Thursday, 9 February 2017

56.திருப்புகழ் 50. ஸ்ரீவாஞ்சியம்


56. திருப்புகழ் 50.ஸ்ரீவாஞ்சியம்




ஸ்ரீவாஞ்சியம்  காவிரியின்  தென் கரையில் உள்ள பாடல்பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. புராண வரலாறு கொண்டது.  ஸ்தல புராணமும் இருக்கிறது. இது முக்தி ஸ்தலமாகக் கருதப்படுகிறது @ காவேரிக்கரையில் உள்ள 6 ஸ்தலங்களைக் காசிக்கு சமமாகச் சொல்வார்கள். அவற்றில் இதுவும் ஒன்று. உண்மையில் இதை 'காசிக்கு வீசம் (1/16)அதிகம்' என்றே சொல்வார்கள். [ பிற தலங்கள் :1.திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு ] இத்தலத்தில் மரிப்பவர்களுக்கு எமவாதனை இல்லை என்பது சிறப்புச் செய்தி.
ஸ்வாமி பெயர்: வாஞ்சிநாதேஶ்வரர், வாஞ்சிலிங்கேஶ்வரர்
அம்பாள் பெயர் :மங்கள நாயகி, வாழவந்த நாயகி.


@ தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் - நெல்லை களர்
காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
வாஞ்சிய மென் முத்தி வரும்.


இது மூவர் தேவாரமும் பெற்ற அரிய தலம்.


சம்பந்தர்

செடிகொ ணோயினடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடய னேத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

[கடிய கூற்றமும் கண்டு அகலும், புகல் தான் வரும்,
நெடியமாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து
அடிகள் பாத மடைந்தார் அடியார் அடியார்கட்கே ]


அப்பர்

படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே  .

சுந்தரர்


பொருவ னார்புரி நூலர்
    புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
    வருவதும் இல்லைநம் மடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
    திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடி யாரை
    ஊழ்வினை நலியஒட் டாரே




இது அருணகிரி நாதர் தரிசித்த 49வது தலம். இங்கு  ஓர் அரிய பாடல் பாடியிருக்கிறார்.

முருகன் பெருமை : திருமால் மருகன் !

உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன்                      ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன்                               மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுத

ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண்                            முகவேலா

திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள்                                  பெருமாளே.

இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம                                  ணரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி                               மளலேபந்


தபனாங்க ரத்ந வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு                               வியபோது

தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
தனவாஞ்சை மிக்கு னடிதொழ                          நினையாரே


உப சாந்த சித்த குருகுல பவ பாண்டவர்க்கு :
மன அமைதி கொண்ட சித்தத்தை உடையவர்களும், குரு வம்சத்தில் வந்தவர்களுமான பாண்டவர்களுக்கு

வரதன் மை உருவோன்  ப்ரசித்த நெடியவன்  ரிஷிகேசன் :
வேண்டிய வரங்களைக் கொடுத்தவனும், கரிய நிற முடையவனும், புகழ்பெற்ற நெடிய உருவத்தை உடையவனும்,  இந்த்ரியங்களுக்கு ஈசனும்,


உலகீன்ற பச்சை உமை அணன் :
உலகங்களைத் தந்த பச்சை நிற உமையம்மைக்கு அண்ணனும்

வட வேங்கடத்திலுறைபவன் :
வடவேங்கடத்தில் உறைபவனும்

உயர் சார்ங்க சக்ர கரதலன் மருகோனே :
உயர்ந்த சார்ங்கம் என்னும் வில்லையும் சக்கரப் படையையும் கையிலேந்திய திருமாலின் மருகனே !

த்ரிபுராந்தகற்கு வரசுதன்
திரிபுரமெரித்த சிவபெருமானின்  சிரேஷ்டமான பிள்ளையே

ரதிகாந்த மைத்துன முருக :
ரதியின் பதியான மன்மதனின் மைத்துனனான முருகனே 

திறல்பூண்ட  சுப்ரமணிய  ஷண்முக வேலா :
பராக்ரமம் மிக்க சுப்ரமண்யனே ! ஷண்முகனே ! வேலனே

திசைபாய்ந்த பத்ம தடவயலியில் வேந்த :
அலைகள்  பாயும் தாமரைத் தடாகங்கள்  நிறைந்த வயலூருக்கு அரசே !


 முத்தி அருள்தரு திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே !
முக்தியை அருளும் திருவாஞ்சியத்தில்  அமரர்களுக்கும் அதிபனாக அமர்ந்த பெருமாளே .


எத்தனை அழகான வாக்கால் திருமாலைப் பாடுகிறார் !  ஈரடியால் மூவுலகங்களையும் அளக்க எடுத்தது ஒரு நெடிய உருவம்; விஶ்வரூபதரிசனத்தின் போது எடுத்தது இன்னொரு நெடிய வுருவம்! 
அவருக்கும் பாண்டவர்களுக்கும்  இருந்த நெருக்கத்தைச் சொல்கிறார். அதற்கான காரணத்தையும் சொல்கிறார் : ஏனெனில்  பாண்டவர்கள்  'உப சாந்த சித்தம்' உள்ளவர்கள் : மனதில் அமைதியும் சித்தத்தில் தெளிவும், நேர்மையும் உள்ளவர்கள் ! அப்படிப்பட்ட மனத்துக்கண் மாசு இல்லாதவர்களைத்தானே கடவுள் காப்பாற்றுவார் !  " விமல ஹ்ருதய த்யாகராஜ பாலம் " என்று பாடுகிறார் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்.

திருப்பதியில் ஆதியில் இருந்தது  திருமால் இல்லை என்றெல்லாம் சிலர் கூறி வருகிறார்கள். இங்கு அருணகிரிநாதர் காலத்தில் [ 600 வருஷங்களுக்கு முன்பே ]  இருந்தது திருமால் என்று பாடுகிறார்.

சிவனுக்கு 'வரசுதன் ' சிரேஷ்டமான பிள்ளையே என்று சொல்கிறார்.
 "பெற்றும் உகந்தது கந்தனையே " என்று பாடுவார்  சம்பந்தர் !

"முத்தி அருள் தரு  திருவாஞ்சியம் :  இதனால் ஸ்ரீவாஞ்சியம் முத்தித் தலம் என்று ஸ்தல விசேஷத்தைச் சொல்கிறார்.





நிலையாமை

இப மாந்தர் சக்ர பதி
யானைப்படை, காலாட்படை முதலிய படைகளை உடைய சக்ரவர்த்தியாய்

செறிபடையாண்டு
நிறைந்துள்ள நால்வகைப் படைகளையும் ஆண்டுகொண்டு

சக்ரவரிசைகள் இட வாழ்ந்து 
தனது ஆஜ்ஞா சக்கரம் தன் பணியைச் செய்யுமாறு வாழ்ந்து

திக்குவிஜய மண் அரசாகி
திக்விஜயம் செய்து, உலகிற்கு  அரசாகி,


இறுமாந்து வட்டவணைமிசை விசிசார்ந்து
மிகுந்த பெருமையுடன் வட்டவடிவமான சாய்வு மெத்தையின்மேல்  உள்ள விரிப்பில் சாய்ந்து

வெற்றிமலர் தொடை எழிலார்ந்த பட்டி வகை பரிமள லேபம்
வெற்றியைக் குறிக்கும் வாகை மலர் மாலை, அழகிய ஆடைகள், நறுமணக் கலவை சார்ந்த பூச்சுக்கள்,

தபனாங்க ரத்ன அணிகலன் இவை சேர்ந்த
சூர்யன் போன்று ஒளிவீசும் ரத்ன ஆபரணங்கள், என்று இப்படி எல்லாம் சேர்ந்து இருந்தாலும்

விச்சு வடிவது
இது ஒரு மனித வித்துவிலிருந்து வந்த உடல்தானே !

தமர் சூழ்ந்து மிக்க வுயிர் நழுவியபோது
உறவினர் சூழ்ந்திருக்க, பெருமை மிக்க உயிரானது நழுவும்போது

தழல் தான் கொளுத்தியிட  ஒருபிடி சாம்பல் பட்ட தறிகிலர்
அந்த உடலை நெருப்பு  எரித்துவிட,  அது ஒருபிடி சாம்பலாகிறது.
இதை அறியவில்லை.

தன வாஞ்சை மிக்கு உன் அடிகள் தொழ நினையாரே.
பொருளின்மேல் வைத்த ஆசையால் உன் அடிகளைத் தொழ நினைப்பதில்லையே !



தமிழிலும் சரி, ஸம்ஸ்க்ருதத்திலும் சரி, உள்ள அற நூல்கள் எல்லாம் நிலையாமையைச் சொல்கின்றன. உலகம் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்று பலவாறு சொல்கின்றன. 



பட்டினத்தார் பாடுகிறார் :

முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே.


இதே கருத்தை திருவள்ளுவரும்  "நிலையாமை" என ஒரு அதிகாரமே வகுத்துச் சொல்கிறார். மெய்யுணர்தல் என்ற அதிகாரத்திலும் சொல்கிறார்.

मा कुरु धनजनयौवनगर्वं
हरति निमेषात्कालः सर्वम् ।



மாகுரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி  நிமேஷாத் காலஸ் ஸர்வம்
என்று பகவத்பாதர்  பஜகோவிந்தத்தில் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.

இத்தகைய கருத்து உலகில் எல்லா ஞானிகளிடையேயும், தீர்க்க சிந்திக்கும் கவிகளிடையேயும் நிலவுகிறது.






The boast of heraldry, the pomp of pow'r, 
         And all that beauty, all that wealth e'er gave, 
Awaits alike th' inevitable hour. 
         The paths of glory lead but to the grave. 


என்று ஆங்கிலக் கவிஞர் தாமஸ் க்ரே  
[Thomas Gray ] எழுதினார்.






இன்னொரு கவிஞர்  ஜேம்ஸ்  ஷெர்லீ  [ James Shirley ]எழுதுகிறார் :


THE GLORIES  of our blood and state
  Are shadows, not substantial things;
There is no armour against Fate;
  Death lays his icy hand on kings:
        Sceptre and Crown        5
        Must tumble down,
And in the dust be equal made
With the crooked scythe and spade.


 நிலையாமைக்கு ஒரே மருந்து  இறைவன் அடியை நாடுவதுதான்.  பெரிய பெரிய முடிமன்னர்கள் இருந்த  நாடும் மாளிகைகளும் இன்று இல்லை. ஆனால் அவர்கள் கட்டிய / வழிபட்ட கோயில்கள்  நிலைத்திருக்கின்றன !



No comments:

Post a Comment