32. திருப்புகழ் 30. திருவிடைக்கழி
1.
அருணகிரிநாதர் பாகையிலிருந்து திருவிடைக்கழி வருகிறார். இது இவர் தரிசித்த 29வது தலம்.
திருவிசைப்பா- சேந்தனார்
இது தேவாரப் பாடல் பெற்ற தலமல்ல. ஆனால் சேந்தனார் பாடிய திருவிசைப்பா பாடல் 11ம் திருமுறையில் இருக்கிறது. இங்கு ஸ்வாமி பெயர் ஸ்ரீ காமேஶ்வரர். அம்பாள் பெயர் காமேஶ்வரி. ஆனால் இங்கு முருகன் சன்னிதியே பிரசித்தமானது. சேந்தனார் பாடிய பதிகமும் முருகனைப் பற்றியே அமைந்துள்ளது. இது அகத்துறையில் அந்தாதி முறையில் இருக்கிறது.
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்கோழி வெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவனென்
பொன்னை மேகலை கவர்வானே ?
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயி லூரும்
சுப்பிர மண்ணியன் தானே.
குராமரத்தடியில் முருகன்
இத்தலத்தில் சுப்ரமண்யர் குராமரத்தின் அடியில் யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகவும் பிரசித்தம்.
2.
அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில்
அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில்
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப் பொழுதில் வாழ்வித்த வேதியனும்.
[வேடிச்சி காவலன் வகுப்பு ]
இத்தலத்தில் ஸ்வாமிகள் எட்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.
அலைச்சல் இல்லாத வாழ்வு
உலக அலைச்சல் வேண்டாம் எனப் பாடுகிறார்:
சிவனுக் கொருசொல் பகர்வோனே-
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியில் குமரப் பெருமாளே
கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் ............ கடவேனோ.
(அனலப் பரிபுக்)
இப்பிறவிக் கடலைக் கடக்க உன் தாளைத் தா என்கிறார்:
இடைக்கழியிற் பயில்வோனே !
இப் பவக் கடலைக் கடக்க இனிக்
குறித்திரு பொற் கழற்புணையைத் தருவாயே
(இரக்குமவர்க்கு)
வாழ்வில் வேண்டுபவை
அருணகிரிநாதர் "இகபர சௌபாக்யம் அருள்வாயே" என இறைவனை வேண்டுபவர். இங்கும் அவ்வாறு வேண்டுகிறார்:
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் ...... தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் ...... பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் ...... திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் ...... குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
எளிமையான, இனிய பாடல். இருநில மீதில் எளியவர்களுக்கும் வாழ வழிசொல்கிறார்.
3.
உத்தமரோடு இணக்கம்
திருவிடைக்கழி முத்தி தரும் தலம். இங்கு ஞானம் சிறிதுமற்ற நாயேனாகிய தம்மை அடியார் கூட்டத்தில் சேர்க்கவேண்டும் எனப் பாடுகிறார்,
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத் ...... துறையோனே
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன்
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே
(படிபுனல் நெருப்படற்)
குழப்பம் தரும் கல்வி
நாம் அனாவசியமாக பலவித நூல்களைக்கற்று, அதனால் குழப்பமடைந்து வாழ்வில் மயங்காமல், திருப்புகழை ஓத அருள் தரவேணும் என்று வேண்டுகிறார்.
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப்
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன்
உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே.
உப்பு நீரைக்கொண்ட கடல் கொந்தளிக்கவும், பெரிய மெருமலை திடுதிடு வெனப் பொடிபடவும்,
பலவித பூதங்கள் களிப்படையவும், சண்டையிட்ட சூரன் நெறு நெறு என முறியவும், தேவர்கள் ஜய ஜய என்று போற்றவும், கொதிக்கின்ற வேலாயுதத்தை விடுபவனே!
அழகிய கடப்ப மாலையை அணிந்தவனே ! சரவணத்தில் தோன்றியவனே ! வேலனே ! வெற்றி மயில் வீரனே!
அருணை, திருத்தணி, திருச்செங்கோடு, பழநி, வல்லக்கோட்டை ஆகிய தலங்களின் தலைவனே !திருவிடைக்கழி மேவும் பெருமாளே !
பழி-பாவத்துக்கிடமான இந்த உடலாகிய குடிசையை எடுத்து, இழிவான சொற்களும், வீணான தொழிலும் உள்ள மாதர்களின் மயக்கில் விழுந்து,
நல்லபடி கரையேறும் வழி தெரியாமல் , பழங்கொள்கைகளையே ஆராய்ச்சியில்லாமல் பிதற்றும் மூடர்கள் நிறைந்த உலகில், மனக்குழப்பம் தரும் பல நூல்களைத் தேடி, ஆசையுடன் கற்று அதனால் ஒரு பயனும் அடையாமல் இறந்து போவதற்கு முன்பாக,
உன்னுடைய தாமரைப் பாதங்களை விரும்பி, உருகி, உள்ளத்தில் பக்தி ரசம் ஊற, உனது திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாயே !
அவன் புகழை ஓதுவதற்கும் அவன் அருள் வேண்டும் ! அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.
4.
அரிய நிகழ்ச்சிகள்
ஒருபாடலில் பல அரிய நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்.
அலை நெருப்பெழ வடவரை பொடிபடச் சமணர்கள் குலம்
அணிக ழுப்பெற நடவிய ................... மயில்வீரா
அரனரிப் பிரமர்கள் முதல்வழிபடப் பிரியமும்வர
அவரவர்க்கொரு பொருள்புகல் .................. பெரியோனே
சிலை மொளுக்கென முறிபட மிதிலையிற் சநக மனருள்
திருவினைப் புணரரி திரு ..................... மருகோனே
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்
திருவிடைக்கழி மருவிய .......................... பெருமாளே
கடல் தீக்கொப்புளிக்க, வடக்கிலுள்ள க்ரவுஞ்ச மலை பொடியாக, சமணர்களின் கூட்டம் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த கழுவில் ஏற, காரியத்தை நடத்தின மயில் வீரனே!
அரன், அரி, பிரமன் ஆகிய மூவரும் வழிபட்டுப் போற்ற அவர்கள்மேல் அன்பு பூண்டு, அவரவர்களுக்கும் ஒப்பற்ற உபதேசத்தைச் செய்த பெரியவனே!
வில் 'மொளுக்' கென்று முறிய, மிதிலையில் ஜனக ராஜன் அருளின திருவாகிய சீதையை அணைந்த திருமாலின் மருகனே !
திரண்ட பலா, கமுகு, தேன் சிந்தும் வாழை இவையெல்லாம் வளர்கின்ற திருவிடைக்கழியில் வீற்றிருக்கும் பெருமாளே !
இங்கே, சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றியதை முருகன் செயலாகவே சொல்கிறார், சிவன் தவிர, அரிக்கும் பிரம்மாவுக்கும் உபதேசம் செய்ததைச் சொல்கிறார். இதையே வேடிச்சி காவலன் வகுப்பிலும் சொல்கிறார்:
அரி பிரமருக்கு முதல் அரிய பரமற்குயரும்
அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும்.
ராமர் 'மொளுக் ' என்ற சப்தத்துடன் வில்லை முறித்தார் எனச் சொல்கிறார் !
அகத்துறைப் பாடல்
இத்தலத்தில் அருமையான ஒரு அகத்துறைப் பாடலைச் செய்திருக்கிறார்.
மருக்கு லாவிய மலரணை கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் பழியாதே
கடப்ப மாலையை யினிவர விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை மணவாளா
சமர்த்த னேமணி மரகத மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே.
கடம்ப மலர். inithal.blogspot.in.
pictures taken from: 1&4:blog.sateeshkumar.in
2&3: bharathipayilagam.blogspot.in Thanks to all the sources.
No comments:
Post a Comment