Saturday, 11 February 2017

58.திருப்புகழ் 52.திருவீழிமிழலை


58.திருப்புகழ் 52.திருவீழிமிழலை


From: WiKiVisually

இது புகழ்பெற்ற புராணத்தொடர்புடைய ஸ்தலம். பல சிறப்புக்கள் உடையது. பல பெயர்கள் கொண்டது. இங்கு ஸ்வாமி  பெயர்   நேத்ரார்ப்பணேஶ்வரர், வீழிநாதர். அம்பாள் பெயர்  சுந்தரகுசாம்பிகை. சிலவற்றிற்கு  (eg.கல்யாணத்தடை )  பரிகாரத்தலமாகவும் கருதப்படுகிறது. மூவர் தேவாரப் பாடலும் பெற்ற தலம். பஞ்சம் வந்த காலத்தில் அப்பரும் சம்பந்தரும் இங்கு படிக்காசு பெற்று ஜனங்களுக்கு உதவினர். சம்பந்தர் 14 பதிகங்களும் அப்பர் 8 பதிகங்களும் இத்தலத்தில் பாடியிருக்கின்றனர்.

சம்பந்தர்

வாசி தீரவே ,காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் , ஏசல் இல்லையே.

இறைவன் ஆயினீர் , மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

விதிவழி  மறையவர்  மிழலை உளீர் நடம்
சதிவழி வருவது ஓர் சதிரே
சதிவருவது ஓர் சதிர் உடையீர் உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.

விளங்கும் நான்மறைவல்ல 
     வேதியர் மல்கு சீர் மிழலையான் அடி
உளம்கொள்வார்தமை  உளம்கொள்
     வார் வினை ஒல்லையாக அறுமே.


அப்பர்

மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத்தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர்  கரும்பினில் கட்டியாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.

பாலையாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலையார் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழிமிழலையே






சுந்தரர்

பணிந்த பார்த்தன் பகீரதன் பல
     பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடம் தொறும் செல்வம்
     மல்கு திருவீழிமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும்
     அந்திவான் இடு பூச்சிறப்பு அவை
அணிந்து வீழ கொண்டீர்
     அடியேற்கும் அருளுதீரே.


(படம் காபிரைட்: கபாலிபக்தன்.  நன்றி )

இது அருணகிரிநாதர்  தரிசித்த 52வது தலம். இங்கு பாடிய ஒரே பாடல்தான் கிடைத்திருக்கிறது. அருமையான பாடல்.

முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா       ளருள்வோனே

முருகா என ஓர் தரம் ஒதும் அடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே

முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல்           விடும்வேலா
முனிவோர் அமரோர் முறையோ எனவே

முதுசூர் உரமேல் விடும் வேலா

திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால்         மருகோனே

திருமால் பிரம்மா அறியாதவர் சீர்
சிறுவா திருமால் மருகோனே

செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ்        பெருமாளே.

செழும் மா மதில் சேர் அழகார் பொழில்சூழ்
திருவீழியில்வாழ  பெருமாளே

எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய்           விளைவாகி

எருவாய் கருவாய் தனிலே உருவாய்
இதுவே பயிராய் விளைவாகி

இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய்       வெறிபோல

இவர் போய் அவராய் அவர் போய் இவராய்
இதுவே தொடர்பாய் வெறி போல

ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா               யழியாதே

ஒருதாய் இருதாய் பலகோடிய தாய்
உடனே அவமாய் அழியாதே

ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ      தருள்தாராய்

ஒருகால் முருகா பரமா குமரா
உயிர் கா என ஒத அருள் தாராய்.






மிக உருக்கமான பாடல். 
சூரன் கொடுமை தாங்காது முனிவர்களும் தேவர்களும் முறையிட, முருகன் சூரனை வேலால் வதைத்தான் என்பதைச் சொல்கிறார்.  பிறவித் துன்பத்தை சலித்துக்கொள்கிறார்.

எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய்           விளைவாகி


மாதா உதரத்தில் கருக்கொண்டு, அதுவே எருவாகி  உரு எடுக்கிறோம். இதுவே பயிர்போல் வளர்ந்து விளைகிறது : அதாவது பிறக்கிறோம்.

இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய்       வெறிபோல


உயிருடன் இருக்கும்போது  ஒருவரை  'இவர் ' என்று சொல்கிறோம். இறந்தபிறகு  "அவர்" என்கிறோம் ! 'அவர் ' மறுபடியும் பிறந்து 'இவர் ' ஆகிறார் ! இப்படியே பிறவிகள் தொடர்ச்சியாய் வருகின்றன ! இது ஒரு வெறி பிடித்ததுபோல இருக்கிறது.

ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா               யழியாதே


நமக்கு எத்தனை  எத்தனை பிறவிகள் ! தாயாரும் ஒருவரா, இருவரா ! எத்தனையோ கோடிக்கணக்கானவர்கள் ! இப்படி வீணில் பிறந்து இறந்து அழியாமல் இருக்கவேண்டும்.

ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ      தருள்தாராய்


ஒருதரமாவது முருகா, பரமா, குமரா  எனது உயிரைக் காத்தருள் என்று  உன்னைக் கூவி ஓதும்படியாக  அருள்செய்வாயாக.  ஏனெனில்,

முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா       ளருள்வோனே


முருகா என ஒருதரம் ஒதும் அடியார்களுக்கு நீ திருவடி தீக்ஷை தந்து அருள்கிறாயல்லவா !

பிறப்பு-இறப்புச் சுழற்சியாகிய  சம்சாரத்தை அலுத்துக்கொள்கிறார்.




www.panoramio.com. Photo copyright : Selvaganapathy. பிராகாரம்.





पुनरपि जननं पुनरपि मरणं
पुनरपि जननीजठरे शयनम् ।
इह संसारे बहुदुस्तारे
कृपयाऽपारे पाहि मुरारे ॥ २१॥

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே  ஶயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா அபாரே பாஹி முராரே

என்று இதை சங்கர பகவத்பாதர் சொன்னார். திரும்பத் திரும்ப பிறப்பு, பின் இறப்பு- பின் மீண்டும் தாய் வயிற்றில் கர்ப்ப வாசம் ! இது கொடிய சக்கரம். பகவான் அருள் இல்லாமல் இதைத் தாண்ட முடியாது. 
அருணகிரிநாதர் இதைப் பல இடங்களில் சொல்கிறார்.

எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி     அவதாரம்

இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக        முடியாது

கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு            மயர்வானார்

கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள்          தருவாயே


ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலை அளந்தாலும்  அளக்கலாம்,  நான் எடுத்த பிறவிகளை எண்ணி மாளாது ! இனி உனது அபயம் ! இனியும் உடல் எடுத்தும் விடவும் முடியாது ! கழுகு, நரி ,  நெருப்பு. மண், யமன், பிரம்மா ஆகியோர் என் உடலைப்  பிரித்தும் பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். நான் இனி உன்னிடம் அடைக்கலம்  புகுந்தேன்! சீக்கிரமே உன் திருவடிகள் தருவாயே !

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும்           கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும்           பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும்          தொந்தநோயை


என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்         இங்குநானார்.


பட்டினத்தார் பாடுகிறார் :


அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாயடியேனுமறிந்திலேன்
இன்னமெத்தனை யெத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சியேகம்பநாதனே

 வினையின் வழி வரும் இப்பிறவி அலைகள்  நம்வசத்தில் இல்லை ! தெய்வ அருள் கொண்டுதான் இதைத் தாண்ட  முடியும் !.
இப்படி அருமையான கருத்தைச் சொல்லும் பாடல்.



No comments:

Post a Comment