65.திருப்புகழ் 59.திருப்பனந்தாள்

அற்புத ஸ்தலங்கள்
நாம் பார்த்துவரும் ஒவ்வொரு தலமும் அற்புதமானது. தேவாரம் பாடிய மூவரும், அருணகிரிநாதரும் சென்று பாடிய ஸ்தலங்கள் புராணகாலத்திலிருந்தே மஹிமை மிக்கவை. பல புராண,சரித்திர வரலாறுகளோடு சம்பந்தப்பட்டவை. சில தலங்கள் பிற்காலத்தில் பிரபலமாகிவிட்டன; பல தலங்களின் பெருமை மக்களால் பெரிதும் அறியப்படாமலேயே இருக்கிறது. இங்குள்ள கோயில்கள் பெரியவையோ, சிறியவையோ, ஒவ்வொரு இடமும் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் எனமுவ்வகையிலும் பெருமைபெற்றே இருக்கிறது. [ தீர்த்தத்தில் நீராடி, மூர்த்தியைத் தரிசித்து, ஸ்தல விருக்ஷத்தைப் பிரதக்ஷிணம் செய்தால்தான் ஸ்தல யாத்திரை பூர்த்தியாகும் என்பது மரபு.]
மாறிவரும் சூழ்நிலை
ஜனத்தொகை பெருகி, முன்னேற்றம் என்ற பெயரில் என்னென்னவோ நடந்துவரும் இந்த நாட்களில், பெரிய இடங்கள் வியாபாரத்தலமாகிவிட்டன. கோயில் வெறும் காட்சிப்பொருளாகிவிட்டது. தற்காலக் கட்டிடங்கள் அதைச்சுற்றிலும் எழுந்து கோயிலையே மறைக்கின்றன. அந்த தெய்வீகச்
சூழலே பாதிக்கப்படுகிறது. சம்பந்தர் , அருணகிரிநாதர் ஆகியோரது பாடல்களில் வரும் இயற்கை வர்ணனைகள் அந்தந்த இடத்தின் அப்போதைய வளப்பத்தையும், செழுமையையும் நன்கு காட்டுகின்றன. இன்று அந்த இடங்கள் நேர்மாராக இருக்கின்றன. தற்காலத்தில் கோயிலுக்கு வருபவர்களும் ஏதோ இயந்திரகதியில் வந்துபோகின்றனர். அங்கிருக்கும் தேய்வீகச் சூழ்நிலையை உணர்ந்து மதிப்பதில்லை; கலையையும் ரசிப்பதில்லை/. காலத்தின் போக்கை யாரே அறிவர் ! எது என்னவானாலும் இத்தலங்களின் புனிதத்தன்மை கெடாது என்பதே நமது நம்பிக்கையாக இருக்கிறது !
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 58வது தலம் திருப்பனந்தாள். மிக அருமையான தலம். புராதனப் பெருமை வாய்ந்த இடம். ஒருகாலத்தில் இது பனைமரக் காடாக இருந்தது, எனவே பனந்தாள், தாலவனம். ஸ்வாமி சுயம்பு மூர்த்தி, அருணஜடேஶ்வரர், செஞ்சடையப்பர். ஜடாதரர், தாலவனேஶ்வரர். அம்பாள் தாலவனேஶ்வரி, ப்ருஹன் நாயகி, பெரியநாயகி.
தாடகை என்ற பக்தைக்கு [ ராமாயண தாடகை அல்ல ] அருள்பாலித்த இடம். அந்த பக்தையின் வேண்டுதல்படி இது திருத்தாடகைஈச்சரம் என வழங்கப்பட்டது. ஸ்வாமியும் தாடகேச்சரத்து மஹாதேவர், தாடகேச்சுரமுடைய நாயனார் என்ற அழகான பெயர்களால் வழங்கப்பட்டார். குங்கிலியக்கலய நாயனார் சரித்திரத்துடன் தொடர்புடைய தலம்.
கணபதி அக்ரஹாரத்து கௌண்டின்ய கோத்திரத்து ஸ்மார்த்த பிராமணர்களுக்கு இந்தக்ஷேத்திரத்து அருணஜடேஶ்வரரே குலதெய்வமாக இருக்கிறார்.
திருஞானசம்பந்த ஸ்வாமிகள் பாடியிருக்கிறார்.
உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்
மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
உடுத்தவன் மான் உரிதோல் கழல் உள்கவல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஒர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மாதவர் வேள்வியை முன்
தடுத்தவன் ஊர் பனந்தாள் திருத்தாடகைஈச்சரமே.
சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் பாய்புனலும் போழிள வெண்மதியும் அனல் பொங்கரவும் புனைந்த தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே. தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரத்துக் கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன் நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தனல்ல பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே. சம்பந்தர் பாடல்கள் நமக்கு தாயத்து போன்றவை. அதைப் பாடினால் வினையும் பிணியும் போகும் என்று அடித்துச் சொல்கிறார் ! mclmarimuthu.blogspot.in. thanks இங்கு அருணகிரிநாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது. நற்பொருள் பெற இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட மண்டா நற்றவர் குடியோட எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி யென்றே திக்கென வருசூரைப் பந்தா டித்தலை விண்டோ டக்களம் வந்தோ ரைச்சில ரணகாளிப் பங்கா கத்தரு கந்தா மிக்கப னந்தா ளுற்றருள் பெருமாளே. அற்பமனந்தா னிப்படி யுழலாமல் மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம் என்றே யிப்படி அருள்வாயே சந்திரன் பயந்து ஒடவும், அதைக்கண்டு சூரியன் தானும் ஒடவும், காட்டில் இருந்த தவசிகளும் குடும்பத்துடன் ஓடவும். அந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள் எங்கே, இந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள் எங்கே எனக் கேட்டு, அங்கங்கே உள்ளவர்களின் மனம் திடுக்கிடும்படி வந்த சூரனை, பந்தாடுவதுபோல அடித்து விரட்டியும், தலை அற்றுப்போய் சிதறி விழவும், போர்க்களத்திற்கு வந்தவர்களை ரணகாளி முதலிய தேவதைகளுக்குப் பங்கிட்டுத்தந்த கந்தனே ! சிறப்புமிக்க திருப்பனந்தாளில் அமர்ந்த பெருமாளே ! என்னுடைய அற்பமனம் அலைச்சல் படாமல். என்றும் மங்காத சிறந்ததொரு உபதேசப்பொருள், "இதோ இருக்கின்றது, பெற்றுக்கொள்; இது ஒரு அற்புதம் " என்று கூறி நீ இப்போதே அருள்புரிவாயாக. சூரன் செய்த கொடுமையையும் , முருகன் அவனை அழித்ததையும் எவ்வளவு அழகாகவும் சுருக்கமாகவும் சொல்கிறார் ! மங்காத நற்பொருளை வேண்டுகிறார் ! மனத்தை அடக்குவது அற்புதச் செயலே, அது இறைவன் அருள் இல்லாமல் நடக்காது என்று சொல்கிறார் போலும்! பிராகாரத்தில் உள்ள தல விருக்ஷம்: ஆண்பனை . (படம் :மாரிமுத்து) |
No comments:
Post a Comment