதலில் பதிப்பித்த ஸ்ரீ வ.த.சுப்பிரமணிய பிள்ளை.
படம்: திருப்புகழ் அன்பர்கள், மும்பை. நன்றி.
"சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமண்யரை மிஞ்சிய தெய்வமில்லை " என்று ஒரு பழமொழி வழங்குகிறது. அதனோடு, திருப்புகழை மிஞ்சிய தமிழ் நூல் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்!
அவதாரங்களில் ராமர், க்ருஷ்ணர் , சுப்ரமண்யர் ஆகிய மூன்றும் ஒப்பற்றவை. இதில் காலத்தால் மிக முந்தியது முருகன் அவதாரம். ராமாவதாரமும் க்ருஷ்ணாவதாரமும் பூலோகத்தைக் காக்க நிகழ்ந்தவை; முருகனோ விண்ணவர்களையே காத்தவர்! "தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே ", "இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் வினோதன் " என்றெல்லாம் வியந்து பாடுவார் அருணகிரிநாதர்.
சம்பந்தரும் அருணகிரிநாதரும்
கடம்பூர் கோயிலில் சம்பந்தர் விக்ரஹம்.
தமிழில் தெய்வீக நூல்கள் எண்ணிறந்து இருக்கின்றன. அறிவில் சிறந்த பெரியோர்களும், அருளாளர்களும் இயற்றியவை மிகப்பல. அவை எல்லாவற்றிலும் சிறந்து நிற்பவை இரண்டுதான்:
1 சம்பந்தர் பாடிய திருக்கடைக் காப்பு என்னும் தேவாரம்.
2.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.
சம்பந்தர், நான்கு வயதில் அம்பாள் தந்த முலைப்பால் அருந்தி, அந்த ஞானத்தினாலே பாடத்தொடங்கினார். பகவானைப் பாடுவதே வழிபாடு, அதுவே சிறந்த நெறி என்றார். என் பதிகங்களைப் பாடுங்கள்- உங்களது வினைகள் நீங்கும் என்று ஆணையிட்டுச் சொன்னார்.இப்படி ஆணித்தரமாக உறுதியுடன் சொல்லும் நூல், திருப்புகழ் தவிற, வேறு எதுவும் இல்லை!
தமிழில் விளையாட்டாக சிவனே சொன்னதாக ஒரு வசனம் சொல்வார்கள்:
" சம்பந்தன் தன்னைப் பாடினான்; அப்பன் என்னைப் பாடினான்; சுந்தரன் பொன்னைப் பாடினான்."
அப்பரும் சுந்தரரும் அடியார்கள் என்ற நிலையிலிருந்து பாடினார்கள். அவர்கள் பாடல் அருளை வேண்டிய நிலையில் பாடியது. தம்பிரான் தோழரான சுந்தரர் தனக்கு வேண்டிய பொன்னும் பொருளும் மிகவும் ஸ்வாதீனமாக சிவபெருமானிடமே கேட்டு வாங்கினார்! சம்பந்தர் இவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர். அவர் இறைவனின் ஞானக் குழந்தை! ராஜகுமாரன் போன்றவர்! ராஜாவின் சொத்தெல்லாம் அவருடையதே! அதனால் அருட்செல்வத்தை வாரி வழங்கினார்! இதை அவரே சொல்லவும் செய்தார்! அவர் என்றுமே தன் உண்மை நிலையை மறந்ததில்லை! அதனால்தான் "ஆணை நமதே " என்று அடித்துச் சொன்னார்.
சம்பந்தர் முருகனின் அவதாரமே என்பது அருணகிரிநாதரின் கொள்கை. இதைப் பல திருப்புகழ் பாடல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கந்தரந்தாதி 29ம் பாடலில், சம்பந்தரே தெய்வம் வேறு தெய்வமில்லை என்று பாடியிருக்கிறார்.
திருப்புகழ் முருகனே அடியெடுத்துக் கொடுத்து பாடத் தொடங்கியது! அதனால் அது சத்திய வாக்காகிறது.
அருணகிரிநாதரின் உயர்ந்த நிலை
அருணகிரிநாதர் "எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும் இதய பாவனாதீத " நிலையில் இருந்தவர். அவர் பாடிய பாடல்கள் ஞானத்திலெழுந்தவை; அற்புதமானவை என்பதை அவர் அறிவார். இவ்வாறு செய்யப் பணித்தது முருகனே. இதையெல்லாம் அவரே தம் அற்புத வாக்கில் தெரிவிக்கிறார். உதாரணம்:
சித்ர கவித்துவ சத்த மிகுத்த
திருப்புகழைச் சிறிதடியேனும்
செப்பென வைத்து உலகிற் பரவத்தெரி
சித்த அநுக்கிரக மறவேனே
ஏனோரும் ஓதுமாறு தீதற
நானாக பாடி யாடி நாள்தொறும்
ஈடேரு மாறு ஞான போதக....
"உலகேழும்
யானாக நாம அற்புதத் திருப்புகழ்
தேனூற ஓதி எத்திசைப் புறத்தினும்
ஏடேவு ராஜ தத்தினைப் பணித்ததும் "
"பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திடு
பட்சி நடத்திய குக பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்குள
பத்தர்கள் அற்புத மென ஓதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழ் "
அருணகிரிநாதர் சம்பந்தரையே குருவென மதித்தார். அவர் போன்று "அமிர்த கவித் தொடை" பாடவேண்டுமென்று வேண்டினார். பாடவும் செய்தார். தந்தை மகனை முந்தியிருப்பச் செய்வதுபோல், சம்பந்தரே அருணகிரிநாதரைத் தூக்கி விட்டார் போலும்! சந்தமும் இசையும் இருவர் பாடலிலும் உள்ளன. ஆனால். அருணகிரியார் பாடல் சந்த வகையில் மேலும் விரிந்தது, எளிய நடையுடையது!
திருப்புகழின் சக்தி
தன் தெய்வீகப் பாடல்களைப் பாடுவதன் பயனையும் அவர் நன்கு
அறிந்திருந்தார்!
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
எனவும்.
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்தெரிய உறுக்கியெழு மறத்தை நிலை காணும்
எனவும் பாடியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்தால் தன் வாக்கின் சக்தியை அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்பது தெரியும்.
முதல் பாடல்
நூல்களைக் கற்பதற்கு அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு பயன்களைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கற்பதன் பயன் கடவுளை அடைவதே என்பது ஆன்றோர் கொள்கை. முருகன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடிய முதல் பாடலிலேயே இதைத் தெளிவு படுத்துகிறார் அருணகிரியார்.
- முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வதும் ...... ஒருநாளே
முத்துப் போன்ற பற்கள் வரிசையாய் விளங்கும் நகைமுகத்துடன், முத்திச் செல்வத்தை அருளுகின்ற தேவசேனைக்கு இறைவனே! ஶக்தி வேல் ஏந்திய சரவணனே! முத்திக்கு ஒரு வித்தே! குருபரனே! என ஓதி நின்ற-
முக்கண் கொண்ட பரமனுக்கு, வேதத்தில் முற்பட்டு நிற்கும் ப்ரணவத்தைக் கற்பித்துப், ப்ரம்ம விஷ்ணுக்களாகிய இருவரும், முப்பத்து மூன்று வகைத் தேவரும் உனது திருவடியைப் போற்ற,
அவுணருடன் போர்செய்யவல்ல பெருமாளே!
ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறும்படி ஒரு அம்பை ஏவியும்.
மந்தரம் என்னும் இணையில்லாத மலையை மத்தாக இட்டுக் கடலைக் கலக்கியும், ஒரு பட்டப் பகலைத் தனது சக்கரங்கொண்டு இரவாக்கியும்
பக்தனுடைய (அர்ஜுனனுடைய) தேரை நடத்திய பச்சை மேகம் போன்ற திருமால் மெச்சத்தகுந்த பொருளே!
நீ என்மீது அன்பு வைத்து என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ?
இந்த நான்கு வரிகளில், நாம் மேலே கூறிய மூன்று அவதாரங்களையும் பாடிவிட்டார் அருணகிரிநாதர்!
தாம் வழிபடு கடவுளின் தனித்தன்மை கெடாது, பிற தெய்வங்களையும் தகுந்த உயர்ந்த சொற்களினால் புகழ்ந்து போற்றும் இந்த அரிய பண்பு தமிழ் பக்தி இலக்கியத்தில் அருணகிரிநாதர் ஒருவருக்கே உரியது!
ராவணனை வதைத்த ராமாயணச் செய்தியும், பாற்கடலைக் கடைந்த பாகவதச் செய்தியும், பார்த்தனுக்குச் சாரதியாய் அமர்ந்து, பாரதப் போரில் பதினான்காம் நாளன்று ஜயத்ரதனை வதைப்பதற்காக பகலிலேயே அஸ்தமித்தது போன்ற தோற்றத்தை உருவாக்கிய மஹாபாரதச் செய்தியும் எவ்வளவு சுருக்கமாகவும் அழகாகவும் இங்கு சொல்லிவிட்டார்!
முருகன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடிய முதல் பாட்டில் தேவசேனையைச் சொன்னது மிகுந்த சிறப்புடையது. தேவசேனை தேவருலக மாது. இவரை அமுத முத்தி மாது என்பார் அருணகிரிநாதர். மேலும் இவர் க்ரியா சக்தியாகக் கருதப்படுகிறார். ஒரு சாதகனுக்கு ஞானபூஜை சித்திக்கும் வரை, கர்ம யோகத்தை விடாமல் ஆசாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது இதனால் சுட்டப்படுகிறது.
முருகனே முக்திக்கு வித்து என்பதை இங்கு தெளிவாகச் சொல்லிவிட்டார்.
அடுத்த நான்கு அடிகளில் முருகன் அவுணருடன் போர் நடத்திய களத்தில் ரணபைரவியும் அஷ்ட பைரவர்களும் கோட்டான்களும் நடத்திய ஆர்பாட்டத்தை விவரிக்கிறார்.
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
இவ்வாறு, முருகன் அருள் பெற்ற நிலையிலும் அவன் அருளையே வேண்டி நிற்கும் அடியார்களின் உயர்ந்த பண்பை இங்கே பார்க்கிறோம்.
முருகனின் திருப்புகழைப் பாட ஆரம்பிக்கும்போதே, முருகனின் அவதார காரணமாகிய சூராதி அவுணர்களை அழித்ததைச் சொல்கிறார். அத்துடன் பாரதமுழுமைக்கும் உரிய இரு பெரும் இதிஹாஸங்களையும், பகவானின் அவதாரச் சிறப்பையும் பக்தர்களின் பெருமையையும் விளக்கும் பாகவதத்தையும் பற்றிச் சொன்னது, அருணகிரிநாதரின் விசால நோக்கோடு, அவருடைய உயர்ந்த ஞான நிலையையும் காட்டுகிறது!
அருமை
ReplyDeleteஅருமை...முருகா வருக
ReplyDeleteகந்தா போற்றி
ReplyDeleteவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
ReplyDeleteMuruga! தித்தித் திருக்கு மமுதுகண் டேன்!
ReplyDeleteமுருகனுக்கு அரோகரா 🙏🙇
ReplyDelete🦜அருணகிரிநாதருக்கு அரோகரா 🦜
ReplyDeleteஉள்ளம் உருகுதையா முருகா! உன் புகழை படிக்கையிலே!
ReplyDeleteநன்றி. நல் பதிவு.