Wednesday, 18 January 2017

30.திருப்புகழ் 28. திருக்கடவூர்


30.திருப்புகழ்.28.திருக்கடவூர்


திருக்கடவூர்-மயானம்

ஆக்கூரிலிருந்து  அருணகிரிநாதர் திருக்கடவூர் வருகிறார். (27 வது). இங்கு இப்பெயரில் இரு தலங்கள்- கோயில்கள் இருக்கின்றன. ஒன்று கடவூர் -மயானம் எனப்படுகிறது. இங்குள்ள மூர்த்தி  ப்ரம்மபுரீஶ்வரர், நிமலகுஜாம்பிகை (மலர்க்குழல் மின்னம்மை).அடுத்து உள்ளது கடவூர்-வீரட்டம். இது திருக்கடையூர் என வழங்கப்படுகிறது. இங்கு ஸ்வாமியின் பெயர் அமிர்தகடேஶ்வரர்; மார்க்கண்டேயருக்காக காலனை உதைத்தவர். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. அம்பாள் அபிராமியம்மை. அபிராமிபட்டர் பாடிப்பரவியவர். இருகோயில்களும் மூவராலும் தேவாரப்பாடல் பெற்றுள்ளன. இங்கு அருணகிரிநாதர் இரு பாடல்கள் பாடியுள்ளார். அவற்றின் கருத்திலிருந்து அவர் பாடியது வீரட்டத்தலமே எனத் தெளியலாம்.


திருக்கடையூர்-வீரட்டம்

எரிதரு வார்சடையானும் வெள்ளை எருது ஏறியும்
புருதரு மாமலர்க் கொன்றைமாலை புனைந்தேத்தவே
கரிதரு காலனைச் சாடினானும் கடவூர் தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரனல்லனே            .......சம்பந்தர்


சேலின் நேரனைய கண்ணார் திறம்விட்டு  சிவனுக்கன்பாய்ப்
பாலும் நல்தயிர் நெய்யோடு  பலபல ஆட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்காக அன்று
காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனீரே.          ........அப்பர்


அன்றாலின் நிழல்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலன் உயிர்கொடுத்தாய் மறையோனுக்கு மான்
கன்றாரும் கரவா கடவூர்த் திருவீரட்டத்துள்
என்தாதை பெருமான் எனக்கார் துணை நீஅலதே            ........சுந்தரர்





ராஜா ரவி வர்மா வரைந்த படம்.

இத்தலத்திற்கு வந்த நம் ஸ்வாமிகள் இரண்டு அரிய பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
     வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
          லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி

ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
     ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
          மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப்

பூட்டு சரப்பளி யேமத னாமென
     ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
          பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம்


போற்றி நமக்கிரை யாமென வேகொள
     நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
          பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே


வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
     னாட்டை விடுத்திட வேபல சூதினில்
          வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய்

வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
     பார்த்து முடித்திட வேயொரு பாரத
          மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே


கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
     மூட்டி யெரித்தப ராபர சேகர
          கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா

கூற்று மரித்திட வேயுதை பார்வதி
     யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
          கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே.


நமது உயிர் பிரியும்போது  முருகன் மயில்மீது வந்து அருளவேண்டும் என வேண்டுகிறார். பல ரசமான விஷயங்களைச் சொல்கிறார்.


பிரம்மா எழுதியபடி  உயிர் ஒரு உடலில் சேருகிறது. ரேசகம், பூரகம், கும்பகம் என்னும் மூன்று மூச்சுகள் [ அல்லது இடைகலை, பிங்கலை, சுஷும்னா என்னும் மூன்று நாடிகள் ]   சாட்டையின் மூன்று பிரிவுகள் போன்று  இதில்  நம்மைப் பிணைக்கின்றன. இந்த உடலையே தெப்பம்போல நினைத்து வாழ்க்கைக் கடலில்  தடுமாறிப் பிரயாணம் செய்கிறோம்.


நல்லது என்று கருதி பொன், பெண் ஆசைகளை வளர்த்துக்கொள்கிறோம். பலர் 'தூ' என இகழ்கின்றனர். தவம் என்னவென்றே அறியாமல் இவ்வுடலை ஆசையுடன் போற்றி வளர்க்கிறோம். வைரம் பதித்த  நகைகளை கழுத்தில் அணிந்து  மன்மதன் போல மிடுக்குடன்  சுற்றுகிறோம். அதே சமயம் நாம் வளர்த்த  மலம் நிரம்பிய இந்த  உடல் பூமியில் விழும்போது  கழுகும் காகமும் தமக்கு நல்ல உணவாகும் எனக்  கொள்ளும்!
அந்த சமயத்தில் பாம்பைத் தன் காலில் அழுத்திப்பிடித்துள்ள  அழகிய மயில் மீது அமர்பவனே நீ அருள்புரிவாயாக !


அரக்கு மாளிகையில்  தருமன் முதலிய பஞ்ச பாண்டவரை  இருக்கச் செய்து, அதற்கு தீயிட்ட பாதகனாம்  துரியோதனனுடைய நாட்டைவிட்டுப் போகும்படி, பல சூதாட்டங்களில் ஏற்பட்ட விதிப்படி , குருகுலத்து அரசராம் ஐவரும் காட்டிற்குப் போக,
வேறு வேடம் தரித்து அஞ்ஞாதவாசம் செய்த நாட்களின் முடிவு கருதி,  அந்த நாட்கள் முடியவே [ அல்லது கவுரவர்களின்  முடிவுகருதி ], ஒப்பற்ற பாரத யுத்தத்தை  மேலே நடக்கும்படிச் செய்த  மஹா வீர மாயவனாம் திருமாலின் மருகனே !
சூரனது  நாட்டின்  கோட்டைகளை அழித்து, அசுரர் தலைவனான சூரபத்மன் "கோ" என்று அலற, அவனது நகரை நெருப்பிட்டு அழித்த பராபரப் பொருளே! அழகனே ! கோக்கப்பட்ட ரத்னங்களின் ஒளிக்கு  நிகராகிய கூரிய வேலனே !
கூற்றுவன் இறந்துபோகும்படி  உதைத்த பார்வதி அம்மைக்கு இனிமைதரும் பெண்ணாகிய  மான் மகள் வள்ளியின் தலைவனே ! திருக்கடவூரில் வீற்றிருக்கும் பெருமாளே ! உயிர் பிரியும் போது அருள் புரிய வேணும்!

எத்தனை விஷயங்களைச் சொல்கிறார் ! உயிர் பிரியும் அக்காலத்தில் வேலால் கிரிதொளைத்தோன் தாளன்றி வேறில்லை என்பதை பல பாடல்களில் சொல்கிறார். நாம் மிகவும் ஆசையுடன் வளர்க்கும் இவ்வுடல் கடைசியில் கழுகுக்கும் காக்கைக்கும் உணவாகும் என்பது, " ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே  இரை ஆகிக் கழிவரே " என்ற அப்பர் வாக்கை நினைவூட்டுகிறது. மஹாபாரதத்தை எத்தனை அழகாகச் சொல்லிவிட்டார் !  "வித்தக மகா வீர மாயவன் " என்று அழகாகப் பெருமாளைப் புகழ்கிறார் !

மேலும் ஒரு ரசமான விஷயத்தைச் சொல்கிறார். சிவபெருமான் யமனை உதைத்தது தன் இடது காலினால். அந்த இடது பாகம் பார்வதிக்குரியது ! ஆகவே, உதைத்தது பார்வதியே என்று பாடுகிறார் :  "கூற்று மரித்திடவே உதை பார்வதியார் " !







அடுத்த பாடலிலும் இந்த அரிய கருத்துக்கள் வருகின்றன.

சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
     தூயவொளி காண முத்தி ...... விதமாகச்

சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து
     சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி

மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
     மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி

வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து

     வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்

ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
     மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா

ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
     ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே


காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
     காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா


காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
     கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.


இந்தப் பாடலின் முதல் மூன்று அடிகளில் யோக முறையில் சமாதி எய்தும் நிலையைச் சொல்கிறார். இதன் பொருளை தக்க பயிற்சியும் அனுபவமும் உள்ளவர்கள் வாயிலாகத்தான் அறிந்துகொள்ள வேணும்.


ஆனால் அப்படிச் சமாதியெய்தும் போதும், வேல், மயில் வாகனம் ஆகிய இவற்றின் தரிசன ஒளி கிடைக்கப்பெற்று , சிறப்பான முக்தி நிலையைத் தரவேணும் என்கிறார்.  [ அதாவது, வேண்டுவது வெற்று யோக சமாதி நிலை அல்ல.]


ஓலமிட்டு, அசுரரும். கடல் எட்டும், சக்ரவாளகிரியும் அழியவும், கிரவுஞ்ச கிரி தொளைபடவும் ஊடுருவும் வேலைச் செலுத்தின  மயில் வீரனே !


வள்ளியின் தினைப்புனத்திலே, ஓம் என்கின்ற ப்ரணவ உபதேச மாகிய மூலப்பொருளுடன்  அவளை அணைந்தவனே !


காலனும் அவன் வாகனமாகிய எருமையும் அழிய, விதிப்படியே பூமியின்மேல் விழும்படி  உதைத்துத் தள்ளிய பாதத்தை உடைய காலகாலனாம் சிவனது இடது பாகத்தில் உள்ள  சக்தி  அபிராமி அருளிய பாலனே !


ஊழிக்காலம் முதலாக  வாழ்ந்துவரும்  இந்த பூமிக்கு  ஆதாரஸ்தானமான நகராக உள்ள  திருக்கடவூரில் கோபுரத்துள்ளே  கானமயில்மேல் வீற்றிருக்கும் பெருமாளே ! முக்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளைத் தருவீராக !

யோக சமாதி பற்றி இங்கு குறிப்பிட்டாலும். இத்தகைய யோக-தந்திர மார்கங்கள் அருணகிரிநாதருக்கு ஏற்புடையவை அல்ல. அவர் வழி தூய பக்தி மார்கமாகும். பிற வழிகளைப் பற்றி பல இடங்களில் எச்சரித்திருக்கிறார்.

முருகன் வள்ளியின்பால் நடத்தியது  வெறும் காதல் அல்ல. இது இறைவன் பக்குவ ஆன்மாக்களுக்கு தானே வந்து  அருளும் நிலை. அதையே  " ஒமெனும் உபதேச வித்தொடு அணைவோனே " என்று பாடுகிறார். இந்த நிலையை வள்ளி சன்மார்கம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கி.வா.ஜ எழுதியுள்ள கந்தரனுபூதி விளக்கத்தில்  இதைப்பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

இங்கு  கடைசி வரியில் " புவிக்கு ஆதார நகர் " என்று வருவது ஆராச்சிக்குரியது. இந்த பூவுலகை விராட் புருஷனாகக் கருதினால், அதன் ஹிருதய ஸ்தானமாக விளங்குவது சிதம்பரத் தலம் என்பது மரபு. அதன்படி பார்த்தால், இந்தப் பாடல் சிதம்பரத்திற்கும் பொருந்தும். மேலும், சிதம்பரத்தில் ஒவ்வொரு கோபுரத்திலும் முருகன் சன்னதி அமைந்துள்ளது: கோபுரத்தில் கானமயில் மேல் தரித்த பெருமாள்! 
.


No comments:

Post a Comment