Thursday, 26 January 2017

42.திருப்புகழ் 40.விஜயபுரம்.


42.திருப்புகழ் 40.விஜயபுரம்



விஜயபுரம் இன்றைய திருவாரூரின் ஒரு பகுதியாக உள்ளது. அருணகிரிநாதர் தரிசித்த 39வது தலம். இங்குள்ள பழைய கோயிலைப்பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

இங்கு அருணகிரிநாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது. யாக்கை நிலையாமையை நினைத்து அருள் வேண்டுவதாக அமைந்த எளிய பாடல்.

இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
     மிடிபட இன்பம கோததி ...... வறிதாக

இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர
     எழில்பட மொன்று மொராயிர ...... முகமான


விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
     வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர்

விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
     விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.


குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
     குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு


குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
     குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய

அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
     லவுடத மும்பல யோகமு ...... முயலாநின்

றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
     னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ


[குடல் நிணம் என்று தொடங்கும் பாடல்.]


காலியிடம் எதுவும் விடாமல் நெருங்கி வந்த அசுரர்கள் எல்லோரும் இறந்துபோகும் படியும், ஏழு கிரிகள் இடிபட்டுத் தூளாகவும், காட்சிக்கு இன்பம் தரும் கடல் வற்றிப்போகவும்,


தேவர்களும் சிறை நீங்கி அவர்களுடைய நகராகிய அமராவதியில் விளங்கவும் வழி செய்த ஆதரவானவனே !


அழகிய படங்களுடன் ஒரு ஆயிரம் முகங்களை உடைய விஷம் தரிப்பதாகிய ஆதிசேஷன்  மேருமலையாகிய வில்லில் பூட்டப்பட்டு, அந்த வில்  வளையும் முன்பாகவே, திரிபுரங்கள் சாம்பலாகும்படி ஒளிவீசும் சிரிப்பை வெளியிட்ட  புராரி, மன்மதனைக் கோபித்து எரித்தவர் ஆகிய  சிவபிரானது


கண்களில் பொறியாகப் பிறந்து,கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே ! வட விஜயபுரத்தில் இருக்கும் பெருமாளே !


குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு, இவை தோலின் இடையே குளுகுளு என்று வைத்து அமையும்படி மூடப்பட்டதும், 


மலமும் பிற அழுக்குகளும் நிறைந்துள்ள  ஒன்பது துவாரங்களைக்கொண்ட
சிறுகுடிலாகிய இந்த உடலை, நீரிலே தோன்றுகின்ற குமிழிகளைவிட வேகமாக அழியக்கூடிய மாயமானதும்,


சாம்பலாகப் போகின்றதும் ஆகிய உடம்பை விரும்பி, எப்போதும் சாரமில்லாத சில மருந்துகளையும் பலவித யோக வகைகளையும்  அனுஷ்டித்துப் பார்த்து,


வேதனைப்படும் மனதில் உற்ற துன்பம் போதும் போதும் என்று உணர்ந்து, என்றைக்குத்தான்  உன்னுடைய அழகிய தண்டை அணிந்த  திருவடியை அடைவேனோ தெரியவில்லையே !

மிக அருமையான பாடல்.



photo: Kalyan Varma

அவதார விஷயம்

புராரி மதன  கோபர் விழியினில் வந்து, பகீரதிமிசை வளரும் சிறுவா:

மதன கோபர் = மன்மதனைக் கோபித்தவர்.

இது முருகனது அவதார நிகழ்ச்சியைச் சொல்கிறது. அக்னிப்  பொறியாக வந்து, கங்கை ஆற்றிலே வளர்ந்த  முருகன். இதை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்கிறார்.

நெடும்பெருஞ்   சிமையத்து  நீலப் பைஞ்சுனை 
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ !

அக்னியினால் தாங்கப்பெற்றவனாதலால்  அக்னி குமாரன் என்றும், சரவணப் பொய்கையில்  அவதாரம் செய்ததால் சரவணபவன் என்றும், கார்த்திகை மாதரால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் பெயர்கள் அமைந்தன.

அழியும்  உடல்


குரம்பையை நீரெழு குமிழியி னும் கடிதாகிய
அழிமாய அடலை உடம்பை

இந்த உடல் நீரில் தோன்றும் குமிழியைவிட வேகமாக அழியக்கூடியது.
நிலையில்லாததால் இதை மாயை என்பார்கள். அருணகிரிநாதர்  இதையே கந்தர் அலங்காரத்தில் சொல்கிறார்:


நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை நில்லாது செல்வம்
பார்க்கும் இடத்து அந்த மின்போலும் என்பர்


இன்னொரு இடத்தில் சொல்கிறார்:

அல்லின் நேரும்  மின்  அதுதானும் அல்ல தாகிய உடல் மாயை
இரவில் தோன்றும் மின்னலைப் போல அழியக்கூடிய இந்த உடலாகிய தோற்றம்.

ஆனால் இந்த உடலைப் பேணிப் பாதுகாக்க எத்தனை விதமான யுக்திகள் சொல்கிறார்கள் ! காய கல்பம், தங்க பஸ்பம் போன்ற மருந்து மூலிகைகள் ! மூச்சை அளந்துவிடும் சுவாசப் பயிற்சிகள் ! விசித்திரமான யோக  முறைகள் ! ஆனால் இதையெல்லாம் பின்பற்றியவர்கள் யாரும் காலத்தை வென்று வாழ்ந்ததாகத் தெரியவில்லை !  இருந்தாலும் இந்த ஆசை விடுவதில்லை!
அமரத்தன்மை என்பது உடல் அழியாமையைச் சொல்லவில்லை. 'ஈசன் எந்தை இணையடி நிழலே' அதுதான் அழியாத இடம். "உன் இருதாளில் உற்ற பெருவாழ்வு" என்பார் நமது ஸ்வாமிகள்.  கந்தர் அலங்காரத்தில் சொல்கிறார் :

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
 காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டி கைநாற்றி நரம்-
 பால் ஆர்க்கை இட்டு தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
 வேலால் கிரி தொளைத்தோன் இருதாளன்றி வேறில்லையே.


பெரியவர்கள் எப்போதும் நமக்கு இறைவன் பாதங்களையே அழியாப்பொருள் எனக் காட்டுவார்கள். 

உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பலசமய கலையார வாரமற
உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அனுபூதி ஆனதுவும்
மண நாறு சீரடியே.

[சீர்பாத வகுப்பு ]

முருகன் புகழ் பாடவந்த நக்கீரர், திருமுருகாற்றுப்படையை  முருகன்  தாளைப் பற்றியே தொடங்குகிறார்:

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு
ஓவர இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள்.


வெட்சிப்பூ. நன்றி: தமிழ்மன்றம்.காம்.


No comments:

Post a Comment