Tuesday, 31 January 2017

48.இரு அரிய அவதாரங்கள் -2


48. இரு அரிய அவதாரங்கள் -2


தஞ்சாவூர் படம்

கோன்னதமான முருகன் அவதாரத்தை  சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை  யிலிருந்து  பார்த்தோம். அதேபோல் முருகன் அவதார விஷயமும் பெருமைகளும் இன்னொரு சங்க நூலான பரிபாடலிலும்  பாடப்பட்டிருக்கின்றன. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் 31 இருந்தது என்பர்; ஆனால் இன்று நமக்குக் கிடைத்திருப்பது 8 பாடல்களே  இவற்றை " வாழிய நிலனே " என்ற எனது ப்ளாக்கில் பார்க்கலாம். [முதல் கட்டுரை: 17.பரிபாடல்-7. செவ்வேட் பரமன். 24-11-2015  sanjayankumaran.blogspot.in]

முருகன் தமிழ்க்கடவுள் ?


முருகன் தமிழ்க் கடவுள் என்று பெருமைப் படுகிறோம்.  முருகனைப் பற்றிய அனைத்து விஷயங்களும் நமது புராணத்தில் வருபவைதான். [புராணங்களுக்கிடையே சில சிறிய வித்தியாசங்கள் இருக்கும் ] சங்க இலக்கியத்திலும் அதையே பார்க்கிறோம். முருகன் அவதாரம் தமிழ் நாட்டுக்கென்று நிகழவில்லை. தமிழ் நாட்டிலும் நிகழவில்லை. அது அசுரர்களால் தேவர்கள் பட்ட துன்பம் நீங்குவதற்காக  நிகழ்ந்தது. 
வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் 
மலர் வாவியில் உதித்த முக மாயைக்காரனும்
முருகன் ஆவான். அந்த அவதாரம் உலகத்திற்கே  பொதுவானது. முருகன் எல்லா அண்டகோளங்களுக்கும் தலைவன். ஆனால் தமிழ்நாட்டில் சில இடங்கள் முருகன் வரலாற்றோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன.

பழந்தமிழ் நாட்டில் நிலத்தை  ஐவகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் என்று வைத்தார்கள். அப்படி குறிஞ்சி  நிலத்திற்கு [ மலையும் மலை சார்ந்த இடமும் ] தெய்வமாக அமைந்தவர்  முருகன். தமிழ் நாடு முழுவதும் முருகன் வழிபாடு மட்டுமே இருந்தது  என்ற நிலை இருக்கவில்லை. இதுவே நாடு முழுதிலும் நிலவும் நிலை. எல்லா தெய்வங்களையும் வழிபடுபவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் சிவ-விஷ்ணு பேதம் பார்க்க மாட்டார்கள். பிறர் தத்தமக்குரிய ஸம்ப்ரதாயப்படி குல தெய்வத்தையோ, இஷ்ட தெய்வத்தையோ  வழிபடுகிறார்கள். பஞ்சாயதன பூஜை, ஸ்ரீ வித்யா பூஜை என்று செய்பவர்களும் ஸுப்ரமண்ய ஆராதனை செய்வார்கள். மலை நாட்டினரான மலையாளிகளும் அதிக அளவில் பழனிக்கு வருகிறார்கள். தமிழ் நாட்டினரும் ஐயப்ப யாத்திரை செய்கிறார்கள்.

உண்மையான ஞானிகள் தெய்வத்தை அருவமாக அனுபவிக்கிறார்கள்/வழிபடுகிறார்கள்.. நம் போன்ற சாமானியர்களுக்கு உருவம் அவசியமாக இருக்கிறது. ஓர் உருவமும். ஒரு  நாமமும் இல்லாத  இறைவனும் நமக்கு அருள் செய்ய ஆயிரம் உருவும் பெயரும் தாங்கி வருகிறான். "நானாவித உருவால் நமை ஆள்வான் " என்பார் சம்பந்தர். நமது வைதீக மதத்தில் சிவன், விஷ்ணு, அம்பாள், கணபதி, குமரன், சூர்யன் என ஆறு பிரதான உருவில் தெய்வ வழிபாடு செய்கிறோம். [ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகள்  உண்டு,] ஒவ்வொரு பிரதேச, மொழி மக்களும் ஒவ்வொரு உருவில் லயித்துவிடுகின்றனர். அவ்விதம் முருகன்   தமிழர்களுக்கு  உகந்தவன் ஆனான். ஆனால் முருகன்  வழிபாடு "கௌமாரம் " என்ற பெயரில் நாடுமுழுதும் இருக்கிறது.  கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பாகவே கார்த்திகேயனும் ஸுப்ரஹ்மண்யனும் வட இந்தியாவில் வழிபடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பழைய பஞ்சாப் (இன்றைய ஹரியானா} பிரதேசத்தில் ஆறுமுகங்களுடன் கூடிய கார்த்திகேய உருவம் கொண்ட நாணயம் கிடைத்திருக்கிறது. " பாகவத ஸ்வாமினோ ப்ரஹ்மண்ய தேவஸ்ய " என்று அதில் எழுதியிருக்கிறது குப்தர்கள் காலத்தில் வேல், மயிலுடன்   முருகன்  பொறித்த  நாணயம் வழக்கிலிருந்தது.

முருகன் அவதாரம்  இந்த்ரன் தலைமையிலான தேவர்களை  சூராதி அவுணர்களின்  துன்பத்திலிருந்து காப்பதற்காக  நிகழ்ந்தது.தேவர்கள் பூமியில் செய்யப்படும் வேள்விகளினாலே வாழ்கிறார்கள், போஷிக்கப் பெறுகிறார்கள். எனவே, தேவர்களைக் காப்பது என்பதன் பொருள், வேத வழி வேள்விகளை  ரக்ஷிப்பதாகும். இனி, தேவர்கள்  ஞானமாகிய ஒளியையும் (வெண்மை) அசுரர்கள் அஞ்ஞானமாகிய இருளையும்  குறிக்கின்றனர். இவற்றிற்கிடையே நிகழும் போராட்டமே தேவாசுர யுத்தம். இவ்வாறு கருதுவது அக வழிபாடாகும். ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் காணவேண்டும் என்பதன் பொருள் இதுவே. இது ஞானிகளின் நிலையாகும்.




அருணகிரிநாதர் வாக்கில் முருகன் அவதாரம்


முருகனின் அவதாரத்தை அற்புத வாக்கால் பாடியவர் அருணகிரிநாதர். அசுரர்களை அழித்து, தேவர்களைச் சிறைமீட்டு, அவர்கள் தங்கள்  உலகை பழையபடியே அடையச்செய்தார் என்பதை திருப்புகழில் நாம் பல விதத்தில் அருணகிரிநாதரின் வாக்கில் காண்கிறோம்.

இருடியர் இன துற்றும் பதங்கொளும்
மறையவன் நில தொக்கும்  சுகம்பெறு
இமையவர் இனக் கட்டும் குலைந்திட  வருசூரர்
(சிதம்பரம் திருப்புகழ் )

சூராதி அவுணர்கள் என்ன செய்தார்கள் என்பதை இங்கு சொல்கிறார்:
ரிஷிகளின் இனத்தோர் கூட்டத்தையும், பதவியில் இருக்கும் ப்ரம்மா படைத்த மண்ணுலகினர் கூட்டமும், சுகம் பெற்று இருந்த தேவர்களின் மிகுந்த கூட்டமும் எல்லாம் நிலைகுலைய வந்த அசுரர்கள். 
எனவே முருகன் அவர்களுடன்  போர் செய்தான்.


அடல் வந்து முழங்கியிரும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்ற அண்டம் நெறிந்திட         வருசூரர்

மனமுந்தழல்  சென்றிட அன்றவர்
உடலுங் குடலுங்    கிழி  கொண்டிட
மயில் வெந்தனில் வந்தருளுங்கன   பெரியோனே

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா

அண்டர் பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மனமகிழ் மீற 

அமரேசர் தங்கள் ஊர் இதென  வாழ்வுகந்த
தீரமிகு சூரை வென்ற                 திறல்வீரா

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த 
முதுசூரர்  தானை  தங்கள்                                        கிளையோடு
முதுகொடி தூள் எழுந்து  கழுகொடு பாறருந்த 
முனை வேலினால் எறிந்த                                       பெருமாளே

வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க                      அமராடி

வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து              வடவாலும்

வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த               கதிர்வேலா


வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரி தாபந் தவிர்த்த                 பெருமாளே.


 துர்கையும், சக்ரவ்யூஹமாக நின்ற பூத கணங்களும் மகிழவும்,பேய்க்கூட்டங்கள் பிணங்களை உண்டு பிழைக்கும் படியும் போர்செய்து,ப்ரம்மா அபயம் என்று முறையிட்டுக் கூச்சலிட, அண்டகூடம் பிளவுபட,சூரன் மாயமாக நின்ற மாமரத்தின் அடிவேரையே வெட்டி,வடவாக்னியையும் நிலைத்த சமுத்ரங்கள் ஏழையும் குடித்து,பெரிய சூரனோடு செய்த பொரிலே அவன் எய்த அம்புகளை அறுத்தெறிந்து, பாணங்கள் தங்கும் இடமாகிய வில்லையும் வெட்டித்தள்ளிய ஒளி வேலனே,தேவலோகத்தை (மீண்டும் ) அரசாளும் படிக்கு, 'வாருங்கள், வாருங்கள், வாருங்கள்' என்று அழைத்து, தேவர்களின் பரிதாபத்துக்குரிய துன்ப நிலையைப் போக்கியருளிய பெருமாளே !












கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம் புயம் பெற    அரக்கருமாள....
சரவணப் பெருமாளே









வேலின் மஹிமை



முருகப்பிரான் ஒப்பற்ற வேற்படையுடையவன். இந்த வேலின் மஹிமை என்ன?

வெங்காள கண்டர் கைச் சூலமும்  திருமாயன் 
வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர் பதி குலிசமும் 
சூரன் குலங்கல்லி வெல்லா எனக் கருதியே

சங்க்ராம நீ ஜயித்  தருளெனத் தேவருடன் சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே
 தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

சிவனின் சூலமும், திருமாலின் சக்ராயுதமும் இந்தரனின் வஜ்ராயுதமும் செய்யமுடியாத வேலையைச் செய்தது வேல்.

இதை அருணகிரிநாதர்  'வேல் வாங்கு வகுப்பில் " வருணிக்கிறார்:

சிறையுள் அழுந்திய குறைகள்  ஒழிந்து  செயங்கொடு
தேவேந்திரர் சேண்  ஆண்டனர்
திரிபுவனங்களும் ஒருபயம் இன்றி வளம்கெழு
சீர்பூண்டற நேற் பூண்டன
விட வசனம் சில பறையும் விரிஞ்சன் விலங்கது
கால்பூண்டு தன்மேல் தீர்ந்தனன்
விகசித சுந்தர விதரண  ஐந்தரு  வெந்தெழில்
வீவான் பொழில் பூவாய்ந்தது
விழைவு தரும்பத சசி தன் விளங்கிய மங்கல
நூல் வாங்குகிலாள் வாழ்ந்தனள்
வெருவி ஒதுங்கிமையவர்  எவரும் சிறை வென்றித
மேலாம் படியே மீண்டனர்
விழியொர் இரண்டொரு பதுசதம் நின்றெறி கண்டகன்
மேல்வாங்கிளை  கால் சாய்ந்தது
வெளிமுழுதும் திசை முழுதும் விழுங்கி எழும் கன
சூர் மாண்டற வேர் மாய்ந்தது
விபுதர் பயங்கெட நிருதர் தளம்கெட விண்கெடு 
மேடாம்படி பாடோங்கின......
வேல்வாங்கவே  வேல் வாங்கவே


தேவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சூரன் வேரோடு சாய்ந்தான். தேவேந்த்ரன் மீண்டும் ஆண்டான். அமரர்கள் பிழைத்தனர். திரிபுவனங்களும் பயம் நீங்கின. அசுரர்களின் தளம் கெட்டது.
இங்கே தேவேந்த்ரன் உயிர் பிழைத்த சமாசாரத்தை  வெகு சுவாரஸ்யமாகச் சொல்கிறார்:
சசி தன் விளங்கிய மங்கலநூல் வாங்குகிலாள் வாழ்ந்தனள்
இந்த்ராணி தன் மங்கல நூல் இழக்காமல் வாழ்ந்தாள் என்கிறார்.
 இதையே மயில் விருத்தத்திலும் சொல்வார்:

இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண  இகல்வேல் வினோதன் 

இன்னும் கந்தரலங்காரத்தில்   சொல்கிறார் ;-

சசிதேவி மங்கில்ய தந்து ரக்ஷாபரண 
க்ருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே


கால்வாங்கி நிற்கும் களிற்றால் கிழத்தி கழுத்திற் கட்டும்
நூல்வாங்கிடாது அன்று வேல் வாங்கினான் கழல் நோக்கு நெஞ்சே




தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே : அதன் பொருள்

இந்த்ரன் மீண்டும் தன் பதவியை- ராஜ்யத்தைப் பெற்றான்.

இமையவர்கள் நகரில் இறை குடிபுகுத 
நிருதர்  வயிறெரிபுகுத  உரகர் பதி அபிஷேக மாயிரமும்
எழு பிலமும் நெறு நெறென முறிய வட குவடிடிய.......

மீண்டும் சொல்கிறார்:

ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க 
அமராவதி புரக்கும் அடல்  ஆண்மைக்காரனும்

வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் 
மலர் வாவியில் உதித்த முக மாயைக்காரனும்

வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டுருவ
வேலை உற விட்ட தனி          வேலைக்காரனும்
அரக்கர் குல சூரைக்காரனும்
வேதியர் வெறுக்கையும்...... திரு வேளைக்காரனே




சரவணபவன்

வேறு இடத்தில் சொல்கிறார்:

அவுணர் படை கெட்டு முது மகரசல வட்டமுடன்
அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும்
விப்ரகுல யாகச் சபாபதியும்
வெடிச்சி காவலனே

வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ரலோகம் விபுதர் குடிபுக
மண்டு பூத பசாசு பசிகெட           மயிடாரி

வன் கண் வீரிபிடாரி ஹரஹர
சங்கரா என மேரு கிரிதலை
மண்டு  தூள் எழ வேலை உருவிய    வயலூரா

இப்படி சூரரை வதைத்து, அமரர் உலகை மீட்டுத் தந்தது  வேள்விகள் சரிவர நடக்கவேண்டும் என்பதற்காகவே. இதையும்  அருணகிரிநாதர் சொல்கிறார்:.

மகாவ்ருத தெர்ப்பை ஆசார வேதியர்  தம்பிரானே.

இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. எதை எடுப்பது, எதை விடுவது ?
முருகன் அவதாரம் மகத்தானது. அது வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் நிகழ்ந்தது. அதன் பயன் ஆதி அமராவதி நிலைக்கவேண்டும், அதற்காக வேள்விகள் போற்றப்பட வேண்டும் என்பதே.முருகனே "விப்ரகுல யாகச் சபாபதி"யாவான். அவனே "அந்தண்மறை வேள்வி காவற்காரன்,"


...



No comments:

Post a Comment