46.திருப்புகழ் 44.எட்டிகுடி
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 43 வது தலம் எட்டிகுடி. இது ஸுப்ரமண்யர் க்ஷேத்ரம். சிக்கல், எட்டிகுடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களும் தொடர்புடையவை என்பார்கள். இந்த மூன்று தலத்திலும் உள்ள ஸ்வாமி விக்ரஹம் ஒரே ஸ்தபதி செதுக்கியது என்பார்கள்.இதைப்பற்றி கர்ண பரம்பரைக் கதைகளும் நிலவுகின்றன.
இங்கு நமது ஸ்வாமிகள் 4 பாடல்கள் பாடியிருக்கிறார்.
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே.
வலிவுள்ள ஐம்புலன்களுடன் ஓட நினைத்து அயரும் எனக்கு. ஓம் என்ற ப்ரணவாதி பொருளை உபதேசித்து என்னை ஆண்டருள்வாயாக.
வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி, பாய்ந்து வந்த சூரர் குலத்து இளைஞர்களுடன், வளைத்து நின்ற சூரர் சேனையை அம்பைவிட்டு வென்ற குமரேசனே !
மூங்கிலைப்போன்ற அழகிய புஜங்களுடைய மணம் கமழும் தெய்வானையும், அன்புடன் நீ சென்று மணந்த குறமகள் வள்ளியையும் உடைய திருமார்பனே !
மனக்கொதிப்பும் பாசங்களும் நீங்கிய மனத்தராகிய அன்பர்களின் செல்வமே !
காஞ்சிரங்குடியில் அமர்ந்த எமது ஆறுமுகப் பெருமாளே !உபதேசம் தந்து ஆள்வாய் !
[காஞ்சிரம் என்பது எட்டியின் பெயர்.]
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட னுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற பெருமாளே.
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு வருவாயே
தடையே இல்லாத அம்பைவிட்டு, மணி வஜ்ரம் இவை பதிக்கப்பெற்ற கிரீடத்தை அணிந்த பத்துத் தலை இருந்த துஷ்டன் ராவணனுடைய உயிரைப் போக்கி,
தாமரையில் வீற்றிருக்கும் மயில், லக்ஷ்மியாகிய சீதை இருந்த சிறையை நீக்கி, வெற்றிகொண்ட சக்ராயுதனாகிய திருமாலுக்கு மருகனே !
உறுதி பயக்கும் கனகசபையில் [பதஞ்சலி, வ்யாக்ரபாதர் ஆகியோரிடம் உள்ள] அன்பினால் நடனம் செய்த சிவபிரானுக்குக் கண்போன்ற இனிய புதல்வனே !
செழிப்புள்ள சங்குகள் ஈன்ற முத்துக்கள் வயலில் தவழும் எட்டிகுடியில் அமர்ந்த பெருமாளே !
மெலிவடைந்துள்ள எனக்கு உனது தாமரை போன்ற திருப்பாதத்தை மிக்க அன்புடன் தந்தருள்வாயாக.
The Hindu (Tamil )
ராமர், க்ருஷ்ணர் அவதாரப் பெருமையை அருணகிரிநாதர் போன்று வேறு எந்த புலவரும் இவ்வளவு அற்புதமான வாக்கால் பாடவில்லை !
சிவபெருமான் பொற்சபையில் நடனமாடியது இரு முனிவர்களுக்கு அருள்செய்யவேண்டி. இவ்வாறுதான் ஒவ்வொரு தலமும் தோன்றியது. எல்லோரும் நன்மை அடைகிறார்கள். இவை மனிதன் தன் மனம்போனபடி தோற்றுவித்த இடங்கள் அல்ல. பெரிய அரசர்களும் ப்ரபுக்களும் பிற்பாடு இங்கெல்லாம் கோயில் கட்டினார்கள்; இருந்ததைப் பெரிதாகச் செய்தார்கள். ஆனால் முதலில் இவை சில முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் போன்றோர் ஆத்மார்த்தமாக பூஜை செய்த இடமாகவே இருந்தன. பெரிய சக்ரவர்த்திகளும் தாங்களாகவே அமைத்த பெரிய பெரிய கோவில்கள் கலையம்சங்களில் சிறந்து இருந்தாலும் அங்கு தெய்வ சான்னித்யம் அருகியே இருக்கிறது. ஆகவே, கோயில் பெரியது என்று மலைக்காமல் ஸ்தலத்தின் மஹிமையை எண்ணவேண்டும். இதனால்தான் தேவாரத்திலும் திருப்புகழிலும் சிறிய தலங்களும் அதிகம் பாடப்பெற்றிருக்கின்றன.
முக்கணர் மெச்சிய பாலா சீலா
சித்தசன் மைத்துன வேளே தோளார்
மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் மருகோனே
முத்தமிழ் வித்வவி நோதா கீதா
மற்றவ ரொப்பில ரூபா தீபா
முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் முருகோனே
இக்குநி ரைத்தவி ராலுார் சேலூர்
செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் வயலூரா
எச்சுரு திக்குளு நீயே தாயே
சுத்தவி றற்றிறல் வீரா தீரா
எட்டிகு டிப்பதி வேலா மேலோர் பெருமாளே.
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
தற்சமை யத்தக லாவே னாதா
தத்தும யிற்பரி மீதே நீதான் வருவாயே
சிவபிரான் மெச்சிய பாலனே ! சீலனே ! மன்மதன் மைத்துன வேளே !
தோள்கள் நிரம்ப நறுமணமுள்ள துளசி மாலை அணிந்தவனாம் திருமாலின் மருகனே !
முத்தமிழ்ப்புலமை வாய்ந்த வினோதனே ! இசைஞானியே ! ஓப்பில்லாத அழகனே !ஓளிவளர் விளக்கே ! முக்தியைத் தந்து அடியார்மேல் மிகுந்த அன்பு கொள்ளும் முருகனே !
கரும்பு வரிசையாய் உள்ள, விரால் மீனும் சேல்மீனும் ஊர்வதாகிய வயல்கள் உள்ள பழனிப்பதியை உடையவனே ! திருவாரூர், சிறப்பான திருவிடைக்கழி, புள்ளிருக்குவேளூர், பூ அரும்புகள் அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் இருப்பவனே !
எத்தகைய வேதத்துக்குள்ளும் தாய் போல் நீயே முலப்பொருளாக இருக்கின்றாய் ! பரிசுத்த பராக்ரம வீரனே !தீரனே !எட்டிகுடியில் வீற்றிருக்கும் வேலனே !வானோர் பெருமாளே !
உனது அடையாளமாகிய வேல், மயில் ஆகிய இலச்சினையை என்மீது பொறித்து, கண்பார்த்தருளுக ! கௌமார சமயத்தவனே ! ஒளிவேல் ஏந்தும் நாதனே ! தாவிச் செல்லும் மயில்வாகனத்தில் நீதான் வந்தருள வேணும் !
குறிப்பு:
அருணகிரி நாதர் இவ்வாறே திருவண்ணாமலையிலும் பொதிய மலையிலும் விண்ணப்பஞ்செய்தார். அதை முருகன் நிறைவேற்றி வைத்ததை திருத்துருத்தி (குற்றாலம்) தலத்தில் பாடிய பாடலில் [மலைக் கனத்தென] சொல்லியிருக்கிறார்.
இது அருமையான பாடல். ஸ்வாமி தன்மேல் அவருடைய இலச்சினையைப் பொறிக்க வேண்டும் என்று வேண்டுகிறார் !
இவ்வாறே அப்பர் ஸ்வாமிகளும் தூங்கானைமாடம் என்ற தலத்தில் சிவபிரான் தனக்கு சூலம், ரிஷபம் சின்னங்கள் பொறிக்க வேண்டுமெனக் கேட்டார் !
Ramalingar Pani Mandram.
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே
கடவுந் திகிரி கடவாது ஒழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிறல் ஒன்று வைத்தாய் பனிமால் வரைபோல
இடவம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இருஞ்சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே.
muthusidharal.blogspot.in
அருணகிரிநாதருக்கு ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொருவிதமான அனுபவம் ஏற்பட்டது. சில தலங்களில் சில ப்ரத்யேகமான அனுபவங்கள் கிடைத்தன. அத்தகைய தலங்களை அவர் பிற தலத்திலும் நினவுகூர்வார். இங்கும் அவ்வாறே பல பதிகளைச் சொல்கிறார்.
பழனித் தலம் பச்சைப் பசேல் என்று வயல்சூழ்ந்து இருக்கும். ஷண்முக நதியும் ஏரிகளும் கோடையிலும் வற்றாது இருக்கும். மலைமேலிருந்து பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இது 50.60 வருஷங்களுக்கு முந்திய நிலை. இன்று எல்லாம் மாறிவிட்டது. மலையையும் கெடுத்து விட்டார்கள். சாமியை வைத்து வியாபாரம் நடக்கிறது. ஸ்வாமி விக்ரஹத்தையே சுரண்டிவிட்டார்கள். தலத்தின் பெருமை ஏட்டளவில் நிற்கிறது!
பசுவைக் கொண்டாடி எருமைப்பாலைக் குடிக்கும் தேசத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
No comments:
Post a Comment