Wednesday, 18 January 2017

31.திருப்புகழ் 29. பாகை


31.திருப்புகழ் 29.பாகை




அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த தலம் பாகை.(28வது). இது எந்த ஊர் என்பது சரியாக விளங்கவில்லை. இங்கு ஸ்வாமிகள் 3 பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றிலொன்றில்  "நெடுங்கடல் கழிபாயும் பாகை "  என வருவதால் இது கடற்கரைத் தலமாக இருக்கவேண்டும். அதனால் இது மாயூரத்திற்கு அருகிலுள்ள  "பாகசாலை " என்னும் ஸுப்பிரமண்ய ஸ்தலமாக இருக்கலாம் என  தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார். அருணகிரிநாதர் தரிசித்த முறையில் இது சரியாகவே படுகிறது.

மூன்று அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்.

திருவடி உற

ஆடல் மாமதராஜன் பூசல் வாளியிலே நொந்
          தாகம் வேர்வுற மால்கொண்..........                      டயராதே
ஆர வாணகை  யார்செஞ்சேலி  னேவலி லேசென்
          றாயு வேதனை  யேறென் ...........                        றுலையாதே;
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களும் நீடுந்
          த்யாக மீபவர் யாரென்    ..........                            றலையாதே
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
          தேவ நாயக நானின் ...........                               றடைவேனோ;
பாடு  நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
          பாவை பாகனு நாளுந் ..........                             தவறாதே
பாக நாண்மலர் சூடுஞ்  சேகரா மதில் சூழ்தென்
           பாகை மாநக ராளுங்  .................                       குமரேசா;
கூட லான்மு கூனன் றோட வாதுயர் வேதங்
         கூறு நாவல  மேவுந்  ...........                                தமிழ்வீரா
கோடி தானவர் தோளுந் தாளும் வீழ வுலாவுங்
         கோல மாமயி  லேறும்............                             பெருமாளே.



மன்மதனின் காமப்போரில் மோகங்கொண்டு தளராமலும்,
பொதுமகளிரால் நிலைகுலைந் தழியாமலும்.
ஆதிசேஷனால் தாங்கப்படுகின்ற இந்தப் பரந்த பூமியில் உள்ள சிறந்த கொடையாளி யார் என்று தேடி அலையாமலும்,
நான்கு வேதங்களும் நாடுவதும், வள்ளியின் தினைப்புனத்தில் ஓடி அலைந்ததுமான  தேவநாயகனான உனது திருவடிகளை நான் இன்று அடைவேனோ !


நான்மறைகளையும் பாடவல்ல ப்ரம்மாவும், அவனுடைய தந்தையாகிய திருமாலும், பாகம் பெண்ணுடைய சிவபிரானும்-
நாள்தோறும் தவறாமல் பக்குவமாய் அன்று மலர்ந்த மலர்களைச் சூட்டுகின்ற திருமுடியை உடையவனே!
மதில்கள் சூழ்ந்த அழகிய பாகை மாநகரில் வீற்றிருந்தருளும் குமரேசனே!
மதுரைப் பதிக்கு அரசனாகிய பாண்டியனுடைய நெடு நாளைய கூன் அன்று நிமிரும்படி , சமணர்களுடன் வாது செய்து, அது சம்பந்தமாக உயர்ந்த வேதப்பொருள் கொண்ட தமிழ்ப்பாடல்களைப் பாடின , நாவின் வெற்றிபெற்ற தமிழ் வீரனே !
கோடிக்கணக்கான அசுரர்களின் கையும் காலும் அற்றுவிழ உலவின பெருமாளே!
அழகிய, சிறந்த மயிலேறும் பெருமாளே !
நான் உன் திருவடிகளை அடைவேனோ !

அருணகிரிநாதர் பரந்த மனமுடையவர். எல்லா தெய்வ வடிவங்களையும் போற்றும் இயல்புடையவர். ஆனால் அவருக்கு முருகனே பரம்பொருள். இதை இங்கு அழகாகச் சொல்கிறார்.






முருகனுடைய பாதங்கள் எங்கெங்கு பட்டன? இதை ஒரு கந்தரனுபூதிப் பாடலில் சொல்கிறார்: வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங்காடும் புனமும் கமழுங்கழலே ! இதையே இங்கும் சொல்கிறார் !

சம்பந்தர் அவதாரம்

பாண்டியனுடைய கூன் தீர்த்ததும், சமணர்களுடன் வாதிட்டதும் சம்பந்தர்  நிகழ்த்திய அற்புதங்கள்.

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே " 

என்று தன் கருத்தை வெளியிட்டார். அந்த வாதின்போது அவர் ஏட்டில் எழுதியிட்ட பதிகங்களில் ஒன்று:

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே

எனத் தொடங்குகிறது. " வேந்தனும் ஓங்குக " என்றதால் கூன் பாண்டியனும் நிமிர்ந்து 'நின்ற சீர் நெடுமாற'னானான்! [ இப்பாடல் "ஸ்வஸ்தி: ப்ரஜாப்ய" என்னும் வேத மந்திரத்தின் நேரடித் தமிழாக்கமாகும்!] இவ்வாறு சம்பந்தர் வேத நெறி தழைத்தோங்கவும் மிகு சைவத் துறை விளங்கவும்  வழிவகுத்தார்.

 முருகனே சம்பந்தராக வந்தார் என்பது அருணகிரி நாதரின் கொள்கை. இதைப் பல பாடல்களில் பலமுறை  சொல்லியிருக்கிறார்.





புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீறிடவே
புக்க அனல்வய மிகஏடுயவே உமையாள்தன்
புத்ரனென இசைபகர் நூல் மறை நூல்
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமானுருவாய்  வருவோனே

என்று ஒரு பாடலில்  ( நெய்த்த கரிகுழல் ) பாடுகிறார்!






கந்தரந்தாதியில் 'சம்பந்தரே தெய்வம். பிற தெய்வங்கள் இல்லை' என்று உறுதியாகச் சொல்கிறார்.

சம்பந்தரை முருகனின் அவதாரமாகக் கொள்வதில் இன்னொரு ரசமும் இருக்கிறது.  முருகனுடைய அவதாரமே வேதவேள்விகளை நிலை நிறுத்தி அதனால் இந்த்ரனின் நிலையைச் சீர்செய்வதுதான்! "இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் வினோதன் " என்றுஇன்னொரு இடத்தில் பாடுகிறார் .
முருகன் " விப்ர குல யாகச் சபாபதி " என்று சொல்கிறார் வேடிச்சி காவலன் வகுப்பில். 
"ஒருமுகம்  மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே" என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்கிறார். எனவே, அன்று முருகன் செய்தவாறே, சம்பந்தர் மீண்டும் வைதீக நெறி தழைக்க வழிசெய்தார்!

பதிகப் பெருவழி
தெய்வத் தமிழில் பதிகம் பாடித் துதிக்கும் புதிய வழியை சம்பந்தர் தோற்றுவித்தார்.இதுவே பதிகப் பெரு வழி எனப்படுவது. ருக்வேத சாரத்தை அருந்தமிழில் பாடினார். தமிழைக் கொண்டே சமணர்களை வென்றார். அதனால் அவரைத் "தமிழ் வீரா " என்று பாடுகிறார் நமது ஸ்வாமிகள். சம்பந்தரும் தம் பாடல்களின் தெய்வீக நலத்தை பல இடங்களில்  குறிப்பிட்டிருக்கிறார்.



சிவயோக பதம் பெற



ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
     நோய்கள் வளைந்தற ...... இளையாதே

ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
     காடு பயின்றுயி ...... ரிழவாதே

மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
     வேறு படுந்தழல் ...... முழுகாதே

மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
     வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே

வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
     சேல்கள் மறிந்திட ...... வலைபீறா


வாகை துதைந்தணி கேதகை மங்கிட
     மோதி வெகுண்டிள ...... மதிதோயும்

பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
     சாடி நெடுங்கடல் ...... கழிபாயும்


பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
     தோகை விரும்பிய ...... பெருமாளே.




கோழை, ஜுரம், குளிர், வாயுமிகுதல் போன்ற பிணிகள் சூழ்ந்து வருந்தாமலும்,
சிறிய கூடாகிய இந்த உடலில் புகுந்து, வலிமையை இழந்து இடுகாட்டில் சேர்ந்து உயிரை விடாமலும்,
மூளை, எலும்புகள், நாடி-நரம்புகள் ஆகியவை தீயில் வெந்து முழுகாமலும்-
மூலப் பொருளான சிவயோக பதத்தில் வாழ்வு பெறும்படியாக உபதேசம் அருள்வாயாக.


வாளை மீன்கள் குளத்தில் பிறமீன்களை விரட்டி, வலையைக் கிழித்துக்கொண்டு தாவி,
தாழை வரிசைகள் உருக்குலைய , அவற்றின் மீது கோபித்து மோதி, 
பிறைச் சந்திரன் படியும் நறுமணம் கொண்ட கமுக மரக்காட்டில் பாய்ந்து, அவற்றின் பாளைகளை ஒடித்து,
 பெரிய கடலின் சுழியில் பாய்கின்ற பாகை என்னும் செழுமிய பதியில் மயிலை விரும்பிய பெருமாளே !
சிவயோக பதவாழ்வு பெறும்படி உபதேசம் அருள்வாயாக.

முதல் நான்கு அடிகளில் உயிர் பிரியும் காலத்திலும் இறை நினைவு இருக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார். பின் நான்கு அடிகளில் தலத்தின் இயற்கை வளத்தைச் சொல்கிறார். இந்த இடம் சம்பந்தரின் பாடல்களை நினைவூட்டுகிறது!




utsava murthi from Tiruttani




மவுன சுகம் பெற



கவள கரதல கரட விகடக
     போல பூதர ...... முகமான

கடவுள் கணபதி பிறகு வருமொரு
     கார ணாகதிர் ...... வடிவேலா

பவள மரகத கநக வயிரக
     பாட கோபுர ...... அரிதேரின்

பரியு மிடறிய புரிசை தழுவிய
     பாகை மேவிய ...... பெருமாளே.


சுழலு மெனதுயிர் மவுன பரமசு
     கோம கோததி ...... படியாதோ




வாயளவு பெரிய கவளமாக உணவை உட்கொள்ளும் துதிக்கையையும். மதம் வழியும் கன்னத்தையும், யானைமுகமும் உடைய,
கடவுள் கணபதிக்குப்  பின் தோன்றிய ஒப்பற்ற மூலப்பொருளே ! ஒளிபொருந்திய கூரிய வேலை ஏந்தியவனே !
பவளம் போல் செந்நிறத்தையும், மரகதம் போன்று பச்சை நிறத்தையும், பொன் போல மஞ்சள் நிறமும், வைரம் போல வெண்ணிறத்தையும் கொண்ட கதவையும், கோபுரத்தையும்  கொண்டு,
சூரியனுடைய தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்களைக் கொண்ட பாகைத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !
சுழல்கின்ற என் உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகமாகிய  பெரிய கடலில்  படிந்து  திளைக்காதோ ?

[ பாடலின் பிரார்த்தனைப் பகுதி மட்டும் இங்கு தரப்பட்டுள்ளது.]

இங்கு 'மவுன நிலை' என்பது வாய் பேசாது இருக்கும் வெளி மவுனம் அல்ல. இது மனமும் இந்த்ரியங்களும் அடங்கிய நிலை. இதையே " பேசா அனுபூதி " , 'சுத்த நிர்க்குணம்' என்றெல்லாம்  பெரியவர்கள் சொல்வார்கள். இதைக் கந்தரனுபூதியில் விளக்கியிருக்கிறார். இதுவே பரம சுகமான நிலை. இந்த நிலை அருணகிரி நாதருக்கு வாய்த்தது என்பதை கந்தரலங்காரத்தில் " மௌனத்தை யுற்று நிர்க்குணம் பூண்டென்னை மறந்திருந்தேன் " என்று பாடுகிறார்.

இந்த மூன்று பாடல்களிலும் முருகன் அருளின் நிலைகளைச் சொல்கிறார். அத் திருவடியே சிவயோகம், அதுவே மவுன மாகிய பரம சுகம் ! இதுவே அருணகிரிநாதர் வேண்டுவது. 




No comments:

Post a Comment