Tuesday, 31 January 2017

48.இரு அரிய அவதாரங்கள் -2


48. இரு அரிய அவதாரங்கள் -2


தஞ்சாவூர் படம்

கோன்னதமான முருகன் அவதாரத்தை  சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை  யிலிருந்து  பார்த்தோம். அதேபோல் முருகன் அவதார விஷயமும் பெருமைகளும் இன்னொரு சங்க நூலான பரிபாடலிலும்  பாடப்பட்டிருக்கின்றன. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் 31 இருந்தது என்பர்; ஆனால் இன்று நமக்குக் கிடைத்திருப்பது 8 பாடல்களே  இவற்றை " வாழிய நிலனே " என்ற எனது ப்ளாக்கில் பார்க்கலாம். [முதல் கட்டுரை: 17.பரிபாடல்-7. செவ்வேட் பரமன். 24-11-2015  sanjayankumaran.blogspot.in]

முருகன் தமிழ்க்கடவுள் ?


முருகன் தமிழ்க் கடவுள் என்று பெருமைப் படுகிறோம்.  முருகனைப் பற்றிய அனைத்து விஷயங்களும் நமது புராணத்தில் வருபவைதான். [புராணங்களுக்கிடையே சில சிறிய வித்தியாசங்கள் இருக்கும் ] சங்க இலக்கியத்திலும் அதையே பார்க்கிறோம். முருகன் அவதாரம் தமிழ் நாட்டுக்கென்று நிகழவில்லை. தமிழ் நாட்டிலும் நிகழவில்லை. அது அசுரர்களால் தேவர்கள் பட்ட துன்பம் நீங்குவதற்காக  நிகழ்ந்தது. 
வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் 
மலர் வாவியில் உதித்த முக மாயைக்காரனும்
முருகன் ஆவான். அந்த அவதாரம் உலகத்திற்கே  பொதுவானது. முருகன் எல்லா அண்டகோளங்களுக்கும் தலைவன். ஆனால் தமிழ்நாட்டில் சில இடங்கள் முருகன் வரலாற்றோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன.

பழந்தமிழ் நாட்டில் நிலத்தை  ஐவகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் என்று வைத்தார்கள். அப்படி குறிஞ்சி  நிலத்திற்கு [ மலையும் மலை சார்ந்த இடமும் ] தெய்வமாக அமைந்தவர்  முருகன். தமிழ் நாடு முழுவதும் முருகன் வழிபாடு மட்டுமே இருந்தது  என்ற நிலை இருக்கவில்லை. இதுவே நாடு முழுதிலும் நிலவும் நிலை. எல்லா தெய்வங்களையும் வழிபடுபவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் சிவ-விஷ்ணு பேதம் பார்க்க மாட்டார்கள். பிறர் தத்தமக்குரிய ஸம்ப்ரதாயப்படி குல தெய்வத்தையோ, இஷ்ட தெய்வத்தையோ  வழிபடுகிறார்கள். பஞ்சாயதன பூஜை, ஸ்ரீ வித்யா பூஜை என்று செய்பவர்களும் ஸுப்ரமண்ய ஆராதனை செய்வார்கள். மலை நாட்டினரான மலையாளிகளும் அதிக அளவில் பழனிக்கு வருகிறார்கள். தமிழ் நாட்டினரும் ஐயப்ப யாத்திரை செய்கிறார்கள்.

உண்மையான ஞானிகள் தெய்வத்தை அருவமாக அனுபவிக்கிறார்கள்/வழிபடுகிறார்கள்.. நம் போன்ற சாமானியர்களுக்கு உருவம் அவசியமாக இருக்கிறது. ஓர் உருவமும். ஒரு  நாமமும் இல்லாத  இறைவனும் நமக்கு அருள் செய்ய ஆயிரம் உருவும் பெயரும் தாங்கி வருகிறான். "நானாவித உருவால் நமை ஆள்வான் " என்பார் சம்பந்தர். நமது வைதீக மதத்தில் சிவன், விஷ்ணு, அம்பாள், கணபதி, குமரன், சூர்யன் என ஆறு பிரதான உருவில் தெய்வ வழிபாடு செய்கிறோம். [ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகள்  உண்டு,] ஒவ்வொரு பிரதேச, மொழி மக்களும் ஒவ்வொரு உருவில் லயித்துவிடுகின்றனர். அவ்விதம் முருகன்   தமிழர்களுக்கு  உகந்தவன் ஆனான். ஆனால் முருகன்  வழிபாடு "கௌமாரம் " என்ற பெயரில் நாடுமுழுதும் இருக்கிறது.  கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பாகவே கார்த்திகேயனும் ஸுப்ரஹ்மண்யனும் வட இந்தியாவில் வழிபடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பழைய பஞ்சாப் (இன்றைய ஹரியானா} பிரதேசத்தில் ஆறுமுகங்களுடன் கூடிய கார்த்திகேய உருவம் கொண்ட நாணயம் கிடைத்திருக்கிறது. " பாகவத ஸ்வாமினோ ப்ரஹ்மண்ய தேவஸ்ய " என்று அதில் எழுதியிருக்கிறது குப்தர்கள் காலத்தில் வேல், மயிலுடன்   முருகன்  பொறித்த  நாணயம் வழக்கிலிருந்தது.

முருகன் அவதாரம்  இந்த்ரன் தலைமையிலான தேவர்களை  சூராதி அவுணர்களின்  துன்பத்திலிருந்து காப்பதற்காக  நிகழ்ந்தது.தேவர்கள் பூமியில் செய்யப்படும் வேள்விகளினாலே வாழ்கிறார்கள், போஷிக்கப் பெறுகிறார்கள். எனவே, தேவர்களைக் காப்பது என்பதன் பொருள், வேத வழி வேள்விகளை  ரக்ஷிப்பதாகும். இனி, தேவர்கள்  ஞானமாகிய ஒளியையும் (வெண்மை) அசுரர்கள் அஞ்ஞானமாகிய இருளையும்  குறிக்கின்றனர். இவற்றிற்கிடையே நிகழும் போராட்டமே தேவாசுர யுத்தம். இவ்வாறு கருதுவது அக வழிபாடாகும். ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் காணவேண்டும் என்பதன் பொருள் இதுவே. இது ஞானிகளின் நிலையாகும்.




அருணகிரிநாதர் வாக்கில் முருகன் அவதாரம்


முருகனின் அவதாரத்தை அற்புத வாக்கால் பாடியவர் அருணகிரிநாதர். அசுரர்களை அழித்து, தேவர்களைச் சிறைமீட்டு, அவர்கள் தங்கள்  உலகை பழையபடியே அடையச்செய்தார் என்பதை திருப்புகழில் நாம் பல விதத்தில் அருணகிரிநாதரின் வாக்கில் காண்கிறோம்.

இருடியர் இன துற்றும் பதங்கொளும்
மறையவன் நில தொக்கும்  சுகம்பெறு
இமையவர் இனக் கட்டும் குலைந்திட  வருசூரர்
(சிதம்பரம் திருப்புகழ் )

சூராதி அவுணர்கள் என்ன செய்தார்கள் என்பதை இங்கு சொல்கிறார்:
ரிஷிகளின் இனத்தோர் கூட்டத்தையும், பதவியில் இருக்கும் ப்ரம்மா படைத்த மண்ணுலகினர் கூட்டமும், சுகம் பெற்று இருந்த தேவர்களின் மிகுந்த கூட்டமும் எல்லாம் நிலைகுலைய வந்த அசுரர்கள். 
எனவே முருகன் அவர்களுடன்  போர் செய்தான்.


அடல் வந்து முழங்கியிரும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்ற அண்டம் நெறிந்திட         வருசூரர்

மனமுந்தழல்  சென்றிட அன்றவர்
உடலுங் குடலுங்    கிழி  கொண்டிட
மயில் வெந்தனில் வந்தருளுங்கன   பெரியோனே

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா

அண்டர் பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மனமகிழ் மீற 

அமரேசர் தங்கள் ஊர் இதென  வாழ்வுகந்த
தீரமிகு சூரை வென்ற                 திறல்வீரா

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த 
முதுசூரர்  தானை  தங்கள்                                        கிளையோடு
முதுகொடி தூள் எழுந்து  கழுகொடு பாறருந்த 
முனை வேலினால் எறிந்த                                       பெருமாளே

வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க                      அமராடி

வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து              வடவாலும்

வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த               கதிர்வேலா


வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரி தாபந் தவிர்த்த                 பெருமாளே.


 துர்கையும், சக்ரவ்யூஹமாக நின்ற பூத கணங்களும் மகிழவும்,பேய்க்கூட்டங்கள் பிணங்களை உண்டு பிழைக்கும் படியும் போர்செய்து,ப்ரம்மா அபயம் என்று முறையிட்டுக் கூச்சலிட, அண்டகூடம் பிளவுபட,சூரன் மாயமாக நின்ற மாமரத்தின் அடிவேரையே வெட்டி,வடவாக்னியையும் நிலைத்த சமுத்ரங்கள் ஏழையும் குடித்து,பெரிய சூரனோடு செய்த பொரிலே அவன் எய்த அம்புகளை அறுத்தெறிந்து, பாணங்கள் தங்கும் இடமாகிய வில்லையும் வெட்டித்தள்ளிய ஒளி வேலனே,தேவலோகத்தை (மீண்டும் ) அரசாளும் படிக்கு, 'வாருங்கள், வாருங்கள், வாருங்கள்' என்று அழைத்து, தேவர்களின் பரிதாபத்துக்குரிய துன்ப நிலையைப் போக்கியருளிய பெருமாளே !












கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம் புயம் பெற    அரக்கருமாள....
சரவணப் பெருமாளே









வேலின் மஹிமை



முருகப்பிரான் ஒப்பற்ற வேற்படையுடையவன். இந்த வேலின் மஹிமை என்ன?

வெங்காள கண்டர் கைச் சூலமும்  திருமாயன் 
வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர் பதி குலிசமும் 
சூரன் குலங்கல்லி வெல்லா எனக் கருதியே

சங்க்ராம நீ ஜயித்  தருளெனத் தேவருடன் சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே
 தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

சிவனின் சூலமும், திருமாலின் சக்ராயுதமும் இந்தரனின் வஜ்ராயுதமும் செய்யமுடியாத வேலையைச் செய்தது வேல்.

இதை அருணகிரிநாதர்  'வேல் வாங்கு வகுப்பில் " வருணிக்கிறார்:

சிறையுள் அழுந்திய குறைகள்  ஒழிந்து  செயங்கொடு
தேவேந்திரர் சேண்  ஆண்டனர்
திரிபுவனங்களும் ஒருபயம் இன்றி வளம்கெழு
சீர்பூண்டற நேற் பூண்டன
விட வசனம் சில பறையும் விரிஞ்சன் விலங்கது
கால்பூண்டு தன்மேல் தீர்ந்தனன்
விகசித சுந்தர விதரண  ஐந்தரு  வெந்தெழில்
வீவான் பொழில் பூவாய்ந்தது
விழைவு தரும்பத சசி தன் விளங்கிய மங்கல
நூல் வாங்குகிலாள் வாழ்ந்தனள்
வெருவி ஒதுங்கிமையவர்  எவரும் சிறை வென்றித
மேலாம் படியே மீண்டனர்
விழியொர் இரண்டொரு பதுசதம் நின்றெறி கண்டகன்
மேல்வாங்கிளை  கால் சாய்ந்தது
வெளிமுழுதும் திசை முழுதும் விழுங்கி எழும் கன
சூர் மாண்டற வேர் மாய்ந்தது
விபுதர் பயங்கெட நிருதர் தளம்கெட விண்கெடு 
மேடாம்படி பாடோங்கின......
வேல்வாங்கவே  வேல் வாங்கவே


தேவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சூரன் வேரோடு சாய்ந்தான். தேவேந்த்ரன் மீண்டும் ஆண்டான். அமரர்கள் பிழைத்தனர். திரிபுவனங்களும் பயம் நீங்கின. அசுரர்களின் தளம் கெட்டது.
இங்கே தேவேந்த்ரன் உயிர் பிழைத்த சமாசாரத்தை  வெகு சுவாரஸ்யமாகச் சொல்கிறார்:
சசி தன் விளங்கிய மங்கலநூல் வாங்குகிலாள் வாழ்ந்தனள்
இந்த்ராணி தன் மங்கல நூல் இழக்காமல் வாழ்ந்தாள் என்கிறார்.
 இதையே மயில் விருத்தத்திலும் சொல்வார்:

இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண  இகல்வேல் வினோதன் 

இன்னும் கந்தரலங்காரத்தில்   சொல்கிறார் ;-

சசிதேவி மங்கில்ய தந்து ரக்ஷாபரண 
க்ருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே


கால்வாங்கி நிற்கும் களிற்றால் கிழத்தி கழுத்திற் கட்டும்
நூல்வாங்கிடாது அன்று வேல் வாங்கினான் கழல் நோக்கு நெஞ்சே




தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே : அதன் பொருள்

இந்த்ரன் மீண்டும் தன் பதவியை- ராஜ்யத்தைப் பெற்றான்.

இமையவர்கள் நகரில் இறை குடிபுகுத 
நிருதர்  வயிறெரிபுகுத  உரகர் பதி அபிஷேக மாயிரமும்
எழு பிலமும் நெறு நெறென முறிய வட குவடிடிய.......

மீண்டும் சொல்கிறார்:

ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க 
அமராவதி புரக்கும் அடல்  ஆண்மைக்காரனும்

வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் 
மலர் வாவியில் உதித்த முக மாயைக்காரனும்

வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டுருவ
வேலை உற விட்ட தனி          வேலைக்காரனும்
அரக்கர் குல சூரைக்காரனும்
வேதியர் வெறுக்கையும்...... திரு வேளைக்காரனே




சரவணபவன்

வேறு இடத்தில் சொல்கிறார்:

அவுணர் படை கெட்டு முது மகரசல வட்டமுடன்
அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும்
விப்ரகுல யாகச் சபாபதியும்
வெடிச்சி காவலனே

வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ரலோகம் விபுதர் குடிபுக
மண்டு பூத பசாசு பசிகெட           மயிடாரி

வன் கண் வீரிபிடாரி ஹரஹர
சங்கரா என மேரு கிரிதலை
மண்டு  தூள் எழ வேலை உருவிய    வயலூரா

இப்படி சூரரை வதைத்து, அமரர் உலகை மீட்டுத் தந்தது  வேள்விகள் சரிவர நடக்கவேண்டும் என்பதற்காகவே. இதையும்  அருணகிரிநாதர் சொல்கிறார்:.

மகாவ்ருத தெர்ப்பை ஆசார வேதியர்  தம்பிரானே.

இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. எதை எடுப்பது, எதை விடுவது ?
முருகன் அவதாரம் மகத்தானது. அது வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் நிகழ்ந்தது. அதன் பயன் ஆதி அமராவதி நிலைக்கவேண்டும், அதற்காக வேள்விகள் போற்றப்பட வேண்டும் என்பதே.முருகனே "விப்ரகுல யாகச் சபாபதி"யாவான். அவனே "அந்தண்மறை வேள்வி காவற்காரன்,"


...



Monday, 30 January 2017

47. இரு அரிய அவதாரங்கள் -1


47. இரு அரிய அவதாரங்கள் -1


சம்பந்தரும் பழனியும். படம்  நன்றி :தமிழ் ஹிந்து

அவதார தத்துவம்


அவதாரம் என்னும் கொள்கை ஹிந்து மதத்தின் ஜீவனாக இருப்பது. கடவுள் என்ற ஒன்று அல்லது ஒருவர் என்றோ உலகைப் படைத்து எங்கோ இருக்கிறார் என்று இல்லாமல், உலக வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவர், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர், அவர்களுக்காக அவர்களாக அவர்களோடு வந்து வாழ்பவர் என்ற கருத்து அவதாரத் தத்துவத்தின் மையமாக இருப்பது. இதை ஸ்ரீமத் பதவத் கீதை தெளிவாகச் சொல்கிறது.

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।

अभ्युत्थानमधर्मस्य तदाऽऽत्मानं सृजाम्यहम्।।4.7।।


परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।

धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।4.8।।




யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய  யதா ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்

பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய  ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபனார்த்தாய  ஸம்பவாமி யுகே யுகே


பாரத குலத்தோன்றலே ! எப்போதெல்லாம் தர்மத்திற்குக் குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் நான் என்னைத் தோற்றுவித்துக் கொள்கிறேன். [அதாவது, மக்கள் முன்னே காணக்கூடிய உருவத்துடன் வெளிப்படுகின்றேன்.]


ஸாதுக்களைக் கடைத்தேற்றுவதற்காகவும், பாவச்செயல்களைச் செய்பவர்களை அழிப்பதற்காகவும்  தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும் நான் யுகந்தோறும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

இந்த ஶ்லோகங்களில் அவதாரத்தின் அவசியமும் அதன்   நோக்கமும் பயனும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பாவத்தை ஒழித்தால் போதாதா, பாவம் செய்பவர்களையும் அழிக்கவேண்டுமா என்றால், சில சமயங்களில் பாவம் செய்பவர்கள் அழியாமல் பாவம் மறைவதில்லை. நமது இரு இதிஹாசங்களும் இதையே விளக்குகின்றன.

அவதாரம் என்றால் இறங்கி வருவது. பகவான் நமது  உலகத்திற்கு, அதாவது நமது நிலைக்கு இறங்கி வருகிறார். நமது மொழியில் பேசுகிறார். இது அவருடைய கருணை.

பொதுவாக அவதாரம் என்றால் விஷ்ணுவின் பத்து அவதாரங்களே பிரதானமாக எண்ணப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதம் முக்கியமாக 24 அவதாரங்களைச் சொன்னாலும் அவதாரங்கள் கணக்கற்றவை என்கிறது. ராமர் க்ருஷ்ணர் ஆகிய இரு அவதாரங்களும் ப்ரதானமானவை. நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் போற்றப்படுபவை. இவை இரண்டும் பகவான் மனிதனாகப் பிறந்து வளர்ந்த வரலாறுகள்.  ஸ்ரீ நாரசிம்ஹ அவதாரம் அப்போதைக்கு ஆவிர்பவித்தது. நரசிம்ம அவதாரமும் சில பகுதிகளில் விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது.. பல குடும்பங்களுக்கு  குல தெய்வமாக  இருக்கிறது.  

பொதுவாக சிவன் அவதாரம் எடுத்ததாகச் சொல்வதில்லை. " பிறவா யாக்கைப் பெரியோன் " என்பார்கள். அதாவது, மனிதனாகப் பிறவி எடுக்கவில்லை. ஆனால் சிவனும் மனித உருவில் தோன்றியே இருக்கிறார். இதைத் திருவிளையாடல் புராணத்தில் பார்க்கிறோம். அவரும் மக்கள் முன்பு காணக்கூடிய உருவத்துடன் வெளிப்படுகிறார்.

ஒவ்வொரு அவதாரமும் ஒரு காரணம் பற்றி எழுந்ததே. தேவர்கள் கோரிக்கைக்கு இணங்கி ராவண வதம் செய்ய நிகழ்ந்தது ராமாவதாரம். தீய அரசர்களை நீக்கி, உண்மையான க்ஷத்ரிய தர்மம் தழைக்க வழி வகுத்தது க்ருஷ்ணாவதாரம். அதனால் பூபாரமும் குறைந்தது.

இதற்கெல்லாம் ஆதாரமாக, இதன் பின்னணியில் ஒர் அவதாரம் இருக்கிறது. அதைப் பொதுவாக நாம் நினைப்பதில்லை.


வேள்வியில் நிலைபெற்ற தர்மம்

படைப்பு -ஶ்ருஷ்டி என்பது  பரப்ரஹ்மத்தின்   பன்முக வெளிப்பாடு. ஒன்றேயான பொருள் பலவிதமாக வெளிப்படுகிறது. எண்ணிறந்த சக்திகள் ஒன்றுசேர்ந்து உலக இயக்கத்தை குழப்பமில்லாமல் நடத்திச் செல்கின்றன. இச்சக்திகளை தேவர்கள் என்கிறோம். இந்த்ரன் தேவக்கூட்டத்தின் தலைவனாகக் கருதப்படுக்கிறான். இந்த்ரன் என்பது ஒரு பதவி, குறிப்பிட்ட நபர் அல்ல. இவர்கள் உயிர்களைப் போஷிக்கிறார்கள்.கடவுளால் நியமிக்கப்பட்ட தொழில்களைச் செய்கிறார்கள். ஆகவே இவர்களைப் போற்றவேண்டியது நமது கடமை. இப்படிப் போற்றும் முறையே வேள்வி- யஜ்ஞம், யாகம் என்கிறோம். [பொதுவாக மக்களுக்குரிய யஜ்ஞங்கள் ஐந்தெனப்படும் ] இவ்வாறு பரஸ்பரம் போற்றி வாழ்வதே தர்மம். இதையே வேதம் வகுத்துச் சொல்கிறது. இதையும் ஸ்ரீமத் பகவத் கீதை எளிதாக விளக்குகிறது.


सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।

अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्।।3.10।।




 ஸஹயஜ்ஞா: பரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி :
அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஅஸ்த்விஷ்ட காமதுக்.


கல்பத்தின் ஆரம்பத்தில் ப்ரஜைகளின் தலைவரான ப்ரஜாபதி யாகங்களுடன் மக்களைப் படைத்துவிட்டுக் கூறினார் : " நீங்கள் இந்த வேள்வியின் மூலம் பல்கிப் பெருகுங்கள்.இந்த வேள்வி நீங்கள் விரும்பிய போகத்தைத் தருவதாக ஆகட்டும். "


देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।

परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ।।3.11।।


தேவான் பாவயதானேன  தே தேவா பாவயன்துவ :
பரஸ்பரம் பாவயந்த: ஶ்ரேய : பரமவாப்ஸ்யத


இந்த வேள்வியால் தேவர்களை வளரச்செய்யுங்கள்.  அந்தத் தேவர்கள் உங்களை வளரச்செய்யட்டும். இப்படித் தன்னலம் கருதாது பரஸ்பரம் ஒருவரை யொருவர் வளரச் செய்து நீங்கள் மேலான நன்மையை அடையுங்கள்.


इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।

तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः।।3.12।।



இஷ்டான் போகான் ஹி வோ தேவா  தாஸ்யன்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தானப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ஸ :


வேள்வியினால் வளர்ச்சியடைந்த தேவதைகள் உங்களுக்கு விரும்பிய போகங்களை நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட பொருள்களை  அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனே.


अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः।।3.14।।



அன்னாத் பவன்தி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ :
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:



அனைத்து உயிரினங்களும் அன்னத்திலிருந்து உண்டாகின்றன.அன்னம் மழையிலிருந்து  உற்பத்தியாகிறது.மழை வேள்வியிலிருந்து உண்டாகிறது.வேள்வி [யஜ்ஞம் ] விதிக்கப்பட்ட கர்மாவிலிருந்து உண்டாகிறது. 


कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।

तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्।।3.15।।




கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி பரஹ்ம அக்ஷரம் ஸமுத்பவம்
தஸ்மாத்  ஸர்வகதம் பரஹ்ம நித்யம் யஜ்ஞோ ப்ரதிஷ்டிதம்.


கர்மங்கள் வேதத்திலிருந்து உண்டாகின்றன. வேதம்  அழிவற்ற பரம்பொருளிடமிருந்து தோன்றியது எனத் தெரிந்துகொள். எனவே, எங்கும் நிறைந்த  அழிவற்ற பரம்பொருள்  வேள்வியில் எப்பொழுதும்  நிலைபெற்றிருக்கிறார்.

एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।

अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति।।3.16।।



ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்  நானுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ  மோகம் பார்த்த ஸ ஜீவதி


பார்த்தா ! எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு பரம்பரையாகத் தொடங்கிவைக்கப்பட்ட படைப்புச் சக்கரத்திற்கு அனுகூலமாகப் பின்பற்றி நடக்கவில்லையோ  , புலன்களின் மூலம் போக வாழ்க்கையில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கை யுடையவன் வீணில் வாழ்கிறான்.


यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः।

तदर्थं कर्म कौन्तेय मुक्तसंगः समाचर।।3.9।।


யஜ்ஞார்தாத் கர்மணோ அன்யத்ர  லோகோயம் கர்மபந்தன:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த ஸங்க: ஸமாசர


யஜ்ஞத்தின்  பொருட்டுச் செய்யப்படுகிற கர்மம் தவிர, வேறு கர்மங்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித சமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது.
ஆகையால் அர்ஜுனா, பற்றுதல் இல்லாமல் அந்த வேள்வியின் பொருட்டே கர்மத்தை ஆற்றுவாயக.

[குறிப்பு:  இது முக்கியமான எச்சரிக்கை. வேள்வியினால் எதையும் அடையலாம் என்று, ஆசை வயப்பட்டு வேள்வி செய்வது மீண்டும் மீண்டும் பிறவித் தளையில் ஆழ்த்திவிடும். செய்யவேண்டிய கர்மத்தை மட்டும்  பற்றில்லாமல் கடமையெனக்கருதியே செய்யவேண்டும். ஆசை வசப்பட்டுச் செய்யும் = காம்ய கர்மம் நீக்கவேண்டும் என்பது கீதையின் முக்கிய உபதேசம். ] 


இப்படி தர்மத்தின் ஆணிவேராக, ஆதாரமாக இருப்பது யஜ்ஞ கர்மங்கள். இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது வேதம். இந்தக் கர்மங்கள் ஒழுங்காக நடைபெறாமல் தடைசெய்பவர்கள் அசுரர்கள், ராக்ஷஸர்கள். இவர்கள் தேவர்களின் இடத்தை ஆக்ரமிக்க முயல்கிறார்கள். யஜ்ஞத்தின் பயன் தேவர்களை அடையாமல் செய்ய முயல்கிறார்கள். சில சமயம் ஒரளவு வெற்றியும் காண்கிறார்கள்.[இவர்கள் கொடிய, நெடிய தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர்கள். ]  இவர்கள் தொல்லை அதிகரிக்கும்போது, மனித முயற்சியால் அதைச் சமாளிக்க முடியாதபோது, தேவர்களும் ரிஷி-முனிவர்களும் தெய்வத்தை வேண்டுகிறார்கள். அவர்களுக்கு இரங்கி பகவான் அவதாரம் எடுக்கிறார்.

நமது சம்ப்ரதாயத்தில் இந்த அவதாரம் எடுப்பது பரிபாலனக் கடவுளாகிய திருமாலுக்கு என்று கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு அவதாரத்தின் போதும் எல்லா தெய்வங்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள். சிவபெருமான் அவதாரமெடுக்காமலேயே முப்புரத்தையும் எரித்தார்.

ஸுப்ரஹ்மண்யர் அவதாரம்


திருச்செந்தூர்- சூர ஸம்ஹாரம்



மும்மூர்த்திகளாலும் முடியாத ஒரு சூழ்நிலையை சூரபத்மன் தோற்றுவித்தான். அவன் இந்த்ரனை தேவருலகிலிருந்து வெளியே தள்ளி, தேவர்களைச் சிறையிலிட்டான்.  [அதாவது யாக-யஜ்ஞங்கள் சரியாக நடக்காமலும், அவற்றின் பலன் தேவர்களை அடையாமலும், தன்னையே அடையுமாறும் செய்தான்.] அப்போது சிவன்-சக்தி சேர்ந்த அவதாரமாக நிகழ்ந்தது ஸுப்ரஹ்மண்யரின் அவதாரம். சுப்ரஹ்மண்யர் தேவர்களை மீண்டும் அவர்கள் இடத்தில் நிலைபெறச் செய்தார் என்பதன் பொருள், மீண்டும் யஜ்ஞங்கள் தடையின்றி நடக்க வழிசெய்தார் என்பதேயாகும்.
ப்ரஹ்மண்யத்தை மீண்டும் ஓங்கச்செய்தார். அதனால் அவர்  "ஸுப்ரஹ்மண்ய " ரானார். இவர்  நாமத்தை வேதம் மும்முறை ஓதுகிறது:

ஸுப்ரஹ்மண்யோம்  ஸுப்ரஹ்மண்யோம் ஸுப்ரஹ்மண்யோம் .


திருமுருகாற்றுப்படை

முதல் சங்க நூலாகிய திருமுருகாற்றுப்படை முருகனின் அவதார ரகசியத்தைத்   தெரிவிக்கிறது.

பார்முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்......
இருபேருருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மருவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேள் சேஎய்.

[பாரினும் முதிர்ந்த , குளிர்ந்த கடலானது கலங்கும் படியாக அதனுள்ளே புகுந்து,சூரனாகிய அசுரர் தலைவனைக் கொன்ற சுடர்விடுவதாகிய  இலையை  உடைய நெடிய வேலினாலே....
இரண்டு பெரிய உருவையுடைய ஒரு பெரிய சூரனது உடம்பானதுஅஞ்சும்படியாக, ஆறு வேறு உருவத்தோடு சென்று , அசுரர்களது நல்ல வெற்றி கெட்டுப்போகுமாறு, தலைகீழாகக் கவிழ்ந்த பூங்கொத்துக்களுடைய மாமரத்தை அழித்த குற்றமற்ற வெற்றியையும், யாராலும் அறிதற்கரிய நல்ல புகழையுமுடைய செவ்வேள் சேய்.]

இப்படிப்பட்ட முருகனின் ஆறு திருமுகங்களில் ஒன்று, அந்தணர்கள் செய்யும் யாகத்தைக் காக்கிறது.

................... ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே

வேத மன்த்ர விதியின் படியே, சம்ப்ரதாயத்தினின்று வழுவாது, அந்தணர் புரியும் யஜ்ஞங்களை நன்கு  நிறைவேற்றத்  திருவுள்ளம்  கொள்ளும் ஒருமுகம்.

[இதையே அருணகிரிநாதர் "யாகமுனிவர்க்குரிய காவற் காரனும் " , " அந்தண் மறை வேள்வி காவற்கார " , "விப்ரகுல யாகச் சபாபதியும் " என்றெல்லாம் பலவாறு சொல்வார்.]

முருகனது ஆறு திருமுகங்களுக்கேற்ப பன்னிரு கரங்களும் தக்க தொழில்களைச் செய்கின்றன. யாகத்தைக் காப்பது ஒருமுகம்; அதற்குத் தகுந்தபடி இரு கரங்கள் யாகத்தைக் கெடுப்போரை அடுக்கத் தயாராக இருக்கின்றன.

.............இரு கை
ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப

இரண்டு கரங்கள் வியப்பையும் கருமையையும் உடைய கேடயத்தையும் வேலாயுதத்தையும் சுழற்றுகின்றன.

இப்படிப்பட்ட முருகன் அந்தணர்களின் செல்வமாக இருக்கிறான் : "அந்தணர் வெறுக்கை ".

இந்த நிலையில் அந்தணர்கள் சும்மா இருப்பார்களா ? தங்கள் நன்றியை வழிபாட்டினாலே தெரிவிக்கிறார்கள். நக்கீரர் பாடலில் ஆறு தலங்களில் ஒரு தலம் முழுமையும் ( திருவேரகம் ) அந்தணர் வழிபாடு பற்றியதே !

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறு நான்கிரட்டி இளமை நல்லியாண்டு 
ஆறினிற் கழிப்பிய அரன் நவில் கொள்கை
மூறு வகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்.

[ ஆறு தொழில்கள் என்று வகுக்கப்பட்ட இலக்கணத்திலிருந்து வழுவாமல்,
தந்தை, தாய் ஆகிய இரு வழியிலும்  பல்வேறு பழைய {தொல்- புராதன ) கோத்திரத்தை உடையவர்களும்,
இளமைப் பருவத்துக்குரிய  நாற்பத்தெட்டு நல்ல ஆண்டுகளை நிற்கவேண்டிய  நெறியிலே நின்று கழித்தவர்களும், 
தர்மத்தையே நவிலும்  விரதத்தை உடையவர்களும்,
முத்தீ எனச் சொல்லப்பட்ட மூவகை வேள்வித்தீயையே செல்வமாக உடையவர்களும், இருபிறப்பாளர்களுமாகிய அந்தணர்கள், 
முருகனைத்துதிப்பதற்கான தகுந்த சமயம் (முஹூர்த்தம்) அறிந்து ஸ்தோத்திரங்கள் கூறவும்,
ஓன்பது நூலை முறுக்கிய மூன்று புரிகளாகிய நுண்ணிய பூணூலை அணிந்து,
உலராத ஈர  ஆடையை அப்படியே உலருமாறு அணிந்து,
தலைமேலே கைகளைக்குவித்து முருகனைப் புகழ்பவர்களாய்,
ஆறெழுத்துக்களைத் தன்பால் கொண்டதாகிய  அரிய உபதேச  மந்திரத்தை நாக்கானது  புரளும் மாத்திரத்திலேயே பலமுறை கூறி,
மணம்மிக்க நறுமலர்களை ஏந்தி வழிபடவும், அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத்திலே எழுந்தருளி யிருப்பவன்.]



திருவேரகத்திறைவன். ஸ்வாமிமலை

பெயரில் அவதாரச் சிறப்பு


முருகனுடைய அவதாரச் சிறப்பு அவனுக்கு வழங்கும் பெயர்களிலேயே  விளங்குகிறது!

கார்த்திகேயன்:
ஹிமய மலைச் சாரலில், சரவணப் பொய்கையில், அக்னி ஏந்திவர, கார்த்திகை மாதரால் தாங்கப் பெற்றவன். ஆறு ரிஷிகளின் பத்னிகள் பெற்றெடுத்த ஆறு திரு உருவங்களோடு அமர்ந்த செல்வன்

நெடும்பெருஞ்சிமயத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ

சிவ குமாரன் : ஆல்கெழு கடவுள் புதல்வ
பார்வதி நந்தனன் : மலைமகள் மகனே
துர்கையின் புதல்வன் : வெற்றிவெல் போர்க்கொற்றவை சிறுவ
பராசக்தியின் குழந்தை :இழைஅணி சிறப்பிற் பழையோள் குழவி
தேவ சேனாபதி : வானோர் வணங்குவில் தானைத் தலைவ
அந்தணர்களுடைய செல்வம் : அந்தணர் வெறுக்கை
க்ரவுஞ்ச ஸம்ஹாரன் :
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பெரிய கடவுள் :பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூரனை அழித்தவன் : சூர் மருங்கு அருத்த மொய்ம்பின் மதவலி


இவ்வாறு பெயரிலேயே தன் வரலாற்றைத் தெளிவு படுத்தும் பெரிய தெய்வம் முருகன். இதுவே வைதீக மரபைக்காக்க வந்த முதல் அவதாரம். இதை அருணகிரிநாதர் விடாமல் வியந்து பாடுகிறார்.

குறிப்பு:
இங்கு ஸம்ஸ்க்ருதத்தில் கொடுக்கப்பட்டுள்ள கீதையின் மூல ஶ்லோகங்கள்  'gitasupersite' என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தமிழர்த்தம் ஜயதயால் கோயந்தகா  அவர்களின் கீதா ப்ரஸ் உரையைத் தழுவியது. திருமுருகாற்றுபடை உரை வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களின் உரையைத் தழுவியது. 


























Sunday, 29 January 2017

46.திருப்புகழ் 44.எட்டிகுடி


46.திருப்புகழ் 44.எட்டிகுடி



அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 43 வது தலம் எட்டிகுடி.  இது  ஸுப்ரமண்யர்  க்ஷேத்ரம். சிக்கல், எட்டிகுடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களும் தொடர்புடையவை என்பார்கள். இந்த மூன்று தலத்திலும் உள்ள ஸ்வாமி விக்ரஹம்  ஒரே ஸ்தபதி செதுக்கியது என்பார்கள்.இதைப்பற்றி கர்ண பரம்பரைக் கதைகளும் நிலவுகின்றன.
இங்கு நமது ஸ்வாமிகள்  4 பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஓங்கு மைம்புல னோட நினைத்தின்      பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந்        தனையாள்வாய்

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்     புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங்              குமரேசா

மூங்கி லம்புய வாச மணக்குஞ்                  சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந்            திருமார்பா

காங்கை யங்கறு பாசில் மனத்தன்           பர்கள்வாழ்வே

காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம்                பெருமாளே.


வலிவுள்ள ஐம்புலன்களுடன் ஓட நினைத்து அயரும் எனக்கு. ஓம் என்ற ப்ரணவாதி பொருளை உபதேசித்து  என்னை  ஆண்டருள்வாயாக.

வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி, பாய்ந்து வந்த  சூரர் குலத்து இளைஞர்களுடன், வளைத்து நின்ற சூரர் சேனையை அம்பைவிட்டு வென்ற குமரேசனே !
மூங்கிலைப்போன்ற அழகிய புஜங்களுடைய மணம் கமழும் தெய்வானையும்,  அன்புடன் நீ சென்று மணந்த குறமகள் வள்ளியையும் உடைய திருமார்பனே !


மனக்கொதிப்பும் பாசங்களும் நீங்கிய  மனத்தராகிய அன்பர்களின் செல்வமே !

காஞ்சிரங்குடியில் அமர்ந்த  எமது ஆறுமுகப் பெருமாளே !உபதேசம் தந்து ஆள்வாய் !

[காஞ்சிரம் என்பது எட்டியின் பெயர்.]

தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட                     னுயிர்போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு                              மருகோனே

திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த                 புதல்வோனே

செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற                       பெருமாளே.

மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை

மிகநட்பொ டருள்தற்கு                   வருவாயே



தடையே இல்லாத அம்பைவிட்டு, மணி வஜ்ரம்  இவை பதிக்கப்பெற்ற கிரீடத்தை அணிந்த பத்துத் தலை இருந்த துஷ்டன் ராவணனுடைய  உயிரைப் போக்கி,


தாமரையில் வீற்றிருக்கும் மயில், லக்ஷ்மியாகிய சீதை இருந்த சிறையை நீக்கி, வெற்றிகொண்ட சக்ராயுதனாகிய திருமாலுக்கு  மருகனே !


உறுதி பயக்கும் கனகசபையில்  [பதஞ்சலி, வ்யாக்ரபாதர்  ஆகியோரிடம் உள்ள] அன்பினால் நடனம் செய்த சிவபிரானுக்குக் கண்போன்ற இனிய புதல்வனே !


செழிப்புள்ள சங்குகள் ஈன்ற முத்துக்கள்  வயலில் தவழும் எட்டிகுடியில் அமர்ந்த பெருமாளே !
மெலிவடைந்துள்ள எனக்கு  உனது தாமரை போன்ற திருப்பாதத்தை மிக்க அன்புடன் தந்தருள்வாயாக.


The Hindu (Tamil )



ராமர், க்ருஷ்ணர்  அவதாரப் பெருமையை அருணகிரிநாதர் போன்று  வேறு எந்த புலவரும் இவ்வளவு அற்புதமான வாக்கால் பாடவில்லை !
சிவபெருமான் பொற்சபையில் நடனமாடியது இரு முனிவர்களுக்கு அருள்செய்யவேண்டி. இவ்வாறுதான் ஒவ்வொரு தலமும் தோன்றியது. எல்லோரும் நன்மை அடைகிறார்கள்.  இவை மனிதன் தன் மனம்போனபடி  தோற்றுவித்த இடங்கள் அல்ல. பெரிய  அரசர்களும் ப்ரபுக்களும்  பிற்பாடு  இங்கெல்லாம் கோயில் கட்டினார்கள்; இருந்ததைப் பெரிதாகச் செய்தார்கள். ஆனால் முதலில் இவை சில முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் போன்றோர் ஆத்மார்த்தமாக பூஜை செய்த இடமாகவே இருந்தன. பெரிய சக்ரவர்த்திகளும் தாங்களாகவே அமைத்த பெரிய பெரிய கோவில்கள் கலையம்சங்களில் சிறந்து இருந்தாலும் அங்கு தெய்வ சான்னித்யம் அருகியே இருக்கிறது. ஆகவே, கோயில் பெரியது என்று மலைக்காமல் ஸ்தலத்தின் மஹிமையை எண்ணவேண்டும். இதனால்தான் தேவாரத்திலும் திருப்புகழிலும் சிறிய தலங்களும் அதிகம் பாடப்பெற்றிருக்கின்றன.

முக்கணர் மெச்சிய பாலா சீலா
     சித்தசன் மைத்துன வேளே தோளார்
     மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன்            மருகோனே

முத்தமிழ் வித்வவி நோதா கீதா
     மற்றவ ரொப்பில ரூபா தீபா
     முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால்                    முருகோனே

இக்குநி ரைத்தவி ராலுார் சேலூர்
     செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
     மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர்                           வயலூரா


எச்சுரு திக்குளு நீயே தாயே
     சுத்தவி றற்றிறல் வீரா தீரா
     எட்டிகு டிப்பதி வேலா மேலோர்                              பெருமாளே.


தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமை யத்தக லாவே னாதா
    தத்தும யிற்பரி மீதே நீதான்                                     வருவாயே




சிவபிரான் மெச்சிய பாலனே ! சீலனே ! மன்மதன் மைத்துன வேளே !
தோள்கள் நிரம்ப  நறுமணமுள்ள துளசி மாலை  அணிந்தவனாம்  திருமாலின் மருகனே !
முத்தமிழ்ப்புலமை வாய்ந்த வினோதனே ! இசைஞானியே ! ஓப்பில்லாத அழகனே !ஓளிவளர் விளக்கே ! முக்தியைத் தந்து அடியார்மேல்  மிகுந்த அன்பு  கொள்ளும் முருகனே !


கரும்பு வரிசையாய் உள்ள, விரால் மீனும் சேல்மீனும் ஊர்வதாகிய  வயல்கள் உள்ள பழனிப்பதியை உடையவனே ! திருவாரூர், சிறப்பான திருவிடைக்கழி, புள்ளிருக்குவேளூர், பூ அரும்புகள் அடர்ந்து நிறைந்துள்ள வயலூர்  என்னும் தலங்களில் இருப்பவனே !


எத்தகைய வேதத்துக்குள்ளும் தாய் போல் நீயே முலப்பொருளாக இருக்கின்றாய் ! பரிசுத்த பராக்ரம வீரனே !தீரனே !எட்டிகுடியில் வீற்றிருக்கும் வேலனே !வானோர் பெருமாளே !


உனது அடையாளமாகிய வேல், மயில்  ஆகிய இலச்சினையை என்மீது பொறித்து, கண்பார்த்தருளுக ! கௌமார சமயத்தவனே ! ஒளிவேல் ஏந்தும் நாதனே ! தாவிச் செல்லும் மயில்வாகனத்தில்  நீதான் வந்தருள வேணும் !


குறிப்பு: 
அருணகிரி நாதர் இவ்வாறே  திருவண்ணாமலையிலும் பொதிய மலையிலும் விண்ணப்பஞ்செய்தார்.  அதை முருகன் நிறைவேற்றி  வைத்ததை  திருத்துருத்தி (குற்றாலம்) தலத்தில் பாடிய பாடலில் [மலைக் கனத்தென] சொல்லியிருக்கிறார்.







இது அருமையான பாடல். ஸ்வாமி தன்மேல் அவருடைய இலச்சினையைப் பொறிக்க வேண்டும் என்று வேண்டுகிறார் ! 
இவ்வாறே  அப்பர் ஸ்வாமிகளும் தூங்கானைமாடம் என்ற தலத்தில் சிவபிரான் தனக்கு சூலம், ரிஷபம் சின்னங்கள் பொறிக்க வேண்டுமெனக் கேட்டார் !

Ramalingar Pani Mandram.








பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் 
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல 
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் 
துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச்  சுடர்க்கொழுந்தே 

கடவுந் திகிரி கடவாது ஒழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிறல் ஒன்று வைத்தாய் பனிமால் வரைபோல
இடவம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்  இருஞ்சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே. 

muthusidharal.blogspot.in

அருணகிரிநாதருக்கு ஒவ்வொரு தலத்தில்  ஒவ்வொருவிதமான அனுபவம் ஏற்பட்டது. சில தலங்களில் சில ப்ரத்யேகமான அனுபவங்கள் கிடைத்தன. அத்தகைய தலங்களை அவர் பிற தலத்திலும் நினவுகூர்வார். இங்கும் அவ்வாறே பல பதிகளைச் சொல்கிறார். 
பழனித் தலம் பச்சைப் பசேல் என்று வயல்சூழ்ந்து இருக்கும். ஷண்முக நதியும் ஏரிகளும்  கோடையிலும் வற்றாது இருக்கும். மலைமேலிருந்து பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இது 50.60 வருஷங்களுக்கு முந்திய நிலை. இன்று எல்லாம் மாறிவிட்டது.  மலையையும் கெடுத்து விட்டார்கள். சாமியை வைத்து வியாபாரம் நடக்கிறது. ஸ்வாமி விக்ரஹத்தையே சுரண்டிவிட்டார்கள். தலத்தின்  பெருமை ஏட்டளவில் நிற்கிறது!
பசுவைக் கொண்டாடி எருமைப்பாலைக் குடிக்கும் தேசத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?







Saturday, 28 January 2017

45.திருப்புகழ் 43.நாகபட்டினம்


45.திருப்புகழ் 43. நாகபட்டினம்
படத்திற்கு நன்றி.

கடல் நாகைக் காரோணம் என்ற பெயர்பெற்ற தேவாரத்தலம். மூவரும் பாடிய தலம். புராதன க்ஷேத்ரம். ஸ்வாமி பெயர்  காயாரோகணேஶ்வரர், ஆதிபுராணேஶ்வரர். அம்பாள்  பெயர் நீலாயதாக்ஷி. இது 64 சக்தி  ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  அருணகிரிநாதர் தரிசித்த 42வது தலம் இது.

மூவர் தேவாரம்

சம்பந்தர்

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடனாகைக் காரோ ணத்தானே.


கரையார் கடனாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம்

கரையா வுருவாகிக் கலிவா னடைவாரே.

அப்பர்


வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே.


பாணத் தால்மதின் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா

ரோணத் தானென நம்வினை யோயுமே.


பாரார் பரவும் பழனத் தானைப்
    பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
    திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
    பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
    
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே


சுந்தரர்



பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
    பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
    செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள்  இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
    யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
   

  கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே
இங்கு அருணகிரிநாதர் 3 பாடல்கள் பாடியிருக்கிறார்.








ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று                மவராரென்

றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று                  மறியாமற்

கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி                லுழல்நாயேன்


கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று                   தருவாயே


வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த                 சிறியோனே

வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட                   மயில்வீரா


ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த                         மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த                       பெருமாளே.


ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை  வட்டமிட்ட இந்த வூர்
முகில் தருக்கள்  ஒன்றும் அவர் யார் என்று

ஊமரைப் ப்ரசித்த ரென்றும், மூடரைச் சமர்த்த ரென்றும்,
ஊனரைப் ப்ரபுக்களென்றும் அறியாமல்,

கோல முத்தமிழ் பிரபந்த மாலருக்கு உரைத்து
அனன்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன்.......

என்று இப்படிப் பதங்களைப் பிரித்துக் கொண்டால் அர்த்தம் எளிதில் புரியும்.

[வேலை வட்டமிட்ட ஊர் = கடல் சூழ்ந்த ஊர் ]
நல்ல புலவர்களும் கயவர்களைப் பாடிப்பிழைக்க வேண்டிய நிலை இருந்தது.  இதையே  சிக்கல் தலத்திலும் சொன்னார். இந்த நிலை தனக்கு வரக்கூடாது
என்கிறார்.

இப்படி உழலும் நாயேன்,

கோபத்தை ஒழித்தும், ஆசை எனப்பட்டதையும் ஒழித்தும், உன்னைப் பணிந்து  உன் திருவடியைச் சேரும் முக்தியை என்று அருள்வாய் !


என்றும் இளையவள், துர்க்கை, சக்தி, அம்பிகை, உலக கர்த்தா ஆகிய பித்தராம் சிவபிரானது இடது பாகத்தில் இருக்கும் தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த சிறியோனே !


கடல் வற்றிப் போக, க்ரவுஞ்சம் தூள்பட, நெடிய வேலைச் செலுத்திய வெற்றி   மயில் வீரனே  ! மற்போருக்குத்  தக்கதான வலிய புஜங்களை உடையவனே !


பூமி மண்டலம் முழுதையும் உண்டு, ஆதிசேஷன் என்னும் பாம்பு மெத்தையில் துயில் கொண்ட நாராயணருக்கு அருள் பாலித்த மருகனே !


நான்கு திக்கிலும் வெற்றி பெற்ற சூரபத்மனை அடக்கி ஒடுக்கிய  பெருமாளே ! நாகப்பட்டினத்தில் அமர்ந்த பெருமாளே !


முக்தி என்று அருள்வாயே !

பகவானை வேண்டிக்கொள்பவர்கள்  முதலில் கோபத்தையும் ஆசையையும் விடவேண்டும். " மாலாசை  கோபம் ஓயாத நாளும் மாயாவிகார  வழி " என்று வேறு ஒரு இடத்தில் சொல்வார். இதை விடவேண்டும்.
 "தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை " என்று அலங்காரத்தில் சொல்வார்.

இப்படி இவர் சொல்வதால் இந்த குறைகள் எல்லாம் அருணகிரிநாதருக்கு இருந்தது என்று அர்த்தமில்லை. உலகில் காணும் குறைகளை தங்கள் மீது ஏற்றிச் சொல்வது பெரியோர்களின் முறை.









வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
     சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
      வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ              டர்ந்தசூரன்

வீற டங்கமுவீகி லுங்கமற நஞ்சுடைய
     ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
     மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட            னங்கொள்வேலா


நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
     யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
      ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர்                 தந்தமூல

ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
     தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
     நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ்           தம்பிரானே.


  கழலு றுங்கழல்    மறந்திடேனே



வீர காலணி ஒலிக்க,, சங்கு, முரசு, பறை ஆகியவை வரிசையாய் பேரொலி எழுப்ப, ப்ரம்மாவும், தேவர்களும், வேதம் ஓதவல்ல ஞானம் உள்ளவர்களும்  கலந்து ஒலியெழுப்ப,


வெந்து அழிய நெருங்கி வந்த சூரனுடைய கொழுப்பு அடங்க, மேகமும் சூடேற, ஆயிரம் யானையின் பலமுடைய,  விஷத்தைக் கொண்ட ஆதிசேஷனின்  மலைபோன்ற உச்சிகள் வேக,  அசுரர்களின் தலைகளை அறுத்தெரிந்து  நடனம் செய்த வேலனே !


நரசிங்க வடிவம் கொண்டு, கடுமையான ஹிரண்யனை நடுங்கவைத்து நடனம் செய்து,  லங்கையில் வலிமைமிக்க ராவணனுடைய கூட்டம் அடங்கி அழிய, கோதண்டம் என்னும் வில்லை ஏந்திய கரங்களை உடைய  திருமால் பெற்ற -


ஞான மங்கை, அமுத உருவினள், எனது ஒப்பற்ற தாய், தெய்வப்பெண் ஆகிய குறப்பெண்ணை  மணந்த புயத்தை உடையவனே ! நாகப்பட்டினத்தில் அமர்ந்த சிவன் புகழும் தம்பிரானே !


உன் கழலை மறவேன் !

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே              புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார்                   மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா                துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ

     ரழியா வரமே                         தருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே                            தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார்                         பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே

லிறைவா எனையா                          ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ்  பெருமாளே.


விழு தாது எனவே கருதாது உடலை  வினை  சேர்வதுவே புரிதாக
விருதாவினிலே
உலகாயதமேலிடவே  மடவார் மயலாலே
அழுது ஆ கெடவே அவமாகிட நாளடைவே கழியாது உனை ஓதி,
அலர்தாள் அடியேன் உறவாய்  மருவோர்  அழியா வரமே தருவாயே !

அரிய கருத்துக்களை இங்கே சொல்கிறார்.
இந்த உடல் வினைவசப்பட்டு  விதியால் வருவது - தெய்வச்செயலாய் வருவது. இதை தாது விழுவதால் வருவது என்கிறார். இது தான் ப்ராரப்தம். [ விதி காணும் உடம்பு ]. இதைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் வினைகள் செய்து கர்மாவைச் சேர்த்துக் கொள்கிறோம். [ ப்ராரப்தத்தைக் கழிக்கும் போதே, புதிய ஆகாமி கர்மாவை  சம்பாதித்துக் கொள்கிறோம்.] வாழ்வை வீணடிக்கிறோம்.

உலகாயதம் போன்ற கருத்துக்கள் இதற்கு தூபமிடுகின்றன. உலகாயதமாவது, நாம் காணும் இந்த உலகமே நிஜம் அதனால்  தேகமே ஆத்மா, போகமே மோக்ஷம் என்னும் கருத்து. இதனால் உலக மயல்களைத் தேடிக்கெட்டு வாழ் நாள் வீணாகப் போகாமல், இறைவனைத் துதித்து, அவன் பாதமே உற்ற உறவாகக் கருதி, அதைக் கூட்டிவைக்கும்  ஒப்பற்றதும் அழியாததுமான வரமே வேண்டும்.

தொழுகின்ற அடியார்களுடைய வினையின் வேர் அடியோடு அற்றுப்போக, குற்றமில்லாத மேலான பதவியையே தருகின்ற தேவனே !


தேவர்களுக்கு அரசே ! கருணையின் இருப்பிடமே ! புண்ணியனே ! அடியார்களின் பெருவாழ்வே !


வேதத்தின் சிறந்த முடிவுப் பொருளே ! கூரிய வேலை ஏந்தும் இறைவனே ! என்னை  ஆட்கொண்டவனே !


ஆண்டவனே !  எது தா அது தா !
நீ எதைக்கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ  அதைக் கொடுத்தருள்வாய்  !
தனக்குத் தானே இணையாக  நாகப்பட்டினத்தில் வாழ்கின்ற பெருமாளே !

இது மிக உயர்ந்த நிலையில் இருந்து பாடியது.
முதலில் ஒரு வரம் கேட்டார். இங்கு எனக்கு என்று எதுவும் இல்லை; நீ கொடுப்பதைக்கொடு என்கிறார் !

இகபர சௌபாக்யம் அருள்வாயே, அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே என்றெல்லாம் பாடுவார், ஆனால் அவருக்காக எதுவும் தேவையில்லை. நீ கொடுப்பதைக் கொடு என்கிறார்!

இது ஞானிகளின் நிலை. வேண்டத் தக்கது அறிவோய் நீ என்பார் மாணிக்கவாசகர்.

நமக்கு என்ன கேட்பது என்று தெரியாது. கண்டதையும் கேட்டு சிக்கலில் மாட்டிக்கொள்வோம். இதையே புராணத்தில் பார்க்கிறோம். அதனால்  ஸ்ரீ த்யாகராஜஸ்வாமிகள் சொல்வார் : "ராமா, வரம் கேள் என்று சொல்லி என்னை வஞ்சனை செய்வது நியாயமா ?  [வராலெந்துகொம்மனி நாயந்து வஞ்சன சேயுட ஞாயமா ?] என்னால் வரம் கேட்க முடியாது.

ஶ்யாமா ஶாஸ்திரிகள் சொல்கிறார்:
"பிரான வராலீச்சி ப்ரோவு"  வரங்களைக் கொடு, ஆனால் அதனால் கெட்டுப் போகாமல் காப்பாற்று ! Built-in Safety Valve !

ஆனால் இங்கு சுந்தரர் அவருக்கே உரிய ஸ்வாதீனத்துடன் என்னென்ன கேட்கிறார் பாருங்கள் !

இப்படி அருமையான பாடல்கள் !



நன்றி: தினமலர்