Monday, 6 February 2017

51.திருப்புகழ் 45. வலிவலம்


51.திருப்புகழ் 45. வலிவலம்.



அருணகிரி நாதர் அடுத்து தரிசித்த 44 வது தலம் வலிவலம். வலியன்  அல்லது கருங்குருவி  வழிபட்டு நற்கதி பெற்ற தலம். ["கருங்குருவிக்கு அன்று அருளினாய் போற்றி " என மாணிக்கவாசக ஸ்வாமிகளும் பாடியிருக்கிறார். இது எந்த வரலாறு என்பது தெரியவில்லை.]
ஸ்வாமி பெயர் மனத்துணை நாதர்- ஹ்ருதய கமல நாதர். அம்பாள் பெயர்  அங்கயற்கண்ணி/வாளையங்கண்ணி/ மத்யாயதாக்ஷி.
சிறிய தலமானாலும் மூவர் பெருமக்களாலும் பாடப்பெற்ற தலம்.

சம்பந்தர்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே


[இது கணபதி அவதாரத்தைச் சொல்லும் பாடல்.]


தாயும்நீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்
ஆயும்நின்பா லன்புசெய்வா னாதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னு ளைவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே



அப்பர்

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
    நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
    மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்கா
ண்
    தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே


சுந்தரர்

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
    கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
    தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
    கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே






அருணகிரிநாதர்  இத்தலத்தில் பாடிய ஒரே பாடல் கிடைத்திருக்கிறது.

எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன்                மருகோனே

எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள்                       புதல்வோனே


வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
வடித்த வேல்விடு கரதல ம்ருகமத                                புயவேளே

வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகருறை                                பெருமாளே.



பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
மசட்ட னாதுலன் அவமது தவிரநி                                 னடியாரோ


டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
 யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
 யரத்த மாமணி யணிகழ லிணைதொழ                     அருள்தாராய்

 நீ செலுத்திய வேலாயுதம் குறி தவறாது என்பது போல, ராவணனுடைய ரத்ன முடிகள் சிதறும்படி எதிர்த்து, நேராகத் தனது ஒப்பற்ற ஓர் அம்பைப் பிரயோகித்த திருமாலின் மருகனே!

வெள்ளெருக்கு மாலை,  நறுமணமுள்ள    குவளையின்  மாலை, கொன்றை மாலை, கங்கை, பிறைச்சந்திரன், எலும்பு மாலை, இவற்றை அணிந்துள்ள சடைப்பெருமான் அருளிய புதல்வனே !

பிஞ்சு மாவடுக்கள் வெளியே  தெரியும்படி  மாமரமாக நின்ற  அசுரனாகிய சூரனை அடக்கவும், ஏழு கடல் வற்றவும், ஏழு மலை  பொடியாகவும் கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திருக்கரங்களை உடையவனே ! கஸ்தூரியணிந்த திருப்புயங்களை யுடைய செவ்வேளே !

வள்ளிமலைக் காட்டில் வாழ்ந்த குறமகளை அணைந்த கடப்பமாலை தரித்த திருப்புயனே ! தேவர்கள் மதிக்கும் பராக்ரமசாலியே ! வலிவலம் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !

இந்த உலகவாழ்வே நிலையானது என்று நினைக்கும் முட்டாளும், வறிஞனும் ஆகிய  எனது வீணான வாழ்க்கை ஒழிய, 

உன்னுடைய அடியார்களோடு என்னையும் ஒருவனாகச் சேர்த்து,  நல்ல மலர்கொண்டு உன்னை வழிபடுமாறு என்னைத் தவ நிலையில் நிறுத்தி, நான் உயர்ந்த கதியைப் பெறும்படி,  மயில்மீது  விளங்கும் சிவந்த , சிறந்த  ரத்ன மணிகள் பொருந்திய வீரக்கழலணிந்த  உன் இரு திருவடிகளைத் தொழும்படியாக  அருள் செய்வாயாக !







 உலக வாழ்வை உண்மையென மயங்காது, அடியாரொடு  சேரவேண்டும், தாளை வழிபடவேண்டும்- இவையே  ஸ்வாமிகளின்  வேண்டுதல்கள்.  இவற்றைப் பிற இடங்களிலும் சொல்வார். 

பழநியிலுறை பெருமாளே !
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும், உறவோரும்
அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வள நாடும்,
தரித்த  ஊரும் மெய்யென நினைவது நினையாது
உந்தனைப் பராவியும் வழிபடு தொழிலது தருவாயே !

கச்சிச் சொக்கப் பெருமாளே !
தம் பராக்கு அற நின்னை உணர்ந்து ஒழுகி, 
பொற் பத்மக் கழல்  சேர்வார்  தம் குழாத்தினில்
என்னையும் அன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ !

இன்சொல் விசாகா க்ருபாகரா !
உம்பர்கள் ஸ்வாமி நமோ நமோ, எம்பெருமானே நமோ நமோ,
 ஒண்டொடி மோகா நமோ நமோ  என நாளும் 
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாது  அருள் புரிவாயே !

ஆவினன்குடி மீதிலங்கிய பெருமாளே !
போது கங்கையின் நீர் சொரிந்து,
இருபாத பங்கயமே வணங்கி, 
பூஜையும் சிலவே புரிந்திட அருள்வாயே !

இப்படி எத்தனையோ இடங்கள் !






No comments:

Post a Comment