Sunday, 26 February 2017

67.திருப்புகழ் 61.கும்பகோணம் -2


67.திருப்புகழ்  61. கும்பகோணம் -2


சோமேஶ்வர் கோயில், கும்பகோணம்.
படம்: பா.ஜம்புலிங்கம். விக்கிபீடியா.

அருளாளர்கள் எப்போதும்  பகவானையே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கும் ஈசன் என்பார்கள். எங்கே நினைப்பினும் அங்கே என்முன்  எதிர்வந்து நிற்பனே என்பார்கள். இருந்தாலும்  புராணத் தலங்களைத் தேடிச்சென்று பாடினார்கள். இது நமது  நன்மைக்காகச் செய்தது.

 இன்று எந்தப் பாடல்பெற்ற கோயிலும் பழைய உன்னத நிலையில் இல்லை. பல கோயில்களிலும் போதிய பராமரிப்பு இல்லை. தர்மபுர ஆதீனத்தின் வசப்பட்ட கோயில்கள் அருமையாக நிர்வகிக்கப் படுகின்றன. இதைப் பார்த்தும்கூட பிற கோயில்களின் நிர்வாகம் திருந்தவில்லை. திருப்பணி என்ற பெயரில் இருப்பதையும் கெடுக்கிறார்கள். நமது பொதுமக்களும் ஒத்துழைப்பதில்லை. அதிலும் டூரிஸ்டுகள் படுத்தும் பாடு சொல்லிமுடியாது. கோயில் வளாகமே தூய்மை இழந்து நிற்கிறது ! இருந்தாலும் ஆஸ்திக புத்தியினால் நாம் விடாமல்  இங்கெல்லாம் போய் வருகிறோம். எதையும்  சகித்துக் கொள்கிறோம் !

அருணகிரிநாதர் கும்பகோணத்தில் பாடிய பாடலில் பல அருமையான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவருக்கு இந்த இடத்தின்மேல் ஒரு கண் போலும் ! அவர் பாடிய க்ஷேத்திரக்கோவை பாடல் "கும்பகோணமோடு ஆரூர் சிதம்பரம் " என்றுதான் தொடங்குகிறது !

சித்ரத் தமிழ் பாட

பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர்
பங்கமார்  தொக்கிற் பதியாமல்
செஞ்சொல்சேர் சித்ரத் தமிழாலுன்
செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ
பஞ்ச பாணத்தற் பொரு தேவர்
பங்கில் வாழ் சத்திக் குமரேசா
குஞ்சரீ வெற்புத் தன நேயா
கும்பகோணத்திற்  பெருமாளே !

எளிய பாடல். அருணகிரிநாதர் சம்பந்தரைக் குருவாகவும் அவதாரமாகவும் போற்றியவர். அவரைப்போன்றே  கவி பாடவேண்டும் என்று வேண்டுகிறார் !




பகவான் நாமத்தின் பெருமை

மாலிருள் அழுந்தி சாலமிக நொந்து தவியாமல்

காலையில் எழுந்து உன் நாமமெ மொழிந்து
காதலுமை  மைந்த என ஓதிக்
காலமும்  உணர்ந்து  ஞான வெளி கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ
கோலமுடன் அன்று சூர்படையின் முன்பு
கோபமுடன் நின்ற   குமரேசா
கோதை இரு பங்கின் மேவ வளர் கும்ப
கோண நகர் வந்த பெருமாளே !

இதில் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார்!

ஆசை இருளில் அழுந்தி, மிகவும் மனம் நொந்து தவிக்காமல்.
காலையில் எழுந்ததும் உன் நாமத்தையே சொல்லி,  அன்புமிக்க உமையின்  மைந்தனே  என்று ஓதி, முக்காலத்தையும் அறியும் சக்தியை அடைந்து  ஞானாகாச வெளியை ஞானக்கண் கொண்டு  நான் பார்க்கும் உன் திருவருளை என்று அடைவேனோ !
போர்க்கோலத்துடன் அன்று சூரனது  சேனைகளின் முன்பு கோபத்துடன் நின்ற குமரேசனே !
இரு தேவிமார்கள் இரு பக்கத்திலும் விளங்க, கல்வியும் செல்வமும் வளரும் கும்பகோணப் பதியில் அமர்ந்த பெருமாளே !

காலையில் எழுந்ததும் பகவானது நாமத்தைச் சொல்வது ஆஸ்தீக மரபு. "ப்ராத ஸ்மரணம் " என்றே சில ஶ்லோகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சம்பிரதாயங்களுக்கு ஏற்ப இதில் பல பிரிவுகள் இருக்கின்றன.  இங்கு முருகன் அடியார்களுக்காகச் சொல்கிறார். 
 " உன் நாமமே மொழிந்து " என்கிறார். என்ன நாமம் சொல்வது? அவருக்கோ ஆயிரமாயிரம் நாமங்கள் !
இதற்கு விடை கந்தரனுபூதியில் இருக்கிறது! 

முருகன் குமரன் குஹனென்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வென்றருள்வாய்

எனவே, காலையில் எழுந்ததும் " முருகா, குமரா, குஹா , காதல் உமை மைந்தா " என ஓதவேண்டும். இது  ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகளின் அறிவுரை.

இன்னும் ஒரு புதிர் போடுகிறார். "காலமும்  உணர்ந்து " என்கிறார். இதற்கு முக்காலத்தையும் உணரும் சக்தி எனச் சாதாரணமாகப் பொருள் சொல்லலாம். ஆனால் ஞானிகளும் பக்தர்களும் அப்படிக் கேட்பார்களா? ஆகவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தம்  [ Regrets ], நிகழ், எதிர்காலத்தைப் பற்றிய கவலை , பயம்[ Anxiety, Fear ] இல்லாமல் இருக்கவேண்டும் எனச் சொல்லலாம். காலையில் முருகனை நினைத்து எழுபவர்களுக்கு முக்காலத்தைப் பற்றிய சிந்தனையும் இருக்காது என்பது இதனால் தெரிகிறது. என்ன அருமையான பாடல் !






ஓதும் பேறு பெற


உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு          னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு          முயர்வாக


வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட                 மதில்சூழும்

மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள்           பெருமாளே.

இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை                  யருள்வாயே

சரியான தவ நெறியில் இருந்து, ஒரு பிள்ளை  " நமோ நாராயணாய " என்று சொன்னவுடன் , ஆராய்ச்சி அறிவு இல்லாமல் , கோபத்துடன்  "உன் கடவுள் எங்கு உள்ளான், சொல்லடா "  என்று கேட்டு  முடிக்கும் முன்பே அங்கிருந்த  தூணில் -

வலிமைகொண்ட சிங்கத்தின் உருவுடன்  ஹிரண்யன்மேல் மோதி அவனை விழச்செய்து, தனது விரல்களின் நகம் புதைய அவனது மார்பைக் கீறிப் பிளந்து, வெற்றி சூடியவனும், கருடனுக்குத் தலைவனும்,  [மஹாபலிக்காக ] நெடிய உரு எடுத்தவனும், ஆன திருமாலும், பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெற -

ரேகைகள் உள்ள வண்டுகள் இசையெழுப்ப , அழகிய தோகையுள்ள இள மயில்  நடுவில் நடனம் செய்ய , ஆகாசத்தையும் ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரத்தின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய ஹாரமாக விளங்க , மதில் சூழ்ந்துள்ளதும்,

மருத நிலத்து மன்னர்கள் பாசறைக்குத் தகுந்த இடம் என விரும்புவதுமான  சோமீசர்கோயிலில், இளமையான ரிஷபத்தின்மேல் வரும்  சோமீசர் என்னும் திரு நாமமுடைய சிவபிரானது கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கும் முருகனே ! விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே !

இரவில் தூங்கினாலும், யாருடன் பேசினாலும், உன்னுடைய இளமையையும், உன்னுடைய அழகிய பன்னிரண்டு தோள் வரிசையையும்,  இரண்டு திருவடிகளையும் , ஆறு முகங்களையும்  நான் ஓதும்படியான ஞானத்தை  அருள்புரிவாயாக !

நரஸிம்ஹ  அவதாரத்தை எத்தனை அழகாகப் பாடியிருக்கிறார் !
இந்தப்பாடலிலும் ஒரு ரகசியம் சொல்கிறார்  நம் நாதர்.
"இரவினிடை துயிலுகினும்" ,, முருகனின் அழகிய உருவை நினைத்து ஓத வேண்டும் என்கிறார் ! 
இந்த வரியை இரவில் உறங்கப்போவதற்குமுன்  சொல்லவேண்டும் என்பார் ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள்.

முதல் பாடல்   Bed Coffee ! எழுந்தவுடன் சொல்ல வேண்டியது !
இந்தப் பாடல்  Nightcap !   உறங்கப்போகும்முன் சொன்னால், தீய கனவுகள் வராமல்  தெய்வ நினைவுடன் நிம்மதியாக உறங்கலாம்.
எத்தனை அருமையான பாடல்கள் !  இந்த பாடல்களின் இந்த வரிகளை மனப்பாடம் செய்து சொல்லிப் பயனடையலாமே !
How nice that in Kumbakonam which became famous for "degree coffee ", Arunagirinatha provides us Divine coffee !

chenaitamilulaa.net



No comments:

Post a Comment