69.திருப்புகழ் 63. பெரியமடம்
காசிவிஶ்வநாதர் கோயில், கும்பகோணம்.
படம்: பா.ஜம்புலிங்கம், நன்றி.
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த இடம் பெரியமடம். இது கும்பகோணத்தின் ஒரு பகுதி. மஹாமகக் குளத்தின் வடக்கில் அமைந்துள்ள வீரசைவ மடம்.
இதேபோல் சோமேசர் கோயிலும் ( கும்பகோணம்-2 கட்டுரை பார்க்க ) கும்பகோணத்தின் ஒரு பகுதியே. ஆனால் இவை தனியாக எண்ணப்படுகின்றன, அதன்படி சோமேசர் கோயில் 60 வது தலமாகவும், பெரியமடம் 61வது தலமாகவும் ஆகிறது.
வீரசைவம் கர்நாடகப் பகுதியில் பரவிய ஒரு சைவ இயக்கம். இவர்களுக்கு பல இடங்களில் மடங்கள் இருக்கின்றன. அருணகிரிநாதர் காலத்தில் கும்பகோணத்திலிருந்த இந்த மடம் சிறந்து விளங்கியது போலும். இங்கு நாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது. அருமையான பாடல். மாதர் மயக்கொழிந்து தீக்ஷை பெறவேணும் என்று பாடுகிறார்.
தீக்ஷை பெற
அலகில் தமிழாலுயர் சமர்த்தனே போற்றி
அருணைநகர் கோபுர விருப்பனே போற்றி
அடல்மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி அவதான
அறுமுக சுவாமியெனும் அத்தனே போற்றி
அகிலதலம் ஓடிவரு நிர்த்தனே போற்றி
அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி அசுரேசர்
பெலமடிய வேல்விடு கரத்தனே போற்றி
கரதல கபாலி குருவித்தனே போற்றி
பெரியகுற மாதணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம்
பிரமனறியா விரத தக்ஷிணா மூர்த்தி
பரசமய கோளரி தவத்தினால் வாய்த்த
பெரியமட மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே.
மா யாக்கை
தனையும் அருநாளையும் அவத்திலே போக்கு
தலையறிவிலேனை நெறிநிற்க நீ தீக்ஷை தரவேணும்
மிக எளிய பாடல். பதம் பிரித்துக் கொண்டதும் பொருள் உடனே விளங்கும்!
எத்தனை அருமையான போற்றிகள் ! நாம் மேலும் நான்கைச் சேர்த்துக்கொள்ளலாம் :
பிரமனறியா விரத தக்ஷிணாமூர்த்தியே போற்றி
பரசமய கோளரி போற்றி
தவத்தினால் வாய்த்த சுகத்தனே போற்றி
யோக்யர் பெருமாளே போற்றி
சில விளக்கங்கள்
கரதல கபாலி குரு வித்தன் : கையில் மண்டையோட்டை ஏந்திய சிவபிரானுக்கு குருவாக உபதேசித்தவன்.
பரசமய கோளரி : ஜைன, பௌத்தமாகிய பர சமயங்களை அழிக்க வந்த சிங்கம். இது திருஞான சம்பந்தரைக்குறிக்கும். பெரியபுராணத்தில் சேக்கிழார் அப்படிச் சொல்கிறார். சம்பந்தர் முருகனின் அவதாரம் என்பது அருணகிரிநாதரின் கொள்கை. அதனால் சம்பந்தர் செய்ததை முருகன் செய்ததாகச் சொல்கிறார்.
பிரமனறியா விரத தக்ஷிணாமூர்த்தி : பிரம்மாவுக்கு ப்ரணவத்தின் பொருளை உபதேசித்த மூர்த்தி.
யோக்யர் : யோகியர் !
மாயாக்கை ; அருமையான உடல்.
நாம் நாளையும் உடலையும் தெய்வ சம்பந்தமில்லாத விஷயத்தில் ஈடுபடுத்தி அவமே போக்குகிறோம்.
தலை அறிவிலேனை : உத்தம அறிவு இல்லாதவன் அல்லது முதலில் அறியவேண்டியதையும் அறியாதவன்.
தீக்ஷை : குரு சீடனை சமய / ஆன்மீகப் பாதையில் ஈடுபடுத்துவது. ஒவ்வொரு சம்பிரதாயத்திலும் பலவித தீக்ஷைகள் இருக்கின்றன. பொதுவாக ஸ்பர்ஸ தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்மரண தீக்ஷை என்பார்கள். [ பறவை முட்டையின் மீது அமர்ந்து அடைகாப்பது, மீன் தன் முட்டைகளை பார்வையினாலேயே குஞ்சு பொரிப்பது, ஆமை முட்டையைத் தரையில் இட்டு அதை நினைத்தே குஞ்சு பொரிப்பது என்பதை இதற்கு உதாரணம் சொல்வார்கள் .] மன்த்ர தீக்ஷையும் உண்டு; ஸன்யாச தீக்ஷையும் உண்டு..
சமயப்பிரிவுகளில் இது விதவிதமான சடங்காக நடத்தப்படும். தீக்ஷையும் சமயக் கொள்கை பற்றியதாகவே இருக்கும்.
ஞானிகள் இந்த மாதிரி தீக்ஷைகளைக் கையாள மாட்டார்கள். கொள்கைச் சிக்கலில், சழக்கில் ஈடுபடமாட்டார்கள். அருணகிரியார் முருகனிடமே தீக்ஷை கேட்கிறார். இது மிகவுயர்ந்த நிலை. இதை இங்கே ஞானம் என்ற பொருளிலேயே எடுத்துக்கொள்ளவேண்டும் . ஞானோபதேசம் அருள்வாயே என்றுதான் அவர் கேட்பார்.
தி இந்து. மே 9, 2015. நன்றி