Wednesday, 1 February 2017

50. இரு அரிய அவதாரங்கள் -4


50.இரு அரிய அவதாரங்கள் -4


Child Sambanda- 12th Century Chola Bronze.
stolen from India.[National Gallery of Australia, Canberra ]

அதர்மத்தின்  ஆதிக்கத்தைத் தடுத்து, அதர்மம் செய்பவர்களை  அடக்கி, மீண்டும் தர்மம் தழைக்கச் செய்வதுதான் அவதாரத்தின் நோக்கமும், அவதாரங்களின் பணியாகவும் இருக்கிறது.

அவதார மஹிமை

ஓரு அவதாரம் நிகழும்போது அதைப் பெரும்பாலும் மக்கள் உணர்வதில்லை. ஸ்ரீ ராமர் அவதாரம் என்பது சில (7)ரிஷிகளுக்கே தெரிந்திருந்தது. ' 'மாயையினால் நான் எல்லோருக்கும் புலப்படுவதில்லை.என்னைச் சாதாரண மனிதன் என்றே எண்ணுகிறார்கள் ' என்று பகவானும் கீதையில் சொல்கிறார். (7.24,25)
அதே சமயம் பலரையும் அவதார புருஷர் என்னும் பாமர வழக்கமும் இருக்கிறது. தற்காலத்தில் பலர் தங்களை அவதாரம் என்றே விளம்பரம் செய்துகொள்கிறார்கள்.
நாம்  பாரம்பர்யமாக அவதாரம் என்று மதிப்பவர்கள் தர்ம சம்பந்தப்பட்ட செயல்களையே செய்தவர்கள்- முக்கியமாக, வேத தர்மத்தைக் காத்தார்கள். ஏனெனில் வேதம் தான் தர்மங்களுக்கெல்லாம் மூலம்- ஆதாரம். அசுரர்களையும் பொல்லா அரசர்களையும் வதைத்தார்கள் என்று சொன்னாலும், அவர்களும் நல்ல கதியே அடைந்தார்கள்.


முருகனும் சம்பந்தரும்

இந்த அவதாரங்களில் மிகப் பெரியது ஸுப்ரமண்யர் அவதாரம். தேவர்களைச் சிறையிலிட்டு, அவர்கள் உலகத்தையே பிடித்திருந்த சூராதியவுணரை முருகன் சம்ஹாரம் செய்தார். தேவர்கள் பிழைத்ததனால், பூவுலகில் மக்கள் செய்யும் வேள்விகள் முறையாகப் பலன் தரலாயின. வானவர்க்கும் மானிடர்க்குமிடையேயான பரஸ்பர தொடர்பு ப்ரஜாபதி வகுத்த வழியிலேயே தொடரலாயிற்று.தேவேந்த்ர லோகம் பிழைத்தது. வேத நெறி தழைத்தது.

முருகன் செய்ததை தமிழ்  நாட்டில் மீண்டும் செய்தார் ஞான சம்பந்தர். சமணர், பௌத்தர்களால் ஏற்பட்ட  தெய்வ நம்பிக்கை யில்லாத, அவைதிக மந்திர-தந்திர குழப்பங்களை நீக்கி, தடைகளை விலக்கி, வேத நெறியிலான தெய்வ வழிபாடு என்ற ராஜபாட்டையை மீண்டும் நிறுவினார். நமக்கு ஒவ்வாத முறைகளிலிருந்து  தமிழ் நாட்டை மீட்டார். சமய குரவர்களில் இதைச் செய்தது சம்பந்தர் ஒருவர்தான்! மற்ற பெரியவர்களும் நாயன்மார்களும் தாங்கள் தெய்வ சான்னித்யம் பெற்றதோடு தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வழி காட்டினார்கள். சம்பந்தர் ஒருவர்தான் நாடு தழுவிய அளவில்  மாற்றம் செய்து, அனைவருக்கும் வழிகாட்டினார். பிற்கால சரித்திரத்தின்  போக்கையே மாற்றினார். அவருக்குப்பின் வேத நெறியும் தழைத்தது; சைவமும் புது பலம் பெற்றது. தெய்வத் தமிழும் வளர்ந்தது.





நமது அருணகிரிநாதர் ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறார். இதைத் திருப்புகழிலும் கந்தரந்தாதியிலும் அடித்துச் சொல்கிறார். சந்தேகத்திற்கே இடமில்லாத வார்த்தைகளில் சொல்கிறார். ஓரு இடம் பாருங்கள் :










கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை              கனபாரக்

களப பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள்               கழுவேறக்


குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை                குலையாவான்

குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய                            பெருமாளே.




யாவராலும் மதித்துப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை எவரும் காணாதபடி மறைத்து, (சீகாழிப்பதியில்) வந்த கவுணிய குலத்தினருள் சிறந்த வேதியனாய் வந்து,



உமாதேவியின் மிக்க பாரமான, கலவைச் சாந்து அணிந்த கொங்கையில் ஊறிய பாலை உண்ட குழந்தையாய், மிக்க பாடல்கள் பாடுவதில் யாவரினும் மேம்பட்ட கவிஞனாய்த் திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வீண் வாதுசெய்ய வந்த சமணர்கள் கழுவிலேறவும், 



அவர்கள் ரத்தம் ஆறாகப் பெருகவும், வீதிகளில் எல்லாம் பூமாரி நிரம்பவும், 

திருநீற்றை யாவரும் இடும்படிச் செய்து, மனது கோணலடைந்து. சமண்சார்பாயிருந்த  பாண்டியனுடைய  கூன்  பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், சமண் பகை அழியவும்,


வானுலகில் குடிபுகுவீராக எனச், சிறந்த மதுரைப் பதியில் முன்பிருந்த சமண் நிலையை மாற்றி , வேதபுரி என்னும்படியாக  அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து,  திருக்குட வாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வுகொண்டு வீற்றிருக்கும் பெருமாளே !


இவ்வாறு, சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சம்பந்தர் செய்ததை முருகன் செய்ததாகவே சொல்கிறார். மேலும் முருகன் செய்ததையும் சொல்கிறார்:


சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு         துணையாய்மேல்

துறவு மாயற மாய்நெறி யாய்மிகு

விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு      சுடர்வீசும்


பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு     
 பரமாகும்

பரம மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு          பயனோதான்




வேதமாய், இயல் தமிழாய், அதன் மிகுதியான பகுதியாய், பலவுமாய், அனேக மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தத்தை உடையதாய், அடிப்படையாய், நடுவாய், மிக்க நுண்ணியதாய், மேலும்



எல்லாவற்றையும் விட்ட நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய், மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள்  நிரம்பிய ஞானிகள் அனுபவிக்கும் சுகப்பொருளாய், மேகமாய் மழையாய், ஏழுவகைச் சுடர்களை வீசும் சூரிய மூர்த்தியாய்,



சந்திரனாய், நக்ஷத்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய், ஜோதியாய், உண்டாகின்ற பகலும் இரவும் இல்லாததாய்,நிலைத்துள்ளதாய் உள்ள, மிக்க மேலான பொருளான -



மஹாமாயையின் உண்மை நிலையை, எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து, அதை இங்கனம் உலகுக்கு எடுத்து ஓதுமாறு நீ திருவருள் புரிந்தாய். இந்தப் பாக்கியம் நான் முற்பிறப்புக்களில் செய்த தவத்தின் பயன்தானோ !










இங்கு சொல்லும் முக்கியமான கருத்து, மாயை  உலகை பலவாறு காட்டுகிறது. அது கடத்தற்கு அரியது. குரு உபதேசமின்றி இது நடவாது. இங்கு முருகனே  குருவாக வந்து பகர்ந்தான்.  அதை அருணகிரிநாதர் உலகுக்கு எடுத்து ஓதினார்.







Saraswati Mahal Art Gallery.
Photo from: Frontline

[ இந்தப் பகுதி, "உருவாய் அருவாய் உளதாய் இலதாய் " என்று வரும் கந்தரனுபூதிப் பாடலை நினைவூட்டுகிறது ! ]

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால், இங்கு முருகன் செய்ததாகச் சொன்ன தனைத்தும் சம்பந்தர் செய்ததுதான் ! சுருதியின் உண்மைகளை இயல் தமிழில்  384 பதிகங்களில், 4000க்கும்  அதிகமான பாடல்களில் பாடினார்.  எல்லோரும் உய்யும்படிக்கு வழிசொன்னார்.  குருவாக இருக்கிறார் ! "வள்ளல் குரு ராயன் வாதுவென்ற சம்பந்தன் " என்று கண்ணுடைய வள்ளலார்  எழுதிய ஒழிவில் ஒடுக்கம் என்ற நூலின் வாழ்த்துப் பாடலில் வருகிறது.. இதற்கு வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் எழுதியுள்ள விளக்கத்தைப் பார்த்தால் சம்பந்தர் எத்தகைய மஹத்தான குரு என்பது தெரியும்.

மதுரையில் சம்பந்தர் 

இப்படி ஒன்று, இரண்டு அல்ல, பலப்பல பாடல்களில் முருகனே சம்பந்தர் என்று சொல்கிறார்.


பீலி வெந்துய ராலி வெந்தவ
     சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
      பீதி கொண்டிட வாது கொண்டரு           ளெழுதேடு


பேணி யங்கெதி ராறு சென்றிட
     மாற னும்பிணி தீர வஞ்சகர்
      பீறு வெங்கழு வேற வென்றிடு               முருகோனே




மயிற்பீலி வெந்து, உயர்ந்த கமண்டல நீரும் கொதித்து,நோயைக் குறைக்க வீசிய அசோகக் கொழுந்தும் வெந்து.அந்த அவமானத்தினாலே  ஊமைகள் போல் வாயடைத்துப்போன சமணர்கள்நெஞ்சிலே பயம் அடையுமாறு,அவர்களோடு வாது செய்து [ வாழ்க அந்தணர் என்று]  அருள்வாக்கு எழுதப்பட்ட ஏடு,யாவரும் போற்ற அங்கு வைகையாற்றில் எதிர் ஏறிச் செல்லவும்,பாண்டியனும் (திருநீற்றின் மஹிமையால்) உடல் நோய் அகலவும்,வஞ்சகச் சமணரும் உடல்கிழிய கழுமரத்தில் ஏறவும்,வெற்றிகொண்ட முருகோனே !

இங்கு  சம்பந்தர் மதுரையில் நிகழ்த்திய செயல்கள் முருகனின் செயல்களாகக் கூறப்படுகின்றன ! முருகனே சம்பந்தராக வந்தது.

பஞ்சவனீடு கூனு மொன்றிடு தாபமோடு
பஞ்சர வாதுகூறு                        சமண்மூகர்
பண்பறு பீலியோடு வெங்கழு வேறவோது
பண்டித ஞான நீறு                     தருவோனே 

வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே

அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த
அரிய கதிர் காமத்தில்       உரியாபிராமனே

புழுகொழுகு காழி கவுணியரில் ஞான 
புனிதன் என ஏடு                           தமிழாலே
புனலில் எதிர் ஏற சமணர்  கழுஏற
பொருத கவிவீர !                         குரு நாதா

மதுராபுரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனையே நிமிர்த்த             தம்பிரானே

சீல வெண்பொடி யிடாத வெஞ்சமணர்
மாள வெங்கழுவில் ஏறு மென்றுபொடி
நீறிடுங்கமல  பாணி சந்த்ரமுக    கந்தவேளே


பங்க வீரியர் பறிதலை விறகினர்
மிஞ்சு  பாதகர் அறனெறி  பயனிலர்
பந்த மேவிய பகடிகள் கபடிகள்           நிலை கேடர்

பண்பிலாதவர் கொலைசெயு மனதினர்
இங்கெணாயிரர் உயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய பெருமாளே !

கனசமண்  மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு              பெற வேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்தராய
கவுணியர் வேந்த  தேவர்                  பெருமாளே

திறத்தினால் பல சமணரை எதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை இனிதொடு
திருத்தமாய்ப் புகழ் மதுரையிலுறை தரும்  அறுமுகப் பெருமாளே
(பழிப்பர் வாழ்த்துவர்)


புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திரு நீறிடவே
புக்க அனல்வய மிக ஏடு உய்யவே        உமையாள்தன்

புத்ரன் என இசைபகர் நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமானுருவாய்      வருவோனே
( நெய்த்த கரிகுழல் )




இப்படி திருப்புகழில் பலப்பல இடங்களில் பாடியிருக்கிறார். ஒரு புத்தகமே எழுதலாம்.






13th century bronze statue of Sambandar from a private Parsi Estate collection
auctioned by Pundole's. Picture from New York Times



இது சேவல் விருத்தத்தில் பாடுவது: -

அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற்
   பனமுறைத் ததமி கவுமே

வமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித்
   தவனிமெய்த் திட அருளதார்

சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச்
   சிவிகைபெற் றினிய தமிழைச்

சிவனயப் புறவிரித் துரைசெய்விற் பனனிகற்
   சேவற் றிருத்து வசமே.


அரிய கொற்கையன் : 
அரிய கொற்கைப் பதியுள்ள பாண்டிய நாட்டுக்கு அரசனாகிய பாண்டியன்
உடல் கருகும் வெப்பகையை உற்பனம் உரைத்து :
(கூன் ) பாண்டியனுடைய உடல் கருகும்படி வந்த வெப்புக் காய்ச்சலின் மூல காரணத்தை உரைத்து-
( பத்தாயிரம் அடியார்கள் இருந்த சிவ மடத்திற்கு  சமணர்கள் தீ வைத்தனர். இதுவே பையச்சென்று பாண்டியனை வெப்பு நோயாகப் பற்றியது.]
அதம் மிகவும் மேவும் அமணரைக் கழுவில் வைத்தவரும் : 
கெடுதல்கள் பலவும் செய்த சமணர்களைக் கழுவில் வைத்தவரும்,
மெய்ப்பொடி தரித்து : 
அஞ்ஞானத்தை அழித்து மெய்ஞானம் தரவல்லது திரு நீறு. இதுவே மெய்=உண்மையான சாதனம். இதை எல்லோரும் தரிக்குமாறு அருள்செய்தார். மந்திரமாவது நீறு எனப் பதிகம் பாடினார்.
அவனி மெய்த்திட அருளதார் : 
இவ்வாறு    உலகம் உய்ய உண்மையைக் காணும்படி அருள் செய்தார்.
சிரபுரத்தவதரித்த :
சிரபுரம் என்னும் சீகாழியில் ஞானசம்பந்தராக அவதரித்தார்.
அமுதத் தினமணிச் சிவிகை பெற்று :
சிறிய வயதிலேயே  கால் நோவ நடந்து சென்று தலங்களை தரிசித்த சம்பந்தருக்கு இரங்கி, இறைவன்  முத்துச் சிவிகை  கொடுத்தருளினார். இது நடந்த தலம் நெல்வாயில் அரத்துறை.
இனிய தமிழை சிவன் நயப்புற விரித்துரை செய் விற்பனன் : 
இனிமையான தேவாரத்தை சிவபெருமான் விரும்பிக் கேட்கும் வண்ணம் விரிவாக உரைத்த செந்தமிழ்ப் புலவன்.
சேவல் திருத் துவஜமே :
அப்படிப்பட்டவனுடைய அழகிய கொடியாகிய சேவல்.

[ சம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றினார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேணும். சம்பந்தருடன் வாதில் தோற்றுப்போன சமணர்கள், அரசன் முன்னிலையில் தாங்கள் செய்த வாக்குப் பிரமாணத்தின் படி, தாங்களாகவே கழுவேறினர்.]


[சம்பந்தர் செய்தது  சேவல் கொடியுடையான் செய்தது என்கிறார் ]

தீவிர சைவர்களில் சிலர் சிவபெருமானோ, முருகனோ அவதாரம் எடுத்தார் என்று சொல்வதை விரும்ப மாட்டார்கள். பிறவா யாக்கைப் பெரியோன், பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்றெல்லாம் சொல்வார்கள். அபரசுப்ரமண்யர்களுள் ஒருவர் சம்பந்தரை அதிஷ்டித்தார் என்பதுபோல் சொல்வார்கள். அவதாரம் சாதாரண , கர்ம வசப்பட்ட பிறப்பல்ல.  உயிர்களிடம் உள்ள அளவற்ற கருணையால் , கடவுளின் சுய இச்சையால் நிகழ்வது.. அதனால் பகவானின் பெருமை குறையாது. ஒரு குழந்தை சேற்றில் விழுந்துவிட்டால் தாயோ தந்தையோ அந்தக் குழந்தையை எடுப்பார்கள். அந்த சேறு அவர்கள்  தன்மையையோ தகுதியையோ  குறைத்துவிடுமா என்ன ? அவதாரத்தின் நிலையும் இதுதான். இறைவனின் அலகிலா விளையாட்டில் இதுவும் ஒரு நிலை !



S.Sundaravadivel&Co.


சம்பந்தருக்குமேல் தெய்வமில்லை

அருணகிரிநாதர் சம்பந்தர் முருகனின் அவதாரம் என்று சொல்வதோடு நிற்கவில்லை. சம்பந்தரே தெய்வம்- அவருக்கு மேல் வேறு  தெய்வமில்லை என்று துணிந்து சொல்கிறார். இது கந்தர் அந்தாதியில் 29வது பாடல் :

திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே 


இதைப் பின்வருமாறு பதம் பிரித்துக்கொள்ள வேணும்.


திகழும் அலங்கல் கழல் பணிவார் சொற்படி செய்ய
(ஓ) தி கழுமலம் கற்பகவூர் செருத்தணி செப்பி வெண்
(பூ) தி கழும் மலம் கற்பு அருளும் என்னா அமண் சேனை
(உபா) தி கழு மலங்கற்கு உரைத்தோன் அலது இல்லை தெய்வங்களே
.


விளங்குகின்ற  மாலை சூட்டிய  தனது திருவடியை வணங்குகின்ற அடியார்களின் திருவாக்கின்படி  நடக்க,+

தேவாரத் திருப்பதிகங்கள் ஒதி  கழுமலம், கற்பகவூர், செருத்தணி ஆகிய தலங்களைத் துதித்து, #
அணியும் வெண்திரு நீறு மும்மலத்தையும் போக்கும். முழுப்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடைமையும் கொடுக்கும் என்று நினைக்காத சமணர் கூட்டங்களை,
வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி, கலக்கம் அடைந்து அழியும்படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய  முருகக் கடவுள் அன்றி வேறு ப்ரத்யக்ஷ தெய்வங்கள் கிடையாது.


+சம்பந்தர் பதிகத்தில் ஒவ்வொன்றின் இறுதியிலும்  ஃபலஶ்ருதியாக 'இதைப் படித்தால் இந்த நன்மை விளையும்' என்று அருளியிருக்கிறார். இதுவே இங்கு குறிப்பிடப் படுகிறது.

# கழுமலம் : இது சம்பந்தர் அவதரித்த சீர்காழித்தலம்.
கற்பகவூர்  : அமராவதி. தேவர்களின் ஊர். முருகன் அவதாரம் அமராவதி காக்க நிகழ்ந்தது. " அமராவதி புரக்கும் அடல் ஆண்மைக்காரன் ".
செருத்தணி  : திருத்தணி. இங்கு முருகன் கல்யாண மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். வள்ளியை மணம் செய்து வந்து அமர்ந்த ஊர்.
தினமும் காலையில் இந்த மூன்று ஊர்களின் பேரையும் சொல்லி விபூதி  அணிய வேண்டும். [மேலும் ஆறுமுகம் என்று ஆறுமுறை கூறவேண்டும்.]
அப்போது, " நீறதிட்டு நினைப்பவர் புத்தியில்  நேசம் மெத்த அளித்தருள் சற்குரு ".

மேலும், 56ம் பாடலில் பாண்டியன் கூன் நிமிர்த்தியதை முருகன் செய்ததாகச் சொல்கிறார். சம்பந்தர் பாடிய தேவாரம்  ருக்வேத சாரம் என்பதை 96ம் பாடலில் சொல்கிறார்.



இவ்வாறு சம்பந்தரின் அவதார ரகசியத்தை நமக்கு சரியாகக் காட்டியருளினார்  அருணகிரிநாத ஸ்வாமிகள். முருகனும் சம்பந்தரும் வைதீக நெறி சார்ந்த சமயங்கள்  தழைக்க வழிவகுத்தார்கள்.

வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளல் மலர்த்தாள் தலை.

செக்யூலரிசம் என்ற பெயரில்  பொதுவில் நாஸ்திகமும், குறிப்பாக வைதீக சமயத்திற்கு- ஹிந்து மதத்திற்கு எதிரான போக்கும் [மிலேச்ச மதங்களுக்கு சாதகமான பேச்சும் ] மலிந்துள்ள தற்காலத்தில்  இந்த இரு அவதாரங்களின் வழிபாடு ஹிந்து சாதகர்களுக்கு சக்தியளிக்கும் என்பதில் சந்தேஹமில்லை.

ஒரு நாலு
சுருதி வழிமொழி சிவகலை அலதினி
யுலக கலைகளும் அலம் அலம்.

ஸ்ரீ அருணகிரிநாதர் [குருதி கிருமிகள் -வயலூர் திருப்புகழ்.]
.




2 comments:

  1. அருமையான விளக்கம். சந்தோஷம்.

    ReplyDelete