66.திருப்புகழ் 60. கும்பகோணம் -1
அருணகிரிநாதர் அடுத்து வந்த 59வது தலம் கும்பகோணம். கோவில்கள் நிறைந்தவூர். குடந்தை, குடமூக்கு , வடகரைப் பாம்பு நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வள நாட்டுப் பிரம்மதேயம் திருக்குடமூக்கு என்றல்லாம் வழங்கப்படும். மஹாமகம் கொண்டாடப்பெறும் தலம். இதன் பெருமையைச் சொல்லி மாளாது. இதன் புராணப்பெருமையை சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் "ஜயமங்கள ஸ்தோத்ரத் "தின் 2ம் பகுதியில் விரிவாக விளக்கியிருக்கிறார். இங்கே சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.
சம்பந்தர்
திருக்குடந்தைக் காரோணம் (1ம் திருமுறை )
வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில்
காரார்கண்டத் தெண்டோளெந்தை காரோ ணத்தாரே.
குடமூக்கு (3ம் திருமுறை )
அரவிரி கோடனீட லணி காவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவன் மண மல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ னெம்மிறையே.
அப்பர்
தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.
[ 5ம் திருமுறை ]
திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
[6ம் திருமுறை ]
கீழ்க்கோட்டம் நாகேஶ்வரர் கோயில்.
இங்குவந்த நம் நாதர் 8 அழகிய பாடல்கள் பாடியிருக்கிறார்.
யோகக்காட்சியை வேண்டிப் பாடியது
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
டின்பரசப் பாலமுதச் சுவைமேவு
எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச் சபையூடே
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக் கடல்மூழ்கிக்
கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக் கருள்வாயே
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித் தவிலோசை
சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக் கதிர்வேலா
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத் தரைமீதே
கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
கும்பகொணத் தாறுமுகப் பெருமாளே.
சந்திர மண்டல ஓளியை மூட்டி, அங்கே சிவந்து திரண்ட ஜோதி ஸ்தம்பத்தின் நடுப்பாகத்தில் ஒளிபட்டு, பாலமுதம் போன்ற இனிமையை அனுபவித்து,
எண்குணம் கொண்ட ஈசனின் நடனம் செய்யும் நிலவொளிவீசும் பெருமை வாய்ந்த இடத்தை தரிசித்து, அங்கே எந்தை சிவபிரான் நடனம் செய்து கூத்தாடும் அழகிய சபையில்,
கூட்டமான ஐம்பத்தியொரு அக்ஷரமும் [ அல்லது ப்ரணவமும் ] அறிவு என்னும் நறுமணமும் ஞான மணம் கொண்ட பூவைக் கண்டு களித்து, அறிவால் அறிந்து, ஆனந்தக் கடலில் மூழ்கி,
அந்த நறுமணத்தைப் போற்றி செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வளைத்துக்கொண்டுள்ள ஈரேழு புவனப் பகுதிகளைக் காணும்படி எனக்கு அருள்புரிவாயாக !
பலவிதமான தாள வகைகளுடன் தவில்முதலிய வாத்யங்களின் ஒலியெழுப்பிகொண்டு ,
மனம் திகைக்கும்படியும், ஏழு கடல்களும் பொங்கும்படியும், சிங்கம் போன்ற சூரனது மணிமுடியிலுள்ள பூச்செண்டை அழித்துத் தள்ளி விளையாடிய மணிகட்டிய ஒளி வேலனே !
வண்டுகள் விரும்பி பொய்க்கும் துளப மாலை அணிந்தவனும், செவ்விய லக்ஷ்மியைச் சேர்பவனுமான , கலவைச் சாந்து அணிபவனும் மேக நிறத்தவனும் ஆன திருமாலின் மகளான வள்ளியை இப்பூமியில்,
கும்பிடும் பொருட்டுக் கைத்தாளம்போட்டு, அழகிய அந்த வள்ளியைப் புகழ்ந்து போற்றின பெருமாளே ! கும்பகோணத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே !
இங்கே தெய்வீக யோக நிலையை வேண்டுகிறார் ! [ இது மாதிரிதானே அன்று அர்ஜுனனும் பகவானின் விஶ்வரூப தரிசனத்தை விரும்பிக்கேட்டு அண்டகோளத்தையெல்லாம் கண்டான்! ஆனால் இங்கு வேண்டுவது யோகக்காட்சி / நிலை ! ]
"தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திர வெளிக்கு வழி அருள்வாயே "
என்று வேறு ஒரு பாடலிலும் இதையே சொன்னார்.
ஞானம் பெற
அண்டர் வாழப்பிரபை சண்டமேருக்கிரிய
ளைந்து வீழப்பொருத கதிர்வேலா
அஞ்சுவாயிற் பரனை நெஞ்சிலூறித்தவசி
னன்புளாரைச் சிறையி டசுரோரைக்
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை யரிவோனே
கொண்டல் சூழக்கழனி சங்குலா விப்பரவு
கும்பகோ ணத்திலுறை பெருமாளே
வந்துஞா நப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா ளைத்தினமு மருள்வாயே.
தேவர்கள் வாழவேண்டி, ஒளிவீசும் வலிமைமிக்க க்ரௌஞ்சமலை கலங்கி விழும்படி போர்புரிந்த ஓளிவேலுடையவனே !
பஞ்சேந்த்ரியங்களாலும் சிவபிரானை உள்ளத்தில் தேக்கி, தவ நெறியில் அன்புள்ள தேவர்களைச் சிறையிலிட்ட அசுரர்களை,
கொண்டுபோய், கூர்மையான சூலம் அவர்கள் நெஞ்சில் ஏறிப் பாயவும், கழுகுகள் கொத்திவிளையாடவும் அவர்கள் தலையை அரிந்தவனே !
மேகங்கள் சூழ்ந்த வயல்களில் சங்குகள் பரந்திருக்கும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !
நீ வந்து ஞானப்பொருளில் ஒன்றை எனக்கு உபதேசித்து உன்னுடைய அழகிய திருவடியை தினமும் தந்தருளுக !
No comments:
Post a Comment