43.திருப்புகழ் 41. திருவாரூர்
திருவாரூர் - மிகப் புராதன க்ஷேத்ரம். மிகப் புகழ் பெற்றது. பிறந்தாலே முக்தி என்னும் பெருமை கொண்ட தலம். மிகப் பெரிய கோயில் -ஒரு நாளில் பார்த்து முடிக்க முடியாது: அத்தனை சன்னிதிகள், மூர்த்திகள். திருவாரூர் தேரழகு என்று சொல்லும் புகழ்பெற்ற தேர் அமைந்தது. பல அரசர்களால் பணிசெய்யப் பெற்றது. மனு நீதிச் சோழனால் மங்காப் புகழ் பெற்றது. பல நாயன்மார்களுடன் தொடர்புள்ளது. மூவராலும் பாடப்பெற்றது. சுந்தரர் வாழ்வில் நெருங்கிய தொடர்புடையது. கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளும் பிறந்த இடம். பல பெயர்களுடைய க்ஷேத்ரம்.இதன் தொன்மையை யாரும் அறியவில்லை, பஞ்ச பூதங்களுள் ப்ருத்வி ஸ்தலம்.
ஸ்வாமிக்கு த்யாகராஜர், வன்மீக நாதர் எனப் ப்ரதானமான பெயர்கள் இருந்தாலும், வேறு பல பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் கமலாம்பாள், நீலோற்பலாம்பாள், அல்லியம் பூங்கோதை.முத்துஸ்வாமி தீக்ஷிதர் கமலாம்பாள் மீது புகழ்பெற்ற நவாவரண கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார். இவை மன்த்ரசக்தி வாய்ந்தவை என்று பெரியோர்களால் மதிக்கப்படுகின்றன.
இது அருணகிரி நாதர் தரிசித்த 40வது தலம். .
இங்கு சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் பல பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.
சம்பந்தர்
சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே.
பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை
மறவா தேத்துமின் , துறவி யாகுமே.
துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே.
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டுபோவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா லேழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.
அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
அப்பர்
நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே
.
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்தொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்ச லென்னுமா ரூரனே.
சுந்தரர்
இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே
அருணகிரிநாதர் இங்கு சில நாள் தங்கினார். ஏழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. .
வாழ் நாள் வீணாகாதிருக்க
கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
நீபா கானப் புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
சீரா ரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
கூசாதே பார் ஏசாதே மால்கூறா நூல்கற்று
உளம் வேறுகோடாதே வேல் பாடாதே
மால்கூர் கூதாளத்தொடை தோளில் வீசாதே
பார் பேசாதே சீர் வேதாதீதக் கழல்மீதே வீழாதே
போய் நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோ தான்
இப்படி சொற்களைப் பிரித்துக் கொண்டால் அர்த்தம் எளிதாகும்.
வெட்கப்படாமல், உலகினர் என்னை ஏசாமல், உனது பெருமையைச் சொல்லாத அசட்டு நூல்களைக் கற்று, அதனால் உள்ளம் மாறுபட்டு, கோணல் வழியைப் பின்பற்றாமல், நல்ல நெறியில் இருப்பதை விட்டு விட்டு, உன் வேலாயுதத்தைப் பாடாமலும், கூதாள மாலையை உன் தோள்களில் சாத்தாமலும், உனது புகழைப் பேசாமலும், சிறப்பானதும், வேதத்துக்கும் மேல் விளங்குவதுமான உன் திருவடியில் விழாமலும் இப்படி என்னுடைய வாழ்நாள் வீணாகப் போவது நியாயமாகுமா ?
கழல்பெற
நீதானெத் தனையாலும் நீடூழிக் க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா
ஆதாரத் தொளியானே ஆரூரிற் பெருமாளே.
இங்கே, நீதான் அதிக க்ருபை செய்து, பெரிய தானமாக உன்னுடைய ஞானக் கழலைத் தரவேணும் என்கிறார்,
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல் பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியு
நாராய ணன்றன் மருகோனே
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி யவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருது
மாரூர மர்ந்த பெருமாளே.
மன துனது பரிபுர சரண
பாதார விந்த நினையாதோ
ஒரு பாடலில் மனு நீதிச் சோழன் தன் மகனென்றும் பார்க்காது பசுவுக்கு நீதி வழங்கியதைப் புகழ்ந்து சொல்கிறார்.
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
துயரில் செவியினி லடிபட வினவுமி னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி யலமர விழிபுனல் பெருகிட நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவ னருளாரூர்ப்
அந்தப் பசுவுக்கு துயரத்தைத் தரும்படி தேரை ஒட்டின குற்றத்துக்கு
படியு லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவண
பரவை முறையிட அயில்கொடு நடவிய பெருமாளே.
பசுவானது, இறந்த தன் கன்றினை எழுப்புவதற்கு வழியை ஆராய்ந்து நாடி, மனு நீதிச் சோழனுடைய தர்மத்தைக் காட்டும் ஆராய்ச்சி மணியை ஆட்டவும், அந்த ஒலி அரசனது மனதில் மிக்க துயரை விளைக்க,அரசன் பயந்துபோய், 'போய் விசாரியுங்கள், ஏதோ பெரிய கொடுமை நடந்திருக்கிறது,
ஆராய்ந்து பார்த்தால் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்று எழுந்து வந்த மநுச் சோழன், உள்ளம் உருகி, அவன் வாயிலிருந்து 'ஹரஹர சிவசிவ 'என்ற வார்த்தைகளை வரச்செய்த ஒப்பற்ற அந்தப் பசு, வேதனைப் பட்டுக் கண்ணீர் பெருக்குதலைக் கண்டு, நடு நிலையை உணர்ந்து, இறைவனைத் த்யானித்து,
ஆளான தன் மகனின் உடல் இரண்டு துண்டாகும்படி, அவன்மீது தேரை
விடும்படிச் சொன்னவனாகிய மநு ஆண்டருளிய திருவாரூர் தலத்தில்
உறையும் ஆறுமுகனே ! சிவகுமாரனே ! கணபதியின் தம்பியே ! குமரனே !
அரசர் தலைவனே ! சரவணனே ! கடல் முறையிட்டு அலற வேல்விட்ட
பெருமாளே !
இருபத மடைவதும் ஒரு நாளே !
உன் இரு பாதங்களையும் அடையும் ஒரு நாள் வருமா!
வள்ளலார் ராமலிங்க அடிகள் "மநு முறை கண்ட வாசகம் " என்று இந்த சரித்திரத்தின் பல நுட்பங்களை விளக்கியிருக்கிறார்.
இது பழைய தேர் அல்ல.
Note:
நாம் இங்கு தலங்களின் சிறப்பைப் பார்த்து வருகிறோம். இதெல்லாம் பழைய கதை. கோயில் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் தலத்தின் சிறப்பால் தான் அவற்றுக்கு மதிப்பு உண்டாகிறது. தலங்கள் இன்று நாம் காணும் கோயில்களைவிடத் தொன்மையானவை. கோயிலின் சான்னித்யம் அங்கு நடைபெறும் பூஜை முறைகளைப் பொறுத்தும், அங்கு வரும் மக்களின் நடைமுறையைப் பொறுத்தும்தான் அமையும். இன்று தமிழ் நாட்டில் கோயில்கள் நாத்திகவாத அரசினரின் கையில் சிக்கியுள்ளன. வழிவழி வந்த முறைகளில் நம்பிக்கை இல்லாத இவர்கள் கோயிலின் நடைமுறைகளில் தலையிடுகிறார்கள். பழனி, திருவாரூர் போன்ற கோயில்களில் இதைப் பார்க்கலாம். இது காலப்போக்கில் கோயிலின் புனிதத்தையே அழித்துவிடும். கோயில்கள் வெறும் காட்சிப்பொருளாக மாறிவிடும். இன்று கோயில்களை- அதுவும் பெரிய புகழ்பெற்ற கோவில்களைச்- சுற்றி வியாபாரச் சூழ்நிலைதான் இருக்கிறது.
இருந்த இடத்திலிருந்தே தேவாரம், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்வது நல்லது எனத் தோன்றுகிறது. நாளுக்கு ஒரு தலமாக சிரமமில்லாமல் மானசீகமாக தரிசிக்கலாம்! இந்த அடிப்படையில் தான் "க்ஷேத்ரக்கோவை" , பொதுப் பாடல்கள் முதலியவை இருக்கின்றன.
Note:
நாம் இங்கு தலங்களின் சிறப்பைப் பார்த்து வருகிறோம். இதெல்லாம் பழைய கதை. கோயில் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் தலத்தின் சிறப்பால் தான் அவற்றுக்கு மதிப்பு உண்டாகிறது. தலங்கள் இன்று நாம் காணும் கோயில்களைவிடத் தொன்மையானவை. கோயிலின் சான்னித்யம் அங்கு நடைபெறும் பூஜை முறைகளைப் பொறுத்தும், அங்கு வரும் மக்களின் நடைமுறையைப் பொறுத்தும்தான் அமையும். இன்று தமிழ் நாட்டில் கோயில்கள் நாத்திகவாத அரசினரின் கையில் சிக்கியுள்ளன. வழிவழி வந்த முறைகளில் நம்பிக்கை இல்லாத இவர்கள் கோயிலின் நடைமுறைகளில் தலையிடுகிறார்கள். பழனி, திருவாரூர் போன்ற கோயில்களில் இதைப் பார்க்கலாம். இது காலப்போக்கில் கோயிலின் புனிதத்தையே அழித்துவிடும். கோயில்கள் வெறும் காட்சிப்பொருளாக மாறிவிடும். இன்று கோயில்களை- அதுவும் பெரிய புகழ்பெற்ற கோவில்களைச்- சுற்றி வியாபாரச் சூழ்நிலைதான் இருக்கிறது.
இருந்த இடத்திலிருந்தே தேவாரம், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்வது நல்லது எனத் தோன்றுகிறது. நாளுக்கு ஒரு தலமாக சிரமமில்லாமல் மானசீகமாக தரிசிக்கலாம்! இந்த அடிப்படையில் தான் "க்ஷேத்ரக்கோவை" , பொதுப் பாடல்கள் முதலியவை இருக்கின்றன.
No comments:
Post a Comment