Tuesday, 21 February 2017

63.திருப்புகழ் 57.திருவிடைமருதூர் -2


63.திருப்புகழ் 57.திருவிடைமருதூர்-2


An old view.

இது மூவர் தேவாரமும் பெற்ற தலமாதலால், ஒவ்வொருவர் பாடலும் ஒன்று பார்ப்போம்.

சம்பந்தர்
பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர் சாமவேத மோதினீர்
எங்குமெழிலார் மறையோர்கண் முறையாலேத்த விடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

{2ம் திருமுறை]

அப்பர்

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளு மிடைமரு தன்கழல்

செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.

[5ம்திருமுறை ]

சுந்தரர்

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே



thamil.co.uk

இங்கு நமது ஸ்வாமிகள் மேலும் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். எல்லாம் அருள் வேண்டுவதாகவே இருக்கின்றன.

வழிபட அருள்பெற

கலக அசுரர்கிளை மாள மேருகிரி
தவிடு படவுதிர வோல வாரியலை
கதற வரியரவம் வாய்வி டாபசித           ணிந்தபோகக்

கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
பரவு மமரர்குடி யேற நாளும்விளை

கடிய கொடியவினை வீழ வேலைவிட        வந்தவாழ்வே



அலகை யுடனடம தாடு தாதைசெவி
நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்
அடவி தனிலுறையும் வேடர் பேதையைம       ணந்தகோவே

அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
கருது குமரகுரு நாத நீதியுள
தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர்                   தம்பிரானே.


மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி
வசன முடையவழி பாடு சேருமருள்                          தந்திடாதோ


எளிய பாடல். அவுணர்களை வதைத்ததைச் சொல்கிறார். சிவபிரானுக்கு உபதேசித்ததைச் சொல்கிறார்.  சம்பந்தராக வந்து அமணரைக்  கழுவேற்றினதைச் சொல்கிறார். இப்படி யெல்லாம் செய்து இடைமருதில் உறையும் நம் பெருமான் அவருக்கு அருளவேண்டும் என்று வேண்டுகிறார். எப்படி ?  இனிமையான , எல்லா வகையான பாடல்களும் பாடி, வீட்டின்ப ஞானம் மிகுதியும் உண்டாக, அருமையான செந்தமிழ் ஒலியினாலே, அறிவார்ந்த மொழிகள்  நிறைந்த வழிபாட்டு நெறியிலே சேரும்படியான அருளைத்தரவேண்டும் என்று வேண்டுகிறார்.
இங்கு அமரர்கள் மீண்டும் நல்வாழ்வு பெற்றதனால் வேத நெறி தழைக்கும் என்பதை  வேதநெறிபரவும் அமரர் குடியேற  என்ற தொடரில் சொல்கிறார். சுப்பிரமண்யரே  வேத  நெறியைக்  காக்க வந்த கடவுள். அதை முருகனாகவும் செய்தார்; சம்பந்தராகவும் செய்தார்.

தவ நெறி பற்றி நிற்க

படியை யளவிடு நெடிய கொண்டலுஞ் சண்டனும்
தமர  சதுமறையமரர் சங்கமுஞ் சம்புவும்

பரவரிய நிருபன்  விரகன்  சுடுஞ்சம்பனன்       செம்பொன்மேனிப்

பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந்        துன்றுமூலச்

சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென்         றுய்ந்துபாடித்

தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்

தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ்           சிந்தியாதோ

கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங்         கண்டுசேரக்

கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந்        துங்கவேலா


அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந்                தங்குமார்பா

அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்

றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந்            தம்பிரானே. 


பூமியைத் தனது காலால் அளந்த  மேக நிறம் கொண்ட பெரிய திருமாலும், யமனும், ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தேவர் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு  அரிய அரசன், சாமர்த்திய முள்ளவன், சுட்டழிக்கும்  சம்பத்து உடையவன் ( அழித்தல் தொழிலுக்கான மூர்த்தி ) செம்பொன் போன்ற மேனியை உடையவன் -



பரமன், அழகான பாம்புகளையும் கங்கையையும், லக்ஷ்மிதேவி வாசம்செய்யும் தாமரையையும், சந்திரனையும், கொன்றைப்பூவையும், பருத்த மகுமிழம் பூவையும்,அறுகம் புல்லையும்,பெருமைவாய்ந்த தும்பை மலரையும்,சிற்றகத்தி மலரையும், 



நெருங்கிப் ப்ரதானமாக இருக்கின்ற சடைமுடியில் அணிந்துள்ள நல்ல சங்கரன் வணங்குகின்ற குமரன், ஆறுமுகத்தவன், இனிமைதரும் சொற்களை உடையவன், சரவணப்பொய்கையில் வந்த முதல்வன், தேவ ஸேனாபதி, கந்தன் என்று,  கடைத்தேறும்படிப் பாடி,



குளிர்ந்த சொற்களைச் சொல்லும் வழி எதிலும் நான் போகவில்லை; ஒரு தினையளவு பகிர்வதற்கும் ஈகைக்குணம் இல்லை; அப்படிப்பட்ட எனக்கு, தவ வழியில்  நின்று, நல்லபடி சீர் பெறும் ஒரு உறுதியான எண்ணம் உதிக்காதா?

[அப்படிப்பட்ட எண்ணம் உதிக்க உன் அருள் வேண்டும். ]


மந்திரமும் தந்திரமும் பயின்றுவந்த அசுரர்களின் உடலை கடுகுபோலத் தவிடுபொடி யாகப் பிளந்தும், கடல் கதறி நிரம்ப ரத்த ஆறு  பொங்கி ஓட, அப்போர்களத்தைக் களிப்புக்கிடமானதாக மாற்றி,



கழுகும் நரியும், காக்கையும் கருடனும் அங்கு வந்து கூடி நிற்கவும், பேய்கள் பலவும் கூடிப் பறைகொண்டு  இசை யெழுப்பி, ஆசையுடன் அங்குள்ள நிணத்தைப் புசிப்பதைப்பார்த்து மகிழும் பரிசுத்த வேலனே !



வெற்றி விளங்கும்  திருவிடைமருதூரில் வந்து பொருந்தியிருக்கும் குணத்தில் சிறந்த குருபரனே !குமரனே !யானைகள் போய்த்தூங்கும் வள்ளிமலைக்காட்டில் வாசம் செய்த சந்தனமணிந்த வள்ளியை அணைந்த திருமார்பனே !



சிவந்த ரத்னங்கள் ஒளிவீசும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும் கருணை பொழிவதுமான திருவடிகளின் அழகே  நமக்குப் பற்றுக் கோடாகும் என்று  உறுதியாக உணர்ந்து, அந்த நன்னெறியையே  பின்பற்றி தேவர்களும் தொண்டு செய்யும் தம்பிரானே !

தவநெறியில் பண்படும் திடமான சித்தம் அமையாதா?

[பண்படும் கங்கணம் = ஒரு விஷயத்தில் ஒருவன் திடமாக இருந்தால் 'இவன் கங்கணம் கட்டிகொண்டிருக்கிரான்" என்று சொல்கிறோம்.]
முழுதும் வேண்டுகோளான அழகிய பாடல்.







சிவஞானம் பெறவேண்டும்

எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி
யிடர்கெடஅசு ரேசர் சேனைமு            றிந்துபோக

இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட
ரணமுககண பூத சேனைகள்              நின்றுலாவச்

செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
செயசெயமுரு காகு காவளர்                கந்தவேளே

திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
திருவிடைமரு தூரில் மேவிய               தம்பிரானே.


 நாயேன்

மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின்

விதரணசிவ ஞான போதகம்              வந்துதாராய்.




ஏழு மலைகளும் நிலைபெயர்ந்து ஓட, கடல் மொகுமொகுவென கலங்கி அலைவீச, மண்ணுலகத்தவரின் துன்பங்கள் கெட, அசுரத் தலைவர்களின் சேனையெல்லாம் தோற்று ஓடவும் -



தேவர்கள் சிறையிலிருந்து வெளிவரவும், நாய், நரி, கழுகுகள், கருடன் மேலே வட்டமிட, போர்க்களத்தில் பூதகண சேனைகள் நின்று உலவவும் -



செழுமைவாய்ந்த [பிணிமுகம்] என்னும் யானை மீதும், நீல நிறமுள்ள அழகிய புதிய மயில்மீதும் ஏறுகின்ற பராக்ரமசாலியே ! ஜய ஜய முருகா! குஹா! புகழோங்கு கந்தவேளே !



அலைகள் ஒன்றோடொன்று மோதிக் கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாய்கின்ற  வயல்களும் குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் தம்பிரானே !



நாய்போன்ற ஈனபுத்தியுடைய அடியேன் -



நெருங்கிவரும் மும்மலங்களின்  மாயைவசத்தால்  என் அறிவானது அடைந்துள்ள கலக்கம்  முற்றும் அழிய,  கடவுளே ! சிவஞான உபதேசத்தை  நீ வந்து உனது கொடையாகத்   தந்தருள்வாயாக !
 நாம் எவ்வளவு சாதனைகள், முயற்சிகள் செய்தாலும் தெய்வ அருள் இல்லாமல் எதுவும் நடக்காது, அந்த அருளையே எப்போதும் நாடி நிற்பது அருணகிரிநாதரின் இயல்பு.

thanks: thooddam.blogspot.in

No comments:

Post a Comment