Thursday, 19 January 2017

33.திருப்புகழ் 31, வழுவூர்


33. திருப்புகழ் 31. வழுவூர்





அருணகிரிநாதர்  திருவிடைக்கழியிலிருந்து கிளம்பி திருப்பறியலூர் வருகிறார். ஆனால் இங்கு எதுவும் பாடவில்லை. இவர் அடுத்து தரிசித்த தலம் [30வது] வழுவூர் ஆகும். 

இது சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. ஆனால் ஏனோ, தேவாரப் பாடல் பெறவில்லை. அப்பரின்  6ம் திருமுறையில் இரு பாடல்களில் வைப்புத்தலமாக குறிக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் சிவபெருமான் யானையை அடக்கி அதன் தோலைப் போர்த்துக்கொண்டார். தாருகாவனத்தில் தவம்செய்திருந்த முனிவர்கள்  பூர்வமீமாம்சையில் புத்திசெலுத்துபவராகி, கன்மமே பலன் தரும், அதற்குக் கடவுள் தேவையில்லை என்னும் வன்னெஞ்சராயினர்.இந்த விஷயத்தை பகவான் ரமணரின் பக்தர் முருகனார் சுவைபட எழுதுகிறார்:

தாரு வனத்தில் தவஞ்செய்  திருந்தவர்
பூருவ கன்மத்தால் உந்தீபற
போக்கறை போயினர் உந்தீபற

கன்மத்தை யன்றிக் கடவுள்  இலையெனும்
வன்மத்த ராயினர் உந்தீபற
வஞ்சச் செருக்கினால் உந்தீபற.

இவர்கள் செருக்கை அடக்க சிவபிரான்  வந்தபோது அபிசார ஹோமம் செய்து அவர்மீது யானையை ஏவினர். சிவபிரான் அந்த யானையை  சம்ஹரித்தார். அதன் தோலை ஆடையாகப் புனைந்தார்.. அதனால் அவருக்கு கஜஸம்ஹார மூர்த்தி என்ற பெயர் வந்தது. வீரட்டேஶ்வரர், க்ருத்திவாசர் என்றும் பெயர் வழங்குகிறது. அம்பாள் பெயர் பாலகுஜாம்பிகை-இளங்கிளை நாயகி.








கஜஸம்ஹாரமூர்த்தி

இங்குவந்த அருணகிரிநாதர் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். இரண்டும் உருக்கமானவை.

புருகூதன்மி னாளொரு பாலுற
     சிலைவேடுவர் மானொரு பாலுற
          புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே

புழுகார்பனிர் மூசிய வாசனை
     யுரகாலணி கோலமென் மாலைய
          புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா

மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
     செழிசாலிகு லாவிய கார்வயல்
          மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர்

மகதேவர்பு ராரிச தாசிவர்
     சுதராகிய தேவசி காமணி
          வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.


தருவூரிசை யாரமு தார்நிகர்
     குயிலார்மொழி தோதக மாதர்கள்
          தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே

தழலேபொழி கோரவி லோசன
     மெறிபாசம காமுனை சூலமுள்
          சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே


கருவூறிய நாளுமு நூறெழு
     மலதேகமு மாவலு மாசைக
          படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்

கனிவீறிய போதமெய் ஞானமு
     மியலார்சிவ நேசமு மேவர
          கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்


[தருவூரிசை என்று தொடங்கும். இங்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது.]
இந்த்ரனுடைய மின்னல் போன்ற மகள் தேவசேனை ஒருபுறமும், வில்லேந்திய  வேடர்களின் மகள் மானாகிய வள்ளி ஒருபுறமும் இருக்க, அதிசயிக்கத்தக்க சிறந்த மயில்மீதில் வரும் அழகனே!
புனுகு, பன்னீர்  ஆகியவை நெருங்கும் வாசனையுள்ள மாலையை  மார்பிலும் காலிலும் அணிந்துள்ளவனே ! முப்புரி நூல் அணிந்து பன்னிரு புயங்கள் உள்ளவனே !
வாசனை மிகுந்த குளிர்ந்த குளங்களும், சோலைகளும் , நெல் தழைக்கும் வயல்களும் உள்ளதும்,, சீலமும் பெரிய தவமும் உள்ள முனிவர்கள் வாழும் பழைய ஊராகிய வழுவூரின் பெருமாளே !
மஹாதேவர், புரத்தை எரித்தவர், சதாசிவர் ஆகிய சிவனது பிள்ளையாகிய தேவ சிகாமணியே ! வழுவூரில்  இருந்து அருளும் பெருமாளே !


புல்லாங்குழல் போலவும், குயில் போலவும் இனிமையான குரல் கொண்டு வஞ்சனை செய்யும் மாதர் வசப்படாமலும்,
நெருப்பையே  உமிழ்வது போன்ற பயங்கரமான கண்கள், வீசி எறியும் பாசக்கயிறு, கூரிய முள்போன்ற முனையுடைய சூலம் இவற்றுடன், மேகம்போன்று கரிய நிறம் கொண்ட காலன்  எருமைக்கடாவின் மேல் ஏறிவந்து என்னை அணுகாமலும்-,
கருவில் ஊறிவந்த முந்நூறு நாட்களும், பின்பு மலங்களுக்கு இருப்பிடமான தேகமும், மூவகை ஆசைகளும், வஞ்சகத்தால் விளையும் பெரும் பாதகங்கள் அற்றுப் போகவும்,வறுமை தொலையவும்,
முதிர்ந்த அறிவும், மெய்ஞானமும், தகுதிமிக்க சிவ  நேசமும் எனக்கு உண்டாகுமாறு, கழலும் சிலம்பும் கொண்ட உன் தாளிணை நீழலைத் தந்து அருளுவாயாக.

பிறவியில் ஏற்படும் துன்பத்தையும், மரணகாலத்தில் நிகழும் துன்பத்தையும் பல இடங்களில் விரிவாகப் பாடியிருக்கிறார் நம் ஸ்வாமிகள். கார்மாமிசை , வஞ்சவிழி சண்டன் வரும்போது , குமரா, கந்தா என்று சொல்ல நமக்கு சொரணை இருக்க வேண்டும் என்று பாடுவார். அப்போது கலபத் தேரில் முருகன் வரவேண்டும் என்பார்.





அருணகிரிநாதர்  முருகன் அருள்பெற்றவர். " யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமேபெற வேலவர் தந்தது " என்பார். இந்த நன்றியை மறக்காமல் பல இடங்களில் சொல்வார்.  இங்கும் அப்படிப் பாடுகிறார். தான் பெற்ற தீக்ஷை, உபதேசம் முதலியவற்றைச் சொல்கிறார்.

சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
     அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
          சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு          கதிர்வேலா

சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
     வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
          சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக         அழகோனே


மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
     யமுதா கத்தன வாட்டி யிந்துள
          மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன்      மணவாளா

வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
     நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
          வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள்                பெருமாளே.


தலைநா ளிற்பத மேத்தி யன்புற
     வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
          தவஞா னக்கட லாட்டி யென்றனை          யருளாலுன்

சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
     ளறியா முத்தமி ழூட்டி முண்டக
          தளிர்வே தத்துறை காட்டி மண்டலம்       வலமேவும்

கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
     ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
          கமழ்வா சற்படி நாட்ட முங்கொள            விதிதாவிக்

கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
     வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
          கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல்      மறவேனே.




வில்லேந்திய படைகள் வீழவும், கடல்போன்ற கூட்டம் கெட்டு அழியவும்,அசுரர்களின் தலைகளை அறுத்து, வானுலக உச்சியில் தேவருலகில் இந்த்ரனை குடியேற்றிவைக்கச் செலுத்திய  ஒளிமிக்க வேலை யுடையவனே !


சிவகாம சுந்தரியிடம் மிகுந்த அன்புள்ள  என் தந்தையார், கோடுள்ள பாம்புமாலை அணிந்த சிவனுக்கு மகிழ்ச்சியோடு ஒப்பற்ற சிவஞானப்  பொருளை  உபதேசித்த அழகனே !
தினைப்புனம் காத்த அழகுக் கிளி, அமுதன்னவள், கடப்ப மாலையை அணிந்தவள் ஆகிய அழகிய வள்ளியின் மணவாளனே !
நீண்ட கோழிக்கொடி மேலே விளங்கும்படி நடனமாடி, தேவர்கள் போற்றுகின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த வழுவூர் என்னும் சிறந்த பதியில் வீற்றருளும் பெருமாளே!
ஆரம்ப நாட்களில் உம் திருவடியை என் தலைமீது வைத்து,  அன்புடன்  உபதேசப்பொருளை எனக்கு உபதேசித்து, மந்திரங்களாலே ஞானக்கடலில் ஆட்டுவித்து, எனக்கு அருள்செய்து-
உன்னைச் சார்ந்துள்ள சிறந்த அடியாருடன் கூட்டுவித்து,  தேவர்களும் அறியாத முத்தமிழை எனக்குப் போதித்து,  முண்டக உபனிஷதம் முதலிய உபனிஷத உண்மைகளையும், வேத வழிகளையும் புலப்படுத்தி, 
அக்னியாதி மும்மண்டலங்களும் உள்ள மேலிடத்தில், நாடிகளின் வழியாக ஏற்படும் ஜோதி ஒளியைக் காட்டி, ஆன்மாவை பரநாதத்தொடு கூட்டி,ஸ்வாதிஷ்டானம் முதலிய ஆதாரத்தைக் கடந்து-,
ஆறு ஆதாரத்தலங்களும் புலப்படுமாறு யோக ஓளியை ஏற்றுவித்து, நீ அன்புடன் மயில்வாகனத்தில் வந்து தரிசனம் தந்ததை மறக்க மாட்டேன்!
முருகன் அவதாரம் அசுரர்களுடைய கொட்டத்தை அடக்கி, தேவர்களுக்கு மீண்டும் வாழ்வுதர நிகழ்ந்தது. இதைப் பல இடங்களில் சொல்கிறார். திருவேளைக்காரன் வகுப்பில்  சொல்வது:

ஆடலைவு பட்டமரர்  நாடது பிழைக்க  
அமராவதி புரக்கும்  அடல் ஆண்மைக்காரனும்.



இது மிக அருமையான பாடல். முருகன் ஞான பண்டிதனல்லவா? அவன் அருணகிரிநாதருக்கு எல்லாவகையான ஞானங்களையும்,[ வைதீகம்-வேதாந்தம், யோகம், குண்டலினி, போன்ற எல்லாவகையான ஞானத்தையும் ] போதித்தான். நாம் அருணகிரிநாதர் பாடல்களில் காணும் பரந்த மனப்பாங்கும், அவிரோத நிலையும், குறுகிய கொள்கைகள் வயப்படாத தெளிந்த ஞான நிலையும் இதனால் விளைந்ததே! 
இங்கு முண்டக உபனிஷதத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதில் மிகுந்த நயம் இருக்கிறது. 
உபனிஷதங்கள் மேலை நாட்டு முறைப்படி  வெறும் (வரட்டு) அறிவாராய்ச்சி செய்வதில்லை. சத்தியத்தை - உள்ளதாம் பொருள்- அனுபவபூர்வமாக உணர வழிவகுப்பதே இவற்றின்  நோக்கம்.  இதற்கு இவ்வாறு உணர்ந்த குரு இருப்பது அவசியம். ஏற்ற ஆசார-அனுஷ்டானங்களும் தேவை. இது வெறும் ஏட்டறிவல்ல.

 "கஸ்மின் விஞ்ஞாதே ஸர்வம் இதம்  விஞ்ஞாதம்  பவதி இதி "-
எந்த ஒன்றை அறிந்துகொண்டால் இந்த அனைத்தையும் அறிந்ததாகும் ?

இந்த முக்கியமான கேள்விக்கு விடை காண முற்படுகிறது முண்டக உபனிஷதம். மனிதன், உலகம், கடவுள் (ப்ரஹ்மம்) ஆகிய மூன்று உண்மைகளிடைய உள்ள தொடர்பை ஆராய்வது உபனிஷதம். உடல், மனம், ஆத்மா ஆகியவை சேர்ந்தது மனிதன். இதில் உடலும் மனமும் மாறுபவை. ஆத்மா மாறாதது. உலகமும் உருவாகி, அழிந்துபடும் தன்மையுள்ளது. ப்ரஹ்மம் அல்லது கடவுள் மட்டுமே என்றும் சத்தியம்-நிஜம். இதை அறிவதே உண்மை அறிவு. இந்த உலகைப் பற்றிய எந்த அறிவும் நிலையானதாகவோ, அறுதியானதாகவோ இருக்க முடியாது. உலகம் நிழலைப்போன்றது. அதன் பின்னால்-அதற்கு ஆதாரமாக இருப்பது ப்ரஹ்மம். ப்ரஹ்மம் ஒன்றே நிஜம்- சத்யம். அதை அறிவதே உண்மை அறிவு. அதுவே அழியாதது- அக்ஷரம், பரம். இதை முண்டக உபனிஷதம் விளக்குகிறது. இந்த அழியாத பரம்பொருளை -ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்:
தத் பரமம் ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி

இந்தியாவின் தேசீய குறிக்கோளாக உள்ள  "ஸத்யமேவ ஜயதே" 
என்ற தொடர் இந்த உபனிஷத்திலிருந்து  எடுக்கப்பட்டதே.

ஸத்யேன பன்தா விததோ தேவயான:
உயர்ந்த, ஆன்மீக உலகுக்குகான பாதை ஸத்தியத்தினாலேயே அமைந்துள்ளது.

இதை அறிவதற்கு ஸத்யம், ஒழுக்கம், தவம், த்யாகம் ஆகியவை  சேர்ந்த முயற்சி அவசியம். இதை  அதிகப் படிப்பினாலும்,மேதாவித்தனத்தாலும். வலுவின்மையாலும் அறிய முடியாது:

ந அயம் ஆத்மா  ப்ரவசனேன லப்யோ
ந மேதயா ந பஹுதா ஶ்ருதேன.
ந அயம் ஆத்மா பலஹீனேன லப்யோ.

மஹான்கள் ஆத்மாவை இப்பிறவியிலேயே ஹிருதய குஹையில் தரிசிக்கின்றனர்:

பஶ்யத்ஸு இஹைவ நிஹிதம் குஹாயாம்


வேதாந்த விஞ்ஞான ஸுனிஶ்திதார்த்தா:
ஸன்யாஸ யோகாத் யதய: ஶுத்த ஸத்வா:
தே ப்ரஹ்ம லோகேஷு பரான்தகாலே
ப்ராம்ருதா: பரிமுச்யன்தி ஸர்வே.


வேதாந்த விஞ்ஞானத்தின் உண்மையை உணர்ந்தவர்கள், துறவுவாழ்க்கையினால் மனம் தூய்மை அடைந்தவர்கள், புலன்களை நன்குகட்டுப்படுத்தியவர்கள்  அனைவரும் அந்த மரணமற்ற நிலையை அடைகிறார்கள்.
இத்தகைய உண்மைகளை விளக்குவது முண்டக உபனிஷதம்.

 முருகன் "ஸுப்ரஹ்மண்யன்" - சுத்த ஞானமே வடிவாகியவன். ப்ரம்மாவுக்கும் சிவனுக்கும்  பிரணவப் பொருளைச் சொன்னவன். அவர் முண்டக உபனிஷதம் பற்றிச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது! அவர் அருணகிரிநாதருக்கு உபதேசித்தது எவ்வளவு பொருத்தம்! 

திருவண்ணாமலைப் பாடல் ஒன்றிலும் இதை அவர் கூறியிருக்கிறார்:


குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவ
அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
          அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.
கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
          கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
குமரனே ! குருபரனே! நற்குணங்கள் நிறைந்தவனே! அசுரர்கள் என்னும் இருளை நீக்கும் சூர்யனே! சரவணபவனே!
பாம்பைப்புனைந்த தூய சிவபெருமானும் உன்னை வழிபட, உனது மழலைச் சொல்லால்  அவர் தெளிவு பெறும்படி, ஒளிமயமான  அறிவை அறிவதுதான் உண்மைப்பொருள்  என அவருக்கு உணர்த்திய பெருமாளே !
கருணையுடன், அன்புடைய அடியவர் கூட்டத்துடன் திருவண்ணாமலையில் ஒருமுறை, வேதங்கள் பக்கத்தில் முழங்க, நடந்துவந்த சிலம்பணிந்த தாமரை போன்ற இரு திருவடிகளை கனவிலும் நனவிலும் மறவேனே.

உத்திரமேரூர் திருப்புகழிலும்,

அறிய அறிய அறியாத அடிகளறிய அடியேனும்
அறிவு  ளறியும்  அறிவூற  அருள்வாயே

என்று பாடுகிறார்.

அவர் மேலும் பாடுகிறார்:

எனது யானும் வேறாகி
 எவரும் யாதும் யான் ஆகும்
 இதய பாவனா தீதம் அருள்வாயே

இதுவே  உயர்ந்த ப்ரஹ்மானுபவ நிலை. இதையே உபனிஷதம் போதிக்கிறது.



Those who have genuine divine experience rise beyond all sectarian ideas and are established in that Wisdom which is one and indivisible.

முருகன் வழிபடு கடவுளாக இருந்தாலும், பிற தெய்வ 
வடிவங்களையும் போற்றும் பண்பும், பக்தி ஒன்றைத்தவிற பிற  எதையும் நாடாத நிலையும்      [ஆனபயபக்தி வழிபாடு பெறு முத்தி யதுவாக நிகழ் பக்த ஜன வாரக் காரனும்- திருவேளைக்காரன் வகுப்பு] அருணகிரிநாதரிடம் நாம் காணும் அரிய அம்சங்கள். அதன் ரகசியத்தை இங்கு தெளிவாகச் சொல்கிறார்!








No comments:

Post a Comment